என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    கீரனூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளாதில் பெண் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
    கீரனூர்:

    பரமக்குடியை சேர்ந்தவர் செந்தில் (வயது 32). இவர் தனது உறவினர்கள் வீரபாண்டி (39), நாகேஸ்வரி (32) ஆகிய 2 பேரையும் அழைத்து கொண்டு திருச்சிக்கு நேற்று அதிகாலை காரில் வந்து கொண்டிருந்தார். அந்த கார் கீரனூர் புறவழிச்சாலை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் உருண்டு அங்கிருந்த மின்கம்பத்தில் மோதி தலைகீழாக கவிழ்ந்து நின்றது.

    இதில் அந்த மின்கம்பம் உடைந்து காரின் மேல் விழுந்தது. இதனால் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் காரின் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த பெண் உள்பட 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    திருமயம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் இறந்தார்.
    திருமயம்:

    புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள பாப்பாவயல் கிராமத்தை சேர்ந்தவர் தென்னரசு (வயது 23). இவர் தனது உறவினரான சத்தியமூர்த்தி (40) என்பவரை அழைத்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் பாப்பாவயலில் இருந்து காட்டுபாவா பள்ளிவாசல் பகுதியில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக சென்றார். பின்னர் அதே மோட்டார் சைக்கிளில் 2 பேரும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். மேலும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் தென்னரசின் நண்பர் சண்முகம் வந்து கொண்டிருந்தார். காட்டுபாவா பள்ளிவாசல் அருகே 2 மோட்டார் சைக்கிள்களும் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று 2 மோட்டார் சைக்கிள்களிலும் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் மோட்டார் சைக்கிள்களில் இருந்து தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயமடைந்தனர். இதில் சிறிது நேரத்தில் தென்னரசு சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து திருமயம் போலீசார் மற்ற 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகமும் பரிதாபமாக இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது. இது குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    கருணாநிதி மறைவையொட்டி திமுக சார்பில் நகர பொறுப்பாளர் அண்ணாதுரை தலைமையில் கருணாநிதி படத்துடன் அமைதி ஊர்வலம் நடந்தது.

    கீரனூர்:

    கீரனூரில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி தி.மு.க. சார்பில் நகர பொறுப்பாளர் அண்ணாதுரை தலைமையில் கருணாநிதி படத்துடன் அமைதி ஊர்வலம் நடந்தது. பின்னர் இரவில் கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவிக்குமார், துணை தலைவர் பழனி, இம்தியாஸ், மணிராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அனுதாபம் தெரிவிக்கும் வகையில் மாலை வரை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. பஸ்கள் ஏதும் ஓடாததால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

    ஆட்டோ, டாக்சி ஓட்டுனர் சங்கம், விவசாய சங்கம், அரிமா சங்கம் என அனைத்து தரப்பினரும் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    தொம்மாவூரில் மாவட்ட தொண்டர் அணிஅமைப்பாளர் கராத்தே முத்து தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மவுன ஊர்வலம் நடந்தது.

    இதில் பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர், கீரனூர் அடுத்த குளத்தூரில் தி.மு.க. கிளை கழகம் சார்பில் செயலாளர் சேகர் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கடைவீதி பகுதியில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் பெரியசாமி, சரத்துகுமார், ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    அன்னவாசல் வட்டாரத்தில் மாவட்ட நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகமையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் கணேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    அன்னவாசல்:

    அன்னவாசல் வட்டாரத்தில் மாவட்ட நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகமையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் கணேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஆயிங்குடி கிராமத்தில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்பணை, ரூ.40 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மழைநீர் செறிவூட்டும் அமைப்பு, சித்தன்னவாசலில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பண்ணை குட்டை, ரூ.28 ஆயிரம் மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ள மழைத்தூவுவான் கருவி, புதூரில் தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 2 பண்ணை குட்டைகள் போன்ற பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது கண்மாய்களில் மழைநீர் தொடர்ந்து தடையின்றி வரும் வகையில் மழைநீர் வரத்துவாரிகளை பராமரிக்கவும், வேளாண் கருவிகளை விவசாயிகள் உரிய முறையில் பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்கவும், தடுப்பணைகளில் மழைநீர் தேங்கும் வகையில் வரத்துவாரிகளில் உள்ள தடுப்புகளை நீக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கோமதிதங்கம், வேளாண்மை துணை இயக்குனர் சிங்காரம் உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர். 
    மண்புழு உர பயன்பாடு விளக்கக் கூட்டம் மற்றும் மண்புழு உர உற்பத்தித்திடல் பார்வையிடல் பள்ளத்தி விடுதி கிராமத்தில் நடைபெற்றது.

