என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • கறம்பக்குடி சாலை ஓரத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டி பிணம் கிடந்தது
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பெரிய ஆறு பகுதியில் கறம்பக்குடியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில், சாலை ஓரத்தில் அடையாளம் தெரியாத வாகனத்தில் மோதி, அடையாளம் தெரியாத 70 வயதான மூதாட்டி இறந்து கிடந்தார். தகவல் அறிந்த கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி, புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து அவர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


    • முதற்கட்டமாக சம்மன் அனுப்பி வராத 8 பேருக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்பவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    • வேங்கைவயல் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக முதலில் உள்ளூர் போலீசார் விசாரித்த நிலையில் பின்னர் அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டது.

    123-வது நாளாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை 153 சாட்சிகளை விசாரித்துள்ளனர். அதில் 7 போலீசாரும் அடங்குவர்.

    நேரடி சாட்சிகள் இந்த வழக்கில் இல்லாத நிலையில் அறிவியல் பூர்வமான சோதனையில் இறங்கிய போலீசார் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் 119 பேருக்கு ரத்த மாதிரி எடுத்து அதனைக்கொண்டு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி வேங்கைவயல், முத்துக்குடிக்காடு பகுதியைச் சேர்ந்த 11 பேருக்கு ரத்த மாதிரி எடுக்க சம்மன் அனுப்பப்பட்டது. அதில் 3 பேர் மட்டுமே ரத்த மாதிரியை அளித்தனர். 8 பேர் வரவில்லை. தங்களை குற்றவாளிகளாக்க மாற்றும் முயற்சியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டுள்ளதாக கூறிய அவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

    இதற்கிடையே இந்த வழக்கில் மேலும் 10 பேருக்கு ரத்த மாதிரி எடுக்க திட்டமிட்டு, அதில் வேங்கைவயலை சேர்ந்த 2 பேர், இறையூர் கிராமத்தை சேர்ந்த 7 பேர் மற்றும் மேலமுத்துக்குடிக்காடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் என 10 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதில் இன்று முதலில் 8 பேர் வருகை தந்தனர்.

    பின்னர் வேங்கைவயலை சேர்ந்த 2 பேர் தாமதமாக ரத்த மாதிரி அளிக்க முன்வந்தனர். அதேபோல் முதற்கட்டமாக சம்மன் அனுப்பி வராத 8 பேருக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்பவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    அதேபோல் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஒரு நபர் ஆணையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணா கடந்த சில நாட்களுக்கு முன்பு வேங்கைவயல் கிராமத்துக்கு வந்து களஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாலோசனை செய்தார். மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் அதிகாரிகள் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.

    விரைவில் இதுதொடர்பான அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதன் அடிப்படையில் வேங்கைவயல் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • வாகனத்திற்குள் அமர்ந்திருந்த டிரைவர் லட்சுமணன் மண் சரிவதை கண்டு சுதாரித்து, அந்த எந்திரத்திற்குள் இருந்து வெளியேறுவதற்குள் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது.
    • தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் அங்கு வந்து தொழிலாளர்களின் உதவியுடன் பாறை குவியல் மற்றும் மண்ணை அகற்றி உள்ளே சிக்கி உள்ள லட்சுமணனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் உடையாளிப்பட்டி அருகே கிள்ளுக்குளுவாய்பட்டியில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி ஒன்று இயங்கி வருகிறது.

    இந்த கல்குவாரியில் இருந்து எடுக்கப்பட்ட பாறைகள், சரளை போன்றவை ஜல்லி கற்களாக உடைக்கப்பட்டும், கிரஷர் மண் தாயாரிக்கப்பட்டும், புதுக்கோட்டை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    இதற்கான பணிகள் தினமும் காலை முதலே தொடங்கி நடைபெறும். வழக்கம்போது இந்த கல் குவாரிக்குள் அதே பகுதியை சேர்ந்த ஹிட்டாச்சி பொக்லைன் ஓட்டுனர் லட்சுமணன் (வயது 40) என்பவர் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    100 அடி ஆழத்தில் அவர் ராட்சத பொக்ளைன் மூலம் கற்களை பெயர்த் தெடுக்கும் பணியை செய்து கொண்டிருந்தார். பாறைகளை அகற்றுவதற்காக அவர் ராட்சத பொக்லைன் எந்திரத்தை வைத்து பக்கவாட்டு மண்ணை வெட்டி உள்ளார்.

