என் மலர்
புதுக்கோட்டை
அரசு வேலை என்பது அனைவரின் கனவு. ஆனால் அதனை பெற இன்று பல்வேறு போட்டிகளையும், தேர்வுகளையும் எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு வேலை வாய்ப்பை பெறுவதற்கான முன்னுரிமையை பெற்றுத்தருவது பதிவு மூப்பு எனும் வேலைவாய்ப்பு பதிவு தான்.
படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் ஒவ்வொருவரும் தங்களது கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வைத்திருந்தால் அரசு வேலை நம்முடைய வீட்டின் வாசல் கதவை எப்போது வேண்டுமானாலும் தட்டலாம் என்பது நம்பிக்கை.
வேலை தேடும் வேளையில் அதற்காக எத்தனையோ முயற்சிகளை மேற்கொள்ளலாம். போட்டித் தேர்வுகளில் பங்கேற்கலாம். அதில் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்று நேர்காணலுக்கும் செல்லலாம். அப்போது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்த பதிவு மூப்பு பட்டியலில் நமது பெயரும் இருந்தால் அதற்கான முன்னுரிமையுடன் அரசு பணியை பெற முடியும்.
குறிப்பிட்ட சில பணிகளுக்கு நேரடியாகவே வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பதிவு மூப்பு பட்டியலில் இருந்து ஆட்கள் நியமனம் செய்யப்படுவதும் உண்டு.
தொழில்நுட்ப மாற்றங்களுக்கேற்ப இணையதளம் வழியாகவும் செயல்படுகிறது. நேரடியாக வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று காத்திருந்து பதிவு செய்யும் நிலையை இது மாற்றியுள்ளது. தற்போது வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை 68 லட்சத்தை தாண்டியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் 11,35,866 பேர் 57 வயது வரையில் உள்ள பதிவுதாரர்கள் ஆவர். எல்லாவற்றுக்கும் மேலாக 7 ஆயிரத்து 648 பேர் 58 வயதுக்கு மேல் உள்ளவர்கள் ஆவர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த ஆனந்தராஜ் தொடர்ந்து 24-வது ஆண்டாக தனது பதிவு மூப்பை புதுப்பித்துள்ளார். இவருக்கு இதுநாள் வரை எந்த ஒரு வேலைக்காக அழைப்பு கடிதமும், நலம் விசாரித்து கூட கடிதமும் வரவில்லையாம். இதனால் தனது புதுப்பித்தலை பேனராகவும், போஸ்டராகவும் அச்சடித்து புதுக்கோட்டை நகர் முழுவதும் ஒட்டியுள்ளார். இந்த போஸ்டரை பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள்.
இது குறித்து இளைஞர் ஒருவர் கூறும் போது, தொழில் நுட்பங்கள் எவ்வளவு தான் வளர்ந்தாலும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு அவற்றை மட்டும் நம்பி இருக்காமல் சுயமாக தொழில் தொடங்க வேண்டும். சுய தொழிலுக்கு அரசு எண்ணற்ற திட்டங்களை வகுத்துள்ளதுடன் அதற்கு தேவையான மானியத்துடன் கடன்களையும் வழங்கி வருகிறது என்றார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களுக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருமயம் சட்டமன்ற தொகுதியான ஊனையூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். காலை சரியாக 10 மணிக்கு ஊனையூர் கிராமத்திற்கு வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வேனில் இருந்து இறங்கிய அவர் மேடைக்கு வரும்போது இருபுறமும் திரண்டிருந்த பெண்கள் உள்ளிட்டோர் மு.க.ஸ்டாலினிடம் கைகுலுக்கினர். மேலும் ஏராளமான பெண்கள் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
பின்னர் மேடைக்கு வந்த அவருக்கு வெள்ளி செங்கோல் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. திருமயம் தொகுதி எம்.எல்.ஏ. ரகுபதி வரவேற்றார். தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் சாதனை படைத்த புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள் வீரர்கள், மாற்றுத்திறனாளிகளை அழைத்து பாராட்டி பரிசு வழங்கினார்.
பின்னர் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் போடப்பட்டது. அந்த திட்டம் கைவிடப்பட்ட போதிலும் அந்த ஆழ்குழாய் கிணறுகள் அகற்றப்படாமல் இருப்பதால் அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாகவும் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் தீர்க்கப்படாமல் உள்ள முக்கிய பிரச்சினைகள் வீடியோவாக ஒளிபரப்பப்பட்டது.
