என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • ‘ஹெல்மெட்’ அணிந்து கோவிலுக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன், சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சி மூலம் தற்போது சிக்கினார்.
    • சுல்தான் செய்யது இப்ராகிம் அலி மீது வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


    சாயல்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள இளஞ்செம்பூரில் முத்து இருளாயி அம்மன் கோவில் இருக்கிறது. சம்பவத்தன்று நள்ளிரவில் 'ஹெல்மெட்' அணிந்து வந்த மர்மநபர் ஒருவர், கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உண்டியலில் இருந்த பணம் மற்றும் சாமி நகைகளை திருடினார்.

    கோவில் உண்டியல் உடைக்கப்படும் சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கோவிலுக்கு திரண்டு வந்தனர். இதையடுத்து அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பொதுமக்கள் வந்து பார்த்தபோது கோவில் உண்டியலில் இருந்த பணமும், சாமிக்கு அணிவித்திருந்த தங்கத்தாலி, வெள்ளி கிரீடம் உள்ளிட்டவைகளும் திருட்டுபோய் இருந்தது.

    இதுகுறித்து இளஞ்செம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதில் 'ஹெல்மெட்' அணிந்து வந்த ஒரு நபர் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்த காட்சி பதிவாகி இருந்தது. அந்த நபர் யார்? என்று விசாரித்தபோது, அவர் பிரபல கொள்ளையனான பரமக்குடி சுப்பிரமணியன் கோவில் தெருவை சேர்ந்த சுல்தான் செய்யது இப்ராகிம் அலி (வயது 52) என தெரியவந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து அம்மன் கோவிலில் திருட்டுபோன தங்கத்தாலி, வெள்ளி கிரீடம் மற்றும் உண்டியல் பணம் ரூ.5,750 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் அவர் மதுரை ஐகோர்ட்டு வக்கீல் என்று போலி அடையாள அட்டை வைத்திருந்தார். மனைவியை பிரிந்து வாழ்ந்த சுல்தான் செய்யது இப்ராகிம் அலி, வக்கீல் என போலி அடையாள அட்டையுடன் சுற்றி திரிந்து திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    'ஹெல்மெட்'அணிந்து திரிந்ததால் அவர் வெகுநாட்களாக சிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் 'ஹெல்மெட்' அணிந்து கோவிலுக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட அவர், சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சி மூலம் தற்போது சிக்கினார்.

    சுல்தான் செய்யது இப்ராகிம் அலி மீது வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

    • ராமேசுவரத்துக்கு வந்தபோது துர்கா தேவி உடல் நலக்குறைவால் இறந்தார்.
    • உயிரிழந்தவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்று இறுதி சடங்கு செய்திட குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

    ராமநாதபுரம்:

    ஹரியானா மாநிலம் மகேந்திரகர்வ் மாவட்டத்தை சேர்ந்த சிவசங்கர் (வயது70), துர்கா தேவி (65) மற்றும் அவரது மகன் ராமேசுவரம் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தனர். இந்நிலையில் கடந்த 17-ந்தேதி துர்கா தேவி உடல் நலக்குறைவால் இறந்தார்.

    அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்று இறுதி சடங்கு செய்திட குடும்பத்தினர் முடிவு செய்தனர். சுமார் 2 ஆயிரத்து 850 கிலோ மீட்டர் தூரம் என்பதால் ஆம்புலன்சு டிரைவர்கள் தயக்கம் காட்டினர். இந்த நிலையில் அந்த குடும்பத்தினர் த.மு.மு.க. மாநில துணை பொதுச் செயலாளர் சலீமுல்லாகானை அணுகினர்.

    இதை தொடர்ந்து அவர், மாவட்ட தலைவர் பிரிமியர் இப்ராஹிம், மருத்துவ அணி செயலாளர் தாஜுதீன் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அவர்களின் ஆலோசனைப்படி உடலை எடுத்துச் செல்லவும், எரிபொருள் பராமரிப்பு செலவுக்காகவும் சிறு தொகையை மட்டும் பெற்றனர். பின்பு த.மு.மு.க. ஆம்புலன்ஸ் டிரைவர் சங்கர் 48 மணி நேரம் பயணம் செய்து துர்கா தேவியின் உடலை அவர்களின் சொந்த ஊருக்கு கொண்டு சேர்த்தார்.

