என் மலர்
புதுக்கோட்டை
- விபத்து இன்றி பேருந்துகள் இயக்கிய டிரைவர்களுக்கு பாராட்டு தெரிவித்து கேடயம் வழங்கப்பட்டது
- 20 ஓட்டுனர்களுக்கு கலெக்டர் கவிதா ராமு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. விழாவில் புதுக்கோட்டை மண்டலத்தில், விபத்துகள் இன்றி பேருந்துகளை இயக்கிய 20 ஓட்டுனர்களை பாராட்டி மாவட்ட கலெக்டர் கவிதா ராமு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார். இவ்விழாவில் வட்டார போக்குவரத்து அலுவலர் ப.ஜெய்சங்கர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சசிகுமார், நல்லதம்பி, சு.நடராஜன், போலீஸ் டிஎஸ்பி முருகராஜ், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டல பொது மேலாளர் குணசேகரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கரும்பு தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது
- தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கரும்பு தோட்டத்தில் பரவிய தீயை போராடி அணைத்தனர்.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் மட்டங்கால் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவருக்கு சொந்தமான கரும்புத் தோட்டத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து அருகில் இருந்த இந்துமதி என்பவருக்கு சொந்தமான தோட்டத்திலும் தீ பரவியது. இதையடுத்து கந்தர்வகோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கரும்பு தோட்டத்தில் பரவிய தீயை போராடி அணைத்தனர். இதனால் பல லட்சம் மதிப்பிலான கரும்புகள் எரிந்து நாசமாவது தடுக்கப்பட்டது.
- ஆலங்குடியில் தவறி விழுந்த வாலிபர் பலியானார்
- இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே உள்ள கூழையன்காட்டைச் சேர்ந்த மனோகரன் மகன் சரவணன் ( வயது 40 ). டிரைவராக உள்ளார். இவருக்கு 6-வயது மற்றும் 1-வயது என இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் வீட்டின் அருகில் கால் தடுமாறி கீழே விழுந்ததில் முதுகில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்க்கப்பட்டார். அதன் பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்காக மருத்துவ கல்லூரி பிணவறையில் அவரது உடல் வைக்கப்பட்டது. இது குறித்து அவரது மனைவி வெள்ளையம்மாள் (வயது 35) கொடுத்த புகாரின் பேரில், ஆலங்குடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்.
- மோசடி முயற்சியில் ஈடுபட்டவர்களிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்
- இதனால் மளிகை கடைக்காரரின் ரூ.6 ஆயிரத்து 300 தப்பியது
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் மேற்கு பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் ஒருவருக்கு, இந்தியா கம்யூனிகேசன் ஆன்லைன் மார்க்கெட்டிங் டெல்லி என்ற பெயரில் ஒரு கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தை வாங்கி பிரித்து பார்த்த போது அதில் மத்திய அரசின் முத்திரை (எம்பளம்) பதிக்கப்பட்ட கடிதம் இருந்துள்ளது. அந்த கடிதத்துடன்இணை க்கப்பட்ட கூப்பனை சுரண்டினால் பரிசு உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. கூப்பனை சுரண்டி பார்த்த போது அதில் ரூ.2 லட்சத்து 75 ஆ யிரம் பரிசு கிடைத்திருப்பதாக காட்டியுள்ளது.
ஆனால் இந்த தொகையை பெற மத்திய-மாநில அரசுகளுக்கு செலுத்த வேண்டிய வரி ரூ.6 ஆயிரத்து 300-ஐ செலுத்தினால் உடன் பரிசு தொகை அனுப்பி வைக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கஸ்டமர் கேர் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டாலும் உடனே வரி பணத்தை கட்டினால் பரிசு தொகை கிடைக்கும். தாமதம் செய்தால் பரிசு கிடைக்காமல் போகும் என்றும் கூறியுள்ளனர். இதனால் கடைக்காரர் பணத்தை அனுப்ப தயாரானார். இதனை கேள்வியுற்று அவரிடம் வந்த சிலர், இது ஒரு வகையான மோசடி ஏமாற வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.
அதன் பின்னர் கஸ்டமர் கேரில் தொடர்பு கொண்ட மளிகை கடைக்காரர் பணத்தை பெற்றுக்கொண்ட உடன் வரியை செலுத்துவதாக தெரிவித்துள்ளார். இதை கேட்ட உடன் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. அதன் பின்னர் தொடர்பு கொள்ள இயலவில்லை. அப்போது தான் இது மோசடி வேலை என்று கடைக்காரர் உறுதியாக தெரிந்து கொண்டார். இதனால் மளிகை கடைக்காரரின் ரூ.6 ஆயிரத்து 300 தப்பியது.
நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகை யில், தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்கும் போது அதனை பயன் படுத்தி மோசடிகளும் அதிகரித்துள்ளது.தற்போது மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தையும் மத்திய அரசு முத்திரையை மோசடிக்காக பயன்படுத்தி மக்களை நம்ப வைத்து பணம் மோசடி செய்து வருகின்றனர். இது போன்ற மோசடி கும்பலை போலீசார் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
- அறந்தாங்கி அருகே நண்பர்களுடன் கடலில் குளித்த மாணவன் பிணமாக மீட்கபட்டான்
- தஸ்லீம் நீரோட்ட பகுதியில் சிக்கி கடலின் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த பைசல்கான் (வயது19), இவரது நண்பர்களான ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முசாமைதீன், காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் தஸ்லீம் (17), ஹரிஸ் (17), இவர்கள் 4 பேரும் காரைக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். தஸ்லீம் உட்பட 3 பேரும் பொங்கல் பண்டியையை கொண்டாடவும், கடற்கரை பகுதியை சுற்றி பார்க்க கோட்டைப்பட்டினம் பகுதியில் உள்ள தனது நண்பரான முகமதுபைசல்கான் வீட்டிற்கு 15-ந் தேதி வந்துள்ளனர்.
இந்நிலையில் கோட்டைப்பட்டினத்தில் உள்ள பைசல்கான் வீட்டில் ஒன்று சேர்ந்த நண்பர்கள் 4 பேரும், அருகே உள்ள மணமேல்குடி கோடியக்கரை கடல் பகுதிக்கு குளிக்க சென்றுள்ளனர். அங்கு நீரோட்டம் நிறைந்த பகுதி என்று அறியாத அவர்கள் தொடர்ந்து கடலின் உள்பகுதியில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது தஸ்லீம் நீரோட்ட பகுதியில் சிக்கி கடலின் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அதனை பார்த்து பதறிய நண்பர்கள் காப்பாற்ற சொல்லி கதறியுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், கடலோர பாதுகாப்பு போலீசார் மற்றும் மீனவர்கள் இணைந்து படகின் மூலம் கடலில் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட தேடுதலுக்கு தஸ்லீம் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து மணமேல்குடி காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி நண்பர் வீட்டிற்கு சென்ற பள்ளி மாணவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கறம்பக்குடி பேரூராட்சியில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது
- அரசு அலுவலகங்கள் மற்றும் சுகாதார நிலையத்தில் மின் தடை ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்
கறம்பக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி பத்தாவது வார்டு உள்ளடக்கிய பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்தப் பகுதியில் தான் அரசு மருத்துவமனை காவல் நிலையம், துவக்கப்பள்ளி, 300க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் மசூதி ஆகியவை உள்ளன. இங்கு அரசு அலுவலகங்கள் மற்றும் சுகாதார நிலையத்தில் மின் தடை ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதனை கருத்தில் கொண்டு பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மின்சார வாரியம் போர்க்கால அடிப்படையில் புதிய மின்மாற்றியை அமைத்தனர். நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவரும் நகர தி.மு.க. செயலாளருமான முருகேசன் தலைமை தாங்கினார். இதில் ஆத்மா கமிட்டி சேர்மன் முத்துகிருஷ்ணன், பத்தாவது வார்டு கவுன்சிலர் மஞ்சுளா தேவி, உதவி மின் பொறியாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மேலும் பேரூராட்சி துணைத் தலைவர், கவுன்சிலர்கள் மற்றும் மின்சார வாரிய ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பொன்னமராவதி அருகே பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
- போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொன்னமராவதி:
பொன்னமராவதி அருகே உள்ள ஒளியமங்கலம் ஊராட்சி வெள்ளாளபட்டியைச் சேர்ந்த முத்து கோயம்புத்தூரில் ஹோட்டலில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராசாத்தி மற்றும் குழந்தைகளுடன் வெள்ளாளப்பட்டியில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது மகள் கோகிலா (வயது16) அருகில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று அவரது தாயார் மாடு மேய்க்க சென்று வீடு திரும்பியுள்ளார்.
வீட்டில் சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த கோகிலாவை பார்த்து ராசாத்தி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் காரையூர் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்ததில் தூக்கிலிட்டு இறந்த கோகிலாவின் உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து பள்ளி மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பொன்னமராவதி அருகே கபாடி போட்டி நடைபெற்றது
- 400 வீரர்கள் கலந்து கொண்டு 5 சுற்றுகளாக லீக் மற்றும் நாக்அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன
பொன்னமராவதி:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஒலியமங்கலம் ஊராட்சி காயம்பட்டி கிராமத்தில் ஊர்பொதுமக்கள், ஸ்டார் கபாடி குழு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக 22-ம் ஆண்டு கபாடி போட்டி நடைபெற்றது. இதில் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 40 அணிகளில் பங்கேற்ற போட்டியில் 400 வீரர்கள் கலந்து கொண்டு 5 சுற்றுகளாக லீக் மற்றும் நாக்அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு வெற்றி கோப்பை மறறும் ரொக்க பரிசுகள் விழா கமிட்டியார்கள் வழங்கினர். சிறந்த ஆட்டக்காரர்களுக்கு பரிசுகள் மற்றும் மெடல் வழங்கப்பட்டது.