இதையடுத்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
இங்கு நடைபெறுவது கூட்டம் அல்ல, மாநாடு போன்று இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியை சேர்ந்தவர்களும் இங்கு வந்திருக்கிறீர்கள்.
இன்றைக்கு உங்கள் குறைகளை, பிரச்சினைகளை கோரிக்கை மனுக்களாக அளித்திருக்கிறீர்கள். இந்த கோரிக்கை மனுக்களை நான் அறிவாலயத்துக்கு எடுத்து செல்வேன். உங்களுடைய பேராதரவுடன் நான் ஆட்சி பொறுப்பேற்ற மறுநாள், இந்த புகார் மனு பெட்டி திறக்கப்படும். திறக்கப்பட்ட 100 நாட்களுக்குள் உங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும். ஒருவேளை முடியாவிட்டால் நீங்கள் நேரடியாக இந்த பதிவு எண் கொண்ட அட்டையை எடுத்துக்கொண்டு எந்த அனுமதியும் இல்லாமல் கோட்டைக்கு வாருங்கள். முதல்வர் அறைக்கே நேரடியாக வரலாம். உங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினர்.
இதில் புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட புதுக்கோட்டை, விராலிமலை, ஆலங்குடி, திருமயம், அறந்தாங்கி, கந்தர்வக்கோட்டை 6 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது மனுக்களை அங்கு வைக்கப்பட்டிருந்த குறை தீர்க்கும் மனு பெட்டியில் போட்டனர்.
கூட்டத்திற்காக அங்கு பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கானோர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. ஸ்டாலின்தான் வாராரு, விடியல் தர போராரு என்ற வாசகம் அடங்கிய டிஜிட்டல் போர்டுகள் மேடையை சுற்றி பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்தது.
மேடையின் பின்புறம் உள்ளவர்கள் நிகழ்ச்சிகளை காணும் வகையில் பல இடங்களில் அகன்ற திரைகள் அமைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதனால் ஊனையூர் கிராமம் விழா கோலம் பூண்டிருந்தது. மு.க.ஸ்டாலின் பிரசாரத்தையொட்டி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஊனையூரில் பிரசாரத்தை முடித்து கொண்டு பிற்பகலில் அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் நடைபெறும் பிரசார நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.
சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் பாலையா. இவர் அங்கு பழைய இரும்பு பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். இந்தநிலையில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாலையா குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் நேற்றிரவு சென்னையில் இருந்து காரில் புறப்பட்டனர்.
இன்று அதிகாலை புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில் செல்லும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலையோரமுள்ள தடுப்பு கம்பியில் மோதியது. இதில் காரில் இருந்த ராமன்(வயது 40), மற்றும் அவரது மகன் ரக்ஷன் (2) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பாலையா மற்றும் அவரது குடும்பத்தினர் 9பேர் காயமடைந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 9 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராமன், ரக்ஷன் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. டிரைவர் தூங்கியதன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மணிவிளான் 5 ஆம் வீதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுவன் மணிவிளான் 1-ம் வீதியை சேர்ந்த 5-ம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவி மற்றும் 7 ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி ஆகியோருடன் விளையாடுவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 6 மாத காலமாக அப்பகுதியில் உள்ள ஒரு கொட்டகையில் வைத்து அந்த சிறுவன் மாணவிகள் இருவரையும் அழைத்து சென்று தனித்தனியாக பாலியல் உறவு கொள்ள முயன்றுள்ளார்.
மேலும் இதை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் மிரட்டியுள்ளார். இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி அந்த சிறுமிகளுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மாணவிகளின் பெற்றோர் இருவரையும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிகளிடம் நடத்திய விசாரணையில் சிறுவன் தங்களிடம் நடந்து கொண்டதை கூறினர்.