    திருவரங்குளம்:

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் உர பயன் பாட்டை குறைத்து இயற்கை உரங்களை பயன்படுத்தும் விதமாக பல்வேறு பயிற்சிகளை வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையம் வழங்கி வருகிறது. அந்த வகையில் மண்புழு உர பயன்பாடு விளக்கக் கூட்டம் மற்றும் மண்புழு உர உற்பத்தித்திடல் பார்வையிடல் பள்ளத்தி விடுதி கிராமத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வம்பன் வேளாண்மை அறவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் லதா தலைமை தாங்கினார். அவர் பேசும் போது, மண் புழுக்களை கொண்டு பண்ணை கழிவுகளை உரமாக்க முடியும். அதனால் சுற்றுப் புறமும் தூய்மை அடையும். உபரி வருமானமும் நமக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

    விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உதவிப் பேராசிரியர் நெல்சன் நவமணிராஜ், வேளாண் விரிவாக்க பயிற்சி உதவியாளர் சிவபாலன் ஆகியோர் அம்புலி ஆறு உற்பத்தி குழுவினரால் நடத்தப்படும் மண்புழு உரம் தயாரிப்பு திடலை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் 35-க்கும் மேற்பட்ட விவசாய பெண்கள் மற்றும் முன்னோடி விவசாயிகளான கூவாட்டுபட்டி முருகேசன், வடகாடு சித்ரா, குருந்தடிமணை செல்வி, பள்ளத்திவிடுதி மனோன்மணி, கடுக்காகாடு, மார்டின்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுக்கோட்டை அருகே கருமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் அருகே உள்ள அய்யம்பட்டினம் கருமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்றிரவு இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அப்பகுதியை சேர்ந்த முத்து (வயது 35), ரமேஷ்(23), துரை (22), பழனி(23)ஆகியோர் குடிபோதையில் ஆடிப்பாடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. 

    இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஜெகதாப்பட்டினம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மலையரசன் , அமைதியாக இருந்து நிகழ்ச்சியை பார்க்குமாறு தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த 4பேரும், மலையரசனை தாக்கியதோடு, அங்கு நின்ற போலீஸ் வாகனத்தின் கண்ணாடியையும் அடித்து நொறுக்கினர். இதுபற்றி மலையரசன் ஜெகதாப்பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கோட்டைப்பட்டினம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சரவணன் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தார். 
    புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் ப.சிதம்பரம் முன்னிலையிலேயே காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #PChidambaram #congress

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்றார். பாராளுமன்ற தேர்தல் மற்றும் கட்சி வளர்ச் சிப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட இருந்தது.

    இந்த நிலையில் கூட்டம் தொடங்கியதும், ப.சிதம்பரம் அமர்ந்திருந்த மேடை அருகே சென்ற காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒரு தரப்பினர், தங்களை ஒரு பிரிவினர் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.

    ஆலோசனை கூட்டம், உறுப்பினர் சேர்க்கை போன்ற எந்த நிகழ்ச்சிகளிலும் எங்களுக்கு அழைப்பு விடுக்காமல் புறக்கணிக்கின்றனர். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ப.சிதம்பரத்திடம் முறையிட்டனர்.

    இதனால் அங்கு இரு தரப்பினர் இடையே வாக்கு வாதம், தள்ளுமுள்ள ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் ப.சிதம்பரம் ஈடுபட்டார். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் வாக்குவாதத்தை கைவிடவில்லை. மேலும் நிர்வாகிகளுக்கு இடையே மோதல், தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் ப.சிதம்பரம் கூட்டத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

    தமிழக காங்கிரசில் தொடர்ந்து கோஷ்டிபூசல் நிலவி வருகிறது. இதனால் காங்கிரஸ் சார்பில் நடைபெறும் ஆலோசனை கூட்டங்களில் வாக்குவாதம், மோதல் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் கரூரில் நடந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு எதிராகவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #PChidambaram #congress

