என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    வாரிசு இருப்பவர்களே அரசியலுக்கு வர முடியும். வாரிசு இல்லாதவர்கள் வர முடியாது என்று திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசியுள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் இன்று நடைபெற்ற தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசியதாவது:-

    தமிழகத்தில் 1967-ல் அண்ணா தலைமையில் ஆட்சி பொறுப்பு ஏற்றோம். அப்போது முதன் முதலாக அண்ணா சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். அதுதான் சீர் திருத்த திருமணத்திற்கு சட்டப்படியான அங்கீகாரமாக அமைந்தது. அந்த சட்டத்தின்படி முறைப்படி இந்த திருமணம் இங்கு நடந்தேறியிருக்கிறது.

    ஒரு பக்கம் வைதீக திருமணங்களும், இன்னொரு பக்கம் சீர்திருத்த திருமணங்களும் நடந்து வருகிறது. வைதீக திருமணத்தை விமர்சிக்கும் எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லை. ஆனால் சுயமரியாதையை காப்பதற்காக தந்தை பெரியார் பாடுபட்டார், உழைத்தார். பல தியாகங்கள் செய்தார். கல்லடியும், சொல்லடியும் பட்டார்.

    தான் சொல்லக்கூடிய கருத்தால் பிறர் மனம் புண்படுமா என்று யோசிக்காமல் அதை ஆணித்தரமாக சொல்லக்கூடிய ஆற்றல் படைத்தவர் பெரியார். ஆனால் அவருடைய கருத்து மற்றும் கொள்கையில் இருந்து பின்வாங்காமல் வாழைப்பழத்தில் ஊசியை நுழைப்பது போன்று அந்த கருத்தினை மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் எடுத்து சொன்னவர் அண்ணா.

    காஞ்சிபுரத்தில் பகுத்தறிவு கருத்துக்களை எடுத்து சொன்னபோது, தந்தை பெரியாரை அந்த மேடையில் கல்வீசி தாக்கினார்கள். அவருடைய நெற்றிப் பொட்டில் இருந்து ரத்தம் வழிந்தது. பாதியில் கூட்டத்தை முடித்துக்கொண்டார். இதையறிந்த அண்ணா, அதே மேடையில் பெரியாரை உட்கார வைத்துக்கொண்டு அவர் சொன்ன கருத்தினை நாடகம் வாயிலாக மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தார்.

    இன்றைக்கும் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் நம்மிடம்தான் இருக்கிறார்கள். அண்ணா, பெரியாரின் மொத்த உருவம்தான் கலைஞர். இப்போதும் நமது ஊன், உதிரம், உயிர் ஆகியவற்றில் இந்த மூன்று தலைவர்களும் கலந்திருக்கிறார்கள். ஆகவே எந்த ஆதிக்க சக்தியும் தமிழகத்தில் வரமுடியாது. என்னைப்பற்றி விமர்சிக்காதது உண்டா? என்னென்னமோ குறைகள் எல்லாம் சொன்னார்கள். வாரிசுகள் இருப்பவர்கள்தான் வாரிசு தாரர்களாக வரமுடியும். வாரிசு இல்லாதவர்கள் வர முடியாது.

    தி.மு.க.வில் எப்படியாவது கலகத்தை, குழப்பத்தை ஏற்படுத்தி இந்த இயக்கத்தை அழித்து விடலாம் என்று நினைத்தார்கள். ஆனால் அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போனார்கள் என்பது தான் வரலாறு.

    இன்றைக்கு நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இங்கு இருக்கக்கூடிய ஒரு அமைச்சர் எப்படிப்பட்ட ஊழல் செய்திருக்கிறார் என்பது தெரியுமா? குட்கா புகழ் விஜயபாஸ்கர் என்றே அவருக்கு பட்டம் சூட்டினார்கள். மக்கள் நல்வாழ்வுத்துறை என்றால் மக்களுக்கு நல்ல வாழ்க்கையை அளிக்க வேண்டும். ஆனால் மக்களை கொடுமைக்கு ஆளாக்கும் டெங்கு, மலேரியா போன்ற நோய்களை கூட கட்டுப்படுத்த முடியாத நிலையில் தான் இந்த ஆட்சி நடக்கிறது.

