என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • ராமநாதபுரம் மாவட்ட பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.
    • இந்த தகவலை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் ஆணைக்கிணங்க மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நாளை (10-ந்தேதி) கீழ்க்கண்ட கிராமங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

    ராமநாதபுரம் வட்டம்-வாணி (நியாயவிலைக்கடை), ராமேசுவரம் வட்டம்-மாங்காடு-(சமுதாயக் கட்டிடம்), திருவாடானை வட்டம்-சோழியக்குடி (நியாய விலைக்கடை).

    பரமக்குடி வட்டம்-வழிமறிச்சான் (இ-சேவை மையக்கட்டிடம்), முதுகுளத்தூர் வட்டம்-மீசல் (இ-சேவை மையக் கட்டிடம்), கடலாடி வட்டம்-ஒருவானேந்தல் (நியாயவிலைக்கடை கட்டிடம்).

    கமுதி வட்டம்-பேரூர் (ஆசாரி திருமண மகால் கட்டிடம்), கீழக்கரை வட்டம்-கீழதில்லையேந்தல் (நியாயவிலைக்கடை), ஆர்.எஸ்.மங்கலம் வட்டம்-கொத்தியார்கோட்டை (நியாயவிலைக் கடை) ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல், குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.

    நியாய விலைக்கடைகளில் பொருள்பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச்சான்று வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநியோகக்கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் இருப்பின் அவற்றை பொது மக்கள் இந்த முகாம்களில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 9 வட்ட ங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெற உள்ள இந்த குறைதீர்க்கும் முகாமில் மனுக்களை அளித்து சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் வங்கக்கடலில் உருவாகியுள்ள மான்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்கிறது.
    • சில இடங்களில் கடல் உள்வாங்கியதாலும் படகுகள் தரை தட்டி தேமடைந்தன.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் வங்கக்கடலில் உருவாகியுள்ள மான்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது.

    புயல் சின்னம் காரணமாக ராமேசுவரம், பாம்பன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த 3 நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டப்படகுகள் ராமேசுவரம், பாம்பன் துறை முகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் புயல் காரணமாக நேற்று மாலை முதல் வழக்கத்தை விட ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருந்தது. இன்று காலையும் பலத்த சூறாவளி காற்று வீசியது.

    இதன் தாக்கமாக பாம்பன் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 விசைப்படகுகள், 5 நாட்டுப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்தன. இதில் சில படகுகள் கடல் அலையால் இழுத்து வரப்பட்டு கரை தட்டியது.

    இதையடுத்து மீனவர்கள் அதனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சில இடங்களில் கடல் உள்வாங்கியதாலும் படகுகள் தரை தட்டி தேமடைந்தன. அதனையும் மீட்கும் நடவடிக்கைகளில் மீனவர்கள் ஈடுபட்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறுஉத்தரவு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அறிவித்தார்.
    • ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தடை காரணமாக இன்றும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    ராமேசுவரம்:

    வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்றும், கடலோர பகுதிகளில் சூறைக்காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறுஉத்தரவு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அறிவித்தார். இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் நேற்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, சோழியக்குடி, உப்பூர், ஏர்வாடி, வாலிநோக்கம், மூக்கையூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் பைபர் படகுகள் கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தடை காரணமாக இன்றும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்களின் 1,200 விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    புயல் எச்சரிக்கை காரணமாக பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று முன்தினம் (6-ந்தேதி) 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று அங்கு 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் பஸ் நிலையம் அருகே குடோனில் பதுக்கிய ரூ.3.84 லட்சம் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.
    • இந்த சம்பவம் குறித்து கேணிக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் புலிக்காரத் தெருவை சேர்ந்தவர் சண்முகம்(வயது 57). இவர் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு புகையிலை போடும் பழக்கம் இருந்துள்ளது.

    இதையடுத்து தினமும் பாரிவள்ளல் பள்ளி அருகே பான் மசாலா விற்பனை செய்வரிடம் வாங்கி உபயோகித்து வந்துள்ளார். நேற்று காலை வழக்கம் போல் புகையிலை போட்டதும் திடீரென சண்முகத்திற்கு மயக்கம் ஏற்பட்டு வயிறு வலி ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் போலீசார் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று புகையிலை விற்பனை செய்தவரிடம் விசாரணை நடத்தினர்.

