search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pudukkottai collector assistant murder"

    புதுக்கோட்டை கலெக்டரின் உதவியாளர் கொலை வழக்கு தொடர்பாக அவரது கள்ளக்காதலி சவுந்தர்யாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    கீரனூர்:

    திருச்சி-புதுக்கோட்டை ரோடு தஞ்சாவூர் சாலை பிரியும் காட்டுப்பகுதியில் நின்ற காரில் கத்திக்குத்து காயங்களுடன் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

    இறந்து கிடந்தவரின் சட்டை பையில் அடையாள அட்டை ஒன்று இருந்துள்ளது. அதில் அவர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டரின் வேளாண் துறை நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வந்த பூபதி கண்ணன் என்பது தெரிய வந்தது.

    இவருக்கு அனுராதா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். அனுராதா திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். பூபதி கண்ணன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    சம்பவம் நடந்ததற்கு முந்தைய நாள் அதே அலுவலகத்தில் டைப்பிஸ்டாக பணிபுரிந்துவந்த திருச்சி நவல்பட்டு அண்ணாநகரை சேர்ந்த சவுந்தர்யா என்பவருடன், பூபதி கண்ணன் காரில் சென்றது அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகியிருந்தது.

    மேலும் அந்த பெண்ணுடன் பூபதிகண்ணன் அடிக்கடி செல்போனில் பேசியிருந்ததும் தெரியவந்தது. போலீசார் சவுந்தர்யாவை பிடித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அவர் பூபதி கண்ணனுடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாகவும், அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்ததையும் ஒப்புக்கொண்டார்.

    மேலும் விசாரணையில் சவுந்தர்யா கூறுகையில், தனது சொந்த ஊர் திருச்சி லால்குடி அருகே உள்ள பெருவளநல்லூர். அங்கு திருமணத்திற்கு முன்பு ஒருவருடன் தொடர்பு இருந்து வந்தது. இதற்கிடையே கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் தனக்கு திருமணம் நடந்தது.

    அதற்கு பின்பும் கள்ளத்தொடர்பு இருந்தது. இதனை கணவர் கண்டித்தார். இதனால் எழுந்த பிரச்சனையில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். அவர் கரூர் மாவட்ட வேளாண் துறை ஊழியராக பணியாற்றி வந்தார்.

    இதனால் கருணை அடிப்படையில் அவரது மனைவி என்ற பெயரில் தனக்கு புதுக்கோட்டை வேளாண்துறையில் டைப்பிஸ்ட் வேலை கிடைத்தது. திருச்சியில் இருந்து தினமும் புதுக்கோட்டைக்கு பேருந்தில் சென்று வந்தேன்.

    அப்போது பூபதி கண்ணன் அறிமுகமானார். தனக்கு பல்வேறு உதவிகளையும் செய்து கொடுத்தார். இதனால் நண்பர்களாக பழகினோம், அது கள்ளக்காதலாக தொடர்ந்தது. இருவரும் ஒரே அலுவலகம் என்பதால் தினமும் திருச்சியில் இருந்து காரில் ஒன்றாகவே சென்று வந்தோம்.

    இரவு நேரங்களில் வேலை முடிந்து திரும்பும் போது மாத்தூர் அரைவட்ட சாலை பகுதியில் காரினை நிறுத்தி அவ்வப்போது உல்லாசமும் அனுபவித்து வந்தோம். இந்த தொடர்பு குறித்து அவரது மனைவிக்கு தெரிந்ததால் பிரச்சனை ஏற்பட்டது.

    மேலும் திருமணத்திற்கு முன்பு பழகிய நபருடனும் கள்ளக்காதல் தொடர்ந்து வந்தது. இது பூபதி கண்ணனுக்கு தெரிய வந்ததால் அவர் என்னை கண்டித்தார். எனவே பழைய கள்ளக்காதலனுடன் உறவை கைவிட்டேன்.

    சம்பவத்தன்று வழக்கம் போல் மாத்தூர் காட்டுப்பகுதியில் காரை நிறுத்திவிட்டு உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருந்தோம். அப்போது, திடீரென ஒரு மர்ம நபர் கத்தியுடன் அங்கு வந்ததாகவும், அவர் பூபதிகண்ணணை குத்தி கொலை செய்ததாகவும், தடுக்க முயன்ற போது தன்னையும் குத்தி விடுவதாக மிரட்டியதால் அங்கிருந்து ஓடியதாக தெரிவித்துள்ளார்.

    பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது பூபதி கண்ணன் இறந்து கிடந்ததும், அவரின் கழுத்தில் கிடந்த செயினை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பினேன் என போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே சவுந்தர்யா பூபதி கண்ணணை கொலை செய்தது தனது முன்னாள் காதலன் என்றும், அவருடனான தொடர்பை விட்டதால் ஆத்திரத்தில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். மேலும் மற்றொரு முறை கொலை செய்த நபர் கைலியுடன் வந்திருந்ததாகவும், முகத்தினை கைக்குட்டையால் மூடியிருந்ததாகவும் கூறியிருந்தார்.

    இதற்கிடையே பூபதிகண்ணனின் மனைவி அனுராதாவிடமும் போலீசார் நடத்திய விசாரணையில், அவருக்கு யாருடனும் கள்ளத்தொடர்பு இல்லை என்ற அவர், சவுந்தர்யாவுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாவும், அதனை கண்டித்ததாகவும் கூறியுள்ளார்.

    இதனால் அவரது மனைவியே கூலிப்படையினை ஏவி கொலை செய்திருக்கலாமோ என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் போலீசார் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது யார்? எத்தனை நபர்கள் சேர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டனர். கொலை நடந்ததன் பின்னணி என்ன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து முதல்வரின் உளவுப்பிரிவும் அறிக்கை கேட்டுள்ளது. நேற்று புதுக்கோட்டை எஸ்.பி. தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் கொலை சம்பவம் குறித்து குற்ற பத்திரிகை தயார் செய்யப்பட்டது. அதில் சவுந்தர்யா குற்றவாளியாக குறிப்பிடப்பட்டதாக கூறப்படுகிறது.

    அதனைதொடர்ந்து சவுந்தர்யாவை போலீசார் இன்று அதிகாலை கீரனூர் நடுவர் மன்ற நீதிபதி பாரதிராஜா முன்னிலையில் ஆஜர் செய்தனர். பின்னர் சவுந்தர்யா கைது செய்யப்பட்டு திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

    போலீசாரின் இறுதி விசாரணையில், பூபதி கண்ணன் உயர் அதிகாரியாக இருந்ததால் அவரை காதல் வலையில் சிக்க வைத்துள்ளார். இதேபோல் பலரிடம் பேசி பணம் பெற்று ஆடம்பர வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.

    இதனை பூபதி கண்ணன் கண்டித்த போது தான், இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது அவரது முன்னாள் காதலனா? அல்லது அவருடன் தொடர்பில் இருந்த வேறு நபர்களா என்பது தெரியவில்லை.

    இதனால் சவுந்தர்யாவின் செல்போன் எண், லால்குடி பெருவளநல்லூரில் உள்ள முன்னாள் காதலனின் செல்போன் எண்ணையும் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பூபதி கண்ணனின் மனைவியான அனுராதா இன்று போலீஸ் விசாரணைக்கு ஆஜராவதாக கூறப்படுகிறது. இதனால் அவரிடமும் பல கட்ட விசாரணை தொடர்ந்து நடத்தப்படும்.

    தொடர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? எத்தனை நபர்கள் என்பது புரியாத புதிராக இருந்து வருகிறது. இதனால் காவல்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
    ×