    கேன்சரை வரவழைக்கும் குட்காவிற்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. ஆனால் இன்று பெட்டிக்கடை, டீக் கடை, நடைபாதை, பள்ளி, கல்லூரிகள் முன்பு மாமூல் வாங்கிக்கொண்டு குட்கா விற்கப்படுகிறது. ஏற்கனவே சென்னையில் குட்கா குடோனில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது அதில் ஒரு ஆவணம் சிக்கியது.

    அதில் மாதந்தோறும் யார், யாருக்கெல்லாம் மாமூல் கொடுக்கப்பட்டு வந்தது என்ற பட்டியல் இருந்தது. அதில் முதல் பெயராக அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரும், அப்போதைய டி.ஜி.பி. ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் ஆகியோரது பெயர்கள் வரிசையாக இடம் பெற்றிருந்தன.

    அமைச்சர் விஜயபாஸ்கர்

    இந்த பட்டியலை நான் சொல்லவில்லை. வருமான வரித்துறையினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கொடுத்துள்ளனர். இதில் சி.பி.ஐ. விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. அதேபோன்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணம் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கியது.

    இதையும் தி.மு.க.காரன் எடுக்கவில்லை. அதையும் வருமான வரித்துறைதான் எடுத்தது. இந்த வழக்கும் நீதிமன்றத்தில் இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு ஆட்சி தான் தமிழகத்தில் நடந்து வருகிறது.

    ஈரோட்டில் பிரபலமான காண்டிராக்டர் அசோக்குமாருக்கு சொந்தமான அன்னை இன்பரா நிறுவனம் ரூ.450 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறையினர் கண்டு பிடித்துள்ளனர். அவருக்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதிலும் ஒரு அமைச்சருக்கு தொடர்பு உள்ளது. இது எனக்கு தெரியும்.

    ஆனால் அதை நான் இப்போது சொன்னால் பாதகமாக போய்விடலாம். விரைவில் அந்த உண்மை வெளிவரும். தமிழகத்தில் நடைபெற்று வரும் அக்கிரம, அநியாயமான, மக்களை வாட்டி வதைக்கும் ஆட்சி மிக விரைவில் முடியப்போகிறது. அண்மையில் நடைபெற்ற 2 சட்டமன்றதொகுதி இடைத் தேர்தல்களில் எப்படி அ.தி.மு.க. வெற்றி பெற்றது என்பது நாட்டு மக்களுக்கும், உலகிற்கும் தெரியும்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 40-க்கு 39 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. அதேபோன்று வருகிற பொதுத் தேர்தலிலும் தி.மு.க. மகத்தான வெற்றி பெறும். நாட்டு மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல் படுத்துவோம்.

    கலெக்சன், கரப்சன், கமிஷன் ஆகிய முறைகேட்டில் ஈடுபட்டவர்களை மக்கள் முன்பு அடையாளம் காட்டி உரிய நடவடிக்கை எடுப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    புதுக்கோட்டை அருகே நள்ளிரவில் அ.தி.மு.க. பிரமுகர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொன்னமராவதி:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சூல்லாம்பட்டியை சேர்ந்தவர் குமார் (வயது 40). அ.தி.மு.க., அண்ணா தொழிற்சங்க துணை செயலாளராக உள்ளார். குடிமராமத்து பணிகளை காண்டிராக்ட் எடுத்து செய்து வந்தார்.

    நேற்றிரவு குமார் பொன்னமராவதி புதூர் பகுதியில் உள்ள மதுக்கடையில் மது அருந்தி விட்டு வீட்டிற்கு நடந்து சென்றார். வழியில் அவரை வழிமறித்த மர்மநபர்கள் திடீரென அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரி வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த குமாரை, அந்த கும்பல் சாலையோரமுள்ள முட்புதரில் தூக்கி போட்டு விட்டு தப்பி சென்று விட்டனர். இரவு நேரம் என்பதால் குமார் முட்புதரில் கிடப்பதை பொதுமக்கள் யாரும் கவனிக்கவில்லை.

