என் மலர்
புதுக்கோட்டை
- கறம்பக்குடி அருகே ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா நடைபெற்றது
- தேரை சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
கறம்பக்குடி,
கறம்பக்குடி அருகே உள்ள வடக்களூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினந்தோறும் மண்டகப்படிதாரர்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. திருவிழாவின் முக்கிய நாளான கடைசி நாள் காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்று தொடர்ந்து தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. தேரில் சிறப்பு அலங்காரத்துடன் ஸ்ரீ முத்துமாரியம்மன் காட்சி அளித்து பவனி வந்தார். தேரை சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோவிலின் முக்கிய வீதிகள் வழியாக சுற்றி கோவிலை வந்தடைந்தது. மேலும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதான நிகழ்வு நடைபெற்றது. திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ரகுநாதபுரம் மற்றும் கறம்பக்குடி போலீசார் செய்திருந்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை ஆலங்குடி அருகே கே.வி.கோட்டை ஊராட்சி பிலாப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் விஜய் (வயது 26). என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு சென்ட்ரிங் தொழில் செய்து வந்தார். இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் இன்று வீட்டின் எதிரே உள்ள புளிய மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விஜய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கறம்பக்குடி ஸ்ரீ முத்து கருப்பையா கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது
- திருவிழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பக்தகோடி பொதுமக்களுக்கு அன்னதான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றன
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்து கருப்பையா திருக்கோவிலில் கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் சித்திரை திருவிழா தொடங்கியது. தொடர்ந்து பெண்கள் பாலி எடுப்பு நிகழ்வு நடைபெற்றது. பின்பு தினந்தோறும் மண்டக படிதார்களால் சிறப்பு கலை நிகழ்ச்சிகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தது. திருவிழாவின் கடைசி நாளில் பெண்கள் தென்னம்பாளையை குடத்தலிட்டு அதற்கு பூ மற்றும் வண்ண காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டு அதனை தலையில் சுமந்தபடி கோவிலுக்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் மது எடுத்து வந்து சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பக்த கோடிகள் அழகு குத்தி, பால் காவடி, செடல் காவடி, பெரிய காவடிகளை செண்டை மேள தாளங்களுடன் எடுத்து வந்தனர். மேலும் முக்கிய நிகழ்வான கிடா வெட்டும் நிகழ்ச்சி மாலை நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பக்தகோடி பொதுமக்களுக்கு அன்னதான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றன. திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.
- புதுக்கோட்டையில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் சிலை திறக்கப்பட்டது
- காணொளி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தப் பெண் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் முழு உருவ சிலையை, காணொலிக்காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.சென்னையில் தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் இரா.செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் த.மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி தமிழ்செல்வன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.பார்த்தசாரதி, நகர்மன்ற துணைத் தலைவர் எம்.லியாகத்அலி, துணை ஆட்சியர் (பயிற்சி) ஜி.வி.ஜெயஸ்ரீ, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அ.பாரதி, கவிஞர் தங்கம் மூர்த்தி, தயானந்த சரஸ்வதி சுவாமிகள், எம்.எம்.பாலு, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது செய்யபட்டனர்
- அவர்களிடமிருந்து 1 கிலோ 275 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்
புதுக்கோட்டை:
ஆலங்குடி மதுவிலக்கு போலீசார் ஆவணம் கைகாட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்த அறந்தாங்கி களப்பக்காடு பாரதி நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சேவுகப்பெருமாள் (வயது 30), சிலோன் காலனியை சேர்ந்த செல்வராஜ் மகன் சஞ்சய் (20), பட்டுக்கோட்டை நரிக்குறவர் காலனி பாரதி நகரை சேர்ந்த சந்திரன் மகன் முருகன் (35) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து 1 கிலோ 275 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஆலங்குடி மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
- அறந்தாங்கி அருகே நடைபெற்ற எல்கை பந்தயத்தில் மாடுகள், குதிரைகள் சீறிபாய்ந்தன
- சிறந்த சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
அறந்தாங்கி:
அறந்தாங்கி தாலுகா ரெத்தினக்கோட்டை கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ பூமாரியம்மன் கோவில் சித்திரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது.26-வது ஆண்டாக நடைபெற்ற இந்த பந்தையத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, சென்னை, திருச்சி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாடுகள் மற்றும் குதிரைகள் போட்டியில் பங்கேற்றன.4 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் பெரியமாடு பிரிவில் 6 ஜோடி மாடுகளும், கரிச்சான்மாடு பிரிவில் 14 ஜோடி மாடுகளும், தேன்சிட்டு மாடு பிரிவில் 52 ஜோடிமாடுகளும், சிறிய குதிரை பிரிவில் 18 குதிரைகளும் போட்டியில் கலந்து கொண்டு சீரிப்பாய்ந்தன.
பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடு மற்றும் குதிரைகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடு மற்றும் குதிரைகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து பந்தையத்தை கண்டு ரசித்தனர். 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.விழாவினை ரெத்தினக்கோட்டை கிராமத்தார்கள், இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
- புதிய மணல் குவாரிகளால் சுற்று சூழல் பாதிப்பு ஏற்படாது என அமைச்சர் மெய்யநாதன் பேட்டி அளித்தார்
- தமிழகத்தின் உள்கட்ட அமைப்புக்கு மணல் தேவை என்ற கோரிக்கையின் அடிப்படையில் தான் 25 குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், நிருபர்களிடம் கூறியதாவது:-தமிழகத்தில் 25 இடங்களில் மணல் குவாரிகளை பொதுப்பணித்துறையே நடத்தும் வகையில் அனுமதி கொடுத்துள்ளோம். எந்தெந்த இடங்களில் எவ்வளவு மணல் எடுக்க வேண்டும் என்று சட்டத்திற்கு உட்பட்டு அனுமதி கொடுத்துள்ளோம். 25 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரிகளால் எந்தவித சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாது. தமிழகத்தின் உள்கட்ட அமைப்புக்கு மணல் தேவை என்ற கோரிக்கையின் அடிப்படையில் தான் 25 குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேட்டூரில் மழை பெய்து காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கொள்ளிடம் மூலம் கடலில் காவிரி நீர் கலக்கும் வழித்தடத்தில் அதிக அளவு மணல் திட்டுகள் இருந்ததால் முகத்துவாரங்களில் மழைநீர் கலக்கும் இடங்களில் சிக்கல் ஏற்பட்டது. இவற்றையெல்லாம் சரி செய்தால்தான் தண்ணீர் தடையின்றி கடலுக்கு செல்லும்.அதே வேளையில் மணல் அள்ளும் பணிகளை சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.பெங்களூர் மாநகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவுகளால் தான் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் மாசு, அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் பெங்களூரில் 36 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டுமென உத்தரவு விட்டுள்ளது. தமிழக முதல்வர் மற்றும் தலைமைச் செயலர் இது சம்பந்தமாக கர்நாடகா அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் முழுமையாக கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு தடுக்கப்படும் பட்சத்தில் தென்பெண்ணை ஆறு முற்றிலும் பாதுகாக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
- புதுக்கோட்டையில் இலவச பயிற்சி முடித்த சிலம்பம், குத்துசண்டை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கபட்டது
- அமைச்சர் ரகுபதி சான்றிதழ் வழங்கினார்
புதுக்கோட்டை:
நேரு யுவகேந்திரா, குழந்தைகள் நலக்குழுமம், அலுவலர் மன்றம் மற்றும் புத்தாஸ் வீர கலைகள் கழகம், ஆகியவை இணைந்து நடத்திய இலவச சிலம்பம் மற்றும் குத்துச்சண்டை பயிற்சி முகாம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 30ம் தேதி தொடங்கி மே 8ந்தேதி வரை நடைபெற்ற இந்த பயிச்சி முகாமில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த காவேரி நகர், திருக்கோகர்ணம், திலகர் திடல், பழைய பேருந்து நிலையம், பெருங்குடி, கடியாபட்டி, தாஞ்சூர் ஆகிய ஏழு இடங்களில் இருந்து வந்த 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
பயிற்சி நிறைவு விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நேரு யுவ கேந்திராவின் உதவி திட்ட அலுவலர் நமச்சிவாயம், தலைமையில் நடைபெற்றது. மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் தலைவர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். விழாவில் சட்டம் துறை அமைச்சர் ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், தமிழக அரசு விளையாட்டுக்காக பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அதில் மிக முக்கியமாக சிலம்பத்திற்கு முதல்வர் முக்கியத்துவம் கொடுத்து மூன்று சதவீத இட ஒதுக்கீடு கொடுத்துள்ளார்.
எனவே விளையாட்டு துறையில் மாணவ, மாணவிகள் அதிக கவனம் செலுத்தி மென்மேலும் வளர வேண்டும் என்று பேசினார். அதன் பின்னர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் புதுக்கோட்டை நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில் , நகர்மன்ற துணைத் தலைவர் லியாகத் அலி , அலுவலர்கள் மன்ற செயல் தலைவர் மருத்துவர் ராமசாமி , திரைப்பட இயக்குனர் ஜெயகாந்தன், மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சுவாமிநாதன், ராசாப்பட்டி சமூக ஆர்வலர் வீரையா கலந்து கொண்டனர்.
அலுவலர்கள் மன்ற செயலாளர் முனைவர் ரமேஷ், அரிமளம் சமூக ஆர்வலர் ராமமூர்த்தி வாழ்த்துரை வழங்கினர்கள், விழாவின் முன்னதாக புத்தாஸ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளையின் தலைவர் சேது. கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார். பொருளாளர் ஹரிகிருஷ்ணன் நன்றி கூறினார் . இந்த விழாவில் 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
- கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது
- இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மீமிசல் காவல் சரகத்திற்குட்பட்ட கோபாலட்டினம் கடற்கரையில் அடையாளம் தெரியாத சுமார் 40 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதிமக்கள் மீமிசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்துள்ள நபர் குங்கும நிற சட்டையும், கருஊதா பேண்ட்டும் அணிந்திருந்தார். அடையாளம் தெரிந்தவர்கள் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள போலீசார் கேட்டுக் கொண்டனர்.
