search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழின் பெருமையையும், தமிழர்களின் புகழையும் மாணவர்களிடம் ேசர்க்க வேண்டும்-அமைச்சர் பேச்சு
    X

    அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான தொல்லியல் பயிற்சியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து பேசினார். அருகில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், கலெக்டர் மதுசூதன்ரெட்டி, தமிழரசி எம்.எல்.ஏ. மற்றும் பலர் உள்ளனர்.

    தமிழின் பெருமையையும், தமிழர்களின் புகழையும் மாணவர்களிடம் ேசர்க்க வேண்டும்-அமைச்சர் பேச்சு

    • கீழடி அருங்காட்சியகத்தில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தொல்லியல் பயிற்சி தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
    • இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம், கீழடி அருங்காட்சியகத்தில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான தொல்லியல் பயிற்சி தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

    இதை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தொடங்கி வைத்து பேசியதாவது:-

    கீழடி அகழாய்வு பணிகளின் போது கிடைக்கப்பெறும் தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாகவும், அந்த பொருட்களை உலகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வருகை புரியும் பொதுமக்கள் பார்த்து, அறிந்து கொள்ளும் வகையிலும், உலகளவில் அனைத்து நாடுகளும் வியக்கும் வகையில், செட்டி நாடு கலைநயத்துடன் ரூ.18.42 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அருங்காட்சியகக் கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பெருமை சேர்த்துள்ளார்.

    நமது முன்னோர்களான சங்ககால தமிழர்கள் நகர நாகரீகத்துடன் வாழ்ந்துள்ளனர் என்பதை அறிவியல் ரீதியாக எடுத்துச் செல்லும் வகையில், அமெரிக்க நாட்டிலுள்ள புளோரிடா ஆய்வகத்தின் மூலம் அகழ் ஆராய்ச்சியின் மூலம் கிடைக்கப் பெற்ற பொருட்களை ஆய்விற்குட்படுத்தப்பட்டது.

    அதில் அந்த பொருட்கள் 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்ன தாகவே, நமது முன்னோர்கள் பயன்படுத்தியது தெரிய வந்தது. இந்த பயிற்சிக்கென ஒரு குழுவிற்கு 40 ஆசிரியர்கள் வீதம் 25 குழுவாக மொத்தம் 1,000 ஆசிரியர்களுக்கு சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, நெல்லை, வேலூர், கோவை, தர்மபுரி ஆகிய 9 மண்டலங்களில் பயிற்சி நடத்திடவும் திட்ட மிடப்பட்டு, அதன் முதல் சுற்றாக மதுரை மண்டலத்தில்இந்த பயிற்சி தொடங்கப்பட்டு, வருகிற 11-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    ஆர்வத்தின் அடிப்படையில் தேர்ந்தெ டுக்கப்பட்டு, இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள ஆசிரியர்கள் இந்த பயிற்சியின் வாயிலாக தாங்கள் அறியப்படும் வரலாற்று சிறப்பு அம்சங்கள் குறித்து மாணவ செல்வங்களிடம் எடுத்துரைத்து, தமிழின் பெருமையையும், தமிழர்களின் புகழையும் அறியச்செய்கின்ற வகையில் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இதுமட்டுமன்றி இந்த வரலாற்று சிறப்பு அம்சங்களை மாணவர்கள் நேரில் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் மாநில அளவில் கல்வி சுற்றுலாவும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் கலெக்டர் மதுசூதன் ரெட்டி, மாநில திட்ட இயக்குநர் இளம்பகவத், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, இயக்குநர்கள் அறிவொளி (தொடக்கக்கல்வி இயக்ககம்), லதா (மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம்), இணை இயக்குநா்கள் குமார், ஸ்ரீதேவி, ராஜேந்திரன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×