என் மலர்
புதுக்கோட்டை
கீரனூர் அருகே உள்ள சீரங்கப்பட்டியை சேர்ந்தவர் வீரப்பெருமாள். இவரது மகன் மணிகண்டன் (வயது 16). ஐ.டி.ஐ. மாணவரான இவர் தனது நண்பருடன் சேர்ந்து அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் மூச்சுத்திணறி நீரில் மூழ்கி இறந்தார். அவரை, நண்பர் மீட்க முயன்றும் முடியவில்லை. பின்னர் அவர், சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில், தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது கிணற்றில் அதிகளவு தண்ணீர் இருந்ததால் பாதிஅளவு தண்ணீரை வெளியேற்றி விட்டு மாணவரை மீட்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கிராம மக்களின் உதவியுடன் தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அறந்தாங்கி:
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறையிலும் பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பல ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாரான நெல், சோளம், பருத்தி உள்ளிட்டவை சேதம் அடைந்துள்ளன. அழுகும் நிலையில் இருக்கும் நெற்பயிர் சாகுபடி செய்துள்ள வயலில் தேங்கி நிற்கும் மழைநீர் வடிய வழியின்றி உள்ளது.
இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் பலத்த மழையால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். மீனவர்களும் கடலுக்கு செல்ல முடியவில்லை.
அறந்தாங்கியை அடுத்த ஆவுடையார்கோவில் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மிக பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட கடவன்கோட்டை ஏரி நிரம்பியுள்ளது. பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இந்த ஏரி மானாவாரி பாசனத்தை மையமாக கொண்டது. மழையால் மட்டுமே ஏரி நிரம்பும்.
நேற்று காலை 6 மணியளவில் இந்த ஏரி நிரம்பி அதன் கரை உடைந்தது. சுமார் 30 அடி நீளத்திற்கு ஏற்பட்ட உடைப்பால் ஏரியில் இருந்து தண்ணீர் ஆக்ரோஷமாக வெளியேறியது.
தகவல் அறிந்ததும் ஆவுடையார்கோவில் தாசில்தார் சிவக்குமார் விரைந்து சென்று பொதுப்பணித்துறையினர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். மேலும் கலெக்டர் உமா மகேஸ்வரி, அறந்தாங்கி சப்-கலெக்டர் ஆனந்த் மோகன் ஆகியோரும் அங்கு சென்று சீரமைப்பு பணிகளை முடுக்கிவிட்டனர்.
ஆனாலும் ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீர் அப்பகுதியில் உள்ள அறுவடைக்கு தயாராக இருந்த நெல் வயலில் புகுந்தது. இதில் 500 ஏக்கர் நெற் பயிர் தண்ணீரில் மூழ்கியது. மேலும் 70 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அங்கிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
பொதுமக்கள் தங்கள் உடமைகள் மற்றும் ஆடு, மாடுகளை அழைத்துக் கொண்டு வெளியேறினர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மதியம் 3 மணியளவில் ஏரி உடைப்பு சரி செய்யப்பட்டு கரை பலத்தப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியை பொதுப்பணித் துறையினர் கண்காணித்து வருகிறார்கள். இன்றும் அங்கு தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள குமாரபட்டியை சேர்ந்தவர் சிங்காரம். இவரது மகன் பாண்டியன் (வயது 41). தற்போது மதுரை சூர்யாநகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் மின்வாரிய ஒப்பந்தகாரரர். இந்தநிலையில் சொந்த ஊரில் பொங்கல் விழா கொண்டாட குடும்பத்தினருடன் 2 காரில் புறப்பட்டனர்.
