என் மலர்
புதுக்கோட்டை
- செல்போன் ேகாபுரம் அமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
- 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் ஒக்கூர் கிராமம் அமைந்து உள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் இங்கு செல்போன் சிக்னல் சரிவர கிடைக்காததால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். மேலும் அங்குள்ள கடைகள், இ-சேவை மையங்கள், பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கு சரிவர இணைய வசதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் ஒக்கூர் கிராமத்தில் செல்போன் ேகாபுரம் அமைத்து தரக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் முஜிபூர்ரஹ்மான் தலைமையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் மற்றும் ஆவுடையார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவா்த்தை நடத்தினர். அப்போது செல்போன் ேகாபுரம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் இடம் தேர்வு செய்யப்பட்டு செல்போன் கோபுரம் அமைக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- மரத்தில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பலியானார்
- நுங்கு வெட்டுவதற்காக ஏறியபோது விபரீதம்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை திருமயம் அருகே உள்ள பறையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 52), டிரைவர். இவர் திருமயம் தாமரைக்கண்மாய் கரையில் உள்ள பனைமரத்தில் நுங்கு வெட்டுவதற்காக மரத்தில் ஏறி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக 40 அடி உயரத்தில் இருந்து கீழே தவறி விழுந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
- புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலை வாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 402 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்தனர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்த ப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், செவித்திறன் குறைபா டுடைய மற்றும் பார்வை த்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதாக தகவல் பரிமாற்றம் செய்துக்கொள்ளும் வகையில் தலா ரூ.13,350 வீதம் ரூ.10,01,250 மதிப்புடைய தக்க செயலிகளுடன் கூடிய கை-பேசி 75 நபர்களுக்கும், ரூ.85,000 மதிப்புடைய இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் ஒரு நபருக்கும் மற்றும் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், 5 திருநங்கைகளுக்கு சுயதொழில் தொடங்கிட தலா ரூ.50,000 வீதம் ரூ.2,50,000 மானியத் தொகைக்கான ஆணைகளை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்.இக்கூட்டத்தில், வருவாய் அலுவலர் செல்வி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா, மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது
- தாயும், சேயும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலை உருவம்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி வெள்ளையம்மாள் (வயது 22). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருைடய உறவினர்கள் அன்னவாசலில் உள்ள 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ், அங்கிருந்து வெள்ளையம்மாளை ஏற்றிக்கொண்டு பரம்பூர் அரசு மருத்துவமனையை நோக்கி சென்றது. ஆம்புலன்சை சுபாஸ் சந்திரபோஸ் ஓட்டினார். அப்போது வெள்ளையம்மாளுக்கு பிரசவ வலி மேலும் அதிகரித்தது. இதையடுத்து ஆம்புலன்சை டிரைவர் சாலையோரம் நிறுத்தினார். உடனே வெள்ளையம்மாளுக்கு ஆம்புலன்சில் இருந்த அவசர கால மருத்துவர் அருண்பாண்டியன் பிரசவம் பார்த்தார். இதில் வெள்ளையம்மாளுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதைதொடர்ந்து தாயும், சேயும் பரம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு தாயும், சேயும் நலமாக உள்ளனர்.
- வாகனம் மோதி தச்சு தொழிலாளி பலியானார்
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுக்கோட்டை:
விராலிமலை ஒன்றியம், மண்டையூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் மணிகண்டன் (வயது 23). தச்சுதொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு கீரனூருக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக பஸ்சில் ஏறி அண்ணா பல்கலைக்கழகத்தில் இறங்கியுள்ளார். பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு 12 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மணிகண்டன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மண்டையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மண்டையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராணி வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
- வயலில் கிடந்த மலைப்பாம்பு பிடிப்பட்டது
- வனத்துறையினர் மலைப்பாம்பை காட்டுப்பகுதியில் கொண்டு விட்டனர்.
புதுக்கோட்டை:
திருமயம் அருகே மாவூர் கிராமத்தில் அறிவழகன் என்பவரின் வயலில் நேற்று காலை தொழிலாளர்கள் மூலம் களை எடுத்து கொண்டிருந்தனர். அப்போது வயலுக்குள் மலைப்பாம்பு ஒன்று கிடந்தது. இதைப்பார்த்த அவர்கள் சத்தம் போட்டு உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருமயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் கொடுத்தனர். பின்னர் அவர்கள் அந்த மலைப்பாம்பை காட்டுப்பகுதியில் கொண்டு விட்டனர்.
- கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யபட்டார்
- இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
ஆலங்குடி மதுவிலக்கு போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆலங்குடி வடகாடு முக்கத்தில் கஞ்சா விற்று கொண்டிருந்த தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அம்மன் நகரை சேர்ந்த சந்திரசேகர் மகன் சதீஷ்குமார் (வயது 19) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து, ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விராலிமலை பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மற்றும் வடுகபட்டி துணை மின் நிலையத்தில் நாளை (9.5.2023, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. விராலிமலையில் இருந்து மின் விநியோகம் பெறும் விராலூர், மலைக்குடிப்பட்டி, ராஜாளிபட்டி, கொடும்பாளூர், விட்டமம்பட்டி, பாட்னாப்பட்டி, கவரப்பட்டி, செவல்பட்டி, பொய்யாமணி, நம்பம்பட்டி, கோமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என விராலிமலை மின்சார வாரிய செயற்பொறியாளர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதற்கிடையே விராலிமலை ஸ்ரீ மெய்க்கண்ணுடையாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு விராலிமலை நகர் பகுதியில் தொடர்ந்து மின் விநியோகம் இருக்கும் என்றும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
- கறம்பக்குடி சாலை ஓரத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டி பிணம் கிடந்தது
- இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கறம்பக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பெரிய ஆறு பகுதியில் கறம்பக்குடியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில், சாலை ஓரத்தில் அடையாளம் தெரியாத வாகனத்தில் மோதி, அடையாளம் தெரியாத 70 வயதான மூதாட்டி இறந்து கிடந்தார். தகவல் அறிந்த கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி, புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து அவர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- முதற்கட்டமாக சம்மன் அனுப்பி வராத 8 பேருக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்பவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.
- வேங்கைவயல் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக முதலில் உள்ளூர் போலீசார் விசாரித்த நிலையில் பின்னர் அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டது.
123-வது நாளாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை 153 சாட்சிகளை விசாரித்துள்ளனர். அதில் 7 போலீசாரும் அடங்குவர்.
நேரடி சாட்சிகள் இந்த வழக்கில் இல்லாத நிலையில் அறிவியல் பூர்வமான சோதனையில் இறங்கிய போலீசார் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் 119 பேருக்கு ரத்த மாதிரி எடுத்து அதனைக்கொண்டு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி வேங்கைவயல், முத்துக்குடிக்காடு பகுதியைச் சேர்ந்த 11 பேருக்கு ரத்த மாதிரி எடுக்க சம்மன் அனுப்பப்பட்டது. அதில் 3 பேர் மட்டுமே ரத்த மாதிரியை அளித்தனர். 8 பேர் வரவில்லை. தங்களை குற்றவாளிகளாக்க மாற்றும் முயற்சியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டுள்ளதாக கூறிய அவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இதற்கிடையே இந்த வழக்கில் மேலும் 10 பேருக்கு ரத்த மாதிரி எடுக்க திட்டமிட்டு, அதில் வேங்கைவயலை சேர்ந்த 2 பேர், இறையூர் கிராமத்தை சேர்ந்த 7 பேர் மற்றும் மேலமுத்துக்குடிக்காடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் என 10 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதில் இன்று முதலில் 8 பேர் வருகை தந்தனர்.
பின்னர் வேங்கைவயலை சேர்ந்த 2 பேர் தாமதமாக ரத்த மாதிரி அளிக்க முன்வந்தனர். அதேபோல் முதற்கட்டமாக சம்மன் அனுப்பி வராத 8 பேருக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்பவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அதேபோல் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஒரு நபர் ஆணையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணா கடந்த சில நாட்களுக்கு முன்பு வேங்கைவயல் கிராமத்துக்கு வந்து களஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாலோசனை செய்தார். மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் அதிகாரிகள் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.
