என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகளுக்கு அழைப்பு"

    • குறைந்த நீரில் அதிக மகசூல் பெற விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
    • மானியமும் வழங்கப்படுகிறது.

    புதுக்கோட்டை:

    பிரதம மந்திரியின் நுண்ணீர்ப் பாசனத் திட்டம் 'ஒரு துளி நீரில் அதிகப் பயிர்" என்ற குறிக்கோளுடன் செயல்படுத்தப்படுகிறது. பிரதம மந்திரியின் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில் நுண்ணீர்ப் பாசனக் கருவிகள் அமைத்திட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

    நுண்ணீர் பாசன திட்டத்தில் நடப்பு நிதியாண்டிற்கு அரசிடமிருந்து 1,000 எக்டர் பரப்பிற்கு பதிவு செய்திட இலக்கு பெறப்பட்டு, விவசாயிகளைத் தேர்வு செய்து பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் தாமாகவே வலைத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். அல்லது, விவசாயிகள் தங்கள் பகுதியின் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் கணினி சிட்டா, அடங்கல், சிறு, குறு விவசாயி சான்று, ஆதார் அட்டை நகல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மண் மற்றும் நீர்ப் பரிசோதனை மாதிரி முடிவுகள் போன்ற ஆவணங்களைக் கொடுத்து இத்திட்டத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

    நுண்ணீர்ப் பாசன முறையில் குறைந்த அளவு நீரை கொண்டு அதிக அளவுப் பரப்பில் சாகுபடி செய்யலாம். இதனால் நீர் விரயம் குறைவதோடு பயிருக்குத் தேவையான நீர் நேரடியாகப் பயிரின் வேர்ப் பகுதிக்குச் செல்வதால் களைகளின் வளர்ச்சி மட்டுப்படுத்தப்பட்டு கூடுதல் மகசூலும் கிடைக்கும். பயறுவகைப் பயிர்களுக்குத் தெளிப்பு அல்லது மழைத்தூவான் போன்ற நுண்ணீரப் பாசனக் கருவிகளும், மக்காச்சோளம், கரும்பு, தென்னை போன்ற பயிர்களுக்குச் சொட்டுநீர்ப் பாசனக் கருவிகளும் நிறுவிடலாம்.

    எனவே, இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் கூடுதல் விவரங்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி பயன்பெறலாம் என கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

    ×