என் மலர்
புதுக்கோட்டை
விராலிமலை
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை டைமண்ட் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 34). ராணுவ வீரரான இவர் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் பணியாற்றி வந்தார்.
இவருக்கு திருமணமாகி புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே தற்போது புவனேஸ்வரி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். ராணுவ வீரர் என்ற முறையில் செல்வக்குமார் தான் பணிபுரியும் இடத்திலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. காய்ச்சலும் இருந்துள்ளது. இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் செல்வகுமாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனே அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருந்த போதிலும் நேற்று மதியம் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகும் அவர் இறந்தது சக ராணுவ வீரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செல்வகுமார் இறந்த தகவல் கேட்டு அவரது குடும்பத்தினர் பேரதிர்ச்சி அடைந்தனர். அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
ராஜஸ்தானில் இருந்து இன்று சிறப்பு விமானம் மூலம் பலியான செல்வகுமாரின் உடல் திருச்சிக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அங்கிருந்து அவரது சொந்த ஊரான திருச்சி-மணப்பாறை இடையே உள்ள மறவனூர் சத்திரம் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அரசின் வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றி உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இதனால் அவரது சொந்த கிராமம் மற்றும் விராலிமலை பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது.
இதற்கிடையே விராலிமலை ஈஸ்வரி நகர் பகுதியை சேர்ந்த 8 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு ஊராட்சி நிர்வாகம் சார்பில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளையும் பலாப்பழங்கள் மிகவும் சுவை மிகுந்ததாக இருப்பதால் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில வியாபாரிகளால் விரும்பி வாங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு கொரோனா பொது முடக்கத்தால் பலாப் பழங்களை வாங்குவோர் இன்றி மரங்களிலேயே பழுத்து வீணாகியது. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டும் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தங்களிடம் இருந்த பலாமரங்களை குத்தகை மற்றும் ஒட்டு மொத்தமாக வியாபாரிகளிடம் கொடுத்து பணம் வாங்கி தங்களது சிறு, சிறு தேவைகளை விவசாயிகள் நிவர்த்தி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பலா மரங்களை குத்தகைக்கு விட்டதால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதுபோல தங்களது பலா மரங்களில் இருந்து தாங்களே பலாப்பழங்களை ருசிக்க முடியாத நிலையில் உள்ளனர்.
பெரும்பாலான பல மரங்களை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளதால் இப்பகுதிகளில் உள்ள கமிஷன் கடைகளுக்கு குறைந்த அளவிலான பலாப்பலங்கள் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இதனால் விற்பனையும் சற்று மந்தமாக நடைபெற்று வருகிறது. மேலும் குத்தகை வியாபாரிகள் பலாப்பழங்களை மொத்தமாக பறித்து வெளியூர்களுக்கு கொண்டு சென்று விடுகின்றனர்.
இதற்கிடையே நாள்தோறும் பழங்களின் விலை அதிகரித்து வரும் நிலையில் இப்பகுதி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மேலும் தமிழ் வருடப்பிறப்பு மாதமான சித்திரை மாதம் பிறக்க இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் அப்போது முதல் பலாப்பழ விற்பனை சூடுபிடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகின.
அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவீதம் வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.40 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
புதுக்கோட்டையில் 72.94 சதவீத வாக்குப்பதிவு பதிவாகின. தேர்தல் ஆணைய செயலியில் உள்ள தகவலின் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:-
ஆலங்குடி- 78.44%
அறந்தாங்கி - 70.37%
கந்தர்வக்கோட்டை - 75.40%
புதுக்கோட்டை - 72.94%
திருமயம் - 75.89%
விராலிமலை - 85.43%
தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. இரவு 7 மணி வரை வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆலங்குடி வாக்குச்சாவடியில் மின்னணு வாக்கு இயந்திரத்தை குடிபோதையில் ஒருவர் அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி பஞ்சாயத்து ஆலங்குடி கிராமத்தில் குடிபோதையில் தகராறு செய்த ஆனந்தன் என்பவர் அரிவாளை கொண்டு வாக்குப்பதிவு இயந்திரத்தை அடித்து நொறுக்கினார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து அறந்தாங்கி காவல் ஆய்வாளர் அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.