ஒரு காரில் பாண்டியன், அவருடைய மகன் திவாகர்(14) ஆகியோர் வந்துள்ளனர். காரை பாண்டியன் ஓட்டினார். பின்னால் மற்றொரு காரில் மனைவி மற்றும் குடும்பத்தினர் வந்துள்ளனர். பாண்டியன் ஓட்டி வந்த கார் கொட்டாம்பட்டி அருகே மணப்பட்டி அருகே வந்தபோது, திடீரென நிலைதடுமாறி சாலையோர தடுப்புச்சுவரில் மோதியது. பின்னர் அந்த வழியாக வந்த லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் பாண்டியன், அவரது மகன் திவாகர் ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதை பின்னால் காரில் வந்த குடும்பத்தினர் நேரில் அதிர்ச்சி அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், கொட்டாம்பட்டி தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் உதவியுடன் 2 மணி நேரம் போராடி இடிபாடுகளில் சிக்கிய தந்தை, மகன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள சுற்றுச்சூழல் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கண்காணிப்பாளர் பாண்டியன் அறையில் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.88,500 பணம் மற்றும் ரூ.38 லட்சத்து 66 ஆயிரத்து 200 கணக்கில் வராத வங்கி கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள பாண்டியன் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.1.37 கோடி ரொக்கம், ரூ.1.22 கோடி மதிப்புள்ள 3.81 கிலோ தங்கம் நகைகள், 3.343 கிலோ வெள்ளி பொருட்கள், 10.52 கேரட் வைரம், நிரந்தர வைப்பு நிதி கணக்கில் இருந்த ரூ.31 லட்சம் மற்றும் ரூ.7 கோடி மதிப்புள்ள 18 இடங்களில் உள்ள சொத்துக்கள் என ரூ.10.50 கோடி மதிப்புள்ள பணம், நகைகள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தமழகத்தையே அதிரச்செய்த இந்த சம்பவத்தில் சுற்றுச்சூழல் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க லஞ்சமாக நகை-பணத்தை வாங்கி குவித்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து பாண்டியன் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டார். மேலும் பாண்டியன் பெயரில் உள்ள வங்கி லாக்கர்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திறந்து சோதனை நடத்தியபோது, அதில் இருந்து கணக்கில் வராத ரூ.55 லட்சத்து 500 ரொக்கப்பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், லாக்கரில் தடையில்லா சான்று வழங்க பாண்டியன் பரிந்துரையில் சுற்றுச்சூழல் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் யார்-யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்ட ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர். அதன் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
பாண்டியனின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம். அங்கேயும் அவர் லஞ்சப்பணத்தில் அளவுக்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். அது தொடர்பாகவும் விசாரணை நடத்த முடிவு செய்த சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையில் இன்று காலை புதுக்கோட்டை திருமயம் பசுமாட வீதியில் உள்ள பாண்டியன் வீட்டிற்கு சென்றனர்.
அங்கு அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். 10 பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனையை நடத்தினர். வீட்டின் ஒவ்வொரு அறைக்கும் சென்று அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது.
மேலும் திருமயத்தில் உள்ள வங்கிகளில் பாண்டியன் கணக்கு வைத்துள்ளாரா? லாக்கர்களில் நகை ஏதும் வைத்துள்ளாரா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்படி ஏதாவது அவர் வைத்திருக்கும் பட்சத்தில் வங்கிகளுக்கு சென்று லாக்கர்களை திறந்து சோதனை நடத்தவும் முடிவு செய்துள்ளனர். இது மட்டுமின்றி சொந்த ஊர் என்பதால் அங்கு லஞ்ச பணத்தில் நிலம் வாங்கியுள்ளாரா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சோதனைகளுக்கு பிறகு பாண்டியனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தவும் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னையில் சுற்றுச்சூழல் துறை சூப்பிரண்டு பாண்டியன் என்பவர் வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த மாதம் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1.37 கோடி ரொக்கப்பணம், 3 கிலோ தங்க-வைர நகைகள், ரூ.37 லட்சம் வங்கி வைப்புத்தொகை, ரூ.7 கோடி அளவுக்கு 18 சொத்து ஆவணங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து அதிகாரி பாண்டியன் தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள பாண்டியனின் வீடு மற்றும் வங்கி லாக்கரில் 6 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து அவரது வீட்டில் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுக்கோட்டை:
மனதை சுண்டி இழுத்து கட்டிப்போடும் வலிமையும், தன்மையும் இசைக்கு மட் டுமே உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை. அதிலும் குறிப்பாக பண்டைய காலம் தொட்டு தற்போதைய நாகரீக காலம் வரை தொடர்ந்து இசைக்கப்பட்டு வருவதில் நாதஸ்வரத்துக்கும், தவிலுக்கும் தனி இடம் உண்டு.
நாதத்தால் நாட்டையே வென்ற வரலாறு பற்றி நாம் அறிந்திருப்போம். மங்கள இசைக்கு மயங்காதோர் இருக்க முடியாது என்று கூறுமளவிற்கு இன்றளவும் கோவில்கள், திருவிழாக்கள், சுபமுகூர்த்தங்களில் இசைக்கப்படுவது நாதஸ்வரமும், தவிலும்தான். அந்த இசையை கற்றுக்கொள்வதில் ஆண்கள் மட்டுமே அளப்பரிய ஆர்வம் கொண்ட காலத்தில் ஒரு சிறுமியும் கற்று அதன் பெருமையால் தன்னையும், கற்றுத்தந்த குருநாதரையும் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் பகுதியை சேர்ந்தவர் சேர்ந்தவர் நாகராஜ். தவில் இசைக்கலைஞரான இவர் தன்னை நாடி வந்தவர்களுக்கும் தவில் கலையை முறைப்படி கற்றுத்தருகிறார். இவர் வசிக்கும் தெருவிற்குள் நுழைந்தாலே தவில் இசையும், நாதஸ்வர இசையும் நம்மை வரவேற்கும்.
