என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துணி பை வழங்கப்பட்டது
    • பேரிடர் மேலாண்மை முகமை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை சார்பில் கந்தர்வ–கோட்டை வார சந்தையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இடி, மின்னல், புயல் மற்றும் சூறாவளி காலங்களில் பொதுமக்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்றும், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை–கள் குறித்தும் விழிப்பு–ணர்வு வாசகங்கள் அடங்கிய துணிப்பை கந்தர்வகோட்டை வார சந்தையில் பொதுமக்களுக்கு விலை இல்லாமல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கந்தர்வ–கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஒன்றிய துணை தலைவர் செந்தா–மரை குமார், வருவாய் துறை அதிகாரிகள் சேகர், முரளி, உதவியாளர் செந்தில், வார்டு உறுப்பினர் மூக்கையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துணிப்பை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.


    • மாவட்ட நீதிபதி அப்துல்காதார் ஆய்வு செய்தார்
    • பொன்னமராவதியில் நீதிமன்றம் அமைய உள்ள இடம் ஆய்வு ெசய்யப்பட்டது

    புதுக்கோட்டை:

    பொன்னமரவாதியில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, சட்ட அமைச்சர் ரகுபதி பொன்னமராவதி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தொடங்கப்படும் என அறிவித்தார். இதனையடுத்து பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகம் எதிரில் உள்ள இடத்தை புதுக்கோட்டை மாவட்ட நீதிபதி அப்துல்காதார் ஆய்வு செய்தார். இதில் இலுப்பூர் ஆர்.டீ.ஓ குழந்தைசாமி, தாசில்தார் பிரகாஷ், பேரூராட்சி செயல்அலுவலர் கணேசன் மற்றும் நீதிமன்றம், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை. பேரூராட்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


    • பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது
    • மின் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது

    புதுக்கோட்டை:

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின் சேமிப்பு வார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விழாவில் மின் சேமிப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் அறந்தாங்கியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. செயற்பொறியாளர் பகிர்மானம் அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணியானது கட்டுமாவடி முக்கம், பெரியகடைவீதி, வீரமாகாளியம்மன் கோவில் வழியாக பேருந்து நிலையத்தை அடைந்தது. மின்சாரத்தை எவ்வாறு அளவோடு பயன்படுத்துவது, நட்சத்திர குறியீடு கொண்ட மின் உபகரணங்களை பயன்படுத்துவதன் மூலம் எவ்வாறு மின் சிக்கனம் செய்வது குறித்த விழிப்புணர்வு பேரணி வாயிலாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது. பேரணியில் செயற்பொறியாளர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர்கள் சுப்பிரமணியன், லூதூர்சகாயராஜ், பழனிவேல், தனபால் உள்ளிட்ட அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


    • வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது விபரீதம்
    • தண்ணீரில் மூழ்கி குழந்தை உயிரிழந்தார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருநாளூர் தெற்கு பகுதியை சேர்ந்த தம்பதியர் மகாவிஷ்ணு, காளியம்மாள். இவர்களுக்கு சாகீப்தியா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சாகீப்தியா அருகில் தண்ணீர் நிரப்பப்பட்ட அன்ன கூடையில் தலைக்குப்புற விழுந்துள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். வீட்டில் விளையாடிய குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




    • டாக்டர் உட்பட 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
    • பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக உறவினர்கள் போராட்டம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசர்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜோதிமீனா (வயது26) நிறை மாதகர்பிணியான இவர் கடந்த 13ம் தேதி அறந்தாங்கி அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் சிறிது நேரத்தில் ஜோதிமீனா உயிரிழந்துள்ளார்.அதே போன்று கூத்தாடிவயல் பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி (26)என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுகபிரசவத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் ராஜலட்சுமிக்கு உதிரப்போக்கு அதிகமாக காணப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பணியில் இருந்த மருத்துவர்கள் இரத்தப்போக்கை நிறுத்துவதற்காக கர்ப்பப்பையை நீக்கியுள்ளனர். ரத்தபோக்கு நிக்காததால், மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தவறான சிகிச்சை அளித்ததாக கூறி ராஜலட்சுமி மற்றும் உயிரிழந்த ஜோதிமீனா உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோஷங்களை எழுப்பினர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சுகாதாரத்துறை இணை இயக்குநர் ராமு, அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி சம்பவத்தின்போது பணியிலிருந்த மருத்துவர் சாரதா, செவிலியர் பரமேஸ்வரி, உதவியாளர் முத்துலெட்சுமி ஆகிய 3 பேரை பணியிடை மாற்றம் செய்ய உத்தரவிட்டார். மேலும் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மேலிடத்திற்கு பரிந்துரை செய்யப்படும் என உறுதியளித்தார். அதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் போராட்டத்தால் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