    வடமாநில பக்தரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்ற ஆம்புலன்சு டிரைவர் மற்றும் நடவடிக்கை எடுத்த நிர்வாகிகளை த.மு.மு.க. மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., துணை பொதுச் செயலாளர் சலீமுல்லாகான் ஆகியோர் பாராட்டினர்.

    • எடப்பாடி பழனிசாமியை நாகரீகமற்ற முறையில் பேசுவதா? என்று ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    • சிலர் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே திருஉத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோவிலில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 51 ஜோடிகளின் திருமண அழைப்பிதழை வைத்து குடும்பத்துடன் வழிபாடு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    முதன் முதலில் புரட்சித்தலைவி அம்மா ரூ.100 பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கினார்.அதனை தொடர்ந்து பொங்கலுக்கு கரும்பை அம்மா வழங்கினார். அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு, கரும்பு ஆகியவற்றை வழங்கினார்.

    2021-ம் ஆண்டில் ரூ.2500 பொங்கல் பரிசு மற்றும் அரிசி, சர்க்கரை, கிஸ்மிஸ், முந்திரி ஏலக்காய், ஒரு முழு நீள கரும்பு ஆகியவற்றை வழங்கினார். அத்துடன் வேட்டி, சேலையும் வழங்கினார்.

    பொங்கல் பரிசு என்பது மக்களுக்கு வாழ்வாதார திட்டமாகும். ஒரு கோடியே 86 லட்சம் பேருக்கு வேட்டிகளும், ஒரு கோடியே 86 லட்சம் பெண்களுக்கு சேலைகளும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    பொங்கல் தொகுப்பின் மூலம் நெசவாளர்களும் பயன் பெறுவார்கள், மக்களும் பயன்பெறுவார்கள். அதே போல் கரும்பு வழங்கும்போது விவசாயிகளும் பயன்பெறுவார்கள், மக்களும் பயன் பெறுவார்கள்.

    இந்த பொங்கல் தொகுப்பில் வேட்டி-சேலை திட்டத்தையும், கரும்பையும் இதில் அறிவிக்கவில்லை. கரும்பு விவசாயிகளுக்கு வெளி மார்க்கெட்டில் போதுமான விலை அவர்களுக்கு கிடைக்காது.

    முதல்-அமைச்சர் அறிவிக்காதது கரும்பு விவசாயிகள் மத்தியில் இன்றைக்கு கண்ணீரை வரவழைத்து உள்ளது. அதேபோல் ஆயிரம் ரூபாய் முதல்வர் அறிவித்திருப்பது, யானைபசிக்கு சோ ளப்பொரி போன்றதாகும். அதேபோல் பொங்கல் தொகுப்பில் கிஸ்மிஸ், முந்திரி, ஏலக்காய் ஆகிய பொருள்கள் அனைத்தும் கொடுப்பது மரபு ஆகும் பொங்கல் பொருட்களை குறைத்து விட்டதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதன் மூலம் மக்களின் பொங்கல் கொண்டாட்டத்திற்கு இந்த அரசு ஆதரவு அளிக்கவில்லை என்பது போல் உள்ளது.

    இன்றைக்கு அம்மாவால் நியமிக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தான் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்துள்ளனர்.

    சிலர் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த இயக்கத்தை ஏழை, எளிய மக்களுக்காக புரட்சித்தலைவர் உருவாக்கினார். இந்த இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று அம்மா நினைத்தார்கள்.

    அம்மாவின் கனவை நனவாக்கும் வண்ணம் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார்.அதற்காக ஏச்சுகளையும், பேச்சுக்களையும், அவதூறுகளையும் சுமந்து தான் ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறார்.

    இந்த இயக்கத்தில் ஒன்னரை கோடி தொண்டர்களும் அவருக்கு பின்னால் தான் உள்ளார்கள். இதை பொறுக்க முடியாத சில பேர் இயலாமையால், விரக்தியால் வெளியேறி நாகரிமற்ற பேச்சை பேசுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளருக்கு சர்வதேச அளவிலான சிறந்த கல்வியாளர் விருது வழங்கப்படுகிறது.
    • ஹயாட்டில் நடை பெறும் சர்வதேச கல்வி விருதுகள் வழங்கும் மாநாட்டில் இதற்கான விருது வழங்கப்படுகிறது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் பயிலும் இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் தாளாளர் வழக்கறிஞர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹீம்.

