என் மலர்
புதுக்கோட்டை
- புதுக்கோட்டையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது
- கூட்டம் எம்.பி.திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. எம்.பி. திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, எம்எல்ஏக்கள் முத்துராஜா, ராமச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும்; அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்கு பின்னர் எம்பி செய்தியாளர்களிடம் பேசும்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் பரவலாக மேற்கொள்ளவும், அரசின் திட்டங்கள் ஏழை, எளிய பொதுமக்களை சென்றடையும் வகையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என அரசு அலுவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.
- விராலிமலையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மகன் நீட் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார்
- சாதனை மாணவருக்கு பாராட்டுகள் குவிகின்றனர்
விராலிமலை,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தெற்கு ஆசாரி தெருவைச் சேர்ந்தவர் அறிவுநிதி (வயது 17). இவர் விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாய் தங்கமணி ஆகிய இருவரும் கூலி தொழிலாளிகள் ஆவார்கள். மிகவும் ஏழ்மை நிலையிலும் நன்கு படித்து நடந்து முடிந்த 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 525 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார்.
அதனைத் தொடர்ந்து மருத்துவ படிப்பில் சேரவேண்டும் என்று முடிவெடுத்து நீட் தேர்வுக்காக விடாமுயற்சியுடன் படித்ததன் பயனாக நீட் தேர்வில் 348 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். இதுகுறித்து அறிவுநிதி கூறியதாவது:- எனது பெற்றோர்கள் கூலி வேலைக்குச் சென்று மிகவும் கஷ்டப்பட்டு என்னை படிக்க வைத்தனர். சிறுவயது முதலே மருத்துவராக வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்து வந்த நிலையில் 11-ம் வகுப்பு படிக்கும் போதே நீட் தேர்வுக்காக படிக்க ஆரம்பித்து விட்டேன்.
பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் உதவியுடன் நீட் தேர்வுக்கு படித்தேன். இருப்பினும் இன்னும் அதிகமான பயிற்சி தேவைப்படுகிறது என உணர்ந்த நான் சமூக வலைதளத்தில் தேடும்போது உயிரியல் பாடத்திற்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டது. அதனை நான் நன்றாக பயன்படுத்திக் கொண்டேன். சமூக வலைத்தளத்தை முறையாக பயன்படுத்தினால் இது போன்ற வெற்றிகளும் கிடைக்கும் என்பதை தற்போது உணர்கிறேன்.
இனிவரும் காலங்களில் நீட் தேர்வுக்கு என அரசாங்கமே இதுபோன்ற செயலியை உருவாக்கி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பட்சத்தில் இன்னும் நிறைய மாணவர்கள் தேர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீடு எனக்கு தற்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
- 10, 11, 12-ம் வகுப்பு தேர்வுகளில் விராலிமலை பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்
- தேர்ச்சி பெற உழைத்த ஆசிரியர்களை பாராட்டி கேடயங்கள் வழங்கப்பட்டது.
விராலிமலை,
விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும் தனிப்பிரிவில் 100 சதவீதம் தேர்ச்சி பெற உழைத்த ஆசிரியர்களுக்கும் பாராட்டி கேடயங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அதில் கடந்த கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதம் 75 ஆக இருந்தது. அதனை வருகிற கல்வி ஆண்டில் இது 100 சதவீதமாக உயர வேண்டும் என்று மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியும், தனி பாடப்பிரிவுகளில் மாணவர்களை 100 சதவீதம் தேர்ச்சி பெற உறுதுணையாய் இருந்த ஆசிரியர்களை பாராட்டி கேடயங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர்கழக தலைவர் மாரிக்கண்ணன், சமூக ஆர்வலரும் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவருமான பூபாலன், விராலிமலை ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ரவி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சிவக்குமார், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- அறந்தாங்கியில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது
- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாடுகள் மற்றும் குதிரைகள் பங்கேற்றன.
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சோதனைச்சாவடி அருகே உள்ள முனீஸ்வரர் கோவிலில் கிடாவெட்டு பூஜையை முன்னிட்டு மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது. 29-வது ஆண்டாக நடைபெறும் இப்பந்தையத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, சென்னை, திருச்சி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாடுகள் மற்றும் குதிரைகள் பங்கேற்றன. 3 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் பெரியமாடு பிரிவில் 9 ஜோடி மாடுகளும், கரிச்சான்மாடு பிரிவில் 21 ஜோடி மாடுகளும், சிறிய குதிரை பிரிவில் 9 குதிரைகளும் போட்டியில் கலந்து கொண்டன.
பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடு மற்றும் குதிரைகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு ஒன்றரை லட்சம் ரொக்கப்பணம், கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது. பந்தயம் நடைபெறுவதை முன்னிட்டு அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை வடக்கு வீதி பொதுமக்கள், இளைஞர்கள்செய்திருந்தனர்.