    • சமதள பகுதியில் மிளகு சாகுபடியில் சாதனை
    • ஆலங்குடி விவசாயியை நீதிபதிகள் பாராட்டினர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செந்தமிழ்செல்வன். இவர், குளிர்ச்சியான பகுதிகளில் மட்டுமே சாத்தியமாக இருந்து வந்த மிளகு பயிர்களை, சமதளப் பகுதியான சேந்தன்குடியில் பயிரிட்டு, அறுவடை செய்து விற்பனை செய்து வருகிறார். 4 ஏக்கரில் அமைந்துள்ள இந்த தோட்டத்தை அரசின் பல்வேறு துறை அலுவலர்கள், வேளாண் பல்கலைக்கழகத்தினர், ஜப்பான் பன்னாட்டு சூழலியல் ஆய்வு மையத்தின் ஆராய்சியாளர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டு, செந்தமிழ் செல்வத்தை பாராட்டி சென்றுள்ளனர். இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சந்தரேஷ், உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பாரதிதாசன் உள்ளிட்டோர் சேந்தன் குடிக்கு வந்து மிளகு தோட்டத்தை பார்வையிட்டனர்.பராமரிப்பு மற்றும் மிளகு விற்பனை குறித்து விவசாயி செந்தமிழ் செல்வத்துடன் கலந்துரையாடினர். அப்போது, விவசாயத்தில் முன் மாதிரி முயற்சியில் ஈடுபட்டு சாதித்துள்ளதாக விவசாயி செந்தமிழ் செல்வத்தை நீதிபதிகள் பாராட்டினர். மேலும், செந்தமிழ்செல்வனின் தோட்டத்தில் விளைந்த மிளகை ருசித்துப் பார்த்த நீதிபதிகள் கடுமையான காரமாக இருப்பதாகவும், தாங்கள் இதுவரை சமதளப் பகுதிகளில் மிளகு சாகுபடி சாத்தியமில்லை என்றே அறிந்திருக்கிறோம். நேரில் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது என்று தெரிவித்தனர். பின்னர், செந்தமிழ்செல்வனின் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நீதிபதிகளுக்கு, விவசாயியின் குடும்பத்தினர் கருமிளகு மற்றும் வெள்ளை மிளகுகளை பரிசாக வழங்கினர்.


    • வாகன விபத்தில் முதியவர் பலியானார்
    • இரு சக்கர வாகனத்தில் வந்த போது சம்பவம்

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளம் சிட்டகாடு பகுதியை சேர்ந்தவர் நடேசன் (வயது 70). புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், இரு சக்கர வாகனத்தில் திருவரங்குளம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டையை நோக்கி சென்ற டிப்பர் லாரி இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நடேசன் பலத்த காயங்களுடன் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் உஷா நந்தினி (பொ) மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் நதியா ஆகியோர் சென்று உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரி சோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • மணல் கடத்தலை தடுக்க முயன்ற போது நடந்தது
    • போலீஸ்காரர்களை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் உள்ள அக்கினி ஆற்றில் மணல் கடத்துவதாக கறம்பக்குடி போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளது.புகார்களின்படி இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நரங்கிய பட்டு பாலாஆடி காத்தான் கோவில் அருகே மணல் கடத்தி வந்த சரக்கு வேனை தடுக்க முயன்றனர். அப்போது மணல் கடத்தி வந்த வேனுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த கடத்தல் காரர்கள் தடுக்க முயன்ற போலீஸ்காரர் ராஜேஷ், வீரபாண்டி ஆகியோரை தாக்கி விட்டு மணல் வண்டியை தப்ப முயற்சித்தனர்.இருப்பினும் போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர். மீண்டும் மணல் கடத்தும் கும்பல் போலீசாரை தாக்கி தப்பி ஓட முயற்சித்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் உதவியுடன் விக்கி என்பவரை (வயது 28) மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் மணல் கடத்தும் கும்பலைச் சேர்ந்த தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா நெய்வேலி வடவாதி ஆவனாண்டி அறிவழகன், அகிலன், கவினேசன், ரமேஷ், கருப்பையா, செல்வராஜ் ஆகிய நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் மணல் கடத்தும் கும்பலை தடுக்க முயன்ற போலீசாரை தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


    • 25 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன
    • காவல் நிலையத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது


    புதுக்கோட்டை:


    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே அறிவுறுத்தலின் பேரில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. காவல் ஆய்வாளர் உஷா நந்தினி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மா, பலா, கொய்யா, சந்தனம் மற்றும் 25 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன. ஒவ்வொரு மரக்கன்றுகளுக்கும் கூண்டுகள் அமைத்து தண்ணீர் ஊற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அனைத்து போலீசார் உட்பட அருகில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


