என் மலர்
புதுக்கோட்டை
- குறைந்த நீரில் அதிக மகசூல் பெற விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
- மானியமும் வழங்கப்படுகிறது.
புதுக்கோட்டை:
பிரதம மந்திரியின் நுண்ணீர்ப் பாசனத் திட்டம் 'ஒரு துளி நீரில் அதிகப் பயிர்" என்ற குறிக்கோளுடன் செயல்படுத்தப்படுகிறது. பிரதம மந்திரியின் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில் நுண்ணீர்ப் பாசனக் கருவிகள் அமைத்திட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.
நுண்ணீர் பாசன திட்டத்தில் நடப்பு நிதியாண்டிற்கு அரசிடமிருந்து 1,000 எக்டர் பரப்பிற்கு பதிவு செய்திட இலக்கு பெறப்பட்டு, விவசாயிகளைத் தேர்வு செய்து பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் தாமாகவே வலைத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். அல்லது, விவசாயிகள் தங்கள் பகுதியின் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் கணினி சிட்டா, அடங்கல், சிறு, குறு விவசாயி சான்று, ஆதார் அட்டை நகல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மண் மற்றும் நீர்ப் பரிசோதனை மாதிரி முடிவுகள் போன்ற ஆவணங்களைக் கொடுத்து இத்திட்டத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.
நுண்ணீர்ப் பாசன முறையில் குறைந்த அளவு நீரை கொண்டு அதிக அளவுப் பரப்பில் சாகுபடி செய்யலாம். இதனால் நீர் விரயம் குறைவதோடு பயிருக்குத் தேவையான நீர் நேரடியாகப் பயிரின் வேர்ப் பகுதிக்குச் செல்வதால் களைகளின் வளர்ச்சி மட்டுப்படுத்தப்பட்டு கூடுதல் மகசூலும் கிடைக்கும். பயறுவகைப் பயிர்களுக்குத் தெளிப்பு அல்லது மழைத்தூவான் போன்ற நுண்ணீரப் பாசனக் கருவிகளும், மக்காச்சோளம், கரும்பு, தென்னை போன்ற பயிர்களுக்குச் சொட்டுநீர்ப் பாசனக் கருவிகளும் நிறுவிடலாம்.
எனவே, இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் கூடுதல் விவரங்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி பயன்பெறலாம் என கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
- பிற்படுத்தப்பட்டோருக்கு விலையில்லா சலவை பெட்டிகள் வழங்கப்படுகிறது
- உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் சலவைத் தொழிலில் ஈடுபடும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தை சார்ந்த மக்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்திட, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் ஆண்டு தோறும் விலையில்லா சலவைப்பெட்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் சலவை பெட்டிகள் வழங்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சார்ந்த சலவை தொழிலை மேற்கொள்பவர்கள், விலையில்லா சலவைப் பெட்டி பெறுவதற்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வழங்கப்படும் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
- பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
- அக்டோபர் 31-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்
புதுக்கோட்டை:
சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது 1995- ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதாளர் முதலமைச்சர் தேர்வு செய்யப்படுகிறார். 2022-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு, பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்கலாம். தங்களது விண்ணப்பம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 31.10.2022க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
- ஊட்டசத்து மாத விழிப்புணர்வு பேரணி நடந்தது
- கலெக்டர் கவிதா ராமு தொடங்கிவைத்தார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலிருந்து தேசிய ஊட்டசத்து மாத விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கவிதா ராமு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் 'ஊட்டச்சத்து மாத விழாவிற்காக ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை தூண்டுதல்" என்ற தலைப்பில் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில் புதுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலிருந்து துவங்கிய தேசிய ஊட்டசத்து மாத விழிப்புணர்வு பேரணியானது அண்ணாசிலை, கீழராஜவீதி, பிருந்தாவனம், வடக்கு ராஜ வீதி வழியாக நகர்மன்றம் சென்று நிறைவடைந்தது. இப்பேரணியில் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட 275 நபர்கள் பங்கேற்று, ஊட்டசத்தின் அவசியம் குறித்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் புவனேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- வாக்குசாவடி மாற்றங்கள் குறித்து மனு அளிக்கலாம்
- கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படியும், தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் அறிவுரைகளின்படியும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி ஊரக பகுதிகள் மற்றும் நகரப்பகுதிகளில் 1500 வாக்காளர்களுக்கு மேலும் உள்ள வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு, புதிதாக வாக்;குசாவடிகள் அமைக்கவும், மேலும் வாக்குசாவடிகளின் பெயர் மாற்றம் மற்றும் திருத்தம் தொடர்பாகவும் நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்கள் பகுதி வாக்குசாவடி குறித்த மாற்றங்களுக்கு வரும் 14 -ந் தேதிக்குள் தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலரிடம் மனு செய்யலாம் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
- மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
- திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அந்த மாணவி செங்கல் சூளைக்கு வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் பள்ளிக்கு அடிக்கடி விடுமுறை எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டதால் குழந்தைகள் நலக்குழுவினர் அவருடைய வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதில் விராலிமலையை சேர்ந்த கூலி தொழிலாளி கண்ணன் (வயது 30) என்பவர் அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளது தெரியவந்தது. மேலும் அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்தி சென்று செங்கல் சூளைக்கு அருகே உள்ள கொட்டகையில் வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் கண்ணனை கடந்த 2021-ம் ஆண்டு போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா நேற்று அதிரடி தீர்ப்பு கூறினார்.