    புதுக்கோட்டை அருகே காதலர்களுக்கு அடைக்கலம் கொடுத்த மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 70). இவரது கணவர் மருதமுத்து மற்றும் மகன் பரிமளம் ஆகியோர் இறந்து விட்டனர். இதனால் மருமகள் வாசுகி மற்றும் பேரன் மற்றும் 3 பேத்திகளுடன் தனது வீட்டில் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் இவரது மூத்த பேத்தி காயத்ரி (21) திருப்பூரில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருடன் பணிபுரிந்த தத்சை மாவட்டம் வல்லம் பகுதியை சேர்ந்த அஜய் (23) என்பவருடன் காதல் ஏற்பட்டது. இதையடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த அவர்கள் திருமணஞ்சேரிக்கு சென்றனர். அவர்களுக்கு விரைவில் திருமணம் செய்து வைப்பதாக செல்லம்மாள் தெரிவித்துள்ளார்.

    இதனால் அங்கேயே தங்கியிருந்த அஜய், அருகில் உள்ள பகுதியில் கூலி வேலைக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று இரவு அஜய், காயத்ரி தனி அறையிலும், செல்லம்மாள் அருகில் இருந்த வெளியறையிலும் தூங்கி கொண்டிருந்தனர்.

    நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் தூங்கி கொண்டிருந்த செல்லம்மாளை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அதே இடத்தில் துடிதுடித்து அவர் இறந்தார். இதைப்பார்த்த அருகில் படுத்திருந்த பேத்திகள் அலறினர். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு கறம்பக்குடி போலீசார் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    காதலர்கள் அஜய், காயத்ரி இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் அவர்களது திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். காதலர்களை கொல்ல வந்த மர்மநபர்கள் ஆள்மாறாட்டத்தில் செல்லம்மாளை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
    புதுக்கோட்டை அருகே மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி கோவில் தெருவை சேர்ந்தவர் மருதமுத்து. இவரது மனைவி செல்லம்மாள் (வயது 70). மருதமுத்துவும், அவரது மகன் பரிமளமும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டனர். இதனால் செல்லம்மாள் மட்டும் அப்பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து அதில் தனியாக வசித்து வந்தார்.

    இந்தநிலையில் இன்று காலை வீட்டிற்குள் செல்லம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கறம்பக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் கார்த்திகைசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை பார்வையிட்டனர். அப்போது செல்லம்மாளின் கழுத்து மற்றும் கைகளில் அரிவாளால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்தது. இதனால் அவரை மர்மநபர்கள் வெட்டி கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் செல்லம்மாளை கொலை செய்த மர்ம நபர்கள் யார், எதற்காக கொலை செய்தனர் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாமா? என்று சந்தேகமடைந்த போலீசார் வீட்டில் இருந்த பீரோ உள்ளிட்டவற்றில் சோதனை நடத்தினர். ஆனால் அவற்றில் எந்தவித நகையும் இல்லை. மேலும் செல்லம்மாளும் நகைகள் எதுவும் அணிந்திருக்க வில்லை. இதனால் வேறு ஏதாவது பிரச்சினை காரணமாக மர்மநபர்கள் கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. அது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடிவருகின்றனர்.

    மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகத்தில் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பதற்காக 108 ஆம்புலன்ஸ் எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்தப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். #108Ambulance #MinisterVijayabaskar
    புதுக்கோட்டை:

    தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க ஆயிரம் 108 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை விரைவில் 1000 ஆக  உயர்த்தப்படும். இதன்மூலம் விபத்து நடந்த இடங்களுக்கு ஆம்புலன்ஸ் விரைவில் செல்ல முடியும். கிராமங்களிலும் விரைவில் ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்படும்.



    விபத்து அதிகம் நடக்கும் பகுதிகளில் விபத்துக்காய நிலைக்குழு மையம் ஏற்படுத்தப்படும். அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் விபத்துக்காய சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #108Ambulance #MinisterVijayabaskar

    புதுக்கோட்டை கலெக்டரின் உதவியாளர் கொலை வழக்கு தொடர்பாக அவரது கள்ளக்காதலி சவுந்தர்யாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    கீரனூர்:

    திருச்சி-புதுக்கோட்டை ரோடு தஞ்சாவூர் சாலை பிரியும் காட்டுப்பகுதியில் நின்ற காரில் கத்திக்குத்து காயங்களுடன் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

    இறந்து கிடந்தவரின் சட்டை பையில் அடையாள அட்டை ஒன்று இருந்துள்ளது. அதில் அவர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டரின் வேளாண் துறை நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வந்த பூபதி கண்ணன் என்பது தெரிய வந்தது.