- புதுக்கோட்டை ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் மேல்நிலை முதலாமாண்டு துவக்கவிழா நடைபெற்றது
- புதியதாக பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்களோடு சேர்ந்து மாணவர்களும் ரோஜா மலர்கள் கொடுத்து வரவேற்றனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை திருக்கோகர்ணம்ஸ் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் நாள் வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை தாங்கினார். புதியதாக பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்களோடு சேர்ந்து மாணவர்களும் ரோஜா மலர்கள் கொடுத்து வரவேற்றனர்.
முதல்நாள் வகுப்பிற்கு வந்துள்ள மேல்நிலை முதலாமாண்டு மாணவர்களை பள்ளியின் ஆலோசகர் கவிஞர் அஞ்சலி தேவி தங்கம்மூர்த்தி, மேலாண்மை இயக்குனர் நிவேதிதா மூர்த்தி, பள்ளியின் சி.இ.ஓ. காவியா மூர்த்தி மற்றும் பேராசிரியர் அபிராமி கருப்பையா ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிறப்பு விருந்தினராக ஆசிரியர் மனசுதிட்ட ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சிகரம் சதீஷ்குமார் கலந்து கொண்டார்.
விழாவில் பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, அபிராமசுந்தரி, வரலெட்சுமி மற்றும் மேல்நிலைவகுப்பு ஆசிரியர்கள் கமல்ராஜ், துர்காதேவி, ஜெயசுதா, தனம்பாலமுருகன், பால்ராஜ், சின்னையா, சத்தியராஜ், ஆறுமுகம், மேலாளர் ராஜா மற்றும் திரளான ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். முன்னதாக ஆசிரியர் கனியன் செல்வராஜ் வரவேற்றார். விழாவினை ஆசிரியர் உதயகுமார் தொகுத்து வழங்கினார். முடிவில் அபிராம சுந்தரி நன்றி கூறினார்.
- திருமயம் அருகே மது அடைக்கலம் காத்த அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
புதுக்கோட்டை:
திருமயம் அருகே விராச்சிலையில் மது அடைக்கலம் காத்த அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்று வந்தன. அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையடுத்து நேற்று அம்மனுக்கு பொங்கல் வைத்து, கிடாவெட்டி பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார்.
பின்னர் தப்பாட்டம், குதிரை ஆட்டம், செண்டை மேளம் முழங்க வாணவேடிக்கையுடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் பக்தர்களின் கூட்டத்தில் ஆடி அசைந்து வந்தது. இதையடுத்து தேர் கோவில் நிலையை வந்தடைந்தது. அப்போது பக்தர்கள் ஆங்காங்கே நின்று அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதையடுத்து கோவில் நிலையை தேர் வந்தடைந்ததையடுத்து பக்தர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
- மார்த்தாண்டபுரம் ஆரோக்கியா சிறுமியர் இல்லத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்
- சிறுமியர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டுவரும் பதிவேடுகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை நகராட்சி, மார்த்தாண்டபுரத்தில் செயல்பட்டுவரும் ஆரோக்கியா சிறுமியர் இல்லத்தில், கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில், மாணவியர்களின் எண்ணிக்கைகள், அவர்கள் பயின்றுவரும் கல்வி நிலைகள், நடப்பு கல்வியாண்டில் பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவியர்கள், அவர்களின் படிப்பிற்காக இல்லத்தில் வழங்கப்படும் வசதிகள், இல்லங்களில் மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவுகள், அவை சுகாதாரமான முறையில் சமைக்கப்படுகிறதா, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவு அட்டவணைகளையும் பார்வையிட்டு, அதன்படி தரமான முறையில் உணவு சமைக்கப்படுகிறதா என்பது குறித்தும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மாணவியர்கள் தங்கும் அறை, உணவுக் கூடம், சமையலறை, கழிவறை உள்ளிட்டவைகள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகின்றனவா, சிறுமியர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டுவரும் பதிவேடுகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர் கல்வி ஒன்றே உங்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதால், மாணவியர்கள் அனைவரும் தங்களது கல்வியில் முழு ஈடுபாட்டுடன் படித்து சமுதாயத்திற்கு நற்பெயரை ஈட்டித்தர வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். இந்த ஆய்வில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார், வட்டாட்சியர் விஜயலெட்சுமி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- அதிக சேதம் உண்டாக்கும் தென்னையை தாக்கும் தஞ்சாவூர் வாடல் நோயை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டது
- புதுக்கோட்டை மாவட்டத்தில் 12,584 எக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, புதுக்கோட்டை மாவட்டத்தில் 12,584 எக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென்னை மரங்களை தாக்கும் நோய்களில் தஞ்சாவூர் வாடர் நோய் அதிக சேதம் விளைவிக்கக் கூடியது. இது கடற்கரையை ஒட்டிய மணற்பாங்கான இடங்கள், மானாவாரி தோப்புகள், பராமரிப்பு இல்லாத தோப்புகள் ஆகிய இடங்களிலும் மற்றும் கோடைகாலங்களில் இந்நோயின் தாக்கம் அதிகமாக காணப்படும். எனவே விவசாயிகள் தென்னையினைத் தாக்கும் வாடல் நோயினைக் கண்டறிந்து கட்டுப்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நோய் தாக்கி இறந்த மரங்களையும், நோய் முற்றிய நிலையில் உள்ள மற்ற மரங்களையும் வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். மரத்தைச் சுற்றி வட்டப் பாத்திகள் அமைத்து தனித்தனியே நீர் பாய்ச்ச வேண்டும். கோடையில் பத்து நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். ஒரு சதவீதம் போர்டோ கலவையை 40 லிட்டர் என்ற அளவில் மரத்தைச் சுற்றி 2 மீட்டர் வட்டப்பாத்தியில் மண் நன்கு நனையுமாறு 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை ஊற்ற வேண்டும். ஹெக்சாகோனசோல் இரண்டு மிலி மருந்தை 100 மிலி தண்ணீரில் கலந்து மூன்று மாதத்திற்கு ஒருமுறை வேர் வழியாக உட்செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- அறந்தாங்கியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