    இவருக்கு நடப்பாண்டிற்கான சர்வதேச அளவிலான சிறந்த கல்வியாளர் விருதை வழங்குவதாக பஞ்சாப் மாநிலம் லூதியானாவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் கிட்ஸ் கிராப்ட் எல்.எல்.சி. கல்விக் குழு அறிவித்துள்ளது.

    விருதுக்குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை யில், கல்வித்துறையில் புதிய மைல்கற்களை அடைய எங்களுக்கு உதவிய உங்கள் புத்திசாலித்தனம் மற்றும் அறிவாற்றலுக்காக இந்த விருதைப் பெறுபவராக நீங்கள் தே ர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என்று தெரிவித்துள்ளனர்.

    டிச.30-ந்தேதி குர்கானில் உள்ள ஹயாட்டில் நடை பெறும் சர்வதேச கல்வி விருதுகள் வழங்கும் மாநாட்டில் இதற்கான விருது வழங்கப்படுகிறது.

    • முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில் போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டது.
    • 2-வது நாளாக இன்றும் பழுதை சரிசெய்யும் பணி நடப்பதால் மண்டபம், ராமநாதபுரம் ரெயில் நிலையங்களில் இருந்து இன்று ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பன் ரெயில் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. பழமையான இந்த பாலத்தில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருவதால் இதன் அருகிலேயே பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பாம்பன் ரெயில் பாலத்தில் அதிர்வுகளை கண்டறிய 84 இடங்களில் சென்சார் கருவி பொருத்தப்பட்டு உள்ளது. இவை ரெயில்கள் ஒவ்வொரு முறையும் பாலத்தை கடக்கும்போது அதிர்வுகளை பதிவு செய்யும். அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு ரெயில் பாம்பன் பாலத்தை கடந்தபோது தூக்குப்பாலத்தில் உள்ள சென்சார் கருவியில் இருந்து எச்சரிக்கை ஒலி எழுப்பியது.

    இதுதொடர்பாக தகவலறிந்த அதிகாரிகள் அங்கு வந்து ஆய்வு செய்தபோது பாலத்தில் வழக்கத்தை விட அதிர்வுகள் இருப்பதாக சென்சாரில் பதிவாகி உள்ளது தெரிய வந்தது. இதனை எச்சரிக்கும் வகையில் ஒலி எழுப்பியுள்ளது.

    இதையடுத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில் போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. சென்னை, மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ரெயில்கள் மண்டபம் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. அங்கிருந்து பயணிகள் அரசு பஸ், ஆட்டோ மூலம் ராமேசுவரம் சென்றனர். மேலும் ராமேசுவரத்தில் இருந்து இயக்கப்படவிருந்த ரெயில்களும் ரத்து செய்யப்பட்டன.

    ரெயில் பாலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய மதுரையில் இருந்து அதிகாரிகள் குழுவினர் பாம்பனுக்கு சென்றனர். அவர்கள் ரெயில் பாலத்தில் உள்ள தூக்குபாலத்தில் ஆய்வு நடத்தினர். ஆனால் பழுதை உடனடியாக சரிசெய்ய இயலவில்லை.

    இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து இன்று ஐ.ஐ.டி. குழுவினர் வருகின்றனர். அவர்கள் பாலத்தின் உறுதித்தன்மையை ஆராய்ந்து தொழில்நுட்ப கோளாறை சரிசெய்தபின் பாம்பன் ரெயில் பாலத்தில் போக்குவரத்து தொடங்கும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ரெயில் பாலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று முதல் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்பட்டன. மேலும் சென்னை மற்றும் வட மாநிலங்களில் இருந்து வந்த ரெயில்களும் மண்டபத்தில் நிறுத்தப்பட்டன.

    ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட காலி பெட்டிகளுடன் நிறுத்தப்பட்டிருந்த ரெயில் பாம்பன் ரெயில் பாலத்தை மெதுவாக கடந்து மண்டபம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து அந்த ரெயில் பயணிகளுடன் செகந்திராபாத்துக்கு புறப்பட்டு சென்றது.