    இவருக்கு அனுராதா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். அனுராதா திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். பூபதி கண்ணன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    சம்பவம் நடந்ததற்கு முந்தைய நாள் அதே அலுவலகத்தில் டைப்பிஸ்டாக பணிபுரிந்துவந்த திருச்சி நவல்பட்டு அண்ணாநகரை சேர்ந்த சவுந்தர்யா என்பவருடன், பூபதி கண்ணன் காரில் சென்றது அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகியிருந்தது.

    மேலும் அந்த பெண்ணுடன் பூபதிகண்ணன் அடிக்கடி செல்போனில் பேசியிருந்ததும் தெரியவந்தது. போலீசார் சவுந்தர்யாவை பிடித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அவர் பூபதி கண்ணனுடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாகவும், அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்ததையும் ஒப்புக்கொண்டார்.

    மேலும் விசாரணையில் சவுந்தர்யா கூறுகையில், தனது சொந்த ஊர் திருச்சி லால்குடி அருகே உள்ள பெருவளநல்லூர். அங்கு திருமணத்திற்கு முன்பு ஒருவருடன் தொடர்பு இருந்து வந்தது. இதற்கிடையே கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் தனக்கு திருமணம் நடந்தது.

    அதற்கு பின்பும் கள்ளத்தொடர்பு இருந்தது. இதனை கணவர் கண்டித்தார். இதனால் எழுந்த பிரச்சனையில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். அவர் கரூர் மாவட்ட வேளாண் துறை ஊழியராக பணியாற்றி வந்தார்.

    இதனால் கருணை அடிப்படையில் அவரது மனைவி என்ற பெயரில் தனக்கு புதுக்கோட்டை வேளாண்துறையில் டைப்பிஸ்ட் வேலை கிடைத்தது. திருச்சியில் இருந்து தினமும் புதுக்கோட்டைக்கு பேருந்தில் சென்று வந்தேன்.

    அப்போது பூபதி கண்ணன் அறிமுகமானார். தனக்கு பல்வேறு உதவிகளையும் செய்து கொடுத்தார். இதனால் நண்பர்களாக பழகினோம், அது கள்ளக்காதலாக தொடர்ந்தது. இருவரும் ஒரே அலுவலகம் என்பதால் தினமும் திருச்சியில் இருந்து காரில் ஒன்றாகவே சென்று வந்தோம்.

    இரவு நேரங்களில் வேலை முடிந்து திரும்பும் போது மாத்தூர் அரைவட்ட சாலை பகுதியில் காரினை நிறுத்தி அவ்வப்போது உல்லாசமும் அனுபவித்து வந்தோம். இந்த தொடர்பு குறித்து அவரது மனைவிக்கு தெரிந்ததால் பிரச்சனை ஏற்பட்டது.

    மேலும் திருமணத்திற்கு முன்பு பழகிய நபருடனும் கள்ளக்காதல் தொடர்ந்து வந்தது. இது பூபதி கண்ணனுக்கு தெரிய வந்ததால் அவர் என்னை கண்டித்தார். எனவே பழைய கள்ளக்காதலனுடன் உறவை கைவிட்டேன்.

    சம்பவத்தன்று வழக்கம் போல் மாத்தூர் காட்டுப்பகுதியில் காரை நிறுத்திவிட்டு உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருந்தோம். அப்போது, திடீரென ஒரு மர்ம நபர் கத்தியுடன் அங்கு வந்ததாகவும், அவர் பூபதிகண்ணணை குத்தி கொலை செய்ததாகவும், தடுக்க முயன்ற போது தன்னையும் குத்தி விடுவதாக மிரட்டியதால் அங்கிருந்து ஓடியதாக தெரிவித்துள்ளார்.

    பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது பூபதி கண்ணன் இறந்து கிடந்ததும், அவரின் கழுத்தில் கிடந்த செயினை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பினேன் என போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே சவுந்தர்யா பூபதி கண்ணணை கொலை செய்தது தனது முன்னாள் காதலன் என்றும், அவருடனான தொடர்பை விட்டதால் ஆத்திரத்தில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். மேலும் மற்றொரு முறை கொலை செய்த நபர் கைலியுடன் வந்திருந்ததாகவும், முகத்தினை கைக்குட்டையால் மூடியிருந்ததாகவும் கூறியிருந்தார்.

    இதற்கிடையே பூபதிகண்ணனின் மனைவி அனுராதாவிடமும் போலீசார் நடத்திய விசாரணையில், அவருக்கு யாருடனும் கள்ளத்தொடர்பு இல்லை என்ற அவர், சவுந்தர்யாவுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாவும், அதனை கண்டித்ததாகவும் கூறியுள்ளார்.

    இதனால் அவரது மனைவியே கூலிப்படையினை ஏவி கொலை செய்திருக்கலாமோ என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் போலீசார் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது யார்? எத்தனை நபர்கள் சேர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டனர். கொலை நடந்ததன் பின்னணி என்ன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து முதல்வரின் உளவுப்பிரிவும் அறிக்கை கேட்டுள்ளது. நேற்று புதுக்கோட்டை எஸ்.பி. தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் கொலை சம்பவம் குறித்து குற்ற பத்திரிகை தயார் செய்யப்பட்டது. அதில் சவுந்தர்யா குற்றவாளியாக குறிப்பிடப்பட்டதாக கூறப்படுகிறது.

    அதனைதொடர்ந்து சவுந்தர்யாவை போலீசார் இன்று அதிகாலை கீரனூர் நடுவர் மன்ற நீதிபதி பாரதிராஜா முன்னிலையில் ஆஜர் செய்தனர். பின்னர் சவுந்தர்யா கைது செய்யப்பட்டு திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

    போலீசாரின் இறுதி விசாரணையில், பூபதி கண்ணன் உயர் அதிகாரியாக இருந்ததால் அவரை காதல் வலையில் சிக்க வைத்துள்ளார். இதேபோல் பலரிடம் பேசி பணம் பெற்று ஆடம்பர வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.

    இதனை பூபதி கண்ணன் கண்டித்த போது தான், இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது அவரது முன்னாள் காதலனா? அல்லது அவருடன் தொடர்பில் இருந்த வேறு நபர்களா என்பது தெரியவில்லை.

    இதனால் சவுந்தர்யாவின் செல்போன் எண், லால்குடி பெருவளநல்லூரில் உள்ள முன்னாள் காதலனின் செல்போன் எண்ணையும் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பூபதி கண்ணனின் மனைவியான அனுராதா இன்று போலீஸ் விசாரணைக்கு ஆஜராவதாக கூறப்படுகிறது. இதனால் அவரிடமும் பல கட்ட விசாரணை தொடர்ந்து நடத்தப்படும்.

    தொடர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? எத்தனை நபர்கள் என்பது புரியாத புதிராக இருந்து வருகிறது. இதனால் காவல்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
    புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் காளான் வளர்ப்பு தொழில் நுட்பம் குறித்த பயிற்சி நடைபெற்றது.

    திருவரங்குளம்:

    புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் காளான் வளர்ப்பு தொழில் நுட்பம் குறித்த பயிற்சி நடைபெற்றது.

    பயிற்சியினை திட்ட ஒருங்கிணைப்பாளர் லதா தலைமையேற்று தொடங்கி வைத்து காளான் வளர்ப்பு முறை குறித்தும் காளானில் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தை படுத்துதல் பற்றி எடுத்துரைத்தார்.

    அதனைத் தொடர்ந்து பயிற்சி உதவியாளர் சண்முக பாக்கியம் காளான் வளர்ப்பு முறை குறித்து விவசாயிகளுக்கு நேரடி செயல் விளக்கம் அளித்தார்.

    உதவி பேராசிரியர் பிரபு குமார், தனலட்சுமி, புதுக்கோட்டை, மிரட்டு நிலை, மறமடக்கி, தோப்புக் கொள்ளை, கீழத்தூர், வடகாடு மற்றும் பரவக்கோட்டை ஆகிய பகுதிகளிலிருந்து 27 பெண்கள் உட்பட 41 விவசாயிகள் கலந்துகொண்டனர். #Tamilnews

    ×