

கறம்பக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தெற்கு யாதவர் தெருவை சேர்ந்தவர் காத்தான் மனைவி ராமாமிர்தம் (வயது63). இவர் கறம்பக்குடி கடைவீதிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது நெய்வேலி விளக்கு சாலையில் நடந்து வந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த மர்ம நபர் திடீரென மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். இதில் நிலை தடு மாறிய மூதாட்டி சுதாரித்து சத்தம் போட்டார்.
அதற்குள் அந்த மர்ம நபர் மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பி ஓடி சென்று விட்டார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தங்க சங்கிலி பறித்த நபரை விரட்டி சென்றும் பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மூதாட்டி ராமாமிர்தம் கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.