இதைத்தொடர்ந்து அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீசார் சிறுமிகளை பாலியல் உறவு கொள்ள முயன்ற சிறுவன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சிறுவன் புதுக்கோட்டை ஜே.எம்-1 கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை வரும் 25-ந்தேதி வரை திருச்சி இளஞ்சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சிறுவன் திருச்சியில் உள்ள இளஞ்சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அறந்தாங்கி பகு தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள பூங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராமு, விவசாயி. இவருக்கு சமீபத்தில் திருமணமானது. இவரது மனைவி ரம்யா. நிறைமாத கர்ப்பிணியான ரம்யா தலைப்பிரசவத்திற்காக கடந்த மாதம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 16-ந்தேதி ரம்யாவுக்கு 2.7 கிலோ எடையுடன் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த இரண்டு நாட்களுக்கு பிறகு ரத்த வாந்தி, ரத்தம் கலந்த மலம் மற்றும் சுவாசக்கோளாறு காரணமாக பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது.
குழந்தையின் நுரையீரலிலிருந்தும் ரத்தகசிவு ஏற்பட்டதால் குழந்தைக்கு வெண்டிலேட்டர் கருவி மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது. ரத்த கசிவினை சரி செய்ய 5 முறை ரத்த சிவப்பணுக்கள், ரத்த தட்டணுக்கள் மற்றும் பிளாஸ்மா செலுத்தப்பட்டது. குழந்தையை பரிசோதித்து பார்த்ததில் குழந்தையின் சிறுநீரகம் செயலிழந்து, உப்பு சத்து மிக அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது.
கல்லூரி முதல்வர் டாக்டர் பூவதி அறிவுறுத்தலின்பேரில் குழந்தையின் உயிரை காப்பாற்ற பச்சிளங்குழந்தைகள் சிறப்பு மருத்துவர் பீட்டர், சிறுநீரக சிறப்பு மருத்துவர் சரவணகுமார் மற்றும் மருத்துவ குழுவினரால் குழந்தையின் வயிற்றில் குழாய் செலுத்தப்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது.
இரண்டு நாட்கள் சிகிச்சைக்கு பிறகு குழந்தையின் உப்புச்சத்து மற்றும் சுவாசம் இயல்பு நிலைக்கு வந்தது. செயற்கை சுவாசம் படிப்படியாக நீக்கப்பட்டு குழந்தைக்கு தாய்ப்பாலும் கொடுக்கப்பட்டது. கிருமித்தொற்றுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிகிச்சை வழங்கப்பட்டது. 25 நாட்கள் சிகிச்சையில் குழந்தை உடல்நலம் தேறிய பின்பு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட பச்சிளங்குழந்தையை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய டாக்டர் பாலமுருகன் தலைமையிலான குழந்தைகள் நல மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி பாராட்டினார்.
அறந்தாங்கி கட்டுமாவடி சாலை பகுதியை சேர்ந்தவர் ராக்கம்மாள் (வயது 70). இவரது கணவர் இறந்துவிட்டார். மகன்களுக்கு திருமணமாகி அறந்தாங்கி எல்.என்.புரத்தில் வசித்து வருகின்றனர். இதனால் கட்டுமாவடி சாலையில் உள்ள வீட்டில் ராக்கம்மாள் மட்டும் தனியாக வசித்து வருகிறார்.
இந்தநிலையில் உடல்நலக்குறைவு காரணமாக ராக்கம்மாள் வீட்டை பூட்டிவிட்டு நேற்று முன்தினம் மகன்வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று காலை மீண்டும் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்றுபார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த 4½பவுன்தங்க நகை, ரூ.1½ லட்சம் பணம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரிய வந்தது. இது குறித்து அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மர்மநபர்கள் கள்ளசாவியால் வீட்டின் கதவை திறந்து, பீேராவை உடைத்து நகை-பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் உள்ள அறையில் பொங்கல் பண்டிகையையொட்டி வழங்குவதற்காக கொண்டுவரப்பட்ட இலவச வேட்டி-சேலைகள் வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு ஆலங்குடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தாலுகா அலுவலகம் முன் மினிவேன் நின்றுகொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அருகே சென்று பார்த்தபோது, 2 பேர் தாலுகா அலுவலகத்தில் உள்ள இலவச வேட்டி-சேலைகளை திருடி வேனில் ஏற்றிக்கொண்டிருந்தனர்.இதனையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் வேங்கிடக்குளம், நந்தவனம் கீழத்தெருவை சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன் (வயது 27), வல்லத்திராகோட்டை காடையன் தோப்பு பகுதியை சேர்ந்த சிவமணி (28) என தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மினிவேனையும் பறிமுதல் செய்தனர்.






