search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலாடி அருகே ஹெல்மெட் அணிந்து கோவிலில் திருடிய கொள்ளையன் கைது
    X

    கைதான கொள்ளையனையும், பறிமுதல் செய்யப்பட்ட அம்மன் தங்கத்தாலி மற்றும் வெள்ளி கிரீடத்தையும் காணலாம்.

    கடலாடி அருகே ஹெல்மெட் அணிந்து கோவிலில் திருடிய கொள்ளையன் கைது

    • ‘ஹெல்மெட்’ அணிந்து கோவிலுக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன், சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சி மூலம் தற்போது சிக்கினார்.
    • சுல்தான் செய்யது இப்ராகிம் அலி மீது வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


    சாயல்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள இளஞ்செம்பூரில் முத்து இருளாயி அம்மன் கோவில் இருக்கிறது. சம்பவத்தன்று நள்ளிரவில் 'ஹெல்மெட்' அணிந்து வந்த மர்மநபர் ஒருவர், கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உண்டியலில் இருந்த பணம் மற்றும் சாமி நகைகளை திருடினார்.

    கோவில் உண்டியல் உடைக்கப்படும் சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கோவிலுக்கு திரண்டு வந்தனர். இதையடுத்து அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பொதுமக்கள் வந்து பார்த்தபோது கோவில் உண்டியலில் இருந்த பணமும், சாமிக்கு அணிவித்திருந்த தங்கத்தாலி, வெள்ளி கிரீடம் உள்ளிட்டவைகளும் திருட்டுபோய் இருந்தது.

    இதுகுறித்து இளஞ்செம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதில் 'ஹெல்மெட்' அணிந்து வந்த ஒரு நபர் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்த காட்சி பதிவாகி இருந்தது. அந்த நபர் யார்? என்று விசாரித்தபோது, அவர் பிரபல கொள்ளையனான பரமக்குடி சுப்பிரமணியன் கோவில் தெருவை சேர்ந்த சுல்தான் செய்யது இப்ராகிம் அலி (வயது 52) என தெரியவந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து அம்மன் கோவிலில் திருட்டுபோன தங்கத்தாலி, வெள்ளி கிரீடம் மற்றும் உண்டியல் பணம் ரூ.5,750 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் அவர் மதுரை ஐகோர்ட்டு வக்கீல் என்று போலி அடையாள அட்டை வைத்திருந்தார். மனைவியை பிரிந்து வாழ்ந்த சுல்தான் செய்யது இப்ராகிம் அலி, வக்கீல் என போலி அடையாள அட்டையுடன் சுற்றி திரிந்து திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    'ஹெல்மெட்'அணிந்து திரிந்ததால் அவர் வெகுநாட்களாக சிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் 'ஹெல்மெட்' அணிந்து கோவிலுக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட அவர், சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சி மூலம் தற்போது சிக்கினார்.

    சுல்தான் செய்யது இப்ராகிம் அலி மீது வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    Next Story
    ×