என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elderly woman murder in pudukkottai"

    புதுக்கோட்டை அருகே காதலர்களுக்கு அடைக்கலம் கொடுத்த மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 70). இவரது கணவர் மருதமுத்து மற்றும் மகன் பரிமளம் ஆகியோர் இறந்து விட்டனர். இதனால் மருமகள் வாசுகி மற்றும் பேரன் மற்றும் 3 பேத்திகளுடன் தனது வீட்டில் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் இவரது மூத்த பேத்தி காயத்ரி (21) திருப்பூரில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருடன் பணிபுரிந்த தத்சை மாவட்டம் வல்லம் பகுதியை சேர்ந்த அஜய் (23) என்பவருடன் காதல் ஏற்பட்டது. இதையடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த அவர்கள் திருமணஞ்சேரிக்கு சென்றனர். அவர்களுக்கு விரைவில் திருமணம் செய்து வைப்பதாக செல்லம்மாள் தெரிவித்துள்ளார்.

    இதனால் அங்கேயே தங்கியிருந்த அஜய், அருகில் உள்ள பகுதியில் கூலி வேலைக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று இரவு அஜய், காயத்ரி தனி அறையிலும், செல்லம்மாள் அருகில் இருந்த வெளியறையிலும் தூங்கி கொண்டிருந்தனர்.

    நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் தூங்கி கொண்டிருந்த செல்லம்மாளை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அதே இடத்தில் துடிதுடித்து அவர் இறந்தார். இதைப்பார்த்த அருகில் படுத்திருந்த பேத்திகள் அலறினர். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு கறம்பக்குடி போலீசார் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    காதலர்கள் அஜய், காயத்ரி இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் அவர்களது திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். காதலர்களை கொல்ல வந்த மர்மநபர்கள் ஆள்மாறாட்டத்தில் செல்லம்மாளை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
    ×