இதில் மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக கண்ணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், மாணவியை கடத்திய குற்றத்திற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு சார்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார்.
- முதியவர் உடலை மயானத்திற்கு எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர்
- போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வீரமங்களம் கிராமத்தில் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதே போன்று வீரமங்களம்காமராஜர் நகரில் 70க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
காமராஜர் நகரை சேர்ந்தவர்கள் இறந்தவர்களின் உடலை வழக்கமாக மாற்று ஊராட்சியான, பொன்னாலூர் வயல்காடு பகுதியில் தூக்கிச் செல்வார்கள். தற்போது பெய்ததால், அவ்வழியாக ரதவாகனம் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் காமராஜர் நகரை சேர்ந்த கந்தையா (வயது71) என்பவர் நேற்று இரவு இயற்கை மரணம் அடைந்தார். அதனையடுத்து அவரது உடலை காமராஜர் நகரிலிருந்து பெரியவீரமங்களம் வழியாக எடுத்துச் செல்ல அப்பகுதி மக்கள் ஆயத்தமாகியுள்ளனர். அதற்கு வீரமங்களம் பகுதிமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்ப்பை தொடர்ந்து ஆத்திரமடைந்த உறவினர்கள் உடலை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தினை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கோட்டாட்சியர் சொர்ணராஜ், காவல் துணை கண்காணிப்பாளர் தினேஷ்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு தரப்பினருக்கும் சமரசம் ஏற்பட்டதையடுத்து இறந்தவரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் வீரமங்களம் வழியாக எடுத்துச் சென்று அடக்கம் செய்யப்பட்டது. மேலும் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- 11 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
- தமிழக அரசு சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்படும்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:
எண்ணை ஆதிதிராவிடர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோவன், காவேரி நகர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வின்சென்ட், தாஞ்சூர் அரசு மேல்நிலை பள்ளியின் முதுகலை ஆசிரியர் ராஜகோபால், சூரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் புகாரி, ஆவணத்தாங்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பாஸ்கரன், மணமேல்குடி ஒன்றியம் மேலஸ்தானம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வாசுகி, அரிமளம் ஒன்றியம் பூனையன் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சாத்தப்பன், மேற்பனைக்காடு கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் சதீஷ்குமார், அன்னசத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பவானி, வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நடன ஆசிரியர் குமார், ஓரியண்டல் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முத்துராமலிங்கம் ஆகிய 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
- தண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
- ஆவணி மாத சஷ்டியையொட்டி நடந்தது
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மேல ராஜ வீதியிலுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆவணிமாத சஷ்டியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி தண்டாயுதபாணி சுவாமிக்கும், விநாயகருக்கும் பாலாபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலையில் தண்டாயுதபாணி சுவாமி சந்தனக்காப்பு மலர் அலங்காரத்திலும், விநாயகர் வெள்ளிக்கவச அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3.73 கோடியில் கட்டுமானப் பணிகளுக்கு பூமிபூஜையை அமைச்சர் தொடங்கிவைத்தார்.
- கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் முன்வடிவமைக்கப்பட்ட பணிமனைக் கட்டடம் கட்டுமானப் பணிகளுக்கு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சி கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசும்போது, தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய மாணவ, மாணவிகள் அனைவரும் உயர்ந்த தரத்தில் உயர் கல்வி கற்க வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், ஆய்வகங்கள், வகுப்பறைகள், விடுதிகள், கழிவறைகள் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் முன்வடிவமைக்கப்பட்ட பணிமனைக் கட்டடம் கட்டுமானப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வளாகமானது 10,520 ச.அடி பரப்பளவில் பணியாளர் அறை, வீடியோ செயற்கைகோள்; வகுப்பறை, இணையதள வகுப்பறைகள், செயல்முறை மதிப்பு பகுப்பாய்வு வகுப்பறைகள், பவர் டெவலப்மென்ட் வகுப்பறைகள், இயந்திர பகுதி மற்றும் ஆண், பெண் கழிவறைகள் இக்கட்டடத்தில் அமையப்பெற உள்ளது.
