search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    அறந்தாங்கி பகுதியில் தொடர் மழை- ஏரி உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது

    அறந்தாங்கி பகுதியில் தொடர் மழையால் ஏரி உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் 500 ஏக்கர் நெற் பயிர் தண்ணீரில் மூழ்கியது.

    அறந்தாங்கி:

    வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறையிலும் பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    பல ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாரான நெல், சோளம், பருத்தி உள்ளிட்டவை சேதம் அடைந்துள்ளன. அழுகும் நிலையில் இருக்கும் நெற்பயிர் சாகுபடி செய்துள்ள வயலில் தேங்கி நிற்கும் மழைநீர் வடிய வழியின்றி உள்ளது.

    இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் பலத்த மழையால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். மீனவர்களும் கடலுக்கு செல்ல முடியவில்லை.

    அறந்தாங்கியை அடுத்த ஆவுடையார்கோவில் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மிக பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட கடவன்கோட்டை ஏரி நிரம்பியுள்ளது. பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இந்த ஏரி மானாவாரி பாசனத்தை மையமாக கொண்டது. மழையால் மட்டுமே ஏரி நிரம்பும்.

    நேற்று காலை 6 மணியளவில் இந்த ஏரி நிரம்பி அதன் கரை உடைந்தது. சுமார் 30 அடி நீளத்திற்கு ஏற்பட்ட உடைப்பால் ஏரியில் இருந்து தண்ணீர் ஆக்ரோ‌ஷமாக வெளியேறியது.

    தகவல் அறிந்ததும் ஆவுடையார்கோவில் தாசில்தார் சிவக்குமார் விரைந்து சென்று பொதுப்பணித்துறையினர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். மேலும் கலெக்டர் உமா மகேஸ்வரி, அறந்தாங்கி சப்-கலெக்டர் ஆனந்த் மோகன் ஆகியோரும் அங்கு சென்று சீரமைப்பு பணிகளை முடுக்கிவிட்டனர்.

    ஆனாலும் ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீர் அப்பகுதியில் உள்ள அறுவடைக்கு தயாராக இருந்த நெல் வயலில் புகுந்தது. இதில் 500 ஏக்கர் நெற் பயிர் தண்ணீரில் மூழ்கியது. மேலும் 70 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அங்கிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

    பொதுமக்கள் தங்கள் உடமைகள் மற்றும் ஆடு, மாடுகளை அழைத்துக் கொண்டு வெளியேறினர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மதியம் 3 மணியளவில் ஏரி உடைப்பு சரி செய்யப்பட்டு கரை பலத்தப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியை பொதுப்பணித் துறையினர் கண்காணித்து வருகிறார்கள். இன்றும் அங்கு தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    Next Story
    ×