    2-வது நாளாக இன்றும் பழுதை சரிசெய்யும் பணி நடப்பதால் மண்டபம், ராமநாதபுரம் ரெயில் நிலையங்களில் இருந்து இன்று ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபால் வெளியூர்களில் இருந்து வரும் ரெயில்களும் மண்டபத்திலேயே நிறுத்தப்படுகின்றன.

    • பெரியபட்டினத்தில் வீடுகளை காலி செய்ய பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
    • யூனியன் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி யூனியன் கூட்டம் தலைவர் புல்லாணி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் சிவலிங்கம் முன்னிலை வகித்தார். கமிஷனர் ராஜேந்திரன் வரவேற்றார். அலுவலக உதவியாளர் சரவணன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    துணைத் தலைவர் சிவலிங்கம்: மாயாகுளத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தால் விபத்து அபாயம் நிலவுகிறது. அதனை உடனே அப்புறப்படுத்த வேண்டும். கிராம சபை கூட்டத்தில் 100 நாட்கள் பணியாளர்களை வைத்து கூட்டம் நடத்துகின்றனர். இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

    பைரோஸ்கான்: பெரியபட்டினம் ஊராட்சியில் ஜலாலியா நகர், தங்கையா நகர் ஆகிய பகுதிகளில் 2011-ம் ஆண்டு 80 பேருக்கு அரசு இலவச பட்டா வழங்கி உள்ளது.இந்த இடத்தில் கடந்த 11 ஆண்டுகளாக ஏழை, எளிய மக்கள் குடியிருந்து வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்த மக்களை வீடுகளை விட்டு காலி செய்யுமாறு ஊராட்சி தரப்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி உத்தரவை திரும்ப பெற வேண்டும்.

    கமிஷனர்: இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

    கவுன்சிலர் கோவிந்த மூர்த்தி: காஞ்சிரங்குடி ஊராட்சிக்குட்பட்ட செங்கழுநீர்ஓடை, அலை வாய்க் கரைவாடி, ஸ்ரீநகர், கோகுலம் நகர், லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காவிரி குடிநீர் வருவதில்லை. அவற்றை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கலாராணி: இந்த யூனியன் கூட்டத்தில் பெண் கவுன்சிலர்களின் கோரிக்கையை யாரும் முழுமையாக கேட்பதி ல்லை. எங்களின் குரலை கேட்டால்தான் மக்களின் குரலை நிவர்த்தி செய்ய இயலும். அவற்றை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருமுருகன்: ஆலங்குளம் கண்மாயில் அடர்ந்து வளர்ந்த கருவேல் மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் மழைக்காலங்களில் நீரை தேக்க வழி இல்லாமல் உள்ளது. ஆலங்குளத்தில் துணை சுகாதார நிலையம் சேதமடைந்த நிலையில் உள்ளது.

    சுமதி ஜெயக்குமார்: முத்து ப்பேட்டை ஊராட்சியில் ஏராளமானோருக்கு டெங்கு நோய் பாதிப்பின் அறிகுறி உள்ளது. கொசு மருந்து அடித்து நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பெரியபட்டினம் கவுன்சிலர் பைரோஸ் கான்: ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீருக்காக ரூ. 2,883 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பி.டி.ஓ. கணேஷ் பாபு நன்றி கூறினார்.

    • மாணவர்கள் தன்னம்பிக்கை பெற புத்தகங்களை ஆசிரியர்கள் வழங்கினர்.
    • இந்த பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை மொத்தம் 647 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை பள்ளிகள் தோறும் நூலகம் அமைத்து மாணவர்களிடம் புத்தகங்கள் வாசிப்பதை பரவலாக்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரகுநாதபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தனியாக வகுப்பறை ஒதுக்கி நூலகம் அமைத்து அதற்கென வளர்மதி என்ற ஆசிரியரை பொறுப்பாசிரியராக நியமித்து மாணவர்களிடம் புத்தகம் படிப்பதை வழக்கமாக்கி வருகின்றனர். இந்த பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை மொத்தம் 647 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த நூலகத்திற்கு நாவல்கள், சிறுவர் நூல்கள், வரலாறு, தமிழ், ஆங்கிலம், அறிவியல் மற்றும் போட்டித் தேர்வுக்குரிய புத்தகங்களை அரசு வழங்கியுள்ளது.

