search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காத 2 தியேட்டர்களுக்கு அபராதம்

    புதுக்கோட்டையில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காத 2 தியேட்டர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    புதுக்கோட்டை:

    கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிற நிலையில் தமிழக அரசு ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நேற்று முதல் அமலுக்கு வந்தன. புதுக்கோட்டை மாவட்டத்திலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் மாநகராட்சி பொறியாளர் ஜீவா சுப்ரமணியன் தலைமையில், சுகாதார ஆய்வாளர் பரக்கத்அலி மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஆங்காங்கே முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அவர்களது பெயர் விவரம், செல்போன் எண் ஆகியவற்றை சுகாதாரக்குழுவினர் சேகரித்து வைத்துக்கொண்டனர். புதுக்கோட்டை நகரின் முக்கிய பகுதியான கீழ ராஜவீதியில் அண்ணாசிலை அருகே நகராட்சி ஊழியர்கள் நின்று கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதேபோல போலீசாரும் இரு சக்கர வாகனங்களில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

    இதற்கிடையே அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டும் அனுமதிக்க வேண்டும். ஆனால், நேற்று புதுக்கோட்டையில் நகரில் 2 தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பிரபல நடிகர்களின் படம் திரையிடப்பட்டிருந்ததால் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் சுகாதார ஆய்வாளர் பரக்கத்அலி தலைமையிலான குழுவினர் அந்த தியேட்டர்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் 100 சதவீத இருக்கைகள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து திரையரங்குகளின் உரிமையாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதேபோல நகரப்பகுதியில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.3,200 அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்தநிலையில் 68 பேருக்கு கொரோனா மாதிரி எடுக்கப்பட்டன. இதேபோல பூ மார்க்கெட்டிலும் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    Next Story
    ×