என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது
    • இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மீமிசல் காவல் சரகத்திற்குட்பட்ட கோபாலட்டினம் கடற்கரையில் அடையாளம் தெரியாத சுமார் 40 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதிமக்கள் மீமிசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்துள்ள நபர் குங்கும நிற சட்டையும், கருஊதா பேண்ட்டும் அணிந்திருந்தார். அடையாளம் தெரிந்தவர்கள் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள போலீசார் கேட்டுக் கொண்டனர்.

    • கோடை உழவு செய்து மக்காச்சோள படைப்புழுவை கட்டுப்படுத்தலாம் என வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை வழங்கியுள்ளார்
    • ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் கோடை உழவு செய்வது மிகவும் முக்கிய தொழில்நுட்பமாகும்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது சித்திரைப் பட்டத்தில் பெய்த கோடை மழையினை பயன்படுத்திக் கோடை உழவு மேற்கொள்வது மிகவும் அவசியமாகும். ஏனெனில் நமது பூமி வெப்ப மண்டலமாக இருப்பதால் கோடையில் மேல் மண் அதிக வெப்பமடைகிறது. இந்த வெப்பம் கீழ்ப்பகுதிக்குச் செல்லும்பொழுது நிலத்தடி நீர் ஆவியாகி வெளியேறிவிடும்.

    மேல் மண்ணை உழவு செய்து ஒரு புழுதிப் படலம் அமைத்துவிட்டால் விண்வெளிக்கும் வேர்சூழ் மண்டலத்திற்கும் தொடர்பு அறுந்துவிடும். இதனால் நிலத்தை நன்கு உழவு செய்வதால் பல நன்மைகள் கிடைக்கும். கோடை உழவு செய்வதால் மேல் மண் துகள்களாகிறது, நிலத்தில் நீர் இறங்கும் திறன் அதிகரிக்கும், மண்ணில் நல்ல காற்றோட்டம் கிடைப்பதனால் நுண்ணுயிரிகளின் செயல்பாடு அதிகமாகி மண்வளம் பெருகும், வயலிலுள்ள கோரை போன்ற களைகள் மண்ணின் மேற்பரப்புக்குக் கொண்டு வரப்பட்டு சூரிய வெப்பத்தில் நன்கு காய்ந்து கட்டுப்படுத்தப்படுகிறது.

    ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் கோடை உழவு செய்வது மிகவும் முக்கிய தொழில்நுட்பமாகும். இதனால் நிலத்தினடியில் உள்ள கூண்டுப் புழுக்கள் மற்றும் பூச்சிகள் வெளியில் கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகிறது. மேலும் மக்காச்சோளத்தை தாக்கும் அமெரிக்க படைப்புழுவினை கட்டுப்படுத்திட கோடை உழவு மிகவும் சிறந்தது. கோடை உழவினைச் சரிவிற்குக் குறுக்கே உழவு செய்து மண் அரிப்பினை தவிர்க்கலாம்.

    இவ்வாறு பல நன்மைகள் ஏற்படுவதால் கோடை உழவு கோடி நன்மை எனக் கூறப்படுகிறது. எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் கோடையில் பெறப்படும் மழையினைப் பயன்படுத்தித் தங்களது நிலங்களில் மழை நீரை சேமித்திடவும், பூச்சி நோய் ஆகியவற்றை கட்டுபடுத்திடவும் கோடை உழவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • கந்தர்வகோட்டையில் நம்ம ஊரு சூப்பர் திட்டம் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
    • விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டை ஊராட்சி மன்றம் சார்பில் நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது. தமிழக அரசின் சிறப்பு திட்டமான நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ் ஊராட்சியில் தூய்மை பணி, மருத்துவ பரிசோதனை மற்றும் நலத்திட்டம், சுய உதவி குழு உறுப்பினர்கள் வாயிலாக கழிவு பொருட்களை கையாள்வது தொடர்பான விழிப்புணர்வு, நெகிழி பொருட்களுக்கு பதிலாக மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துதல் உள்ளிட்ட சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்திபன், சுகாதார ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆம்பூர்பட்டி பகவதி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது
    • பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

    புதுக்கோட்டை.

    புதுக்கோட்டை விராலிமலை தாலுகா ஆம்பூர்பட்டியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு மதியம் மற்றும் இரவில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. விழாவின் சிகர நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு கோவில் முன்பு திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். அதைத் தொடர்ந்து வாண வேடிக்கை, மேளதாளம் முழங்க அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. நேற்று காலை 9 மணியளவில் பக்தர்கள் ஊரணி கரையிலிருந்து பால்குடம், காவடி, அக்னிசட்டி, எடுத்தும், அலகு குத்தியும், மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.பின்னர் அம்மன் பாதத்தில் பாலை ஊற்றி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனை தொடர்ந்து மதியம் 1 மணியளவில் கிடா வெட்டு பூஜை நடைபெற்றது.இரவு 10 மணியளவில் கோவில் முன்பு உள்ள கலையரங்கில் பாண்டிசாமி என்னும் புராண நாடகம் நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை காப்பு அவிழ்த்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவில் ஆம்பூர்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆம்பூர்பட்டி கிராமமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் மாத்தூர் போலீசார் ஈடுபட்டனர்.