    இன்று காலை பொது மக்கள் பார்த்ததும், அவரை உடனடியாக மீட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் போலீஸ் டி.எஸ்.பி. அண்ணா துரை, உலகம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னமராவதி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குமாரை கொலை செய்த மர்மநபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்று தெரியவில்லை. காண்டிராக்ட் பிரச்சனையில் எதிராளிகள் யாராவது அவரை கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட குமாருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அ.தி.மு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பொன்னமராவதி அருகே டிரைவருக்கு அரிவாள் வெட்டிய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னமராவதி:

    சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியைச் சேர்ந்தவர் மாறன் (வயது 55). டிரைவர். இவரும், அதே ஊரைச் சேர்ந்த ராசுவும் பொன்னமராவதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

    பொன்னமராவதி வேகுப்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்த போது மர்ம ஆசாமிகள் வழிமறித்து மோட்டார் சைக்கிளில் சென்ற மாறன் கண்ணில் மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டி விட்டு தப்பி விட்டனர். இதில் மாறனுக்கு 2 கையிலும்,தோளிலும் படுகாயம் ஏற்பட்டது.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மர்ம கும்பல் சுற்றியதை தொடர்ந்து ராசு தப்பியோடி விட்டார்.

    இதுகுறித்து பொன்னமராவதி போலீசார்வழக்குப் பதிவு செய்து, மாறனை அரிவாளால் வெட்டியது யார்? எதற்காக இந்த தாக்குதல் நடந்தது, முன்விரோதமா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை அருகே கோவிலில் திருட முயன்ற கொள்ளையன் செல்போன் மூலம் போலீசில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் கே.புதுப்பட்டி அருகே உள்ள கீழாநிலைகோட்டையில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இக்கோவில் உண்டியல் சாய்ந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கோவில் துப்புரவு பணியாளர் உண்டியல் அருகே சென்று பார்த்தபோது உண்டியல் உள்ளே லைட் எரிந்து கொண்டிருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஊர் முக்கியஸ்தர்கள் கோவிலுக்கு வந்து உண்டியலை திறந்து பார்த்தனர். அப்போது உண்டியலுக்குள் செல்போன் ஒன்று கிடந்தது. இந்த சம்பவம் குறித்து கே.புதுப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கோவிலுக்கு சென்று அந்த செல்போனை கைப்பற்றி, அது யாருடையது என விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அந்த செல்போன் கீழாநிலைகோட்டையை சேர்ந்த பூக்கடை தொழிலாளி அரசப்பன் (வயது 38) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, அரசப்பன் செல்போன் டார்ச் லைட்டை பயன்படுத்தி உண்டியலில் இருந்த பணத்தை திருடியபோது செல்போன் தவறி உண்டியல் உள்ளே விழுந்ததும், செல்போனை எடுக்க முயற்சி செய்தும் எடுக்க முடியாததால் அங்கிருந்து தப்பி சென்று விட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அரசப்பனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலில் திருட முயன்ற கொள்ளையன் செல்போன் மூலம் போலீசில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆலங்குடியில் வீட்டின் பின் கதவைத் தட்டிய கணவர் மீது வெந்நீரை ஊற்றிய மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கலைஞர் காலனியைச் சேர்ந்தவர் நித்யா.இவரது கணவர் கோபிநாத் (வயது 39).இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

    நித்யா தனது குழந்தைகளுடன் தனது பெற்றோருடன் கலைஞர் காலனியில் வசித்து வந்தார். இந்தநிலையில் கோபிநாத் கடந்த அக்டோபர் 27- ந் தேதி இரவு நித்யா இருக்கும் கலைஞர் காலனி வந்து வீட்டின் பின் கதவைத் தட்டியுள்ளார்.உடனே நித்யா யார் என்று கேட்டதற்குப் பதில் சொல்லவில்லை. தவறான எண்ணத்துடன் யாரோ கதவைத் தட்டுவதாக நினைத்த நித்யா அடுப்பில் இருந்த வெந்நீரைத் தூக்கி கதவைத் திறந்த உடனே ஊற்றியுள்ளார்.ஊற்றியதும் கோபிநாத் அலறியுள்ளார்.

    விளக்கை போட்ட நித்யா பிறகுதான் தான் வெந்நீர் ஊற்றியது தனது கணவன் கோபிநாத் என்று தெரிந்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் கோபிநாத்தை மீட்டு ஆலங்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அதிகமாக உள்ளதால் தீவிரச் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் நித்யாவை அழைத்து விசாரனை நடத்தியதில் அவர் திட்டமிட்டு வெந்நீர் காய்ச்சி கணவர் மீது ஊற்றியது தெரியவந்தது. உடனே வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆலங்குடி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
    மலைக்குடிப்பட்டி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்து பலத்த மழை பெய்தது.
    அன்னவாசல்:

    புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல், இலுப்பூர், வீரப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, புதூர், சித்தன்னவாசல், மெய்வழிச்சாலை, கீழக் குறிச்சி, நார்த்தாமலை, குடுமியான்மலை, பரம்பூர், மதியநல்லூர், பெருஞ்சுனை, பணம்பட்டி, சொக்கநாதன்பட்டி மாங்குடி, சத்திரம், செங்கப்பட்டி, வயலோகம், மலைக்குடிப்பட்டி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். 