    இங்கு உயிரியல் ஆசிரியராகப் பணிபுரியும் சங்கரகோமதி, இந்தாண்டு பணி ஓய்வு பெற உள்ளதை முன்னிட்டு, மாணவர்கள் படித்துப் பயன்பெறவும், தன்னம்பிக்கையை வளர்க்கவும் உதவும் வகையில்,

    ரூ. 6 ஆயிரம் மதிப்புள்ள அப்துல்கலாம், இறையன்பு, சைலேந்திரபாபு, கவிஞர் முத்துக்குமார் உள்ளிட்டோர் எழுதிய 30 புத்தகங்களை பள்ளி நூலகத்துக்கு அன்பளிப்பாக வழங்கினார். அவற்றை தலைமையாசிரியர் யுனைசி, நூலகப் பொறுப்பாசிரியர் வளர்மதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் சமையல் எரிவாயு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • மேற்கண்ட கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன் பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம், ராமேசுவரம். கீழக்கரை, ராஜசிங்கமங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, மற்றும் முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிப்பதற்காக எண்ணெய் நிறுவனம் மற்றும் எரிவாயு முகவர்களுடன் குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 26-ந் தேதி அன்று மாலை 5.30 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

    மேற்கண்ட கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன் பெறலாம்.

    • திரவ உயிர் உரங்களை சாகுபடிக்கு பயன்படுத்துங்கள் என்று வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை கூறினார்.
    • நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் உயிர் உர உற்பத்தி மையத்தில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சரஸ்வதி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராமநாதபுரம், உயிர் உர உற்பத்தி மையத்தில் நடப்பு ஆண்டு (2022-23) 137 மெட்ரிக் டன் திட உயிர் உரங்கள் மற்றும் 55,000 லிட்டர் திரவ உயிர் உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருச்சி, மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இம்மையத்தில், அசோஸ்பைரில்லம் (நெல்), அசோஸ்பைரில்லம் (இதரம்), ரைசோபியம் (பயறு), ரைசோபியம் (நிலக்கடலை), பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, அசோபாஸ் (நெல்), அசோபாஸ் (இதரம்) போன்ற உயிர் உரங்கள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் தற்போது சாகுபடி செய்துள்ள நெல், பருத்தி, எள், மிளகாய் போன்ற அனைத்து பயிர் களுக்கும் திரவ உயிர் உரங்களை விதை நேர்த்தி, மண்ணில் இடுதல் மூலமாக பயன்படுத்தி மண்வளம் காத்து, அதிக மகசூல் பெற்றிடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராமநாதபுரம் வேளாண்மை உதவி இயக்குநர் கோபால கிருஷ்ணன், மூத்த வேளாண்மை அலுவலர் அம்பேத்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    • கைத்தறி ஆடைகளை வாங்கி நெசவாளர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • ராமநாதபுரம் ஹாஜா மஹாலில் சிறப்பு கைத்தறி கண்காட்சி தொடக்க விழா நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ஹாஜா மஹாலில் சிறப்பு கைத்தறி கண்காட்சி தொடக்க விழா மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. முன்னதாக குத்துவிளக்கு ஏற்றி வைத்து மாவட்ட அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து 6-வது முறையாக நடைபெறும் இந்த கண்காட்சி வருகிற 28-ந்தேதி வரை நடைபெறும்.

    இந்த கண்காட்சியில் சுமார் 25க்கும் அதிகமான அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. பின்னர் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கூறியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற கண்காட்சிகள் மூலம் மக்களிடம் கைத்தறி ஆடைகளுக்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கண்காட்சியில் ரூ.65.89 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது. அதே போல் தற்பொழுது கிறிஸ்மஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு இக்கண்காட்சி நடைபெறுகின்றன.