    • செல்போன் ேகாபுரம் அமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
    • 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் ஒக்கூர் கிராமம் அமைந்து உள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் இங்கு செல்போன் சிக்னல் சரிவர கிடைக்காததால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். மேலும் அங்குள்ள கடைகள், இ-சேவை மையங்கள், பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கு சரிவர இணைய வசதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் ஒக்கூர் கிராமத்தில் செல்போன் ேகாபுரம் அமைத்து தரக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் முஜிபூர்ரஹ்மான் தலைமையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் மற்றும் ஆவுடையார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவா்த்தை நடத்தினர். அப்போது செல்போன் ேகாபுரம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் இடம் தேர்வு செய்யப்பட்டு செல்போன் கோபுரம் அமைக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மரத்தில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பலியானார்
    • நுங்கு வெட்டுவதற்காக ஏறியபோது விபரீதம்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை திருமயம் அருகே உள்ள பறையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 52), டிரைவர். இவர் திருமயம் தாமரைக்கண்மாய் கரையில் உள்ள பனைமரத்தில் நுங்கு வெட்டுவதற்காக மரத்தில் ஏறி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக 40 அடி உயரத்தில் இருந்து கீழே தவறி விழுந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
    • புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலை வாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 402 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்தனர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்த ப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், செவித்திறன் குறைபா டுடைய மற்றும் பார்வை த்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதாக தகவல் பரிமாற்றம் செய்துக்கொள்ளும் வகையில் தலா ரூ.13,350 வீதம் ரூ.10,01,250 மதிப்புடைய தக்க செயலிகளுடன் கூடிய கை-பேசி 75 நபர்களுக்கும், ரூ.85,000 மதிப்புடைய இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் ஒரு நபருக்கும் மற்றும் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், 5 திருநங்கைகளுக்கு சுயதொழில் தொடங்கிட தலா ரூ.50,000 வீதம் ரூ.2,50,000 மானியத் தொகைக்கான ஆணைகளை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்.இக்கூட்டத்தில், வருவாய் அலுவலர் செல்வி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா, மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது
    • தாயும், சேயும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலை உருவம்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி வெள்ளையம்மாள் (வயது 22). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருைடய உறவினர்கள் அன்னவாசலில் உள்ள 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ், அங்கிருந்து வெள்ளையம்மாளை ஏற்றிக்கொண்டு பரம்பூர் அரசு மருத்துவமனையை நோக்கி சென்றது. ஆம்புலன்சை சுபாஸ் சந்திரபோஸ் ஓட்டினார். அப்போது வெள்ளையம்மாளுக்கு பிரசவ வலி மேலும் அதிகரித்தது. இதையடுத்து ஆம்புலன்சை டிரைவர் சாலையோரம் நிறுத்தினார். உடனே வெள்ளையம்மாளுக்கு ஆம்புலன்சில் இருந்த அவசர கால மருத்துவர் அருண்பாண்டியன் பிரசவம் பார்த்தார். இதில் வெள்ளையம்மாளுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதைதொடர்ந்து தாயும், சேயும் பரம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

    • வாகனம் மோதி தச்சு தொழிலாளி பலியானார்
    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுக்கோட்டை:

    விராலிமலை ஒன்றியம், மண்டையூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் மணிகண்டன் (வயது 23). தச்சுதொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு கீரனூருக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக பஸ்சில் ஏறி அண்ணா பல்கலைக்கழகத்தில் இறங்கியுள்ளார். பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு 12 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மணிகண்டன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மண்டையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மண்டையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராணி வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வயலில் கிடந்த மலைப்பாம்பு பிடிப்பட்டது
    • வனத்துறையினர் மலைப்பாம்பை காட்டுப்பகுதியில் கொண்டு விட்டனர்.

    புதுக்கோட்டை:

    திருமயம் அருகே மாவூர் கிராமத்தில் அறிவழகன் என்பவரின் வயலில் நேற்று காலை தொழிலாளர்கள் மூலம் களை எடுத்து கொண்டிருந்தனர். அப்போது வயலுக்குள் மலைப்பாம்பு ஒன்று கிடந்தது. இதைப்பார்த்த அவர்கள் சத்தம் போட்டு உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருமயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் கொடுத்தனர். பின்னர் அவர்கள் அந்த மலைப்பாம்பை காட்டுப்பகுதியில் கொண்டு விட்டனர்.

    • கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யபட்டார்
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி மதுவிலக்கு போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆலங்குடி வடகாடு முக்கத்தில் கஞ்சா விற்று கொண்டிருந்த தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அம்மன் நகரை சேர்ந்த சந்திரசேகர் மகன் சதீஷ்குமார் (வயது 19) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து, ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • விராலிமலை பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மற்றும் வடுகபட்டி துணை மின் நிலையத்தில் நாளை (9.5.2023, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. விராலிமலையில் இருந்து மின் விநியோகம் பெறும் விராலூர், மலைக்குடிப்பட்டி, ராஜாளிபட்டி, கொடும்பாளூர், விட்டமம்பட்டி, பாட்னாப்பட்டி, கவரப்பட்டி, செவல்பட்டி, பொய்யாமணி, நம்பம்பட்டி, கோமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என விராலிமலை மின்சார வாரிய செயற்பொறியாளர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதற்கிடையே விராலிமலை ஸ்ரீ மெய்க்கண்ணுடையாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு விராலிமலை நகர் பகுதியில் தொடர்ந்து மின் விநியோகம் இருக்கும் என்றும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    ×