search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக தலைவர் முக ஸ்டாலின்
    X
    திமுக தலைவர் முக ஸ்டாலின்

    100 நாளில் கோரிக்கை நிறைவேறாவிட்டால் கோட்டைக்கே நீங்கள் வரலாம்- மு.க.ஸ்டாலின்

    உங்களுடைய பேராதரவுடன் நான் ஆட்சி பொறுப்பேற்ற 100 நாளில் கோரிக்கை நிறைவேறாவிட்டால் கோட்டைக்கே நீங்கள் வரலாம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களுக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இன்று புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருமயம் சட்டமன்ற தொகுதியான ஊனையூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். காலை சரியாக 10 மணிக்கு ஊனையூர் கிராமத்திற்கு வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வேனில் இருந்து இறங்கிய அவர் மேடைக்கு வரும்போது இருபுறமும் திரண்டிருந்த பெண்கள் உள்ளிட்டோர் மு.க.ஸ்டாலினிடம் கைகுலுக்கினர். மேலும் ஏராளமான பெண்கள் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

    பின்னர் மேடைக்கு வந்த அவருக்கு வெள்ளி செங்கோல் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. திருமயம் தொகுதி எம்.எல்.ஏ. ரகுபதி வரவேற்றார். தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் சாதனை படைத்த புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள் வீரர்கள், மாற்றுத்திறனாளிகளை அழைத்து பாராட்டி பரிசு வழங்கினார்.

    பின்னர் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் போடப்பட்டது. அந்த திட்டம் கைவிடப்பட்ட போதிலும் அந்த ஆழ்குழாய் கிணறுகள் அகற்றப்படாமல் இருப்பதால் அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாகவும் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் தீர்க்கப்படாமல் உள்ள முக்கிய பிரச்சினைகள் வீடியோவாக ஒளிபரப்பப்பட்டது.

    இதையடுத்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    இங்கு நடைபெறுவது கூட்டம் அல்ல, மாநாடு போன்று இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியை சேர்ந்தவர்களும் இங்கு வந்திருக்கிறீர்கள்.

    இன்றைக்கு உங்கள் குறைகளை, பிரச்சினைகளை கோரிக்கை மனுக்களாக அளித்திருக்கிறீர்கள். இந்த கோரிக்கை மனுக்களை நான் அறிவாலயத்துக்கு எடுத்து செல்வேன். உங்களுடைய பேராதரவுடன் நான் ஆட்சி பொறுப்பேற்ற மறுநாள், இந்த புகார் மனு பெட்டி திறக்கப்படும். திறக்கப்பட்ட 100 நாட்களுக்குள் உங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும். ஒருவேளை முடியாவிட்டால் நீங்கள் நேரடியாக இந்த பதிவு எண் கொண்ட அட்டையை எடுத்துக்கொண்டு எந்த அனுமதியும் இல்லாமல் கோட்டைக்கு வாருங்கள். முதல்வர் அறைக்கே நேரடியாக வரலாம். உங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினர்.

    இதில் புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட புதுக்கோட்டை, விராலிமலை, ஆலங்குடி, திருமயம், அறந்தாங்கி, கந்தர்வக்கோட்டை 6 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது மனுக்களை அங்கு வைக்கப்பட்டிருந்த குறை தீர்க்கும் மனு பெட்டியில் போட்டனர்.

    கூட்டத்திற்காக அங்கு பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கானோர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. ஸ்டாலின்தான் வாராரு, விடியல் தர போராரு என்ற வாசகம் அடங்கிய டிஜிட்டல் போர்டுகள் மேடையை சுற்றி பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்தது.

    மேடையின் பின்புறம் உள்ளவர்கள் நிகழ்ச்சிகளை காணும் வகையில் பல இடங்களில் அகன்ற திரைகள் அமைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    இதனால் ஊனையூர் கிராமம் விழா கோலம் பூண்டிருந்தது. மு.க.ஸ்டாலின் பிரசாரத்தையொட்டி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ஊனையூரில் பிரசாரத்தை முடித்து கொண்டு பிற்பகலில் அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் நடைபெறும் பிரசார நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

    Next Story
    ×