    இந்த மழையால் சாலையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியது. மேலும் அன்னவாசல் பகுதிகளில் அன்னவாசல், முக்கண்ணாமலைப்பட்டி, உருவம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு மதியத்திற்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டது. 

    இதனால் மாணவர்கள் மழையில் நனைந்தபடி வீட்டிற்கு சென்றனர். மரிங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அன்னவாசல் விவசாய அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் குளம்போல் மழைநீர் தேங்கி நின்றது. அன்னவாசல் மருத்துவமனை அருகே உள்ள சாலை முழுவதும் பள்ளங்கள் ஏற்பட்டு மழை நீர் தேங்கியதால் சாலையில் செல்லும் இரு சக்கர வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து வாகன ஓட்டிகளுக்கு காயம் ஏற்பட்டது. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியதால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
    பொன்னமராவதி அருகே சாலை விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னமராவதி:

    பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி ஜீவாநகரை சேர்ந்தவர் சின்னையா.இவரது மகன் சின்னக்காளை(வயது55).இவர் தனது மனைவி பொன்னம்மாளுடன் பூலான்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு மொபட் வண்டியில் சென்றுள்ளார்.

    வேகுப்பட்டி நால்ரோடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் இவரது வண்டி மீது மோதியது. இதில் சின்னக்காளைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் வலையபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    இதையடுத்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னக்காளை இறந்தார். இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டிவந்த கார்த்திக் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பயனற்ற நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் குறித்து ஆதாரத்துடன் தகவல் அளித்தால் ரூ.1000 பரிசு வழங்கப்படும் என்று நாமக்கல் தலைமலை சேவா டிரஸ்ட் அறிவித்துள்ளது.

    புதுக்கோட்டை:

    ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து சிறுவன் சுஜித் பலியானதையடுத்து பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் திறந்தநிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை உடனே மூடுமாறு கலெக்டர் உமாமகேஸ்வரி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இதையடுத்து அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் குடிநீர்,மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக அமைக்கப்பட்டு, திறந்த நிலையில் இருக்கும் ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டு வருகின்றன.

    மேலும் பல்வேறு இடங்களில் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணறுகளை உள்ளூர் இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூடி வருகின்றனர்.

    மேலும் வடகாடு போலீஸ் நிலையத்திற்குட்பட்ட கிராமங்களில் விவசாயிகள் மற்றும் அரசு சார்பில் போடப்பட்டு பயன்பாடின்றி மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணறுகளை மூடுவது குறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பரத் சீனிவாசன் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதுடன், அவர்களுடன் இணைந்து திறந்தநிலை ஆழ்துளை கிணறுகளை மூடவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    குழந்தை சுஜித்தின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

    மேலும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு மற்றும் தனியார் சார்பில் அமைக்கப்பட்டு மூடப்படாமல் ஏராளமான ஆழ்துளை கிணறுகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு அவற்றை மூட வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    ஆழ்துளை கிணறுகள் மூடப்படுவது குறித்து புதுக்கோட்டை ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கூறும் போது, திறந்தநிலையில் பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகளை மூடுமாறு அவ்வப்போது ஊராட்சி செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    அதன்படி பெரும்பாலான ஆழ்துளை கிணறு மூடப்பட்டு விட்டன. தற்போது கலெக்டரின் உத்தரவை தொடர்ந்து மூடப்படாத கிணறுகளை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று சிறப்புகூட்டம் நடத்தப்படுகிறது. அப்போது எத்தனை கிணறுகள் மூடப்பட்டுள்ளன என்கிற விவரம் தெரியவரும் என்றார்.

    இதனிடையே திருச்சி , நாமக்கல் மாவட்டங்களில் பயன்பாடற்ற நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் குறித்து ஆதாரத்துடன் தகவல் அளித்தால் ரூ.1000 ரொக்க பரிசுடன், அதை மூடவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் தலைமலை சேவா டிரஸ்ட் அறிவித்துள்ளது.

    தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு டாக்டர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள அரசு டாக்டர்கள் பணி புறக்கணிப்பை தவிர்த்து விட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். பண்டிகை காலம் மற்றும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவக் கூடிய சூழ்நிலையில் டாக்டர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். டாக்டர்களின் கோரிக்கை குறித்து அரசு செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

    தீபாவளி

    தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு விபத்து ஏற்பட்டால் சிகிச்சை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக குளிர்ந்த நீரை ஊற்றி அதன் பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மாணவர்கள் மற்றும் அனைத்து லயன்ஸ் சேவை சங்கங்கள், தீயணைப்புத்துறையினர் இணைந்து விபத்தில்லா தீபாவளி மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
    பொன்னமராவதி:

    பொன்னமராவதியில் உள்ள பொன் புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் அனைத்து லயன்ஸ் சேவை சங்கங்கள், பொன்னமராவதி தீயணைப்புத்துறையினர் இணைந்து விபத்தில்லா தீபாவளி மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். இதற்கு பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் தியாகராஜன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை லயன்ஸ் சங்க மண்டல தலைவர் மாணிக்கவேல் கொடியசைத்து தொடக்கி வைத்தார். வலையப்பட்டி பாப்பா ஆச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் செந்தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார். பள்ளியில் தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சேங்கை ஊரணி, காந்திசிலை, அண்ணாசாலை, பஸ் நிலையம் வழியாக சிவன் கோவில் வந்து முடிவடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட சங்க நிர்வாகிகள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தொடர்ந்து சிவன் கோவில் முன்பு தீயணைப்புத்துறை சார்பில், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து செயல்முறை விளக்கமும், டெங்கு காய்ச்சல் குறித்தும் சம்பந்தப்பட்ட நோய்களை தடுப்பது குறித்து விளக்க உரையும் நிகழ்த்தப்பட்டது.

    பொன்னமராவதி தீயணைப்பு நிலையம் சார்பில், வேந்தன்பட்டி தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விபத்தில்லா தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது தொடர்பான செயல்முறை விளக்கம் மற்றும் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது.
    புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை, கலெக்டர் உமா மகேஸ்வரி நேரில் ஆய்வு செய்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை, கலெக்டர் உமா மகேஸ்வரி நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்களின் மூலம் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உள்ளதை தொடர்ந்து உறுதி செய்யப்பட்டு வருகிறது. ஊரக வளர்ச்சித்துறையின் கீழ், உள்ள 3 ஆயிரத்து 263 அரசு கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 

    இதுதவிர பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 583 அரசு கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் அமைக்கப்பட்டு உள்ளதுடன், மீதமுள்ள கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றார். தொடர்ந்து கலெக்டர் உமா மகேஸ்வரி புதுக்கோட்டை நகர் பகுதியில் பெய்த மழையின் காரணமாக நிரம்பி உள்ள பல்லவன் குளத்தை ஆய்வு செய்தார். பின்னர் அவர் குளத்தின் அருகே உள்ள சாந்தநாதசுவாமி கோவிலுக்குள் சென்றார். அப்போது குளத்து தண்ணீர் கோவிலுக்குள் வருவதை கண்ட கலெக்டர் உடனடியாக நகராட்சி ஆணையரை அழைத்து, கோவிலுக்குள் குளத்து நீர் வருவதை தடுக்க உத்தரவிட்டார். 

    இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.100 கோடிக்கு பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
    புதுக்கோட்டை:

    அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும், வங்கிகள் சீர்திருத்தம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும். வரா கடன்களை வசூல் செய்ய கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு சேவை கட்டணத்தை உயர்த்த கூடாது. வைப்பு தொகை வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும்.

    வங்கிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 150 வங்கிகளை சேர்ந்த சுமார் ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் சுமார் ரூ.100 கோடிக்கு பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

    இந்த வேலை நிறுத்தத்தை வலியுறுத்தி புதுக்கோட்டை கீழராஜ வீதியில் உள்ள கனரா வங்கி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் ஊரக வளர்ச்சி வங்கியின் மாநில தலைவர் ராமதுரை, இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் ராதாகிரு‌‌ஷ்ணன், ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயற்குழு உறுப்பினர் சிங்கமுத்து, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டப் பொதுச் செயலாளர் ராமச்சந்திரன், கனரா வங்கி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×