    அவரது தகவலின் பேரில் ராமநாதபுரம் பஸ் நிலையம் அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த கணேஷ் புகையிலை 396 கிலோ, கூல் லிப் புகையிலை 35 கிலோ, விமல் புகையிலை 61 கிலோ ஆகியவைகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3,84,004. இது தொடர்பாக ராமநாதபுரம் பாசிப்பட்டரை தெருவை சேர்ந்த ஆதில் அமீன் (40), வைகை நகரைச் சேர்ந்த பாசித் ராஜா, தெற்கு தெரு நிஷார் அகமத் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து, ஆதில் அமீனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மற்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான கலை திருவிழா நேசனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் தலைமையில் நடந்தது.
    • இந்த விழாவில் மாணவர்கள் கலைத்திறனை வெளிப்படுத்தி பெருமை தேடி தர வேண்டும் என்று கலெக்டர் பேசினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் பள்ளி கல்வித்துறையின் மூலம் மாவட்ட அளவிலான கலை திருவிழா நேசனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், பயிற்சி சப்-கலெக்டர் நாராயண சர்மா, மாவட்ட கவுன்சிலர் கவிதா கதிரேசன் ஆகியோர் பேசினர்.

    முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து வரவேற்றார். கலை நிகழ்ச்சி களை தொடங்கி வைத்து கலெக்டர் பேசியதாவது:-

    ஆர்வத்துடன் கலையை கற்கும்போது மாணவர்களின் திறன் வெளிக்கொண்டு வருவது மட்டுமின்றி அதன் மூலம் சமுதாயத்தில் பெரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    கலைத் திருவிழாவிற்காக பங்கேற்க 33 ஆயிரம் மாணவ, மாணவிகள் பதிவு செய்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. அதேபோல் வட்டார அளவில் 15 ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி இருப்பது வரவேற்கத்தக்கது.

    கலை என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு வகையில் உதவியாக இருக்கும். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அதிக அளவு மாணவ, மாணவிகள் பங்கேற்று கலைத்திறனை வெளிப்படுத்தி உங்களுக்கும், பள்ளிக்கும் பெருமை தேடித் தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி தொகுத்து வழங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் ரவி, நேசனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் செய்யதா அப்துல்லா, மண்டபம் யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர்கள் செல்வராஜ், கண்ணன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • தொண்டி அருகே கடற்கரையில் ஜெலட்டின் குச்சிகளை பதுக்கியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    • மீன் பிடிப்பதற்காக அதற்கான பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக தொண்டி கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே பாசிப்பட்டிணம் கடற்கரை பகுதியில் உள்ள கலங்கரை விளக்கத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் வெடிவைத்து மீன் பிடிப்பதற்காக அதற்கான பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக தொண்டி கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி இன்று கடலோரப் பாதுகாப்பு குழும பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ், தேவிபட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார், தொண்டி மரைன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் முஸ்தபா ஆகியோர் தலைமையிலான போலீசார்கள் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினர்

    அப்போது கடற்கரையில் குழிதோண்டி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 239 ஜெலட்டின் குச்சிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தொண்டி புதுக்குடியை சேர்ந்த கோட்டைராஜா மகன் கண்ணன் மற்றும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கடலில் வெடிகளை வெடிக்கச்செய்து மீன் பிடிப்பதற்காக ஜெலட்டின் குச்சிகளை பதுக்கியி ருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    • பரமக்குடியில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் 90 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • அவர்களுக்கு பணி ஆணைகளை முருகேசன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    பரமக்குடி

    தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் குடிசை இல்லா வீடுகளை உருவாக்குவதற்காக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், அனை வருக்கும் வீடு கட்டும் திட்டத்தில், மானியத்துடன் சுயமாக வீடு கட்டுவதற்கு 36 வார்டுகளில் 96 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    அதில் முதல் கட்டமாக 9 பேருக்கு முதல் தவணை நிதி வழங்கப்பட்டது. இதனை பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் வழங்கினார். இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்டுபவர்களுக்கு ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் மானியம் வழங்கப்படும். 4 தவணைகளாக மானிய தொகை வழங்கப்படும்.