தான் கற்ற கலையை மற்றவர்களுக்கும் கற்றுத்தருவதில் அதிக ஆர்வம் கொண்ட நாகராஜிடம் தவில் கற்க வந்தவர்களில் 9 வயது சிறுமியான நிஷாந்தினியும் ஒருவர். தனது உறவினராக நாராயணன் என்பவரது மகளான நிஷாந்தினியின் ஆர்வத்தை கண்டு வியந்த நாகராஜ் முறைப்படி அவருக்கு தவில் கற்றுத்தர தொடங்கினார். கற்றல் என்பதை விட அவர் கற்க தொடங்கிய விதமே தனித்துவமாக இருந்தது. ஆர்வம் என்பதைவிட அர்ப்பணிப்புடன் நிஷாந்தினி தவில் கலையை கற்றார்.
அவரது பெற்றோர் நாதஸ்வர, தவில் கலை ஞர்களின் வாரிசுகள் ஆவர். அந்த வழியில் நிஷாந்தினிக்கும் மரபு வழியாக கலையை கற்கும் ஆர்வம் வந்துள்ளதாக பயிற்சியாளரும், குருவுமான நாகராஜ் கூறினார். மேலும் அவர் தெரிவிக்கையில், என்னிடம் ஏராளமானோர் தவில் கற்றுள்ளனர். அவர்களிடம் சில சமயம் நுணுக்கங்களை பற்றி கூறுகையில் தடுமாறிய நிலையே இருந்தது. ஆனால் சற்றும் தளராமல் தவிலை கற்பதில் நிஷாந்தினியின் ஆர்வத்தையும், அர்ப்பணிப்பையும் பார்த்து நான் வியந்து போனேன்.
தொடக்கத்தில் வயலின் மட்டுமே கற்றுக்கொண்ட நிஷாந்தினி கொரோனா விடுமுறை காலத்தை புத்தகம் படிப்பதோடு நிறுத்தி விடாமல் என்னிடம் வந்து தவில் கலையை கற்றார். காலை 7 மணிக்கு வரும் அவர் இரவு 7 மணி வரை (உணவு இடைவெளி தவிர்த்து) தொடர்ந்து தவில் கற்பதில் ஆர்வம் காட்டினார். ஒரே மாதத்தில் கற்றும் தேர்ந்தார்.
தவில் கற்பதில் ஆண்களே அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். அவர்களை விஞ்சிய அறிவும், ஞானமும் நிஷாந்தினியிடம் உள்ளது. அத்துடன் நின்றுவிடாமல் இரண்டே மாதங்களில் கோவிலில் அரங்கேற்றம் செய்த நிஷாந்தினிக்கு தற்போது பல்வேறு கச்சேரிகளில் தவில் இசைக்க அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளது.
இதுபற்றி சிறுமி நிஷாந்தினி கூறுகையில், எனது மாமா நாகராஜ் தவில் இசைக்கும் போது அருகில் அமர்ந்து மெய்மறந்து ரசிப்பேன். அதுவே என்னை தவில் கற்க உந்து சக்தியாக அமைந்தது. நான் கேட்டவுடன் அவரும் கற்றுத்தர ஒப்புக்கொண்டு முறைப்படி பயிற்சி அளித்தார். நான் தவில் வித்வான்களான ஏ.கே.பழனிவேல், எம்.ஆர்.வாசுதேவன் ஆகியோரை போன்று வரவேண்டும் என விரும்புகிறேன் என்றார்.
சிறுமியின் தந்தை நாராயணன் கூறுகையில், சிறு வயது முதலே நிஷாந்தினி எதுபோல் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டாரோ அதுபோல ஆக நான் எப்போதும் தடையாக இருந்ததில்லை. ஆனால் அவர் எங்கள் மரபு வழி கலையான தவிலில் சாதிப்பார் என நினைக்கவில்லை. அவர் இந்த வயதிலேயே வித்வான் என்று அழைக்கப்படுவதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி என்றார்.