    அப்போது அதன் அதிர்வு தாங்காமல் கல் குவாரியின் ஒரு பகுதி மளமளவென சரிந்துள்ளது. இதனை கண்டு அங்கு பணியில் இருந்த கூலி தொழிலாளிகள் அலறி அடித்துக்கொண்டு ஓடி உள்ளனர்.

    ஆனால் ஹிட்டாச்சி வாகனத்திற்குள் அமர்ந்திருந்த டிரைவர் லட்சுமணன் மண் சரிவதை கண்டு சுதாரித்து, அந்த எந்திரத்திற்குள் இருந்து வெளியேறுவதற்குள் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது.

    இதனால் பாறை மற்றும் மண் சரிந்து ஹிட்டாச்சி எந்திரத்தையே மூடியது. இதனால் மணிகண்டன் வெளியேற முடியாமல் மண்ணில் புதைந்து சிக்கிக் கொண்டார். இதனை தொடர்ந்து அங்கிருந்த தொழிலாளிகள் மண் மற்றும் பாறைகளை அகற்ற முயற்சித்தனர். ஆனால் அது முடியாத காரியம் என்று தெரியவரவே உடனடியாக புதுக்கோட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் அங்கு வந்து தொழிலாளர்களின் உதவியுடன் பாறை குவியல் மற்றும் மண்ணை அகற்றி உள்ளே சிக்கி உள்ள லட்சுமணனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்
    • விண்ணப்பங்களை வருகிற 20-ந் தேதி மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம்.

    புதுக்கோட்டை:

    மாவட்ட கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் பின்வரும் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை, பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம், வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது.

    ஊக்கத்தொகை பெறுவதற்கான தகுதிகள், மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்களை வருகிற 20-ந் தேதி மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம்.

    மேற்காணும் மூன்று திட்டங்களுக்கு கடந்த 30.11.2022 முதல் 22.12.2022 வரை ஏற்கனவே விண்ணப்பங்களை விண்ணப்பித்தவர்கள் கடந்த 4 மாதங்களில் பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி விபரங்களை ஏற்கனவே உள்ள தங்களுடைய பதிவெண் மூலம் புதுப்பித்துக்கொள்ளலாம். மேலும் புதிய விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை இணையவழியில் பதிவேற்றம் செய்யலாம். மேற்காணும் விவரங்களுக்கு ஆடுகளம் தகவல் தொடர்பு மையம் 9514000777 மற்றும் 7825883865 என்ற எண்களை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யபட்டனர்
    • அவர்களிடமிருந்து சீட்டு அட்டைகள், ரூ.1,560, செல்போன் 3, மோட்டார் சைக்கிள், டேபிள், சேர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

    புதுக்கோட்டை:

    இலுப்பூர் அருகே கல்லிகுளம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக சிறப்புப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த கோவிந்தநாயக்கன்பட்டியை சேர்ந்த தங்கவேல் (வயது 29), செல்லம்பட்டி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (35), மாரிமுத்து (28), பிலிப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் (47) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சீட்டு அட்டைகள், ரூ.1,560, செல்போன் 3, மோட்டார் சைக்கிள், டேபிள், சேர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

    • கறம்பக்குடியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 4 பவுன் தங்க சங்கிலி பறித்தனர்
    • இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தெற்கு யாதவர் தெருவை சேர்ந்தவர் காத்தான் மனைவி ராமாமிர்தம் (வயது63). இவர் கறம்பக்குடி கடைவீதிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது நெய்வேலி விளக்கு சாலையில் நடந்து வந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த மர்ம நபர் திடீரென மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். இதில் நிலை தடு மாறிய மூதாட்டி சுதாரித்து சத்தம் போட்டார்.

    அதற்குள் அந்த மர்ம நபர் மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பி ஓடி சென்று விட்டார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தங்க சங்கிலி பறித்த நபரை விரட்டி சென்றும் பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மூதாட்டி ராமாமிர்தம் கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கந்தர்வகோட்டையில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது
    • பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜி.எஸ்.ரஜினி தலைமை தாங்கினார்

    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டையில் தமிழ் தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா, கட்சி கொடியேற்று விழா மற்றும் நிதியளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா பொதுக்கூட்டம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜி.எஸ்.ரஜினி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் நாகமுத்து, பொருளாளர், சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகேயன் சிறப்புரையாற்றினார். இதில் துணைப் பொதுச் செயலாளர் குணசேகரன், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சிவராஜ், மகளிர் அணி தேன்மொழி, தஞ்சை மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகரச் செயலாளர் புண்ணியமூர்த்தி நன்றி கூறினார்.

    • குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் முத்துக்காடு, வேங்கைவயலில் ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணா கள ஆய்வு மேற்கொண்டார்
    • விரைவில் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தகவல்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், முத்துக்காடு ஊராட்சி, வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் , மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, முன்னிலையில் களஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். முன்னதாக நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி நேற்றையதினம் வேங்கைவயல் கிராமத்திற்கு நேரடியாகச் சென்று மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டியை பார்வையிட்டார். மேலும் அப்பகுதி மக்களுக்காக புதிதாக அமைக்கப்பட்டு வரும் மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டியின் கட்டுமானப் பணிகள் முடிவுற்றுள்ளதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறுகையில், இது மனித தன்மையற்ற செயல் எனவும், இதுகுறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டு அதன் அறிக்கை விரைவில் அரசுக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

    பின்னர் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், ஓய்வுபெற்ற எம்.சத்தியநாராயணன் , மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, முன்னிலையில் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.இக்கூட்டத்தில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, பொதுசுகாதாரத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட துறை அலுவலர்களுடன் வேங்கைவயலில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து, ஓய்வுபெற்ற மாண்பமை நீதியரசர் எம்.சத்தியநாராயணன் கலந்தாலோசனை செய்தார்.

    இந்நிகழ்வுகளில், மாவட்ட காவல் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) பெ.வே.சரவணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கி.கருணாகரன், வருவாய் கோட்டாட்சியர்கள் முருகேசன் (புதுக்கோட்டை), குழந்தைசாமி (இலுப்பூர்),உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பொ) பழனிச்சாமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர் பாஷா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், துணை காவல் கண்காணிப்பாளர் பால்பாண்டி, மாவட்ட சமூக நல அலுவலர் க.ந.கோகுலப்பிரியா, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.ராம்கணேஷ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • மனித நேய மக்கள் கட்சி சார்பில் போராட்டம்
    • 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்பு

    கறம்பக்குடி.

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் முகமது சுலைமான் தலைமையில் சமீபத்தில் கேரளாவில் வெளியாகியுள்ள தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து சுமார் 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் எதிர்ப்பை மீறி இந்த படம் திரையரங்குகளில் வெளியிட்டால் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீரழிந்து விடும் என்றும், ஆகவே படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஆலங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன் முன்னிலையில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.

    • தடுப்பூசி, குடற்புழு நீக்குதல், சினை ஊசி மாடுகளுக்கு போடப்பட்டது
    • 80 மாடுகளுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மாங்கோட்டை ஊராட்சி ரெகுநாத பட்டியில் கால்நடை மருத்துவத்துறையின் சார்பாக கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை மாங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல், குடற்புழு நீக்குதல், மாடுகளுக்கு சினை ஊசி போடுதல் போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 80 மாடுகளுக்கு மேல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கால்நடைத்துறை சார்பில் சிறந்த மாடு, கன்றுகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. முகாமிற்கு சுற்றுவட்டார பொதுமக்கள் தங்கள் கால்நடைகளை கொண்டு வந்து சிகிச்சை பெற்று பயன்பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கால்நடை மருத்துவர் புவனேஸ்வரி, உதவியாளர் சாந்தி மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • அரசு ஓழுங்குமுறை விற்பனைகூடத்தில் கொப்பறை தேங்காய் கொள்முதல்
    • அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ராஜேந்திரபுரத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் அரவை கொப்பரைத் தேங்காய் கொள்முதலுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு விவசாயிகளிடமிருந்து முதல் கொள்முதலை தொடங்கி வைத்தார்.

    • கால்நடை, கோழிகள் பலி
    • அதிகபட்சமாக பெருங்களூரில் மழை பதிவு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இந்த கோடை மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நேர நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- ஆதனக்கோட்டை-30, பெருங்களூர்-86, புதுக்கோட்டை-12, ஆலங்குடி-5, கந்தர்வகோட்டை-10, மழையூர்-2.60, கீழணை-57.80, திருமயம்-63, அரிமளம்-61.20, அறந்தாங்கி-9.40, ஆயிங்குடி-4, மீமிசல்21.20, ஆவுடையார்கோவில்-8, மணமேல்குடி-11, இலுப்பூர்-8.40, குடுமியான்மலை-15, அன்னவாசல்-4, விராலிமலை-6, உடையாளிப்பட்டி-41, கீரனூர்-19, பொன்னமராவதி-8.20, காரையூர்-30.60. இந்த மழையில் 3 வீடுகள் சேதமடைந்தது. மேலும் 7 கோழிகள், 1 மாடு, 3 கன்றுக்குட்டிகள் செத்தன.

    ×