search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி தீவிரம்: பாம்பன் பாலத்தில் 2-வது நாளாக ரெயில் சேவை நிறுத்தம்
    X

    தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி தீவிரம்: பாம்பன் பாலத்தில் 2-வது நாளாக ரெயில் சேவை நிறுத்தம்

    • முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில் போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டது.
    • 2-வது நாளாக இன்றும் பழுதை சரிசெய்யும் பணி நடப்பதால் மண்டபம், ராமநாதபுரம் ரெயில் நிலையங்களில் இருந்து இன்று ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பன் ரெயில் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. பழமையான இந்த பாலத்தில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருவதால் இதன் அருகிலேயே பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பாம்பன் ரெயில் பாலத்தில் அதிர்வுகளை கண்டறிய 84 இடங்களில் சென்சார் கருவி பொருத்தப்பட்டு உள்ளது. இவை ரெயில்கள் ஒவ்வொரு முறையும் பாலத்தை கடக்கும்போது அதிர்வுகளை பதிவு செய்யும். அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு ரெயில் பாம்பன் பாலத்தை கடந்தபோது தூக்குப்பாலத்தில் உள்ள சென்சார் கருவியில் இருந்து எச்சரிக்கை ஒலி எழுப்பியது.

    இதுதொடர்பாக தகவலறிந்த அதிகாரிகள் அங்கு வந்து ஆய்வு செய்தபோது பாலத்தில் வழக்கத்தை விட அதிர்வுகள் இருப்பதாக சென்சாரில் பதிவாகி உள்ளது தெரிய வந்தது. இதனை எச்சரிக்கும் வகையில் ஒலி எழுப்பியுள்ளது.

    இதையடுத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில் போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. சென்னை, மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ரெயில்கள் மண்டபம் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. அங்கிருந்து பயணிகள் அரசு பஸ், ஆட்டோ மூலம் ராமேசுவரம் சென்றனர். மேலும் ராமேசுவரத்தில் இருந்து இயக்கப்படவிருந்த ரெயில்களும் ரத்து செய்யப்பட்டன.

    ரெயில் பாலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய மதுரையில் இருந்து அதிகாரிகள் குழுவினர் பாம்பனுக்கு சென்றனர். அவர்கள் ரெயில் பாலத்தில் உள்ள தூக்குபாலத்தில் ஆய்வு நடத்தினர். ஆனால் பழுதை உடனடியாக சரிசெய்ய இயலவில்லை.

    இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து இன்று ஐ.ஐ.டி. குழுவினர் வருகின்றனர். அவர்கள் பாலத்தின் உறுதித்தன்மையை ஆராய்ந்து தொழில்நுட்ப கோளாறை சரிசெய்தபின் பாம்பன் ரெயில் பாலத்தில் போக்குவரத்து தொடங்கும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ரெயில் பாலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று முதல் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்பட்டன. மேலும் சென்னை மற்றும் வட மாநிலங்களில் இருந்து வந்த ரெயில்களும் மண்டபத்தில் நிறுத்தப்பட்டன.

    ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட காலி பெட்டிகளுடன் நிறுத்தப்பட்டிருந்த ரெயில் பாம்பன் ரெயில் பாலத்தை மெதுவாக கடந்து மண்டபம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து அந்த ரெயில் பயணிகளுடன் செகந்திராபாத்துக்கு புறப்பட்டு சென்றது.

    2-வது நாளாக இன்றும் பழுதை சரிசெய்யும் பணி நடப்பதால் மண்டபம், ராமநாதபுரம் ரெயில் நிலையங்களில் இருந்து இன்று ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபால் வெளியூர்களில் இருந்து வரும் ரெயில்களும் மண்டபத்திலேயே நிறுத்தப்படுகின்றன.

    Next Story
    ×