- ஆலங்குடி அருகே புனித வனத்து அந்தோணியார் கோவிலில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது
- பொங்கல் உணவு பீடத்திற்கு கொண்டு வந்து மந்தரித்தபின் பரிமாறப்பட்டது.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கே.ராசியமங்கலம் புனித வனத்து அந்தோனியார் ஆலயத்தில் பொங்கல் வைத்து பங்கு குருக்களால் திருப்பலி பூஜை நிறைவேற்றட்பட்டது. தமிழகத்தில் கொண்டாடும் அந்தோணியார் பொங்கல் ஜனவரி மாதம் 17ஆம் தேதி தமிழ் மாதமாகிய தை மூன்றாம் நாள் கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினத்தில் ஆடு, மாடு, கோழி என தோட்டத்தில் பயன்படும் கருவிகளான கத்தி, அரிவாள், மண்வெட்டி, களைக்கொத்து, மாட்டு வண்டி என அனைத்தையும் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மந்திரிக்கப்பட்டன.கிறிஸ்தவ பொதுமக்கள் சேர்ந்து 350 பொங்கல் பானைகள் கொன்டு அருள் தந்தையர்கள் முன்னிலையில் மந்திரித்து வனத்து அந்தோனியார் கோவில் வாசலில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
பின்னர் பீடத்திற்கு கொண்டு வந்து மந்தரித்தபின் பொங்கல் உணவு பரிமாறப்பட்டது. ஆலய சுவர்களிலும் வளாகத்திலும் கரும்பு தென்னை ஓலைகளால், அலங்காரங்கள் செய்து பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். அதுபோல் ஆலங்குடி அதிசிய அன்னை ஆலயத்தில் நடைபெற்ற பொங்கல் விழா பங்கு குரு ஆர்கே அடிகளார் தலைமையில் மற்றும் பங்கு குரு கித்தேரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது.
- ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பும்போது விபத்து ஏற்பட்டுள்ளது.
- லாரியில் காளைகளை ஏற்றி கொண்டு திரும்பியபோது, எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே அரசு பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில், லாரியில் ஏற்றி வந்த 2 ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் 2 பேர் உயிரிந்துள்ளனர்.
புதுக்கோட்டை வன்னியம் விடுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பும்போது விபத்து ஏற்பட்டுள்ளது.
லாரியில் காளைகளை ஏற்றி கொண்டு திரும்பியபோது, எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
- திருமயம் அருகே கே.ராயபுரம் கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
- சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் களத்தில் அவிழ்த்து விடப்பட்டன.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டுதோறும் அதிக அளவில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகள் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று திருமயம் அருகே கே.ராயபுரம் கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் களத்தில் அவிழ்த்து விடப்பட்டன. இதனை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.
இதற்கிடையே காளையை அடக்க முயன்றபோது புதுவயல் கிராமத்தை சேர்ந்த கணேசன் (வயது 50) என்பரை சீறிப்பாய்ந்து வந்த காளை முட்டி தூக்கியது. இதில் அவர் குடல் சரிந்தது. உடனடியாக மீட்பு குழுவினர் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- மாடுகளை அலங்கரித்து சிறப்பு பூஜை
- கிராமப்புறங்களில் ஒரே இடத்தில் பொங்கல் வைத்து வழிபாடு
புதுக்கோட்டை
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் பலர் வீடுகளில் பொங்கல் வைத்து பாரம்பரிய முறையில் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. மேலும் பல்வேறு அமைப்பினர் பாரம்பரிய விளையாட்டுகள், கலைகளுடன் பொங்கல் விழாவை கொண்டாடினர். தொடா்ந்து நேற்று மாட்டுப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடுகளில் பசு மாடுகள், காளைகள் வளர்ப்பவர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி கொண்டாடினர். மாடுகள், காளைகளை குளிப்பாட்டி அதற்கு மாலை அணிவித்து, சந்தனம், குங்குமம் மிட்டு அலங்கரித்து பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனர். மேலும் பொங்கலை மாடுகள், காளைகளுக்கு கொடுத்தனர். கிராமப்புறங்களில் ஒரே இடத்தில் மொத்தமாக சேர்ந்து பொங்கல் வைத்து கிராமத்து தெய்வங்களை வழிபட்டனர். மேலும் பசுமாடுகள், காளைகளை அலங்கரித்து வரவழைத்து அதனை பூஜைக்கு பின் அவிழ்த்து விட்ட நிகழ்வு நடைபெற்றது.