- நிகழ்ச்சியில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
அறந்தாங்கி,
தமிழகம் முழுவதும் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக அறந்தாங்கி மற்றும் ஜெயங்கொண்டத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அறந்தாங்கியில் சாலையோரத்தில் 2500 மரக்கன்றுகள் நடும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் கட்டமாக 500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள நிலையில், 2-ம் கட்டமாக விக்னேஷ்வரபுரம், ஆவுடையார்கோவில் ஆகிய பகுதிகளில் 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் தெற்கு நகர தலைவர் வீராச்சாமி, கூடலூர் முத்து, வட்டார தலைவர் முருகன், நகர்மன்ற உறுப்பினர்கள் அசாருதீன், கிருபாகரன், ஊராட்சி மன்றத் தலைவர் ஏகாம்பாள் சந்திரமோகன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர்கள் மோகன், சுந்தரராஜ், உதவிப் பொறியாளர்கள் சுபாஷினி, அருண்ராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- லாரியில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யபட்டார்
- போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் அரிமளம் ஒன்றியம், கே.புதுப்பட்டி- வாளரமாணிக்கம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியில் 3,948 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது லாரியை ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். தப்பியோடிய டிரைவர் மீது புதுக்கோட்டை தனி வட்டாட்சியர் (பறக்கும் படை) கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இன்று கல்லூர் நால்ரோடு அருகே நின்று கொண்டிருந்த லாரி டிரைவர் சிவகங்கை மாவட்டம் கொத்தரியை சேர்ந்த சிவலிங்கம் மகன் அருண்பிரசாத் (வயது 32 ) என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர்.
- டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் குழந்தைத்தொழிலாளர் முறை எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது
- இதில் மருத்துவமனையின் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கையொப்பமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட தொழிலாளர் துறை சார்பாக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.கே.எச்.சலீம் தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட தொழிலாளர் துறையின் துணை ஆய்வாளர்கள் வி.கே.நடராஜன் மற்றும் பி.குணசீலன் முன்னிலையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் டி.வசந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
இதில் குழந்தைத் தொழிலாளர் எவரையும் பணியில் அமர்த்த மாட்டேன், குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றிட பாடுபடுவேன் என உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றுவோம், தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் முறை அற்ற மாநிலமாக மாற்றுவோம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி பதாகையில் கையெழுத்திடப்பட்டது. இதில் மருத்துவமனையின் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கையொப்பமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை டீம் மருத்துவமனையின் பொது மேலாளர் ஜோசப் செய்திருந்தார்.
- திருவரங்குளம், பொன்னமராவதி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி ராஜகோபாலபுரம், கம்பன் நகர், பெரியாா் நகர், பூங்கா நகர், கூடல் நகர், லட்சுமி நகர், பாரி நகர், சிவகாமி ஆச்சி நகர், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லாத்திராக்கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கனக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லேணாவிளக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி, பெருஞ்சுனை ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.மேற்கண்ட தகவலை புதுக்கோட்டை இயக்குதலும், காத்தலும் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் கண்ணன் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தொிவித்துள்ளார். கொன்னையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.
எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், கொப்பனாப்பட்டி, பொன்னமராவதி, வேந்தன்பட்டி, மேலைச்சிவபுரி, ஏனாதி, பிடாரம்பட்டி, தொட்டியம்பட்டி, மைலாப்பூர், அஞ்சுபுளிப்பட்டி, வலையப்பட்டி, வேகுப்பட்டி, செம்பூதி, கொன்னைப்பட்டி, சுந்தரசோழபுரம், மேக்கினிப்பட்டி, செவலூர், கோவனூர், வாழைக்குறிச்சி, நெய்வேலி, கூடலூர், மேலப்பனையூர், குழிபிறை, பணையப்பட்டி, ஆத்தூர், ராராபுரம், ஆலவயல், செம்மலாப்பட்டி, கண்டியாநத்தம், தூத்தூர், சொக்கநாதபட்டி, நகரப்பட்டி, அம்மாபட்டி, ஈச்சம்பட்டி, சங்கம்பட்டி, கல்லம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.