விரைவில் இதுதொடர்பான அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதன் அடிப்படையில் வேங்கைவயல் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
- வாகனத்திற்குள் அமர்ந்திருந்த டிரைவர் லட்சுமணன் மண் சரிவதை கண்டு சுதாரித்து, அந்த எந்திரத்திற்குள் இருந்து வெளியேறுவதற்குள் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது.
- தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் அங்கு வந்து தொழிலாளர்களின் உதவியுடன் பாறை குவியல் மற்றும் மண்ணை அகற்றி உள்ளே சிக்கி உள்ள லட்சுமணனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் உடையாளிப்பட்டி அருகே கிள்ளுக்குளுவாய்பட்டியில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி ஒன்று இயங்கி வருகிறது.
இந்த கல்குவாரியில் இருந்து எடுக்கப்பட்ட பாறைகள், சரளை போன்றவை ஜல்லி கற்களாக உடைக்கப்பட்டும், கிரஷர் மண் தாயாரிக்கப்பட்டும், புதுக்கோட்டை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இதற்கான பணிகள் தினமும் காலை முதலே தொடங்கி நடைபெறும். வழக்கம்போது இந்த கல் குவாரிக்குள் அதே பகுதியை சேர்ந்த ஹிட்டாச்சி பொக்லைன் ஓட்டுனர் லட்சுமணன் (வயது 40) என்பவர் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
100 அடி ஆழத்தில் அவர் ராட்சத பொக்ளைன் மூலம் கற்களை பெயர்த் தெடுக்கும் பணியை செய்து கொண்டிருந்தார். பாறைகளை அகற்றுவதற்காக அவர் ராட்சத பொக்லைன் எந்திரத்தை வைத்து பக்கவாட்டு மண்ணை வெட்டி உள்ளார்.
அப்போது அதன் அதிர்வு தாங்காமல் கல் குவாரியின் ஒரு பகுதி மளமளவென சரிந்துள்ளது. இதனை கண்டு அங்கு பணியில் இருந்த கூலி தொழிலாளிகள் அலறி அடித்துக்கொண்டு ஓடி உள்ளனர்.
ஆனால் ஹிட்டாச்சி வாகனத்திற்குள் அமர்ந்திருந்த டிரைவர் லட்சுமணன் மண் சரிவதை கண்டு சுதாரித்து, அந்த எந்திரத்திற்குள் இருந்து வெளியேறுவதற்குள் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது.
இதனால் பாறை மற்றும் மண் சரிந்து ஹிட்டாச்சி எந்திரத்தையே மூடியது. இதனால் மணிகண்டன் வெளியேற முடியாமல் மண்ணில் புதைந்து சிக்கிக் கொண்டார். இதனை தொடர்ந்து அங்கிருந்த தொழிலாளிகள் மண் மற்றும் பாறைகளை அகற்ற முயற்சித்தனர். ஆனால் அது முடியாத காரியம் என்று தெரியவரவே உடனடியாக புதுக்கோட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் அங்கு வந்து தொழிலாளர்களின் உதவியுடன் பாறை குவியல் மற்றும் மண்ணை அகற்றி உள்ளே சிக்கி உள்ள லட்சுமணனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்
- விண்ணப்பங்களை வருகிற 20-ந் தேதி மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம்.
புதுக்கோட்டை:
மாவட்ட கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் பின்வரும் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை, பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம், வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது.
ஊக்கத்தொகை பெறுவதற்கான தகுதிகள், மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்களை வருகிற 20-ந் தேதி மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம்.
மேற்காணும் மூன்று திட்டங்களுக்கு கடந்த 30.11.2022 முதல் 22.12.2022 வரை ஏற்கனவே விண்ணப்பங்களை விண்ணப்பித்தவர்கள் கடந்த 4 மாதங்களில் பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி விபரங்களை ஏற்கனவே உள்ள தங்களுடைய பதிவெண் மூலம் புதுப்பித்துக்கொள்ளலாம். மேலும் புதிய விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை இணையவழியில் பதிவேற்றம் செய்யலாம். மேற்காணும் விவரங்களுக்கு ஆடுகளம் தகவல் தொடர்பு மையம் 9514000777 மற்றும் 7825883865 என்ற எண்களை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.