    இந்த நிகழ்வில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எம்.டி. அருளானந்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் உதவி பொறியாளர் கேர்லின் ரீட்டா, நகர துணைச்செயலாளர் மும்மூர்த்தி, கவுன்சிலர்கள் கிருஷ்ணன், அப்துல் மாலிக், பிரபா சாலமன், தனலட்சுமி, சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கார்த்திகை திருவிழாவில் சொக்கப்பனை எரிக்கப்பட்டது.
    • இதில் டிரஸ்டி சேதுமாதவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சத்திரிய நாடார் உறவின்முறைக்கு பாத்தி யப்பட்ட முத்துமாரியம்மன் கோவில், இந்த பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இங்கு திருக்கார்த்திகை திருவிழா விமரிசையாக நடந்தது. நேற்று இரவு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. சுவாமி, மயில்

    வாகனத்தில் மாடுகள் பூட்டிய தேரில் கோவிலை வலம் வந்தது.

    பின்னர் கோவில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு, சுவாமி முன்பு சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நாடார் உறவின்முறை முறைகாரர் பாபுசெல்வக்கனி, அம்பலகாரர் சக்திவேல் மற்றும் டிரஸ்டிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதே போல் கவுரவ உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட காமாட்சி அம்மன் கோவில் முன்பும் சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் டிரஸ்டி சேதுமாதவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அபிராமத்தை தலைமையிடமாக கொண்டு யூனியன் அலுவலகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னனர்.
    • சுமார் ஒரு லட்சத்திற்க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறோம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் செயல்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகமான ஊராட்சிகளை கொண்ட யூனியனாக கமுதி ஊராட்சி ஒன்றியம் உள்ளது. இது அபிராமம் பேரூராட்சி மற்றும் 53 ஊராட்சிகளை உள்ளடக்கிய பகுதியாகும்.

    பரமக்குடி ஒன்றியத்தில் சில ஊராட்சிகள், முது குளத்தூர் ஒன்றியத்தில் சில ஊராட்சிகள், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியத்தில் சில ஊராட்சிகளை சேர்த்து அபிராமத்தை தலைமை யிடமாக கொண்டு யூனியன் அலுவலகம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

    இதுகுறித்து அபிரா மத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், அபிராமம் மற்றும் அதை சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சுமார் ஒரு லட்சத்திற்க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறோம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் செயல்பட்டு வருகிறது.

    அபிராமத்தில் இருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்ல கமுதி, பரமக்குடி, முதுகுளத்தூர் ஆகிய 3 ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அரசின் நலத்திட்டங்கள் பெறவும், அடிப்படை வசதிகளை பெறவும் சிரமப்பட வேண்டியதுள்ளது.

    இதனை தவிர்க்க அபிராமத்தை தலைமை யிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக பல்வேறு கட்ட அகிம்சை வழி போராட்டங்களை நடத்த தயராக உள்ளோம்.

    மத்திய-மாநில அரசின் நிதி மற்றும் நலத்திட்டங்கள் இந்த கிராமங்களுக்கு கிடைப்பதில்லை. இதனால் அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாக இன்று வரை உள்ளது என்றனர்.

    • ராமநாதபுரத்தில் முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மாநில பொதுச் செயலாளர் பாலை ரபிக், உள்ளிட்ட பலர் பேசினர்.

    ராமநாதபுரம்

    பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி வழிபாட்டு உரிமை பாது காப்புக்கான ஆர்ப்பாட்டம் ராமநாதபுரத்தில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் சார்பில் நடந்தது.