    • மாடு உதைத்து வாலிபர் பலியானார்
    • பால் கறக்கும்போது நடந்த சம்பவம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சத்திரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வமணி (வயது38).கூலித் தொழிலாளியான இவர், தான் வளர்க்கும் மாட்டில் பால் கறக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மாடு உதைந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த செல்வமணியை உறவினர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் செல்வமணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பால் எடுக்கச் சென்று மாடு உதைத்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


    • ஒரு கட்டத்தில் எல்லை மீறி போன பேராசிரியரின் ஆபாச பேச்சு மாணவியை அதிர்ச்சி அடையச் செய்தது.
    • புதுக்கோட்டையில் கல்லூரி மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் அதே பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே கல்லூரியில் மற்றொரு துறையில் பயின்று வரும் மாணவர் ஒருவரை காதலித்து வருகிறார். இதற்கிடையே அந்த கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் பேராசிரியர் ஒருவர் பி.பி.ஏ. மாணவியின் செல்போன் எண்ணை அறிந்துகொண்டு அடிக்கடி தொடர்பு கொண்டு வந்துள்ளார்.

    ஒரு கட்டத்தில் எல்லை மீறி போன அவரது ஆபாச பேச்சு மாணவியை அதிர்ச்சி அடையச் செய்தது. போனில் பேசிய அவர் மாணவியை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். முதலில் தனது எதிர்காலம் குறித்து கவலை அடைந்த மாணவி, அந்த பேராசிரியரிடம் இதுபோல் என்னிடம் பேசாதீர்கள் என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

    ஆனாலும் அவர் தன்னை திருத்திக்கொள்ளவில்லை. நாளுக்கு நாள் பேராசிரியரின் செல்போன் பேச்சால் கடும் விரக்தியடைந்த மாணவி, நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.

    இதைக்கேட்டு ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேராக கல்லூரிக்கு சென்றனர். அவர்கள் வருவதை அறிந்த அவர் அங்கிருந்து வெளியேறி விட்டார். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிளை மாணவியின் உறவினர்கள் அடித்து நொறுக்கினர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த கல்லூரி நிர்வாகத்தினர் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் புகாருக்குள்ளான பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

    இருந்தபோதிலும் பிரச்சினையின் தீவிரம் அறிந்த இந்திய மாணவர் சங்கத்தினர் புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசில் புகார் அளித்தனர். அப்போது இதுபோன்ற பல மாணவிகளிடம் அந்த பேராசிரியர் அத்துமீறியும், அநாகரீகமாகவும் பேசியதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அந்த புகாரில் தெரிவித்து இருந்தனர்.

    அதன்பேரில் போலீசார் முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும், பேராசிரியர்கள் அடங்கிய குழுவினரும் இதுதொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க தயாராகி வருகிறார்கள்.

    இதற்கிடையே மாணவியிடம் பேராசிரியர் ஆபாசமாக பேசியதை உறுதி செய்யும் வகையில் பாதிக்கப்பட்ட அந்த மாணவி, தனது தோழியிடம் பேசிய ஆடியோ ஒன்று வரைலாகி வருகிறது. அதில் எல்லோருக்கும் உடலுறவில் ஆசை இருக்கும், எனக்கும் அந்த ஆசை இருக்கிறது. நீ என்னை எவ்வளவு வேண்டுமானாலும் யூஸ் பண்ணிக்கோ..., ஆனால் என்னை விட அவன்கிட்ட (காதலன் பெயரை சொல்கிறார்) என்ன இருக்கு? அவன் காசு தாரேன்று சொன்னானா, அவன் வயித்துல புள்ளைய கொடுத்திட்டு ஏமாத்திருவான். நான் உனக்கு எல்லாமே பண்ணுவேன்னு சொல்ராறு என்கிறார்.

    மேலும் அந்த பேராசிரியர் கேவலமா பாக்கிறாறு, கேவலமாக பேசுறாறு, கழுத்துக்கு கீழதான் பார்த்து பேசினார் என்று அந்த ஆடியோவில் அவர் தெரிவிக்கிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படிக்கும் மாணவியை அங்கு பணியாற்றும் ஆசிரியர் சதீஷ் என்பவர் தன்னுடைய வீட்டுக்கு வருமாறு மிரட்டிய ஆடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் அந்த ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

    அந்த பரபரப்பு அடங்குவதற்குள் புதுக்கோட்டையில் கல்லூரி மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியை சேர்ந்தவர் மங்கலம் (வயது 59). இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் தைலமரக்காட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் ெகாடுத்தனர். இது தொடர்பாக கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மங்கலம் வயிற்று வலியின் காரணமாக தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

    ×