இவை அனைத்தும் உயர்ந்த தரத்தில் உரிய காலத்திற்குள் கட்டிமுடிக்கப்பட்டு மாணவ, மாணவியர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
- பள்ளிக்கு சென்றுவரும் மகளின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை கண்டு பெற்றோர் சந்தேகம் அடைந்தனர்.
- தங்களது உறவினர்கள் மூலம் அவரை கண்காணித்தபோது, மகள் காதல் வலையில் சிக்கி இருப்பதை அறிந்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள காடை இடையாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் என்பவரது மகன் அருண் (வயது 23). பள்ளி படிப்பை முடித்துவிட்டு கட்டிட கான்கிரீட் வேலை பார்த்து வந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவியும், அருணும், கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். அடிக்கடி பள்ளிக்கு செல்லாமல் காதலனுடன் ஊர் சுற்றியும் வந்துள்ளார்.
பள்ளிக்கு சென்றுவரும் மகளின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை கண்டு அவரது பெற்றோர் சந்தேகம் அடைந்தனர். அத்துடன் தங்களது உறவினர்கள் மூலம் அவரை கண்காணித்தபோது, மகள் காதல் வலையில் சிக்கி இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
முதலில் மகளிடம் பெற்றோர் படிப்பு தான் நமக்கு முக்கியம், காதல் எல்லாம் வேண்டாம் என்று பக்குவமாக எடுத்துக்கூறினர். ஆனால் அதனை மாணவி கண்டுகொள்ளவில்லை. வழக்கம்போல் தனக்கான பாதையில் சென்றார். கடந்த 1-ந்தேதி மகளை அவரது பெற்றோர் கடுமையாக கண்டித்தனர்.
இந்த நிலையில் நேற்று ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறி வெளியே சென்ற மாணவி இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பல்வேறு இடங்களில் தேடினர்.
இதற்கிடையே அங்கு இருள்சூழ்ந்த பகுதியில் கோவில் அருகே உள்ள புளியமரத்தில் அருண், மாணவி இருவரும் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தனர். இதைப் பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் நாகுடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தற்கொலை செய்துகொண்ட காதல் ஜோடியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம்காதல் ஜோடி தற்கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- புதுக்கோட்டை நகர போலீஸ் நிலையம் அருகே நான்கு சாலை பிரிவில் சென்றபோது, புதிய பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூரை நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக வாலிபர்கள் மீது மோதியது.
- தூக்கி வீசப்பட்ட வாலிபர்கள் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை வடக்கு 3-ம் வீதியை சேர்ந்தவர் ரமேஷ் மகன் சீனிவாசன் என்கின்ற ஐயப்பன் (வயது 29). மேல 4-ம் வீதியை சேர்ந்தவர் முருகேசன் மகன் முத்துகருப்பன் என்கின்ற ராஜா (27). இருவரும் கூலி வேலை பார்த்து வந்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் நேற்று புதுக்கோட்டை திலகர் திடல் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. தொடர்ந்து அந்த சிலைகள் புதுக்குளத்தில் கரைக்கப்பட்டன.
இந்த சிலைகள் கரைப்பதை வேடிக்கை பார்ப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று ஏராளமானோர் திரண்டனர். சிலை கரைப்பு முடிந்ததும் இவர்கள் இருவரும் நள்ளிரவில் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
புதுக்கோட்டை நகர போலீஸ் நிலையம் அருகே நான்கு சாலை பிரிவில் சென்றபோது, புதிய பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூரை நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக இவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த நகர காவல் துறையினர் விரைந்து சென்று பலியானவர்களின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், புதிய பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கி செல்லும் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் வழக்கமான வழியில் செல்லாமல் தவறான வழித்தடமான நகர காவல் நிலையம் வழியாக செல்வதால் இதுபோன்ற விபத்துக்கள் அதிகளவில் அடிக்கடி நடைபெறுகிறது.
எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய பாதையில் செல்லாமல் தவறான மாற்றுபாதையில் பேருந்தை இயக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசமாக கூறினர்.