    இக்கண்காட்சி அதிகளவு பொதுமக்கள் அரசு பணியாளர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள் வருகை தந்து கடந்த ஆண்டைவிட அதிகளவு விற்பனை பெருகின்ற வகையில் கைத்தறி ஆடைகள் வாங்கி ' எனது கைத்தறி எனது பெருமை " என்ற நிலையை உருவாக்கி நெசவாளர்களின் வாழ்வில் ஒளியேற்றிட உறுதுணையாக இருந்திட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, கைத்தறித் துறை உதவி இயக்குநர் கார்த்திகேயன், துணி நூல் கட்டுப்பாட்டு அலுவலர்கள் ராமகிருஷ்ணன், ஆரோக்கியராஜ், மேகனா, கைத்தறி துறை ஆய்வாளர் ரத்தின பாண்டியன், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க இயக்குநர்கள் அய்யான், சங்கீதா மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாம்பன் ரெயில் பாலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக மதுரையில் உள்ள ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • ரெயில்கள் கடக்கும்போது பாம்பன் ரெயில் பாலத்தில் அதிர்வுகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைக்கும் வகையில் கடலில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

    1914-ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ள இந்த பாலம் நூற்றாண்டை கடந்து சேவை செய்து வருகிறது. தென்னக ரெயில்வேயின் முக்கிய அடையாளமாக உள்ள பாம்பன் ரெயில் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள கர்டர்கள் கடல் காற்று காரணமாக அடிக்கடி துருப்பிடிக்கும்.

    இதனை ரெயில்வே ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபடுவார்கள். இதற்காக பிரத்யேக கலவைகளும் பாலத்தில் பூசப்பட்டு வருகிறது. புயல் மற்றும் கடல்காற்று அதிகமாக வீசப்படும் காலங்களில் பாம்பன் ரெயில் பாலத்தில் மிக குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.

    கடல் காற்று, அலையின் தன்மைகளை கண்டறிய தண்டவாளத்தில் நவீன கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கருவி கடல் காற்றின் வேகம், சீற்றம் குறித்து பதிவு செய்யும். அதனை பொருத்து பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில்கள் இயக்குவது தொடர்பாக அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.

    கடந்த ஒரு வாரமாக வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பாம்பன் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியது. கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் மிக குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டன.

    இந்த நிலையில் தூக்குப்பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த நவீன கருவி திடீரென பழுதானதால் நேற்று மாலை முதல் ரெயில்களை இயக்க சிக்னல்கள் கிடைக்கவில்லை. இதனால் கடலில் காற்று வீசும் தன்மை, அலையின் தன்மை குறித்த விவரங்கள் தெரியவில்லை.

    இந்த தொழில்நுட்ப கோளாறால் ராமேசுவரம்-மதுரை ரெயில் நேற்று ரத்து செய்யப்பட்டது. மதுரையில் இருந்து ராமேசுவரம் புறப்பட்ட ரெயில், மண்டபம் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. ராமேசுவரம்-கன்னியாகுமரி ரெயில் மண்டபம் வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே போல் சென்னையில் இருந்து நேற்று இரவு ராமேசுவரத்திற்கு வந்த ரெயில் இன்று அதிகாலை 4 மணிக்கு மண்டபம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அங்கிருந்து பயணிகள் பஸ், ஷேர் ஆட்டோக்கள் மூலம் ராமேசுவரம் சென்றனர்.

    பாம்பன் ரெயில் பாலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக மதுரையில் உள்ள ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இன்று காலை பாம்பன் வந்து அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ரெயில்கள் கடக்கும்போது பாம்பன் ரெயில் பாலத்தில் அதிர்வுகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இன்று மாலைக்குள் தொழில்நுட்ப கோளாறு சரி செய்ய முடியாதபட்சத்தில் சென்னை, பெங்களூருவில் இருந்து அதிகாரிகள் வரவழைக்கப்படுவார்கள் என தெரிகிறது.

    • பரமக்குடி வாலிபர் கொலையில் அவரது நண்பர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • நகை-பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    பரமக்குடி

    சிவகங்கை மாவட்டம் கல்லனி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 32). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. ஒரு வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் பரமக்குடி கோர்ட்டில் ஆஜரான கண்ணன் நேற்று காலை பரமக்குடி எமனேஸ்வரம் அருகே உள்ள சுடுகாட்டில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து எமனேஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கண்ணன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    போலீசார் நடத்திய விசாரணையில் கண்ணனுக்கும், இளையான்குடி அருகே உள்ள ராதாபுளி கிராமத்தை சேர்ந்த விஜயராஜ், தர்மகர்த்தா ஆகியோருக்கும் நகை-பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதில் ஏற்பட்ட பிரச்சினையில் 2 பேரும் கண்ணனை பீர் பாட்டிலால் அடித்துக்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் விஜயராஜ், தர்மகர்த்தா ஆகிய 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×