    த.மு.மு.க. மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சலிமுல்லாகான் ஏற்பாட்டில் மத்திய மாவட்ட தலைவர் பிரீமியர் இப்ராஹிம் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிலைய செயலாளர் ஜைனுல் ஆபிதீன், எழுத்தாளர் மதிமாறன், நிர்வாகிகள் வாவா ராவுத்தர், பட்டாணி மீரான் ஷேக் அப்துல்லா உட்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமையில் சந்தை திடல் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் துணைத் தலைவர் சோமு, சுலைமான், பொதுச்செயலாளர் ஜமீல், செயலாளர்கள் ஆசாத், நஜ்முதீன் பொருளாளர் ஹசன் அலி, எஸ்.டி.டி.யு. தலைவர் முஸ்தாக் அகமத், மருத்துவ அணி தலைவர் காதர் கனி, வுமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் ரம்ஜான், விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் தவ்லத்தியா முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத்தலைவர் ரபிக் அகமது கலந்து கொண்டார்.

    ராமநாதபுரம் மாவட்ட ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சந்தை திடலில் மாவட்ட தலைவர் சுல்தான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மேற்கு மாவட்ட தலைவர் பாஹிர் அலி வரவேற்றார். கிழக்கு மாவட்ட செயலாளர் ராவுத்தர் நைனா முகமது, மேற்கு மாவட்ட செயலாளர் சமைய உல்லா, கிழக்கு மாவட்ட பொருளாளர் காஜா நஜிமுதீன், மேற்கு மாவட்ட பொருளாளர் முகைதீன் அப்துல்காதர், கிழக்கு மாவட்ட துணை தலைவர் கீழை முகம்மது சிராஜுதீன், மேற்கு மாவட்ட துணைத் தலைவர் அப்துல் ரசாக் முன்னிலை வகித்தனர்.

    மாநில பொதுச் செயலாளர் பாலை ரபிக், உள்ளிட்ட பலர் பேசினர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம வளர்ச்சி குறித்து ஊராட்சி தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் கிராம ஊராட்சியின் வளர்ச்சி குறித்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது.

    இதில் ராமநாதபுரம், திருப்புல்லாணி, முது குளத்தூர், மண்டபம் ஒன்றியங்களை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது கலெக்டர் பேசியதாவது:-அனைத்து ஊராட்சி களிலும் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதிகளை மேம்படுத்த திட்டங்களை தீர்மானித்து அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்க வேண்டும். கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி களிலும் பணிகள் நடை பெறும். ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளையும், பொது நிதியில் இருந்து எடுக்கப்படும் வேலைகளையும் விரைந்து முடிக்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் உரிய முறையில் குடிநீரில் குளோரிநேசன் செய்யப்பட வேண்டும். பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவை கண்காணிக்க வாட்டர் மீட்டர் பொருத்த வேண்டும்.

    தெரு விளக்குகள் அலைபேசி மூலம் செயல்படுத்தும் முறை அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளன. 2023-24 கிராம வளர்ச்சி திட்டம் தயார்செய்யும் போது தண்ணீர் மேலாண்மை குறித்து முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

    கிராம ஊராட்சிகளில் பயன்பாடற்ற மின் இணைப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது சுகாதாரத்துறையின் மூலம் அவ்வப்போது மருத்துவ முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும்.

    மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தேவையான மருத்துவ உதவிகளை பெற்று வழங்க வேண்டும். பொதுவாக ஊராட்சியின் வளர்ச்சிக்கு திட்டமிட்டு செயல்பட்டு மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உங்களது பணி முக்கியமான ஒன்றாக திகழ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொ றியாளர் சுந்தரேசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பரமசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கீழக்கரை வழிகாட்டி பாலமுருகன் கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.
    • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் உள்ள வழிகாட்டி பாலமுருகன் கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இந்த விழா 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    மூலவர் வழிகாட்டி பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதைத் தொடர்ந்து அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலையில் பரணி தீபத்தில் இருந்து தீபம் எடுக்கப்பட்டு கோவில் மேல் தளத்தில் உள்ள 40 அடி உயர பீடத்தில் எண்ணெய் கொப்பரையில் 50 கிலோ நெய் மற்றும் திரி வைத்து கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

    பாலமுருகன் 3 முறை கோவிலின் வெளிப்பி ரகார வீதியில் வலம் வந்தார். பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான இந்து நாடார் உறவின் முறை, இந்து நாடார் இளைஞர் சங்கத்தினர் செய்திருந்தனர்.

    ×