- கோடை உழவு செய்து மக்காச்சோள படைப்புழுவை கட்டுப்படுத்தலாம் என வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை வழங்கியுள்ளார்
- ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் கோடை உழவு செய்வது மிகவும் முக்கிய தொழில்நுட்பமாகும்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது சித்திரைப் பட்டத்தில் பெய்த கோடை மழையினை பயன்படுத்திக் கோடை உழவு மேற்கொள்வது மிகவும் அவசியமாகும். ஏனெனில் நமது பூமி வெப்ப மண்டலமாக இருப்பதால் கோடையில் மேல் மண் அதிக வெப்பமடைகிறது. இந்த வெப்பம் கீழ்ப்பகுதிக்குச் செல்லும்பொழுது நிலத்தடி நீர் ஆவியாகி வெளியேறிவிடும்.
மேல் மண்ணை உழவு செய்து ஒரு புழுதிப் படலம் அமைத்துவிட்டால் விண்வெளிக்கும் வேர்சூழ் மண்டலத்திற்கும் தொடர்பு அறுந்துவிடும். இதனால் நிலத்தை நன்கு உழவு செய்வதால் பல நன்மைகள் கிடைக்கும். கோடை உழவு செய்வதால் மேல் மண் துகள்களாகிறது, நிலத்தில் நீர் இறங்கும் திறன் அதிகரிக்கும், மண்ணில் நல்ல காற்றோட்டம் கிடைப்பதனால் நுண்ணுயிரிகளின் செயல்பாடு அதிகமாகி மண்வளம் பெருகும், வயலிலுள்ள கோரை போன்ற களைகள் மண்ணின் மேற்பரப்புக்குக் கொண்டு வரப்பட்டு சூரிய வெப்பத்தில் நன்கு காய்ந்து கட்டுப்படுத்தப்படுகிறது.
ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் கோடை உழவு செய்வது மிகவும் முக்கிய தொழில்நுட்பமாகும். இதனால் நிலத்தினடியில் உள்ள கூண்டுப் புழுக்கள் மற்றும் பூச்சிகள் வெளியில் கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகிறது. மேலும் மக்காச்சோளத்தை தாக்கும் அமெரிக்க படைப்புழுவினை கட்டுப்படுத்திட கோடை உழவு மிகவும் சிறந்தது. கோடை உழவினைச் சரிவிற்குக் குறுக்கே உழவு செய்து மண் அரிப்பினை தவிர்க்கலாம்.
இவ்வாறு பல நன்மைகள் ஏற்படுவதால் கோடை உழவு கோடி நன்மை எனக் கூறப்படுகிறது. எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் கோடையில் பெறப்படும் மழையினைப் பயன்படுத்தித் தங்களது நிலங்களில் மழை நீரை சேமித்திடவும், பூச்சி நோய் ஆகியவற்றை கட்டுபடுத்திடவும் கோடை உழவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- கந்தர்வகோட்டையில் நம்ம ஊரு சூப்பர் திட்டம் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
- விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது.
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை ஊராட்சி மன்றம் சார்பில் நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது. தமிழக அரசின் சிறப்பு திட்டமான நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ் ஊராட்சியில் தூய்மை பணி, மருத்துவ பரிசோதனை மற்றும் நலத்திட்டம், சுய உதவி குழு உறுப்பினர்கள் வாயிலாக கழிவு பொருட்களை கையாள்வது தொடர்பான விழிப்புணர்வு, நெகிழி பொருட்களுக்கு பதிலாக மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துதல் உள்ளிட்ட சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்திபன், சுகாதார ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ஆம்பூர்பட்டி பகவதி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது
- பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
புதுக்கோட்டை.
புதுக்கோட்டை விராலிமலை தாலுகா ஆம்பூர்பட்டியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு மதியம் மற்றும் இரவில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. விழாவின் சிகர நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு கோவில் முன்பு திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். அதைத் தொடர்ந்து வாண வேடிக்கை, மேளதாளம் முழங்க அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. நேற்று காலை 9 மணியளவில் பக்தர்கள் ஊரணி கரையிலிருந்து பால்குடம், காவடி, அக்னிசட்டி, எடுத்தும், அலகு குத்தியும், மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.பின்னர் அம்மன் பாதத்தில் பாலை ஊற்றி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனை தொடர்ந்து மதியம் 1 மணியளவில் கிடா வெட்டு பூஜை நடைபெற்றது.இரவு 10 மணியளவில் கோவில் முன்பு உள்ள கலையரங்கில் பாண்டிசாமி என்னும் புராண நாடகம் நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை காப்பு அவிழ்த்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவில் ஆம்பூர்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆம்பூர்பட்டி கிராமமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் மாத்தூர் போலீசார் ஈடுபட்டனர்.






