என் மலர்
பெரம்பலூர்
- வாகனம் மோதி புள்ளி மான் பலியானது
- வனத்துறையினர் மானின் உடலை மீட்டு கால்நடை மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்து, காப்புக்காடு பகுதியில் கொண்டு சென்று புதைத்தனர்.
பெரம்பலூர:
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே நெடுவாசல் பிரிவு சாலையை தாண்டி நேற்று அதிகாலையில் புள்ளி மான் ஒன்று பலத்த காயங்களுடன் உடல் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மானின் உடலை மீட்டு கால்நடை மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்து, காப்புக்காடு பகுதியில் கொண்டு சென்று புதைத்தனர். சாலையை கடக்கும் போது வாகனம் மோதி மான் இறந்துள்ளது. மேலும் அதன் உடல் மீது சில வாகனங்கள் ஏறி சென்றதால் உடல் சிதைந்து விட்டது. உயிரிழந்தது பெண் மான் என்றும், 3 வயது இருக்கும் என்றும், வனத்துறையினர் தெரிவித்தனர்.
- லாடபுரத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்
- இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமம் 7-வது வார்டு, ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 45), கூலித் தொழிலாளி. இவருக்கு ரம்யா என்ற மனைவியும், வாணிஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக வாசுதேவன் தனது மனைவி, மகளை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை வாசுதேவன் லாடபுரம் புது மாரியம்மன் கோவில் எதிரே உள்ள மூப்பனார் கோவில் முன்புள்ள பந்தலில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாசுதேவன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அங்கனூர் கிராமத்தில் சிதிலமடைந்த பாலத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்
- சின்னாற்றில் தரை பாலமாக இருந்த போது அடிக்கடி வரும் வெள்ளப்பெருக்கில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டனர்.
அகரம்சீகூர்:
அகரம்சீகூர் அடுத்துள்ள பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வசிஷ்டபுரம் ஊராட்சிக்குட்பட்ட பள்ளகாளிங்கராய நல்லூர் கிராமத்திற்கும், அங்கனூர் கிராமத்திற்கும் இடையே ஓடும் சின்னாற்றில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது.சின்னாற்றில் தரை பாலமாக இருந்த போது அடிக்கடி வரும் வெள்ளப்பெருக்கில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டனர். இதனால் தரைப் பாலத்தை மேம்பாலமாக கட்ட வேண்டி பொதுமக்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து நான்கு வருடங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால் சில மாதங்களாக இந்த பாலத்தின் பக்கவாட்டு சுவர் சேதம் அடைந்து பள்ளம் தெரிகிறது. இதனால் இந்த பகுதியில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் இந்த பள்ளத்தில் விழுந்து காயமடைந்து விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால் நெடுஞ்சாலைத்துறை உடனடியாக இந்த பாலத்தின் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பெரம்பலூர் அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி பெண் உதவியாளருடன் கைது செய்யபட்டார்
- லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ஹேமசித்ரா தலைமையில் போலீசார் அலுவலகத்தின் அருகே ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, டி.களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 75), விவசாயி. இவர் தனது வீட்டுமனை பட்டாவை மகன் லோகநாதன் பெயரில் மாற்றம் செய்ய டி.களத்தூர் கிராம நிர்வாக அதிகாரி தீனதயாளன் (33), கிராம நிா்வாக உதவியாளா் ஈஸ்வரி (39) ஆகியோரை நாடியுள்ளார். அப்போது அவர்கள் வீட்டுமனை பட்டாவை பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என சின்னதுரையிடம் கேட்டதாக கூறப்படுகிறது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சின்னதுரை இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ரசாயன பவுடர் தடவிய ரூ.20 ஆயிரத்தை கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் ஆகியோரிடம் கொடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி சின்னதுரை நேற்று மதியம் 1 மணியளவில் டி.களத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றார். மேலும் அங்கு பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ஹேமசித்ரா தலைமையில் போலீசார் அலுவலகத்தின் அருகே ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சின்னதுரை லஞ்ச பணத்தை அலுவலகத்தில் பணியில் இருந்த ஈஸ்வரியிடம் கொடுத்தார். அந்த பணத்தை வாங்கிய ஈஸ்வரி, தீனதயாளனிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விரைந்து சென்று தீனதயாளன், ஈஸ்வரி ஆகியோரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து லஞ்சமாக பெற்ற ரூ.20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அலுவலகத்தில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
அங்கிருந்து அவர்கள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.கைதான கிராம நிர்வாக அதிகாரி தீனதயாளன் ஈரோடு மாவட்டம், கங்காபுரம், வடக்கு தெருவை சேர்ந்த நடராஜனின் மகன் ஆவார். தீனதயாளன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் டி.களத்தூர் கிராம நிர்வாக அலுவலராக பொறுப்பேற்று கொண்டார். இதற்காக தீனதயாளன் திருச்சி மாவட்டம், துறையூரில் வாடகை வீட்டில் தங்கியிருந்து பணிக்கு வந்து சென்றுள்ளார்.
இதற்கு முன்பு தீனதயாளன் புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரிந்துள்ளார். கிராம நிர்வாக உதவியாளர் ஈஸ்வரி ஆலத்தூர் தாலுகா, மாவிலங்கை கிராமத்தை சேர்ந்த பழனியாண்டியின் மனைவி ஆவார். விவசாயிடம் வீட்டுமனை பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மங்களமேடு அருகே தர்பூசணி ஏற்றி வந்த சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துள்ளானது
- சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த சிவராஜ் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினார்.
பெரம்பலூர்
திருச்சி மாவட்டம் இருங்களூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 28). இவர் சென்னை மரக்காணம் பகுதியில் இருந்து 2½ டன் எடை கொண்ட தர்பூசணி பழங்களை சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சொந்த ஊரான இருங்களூருக்கு ஓட்டி சென்றுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா மங்களமேடு அடுத்துள்ள வல்லபுறம் பிரிவு ரோடு தண்ணீர் பந்தல் அருகே நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் சென்றபோது சரக்கு வாகனத்தின் பின்புறம் உள்ள இடது பக்கம் டயர் வெடித்தது.இதில் சிவராஜின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் தாறுமாறாக சென்று சாலையின் குறுக்கே கவிழ்ந்தது.
இதில் தர்பூசணி பழங்கள் அனைத்தும் உடைந்து சாலையில் கொட்டி வீணானது. அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் வாகனங்கள் ஏதும் வராததால் வேறு விபத்து ஏதும் ஏற்படவில்லை. மேலும் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த சிவராஜ் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன், நெடுஞ்சாலை ரோந்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் தர்பூசணி பழங்களை அப்புறப்படுத்தி சாலையை சரி செய்து சரக்கு வாகனத்தை கிரேன் உதவியுடன் தூக்கி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரம்பலூர:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி மகன் சுந்தரம் (வயது 40). இவர் பாடாலூர் மெயின் ரோட்டில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு திறக்கப்பட்டு கடையில் இருந்த ஒரு கேமரா, கம்ப்யூட்டர் மானிட்டர் 2, ஹார்ட் டிஸ்க் ஆகியவை திருட்டு போயிருந்தது.
இதுகுறித்து சுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வடக்கலூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது
- விவசாயிகள் தங்கள் பகுதியிலேயே தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்
அகரம்சீகூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியம் வடக்கு பகுதியில் உள்ள கிராமங்களில் பெரும்பாலும் நெல் சாகுபடியே அதிகமாக செய்யப்பட்டு அறுவடை நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தங்கள் பகுதியிலேயே தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். அதையடுத்து தமிழக அரசின் சார்பில் வடக்கலூர் கிராமத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன், கவுன்சிலர் செல்லம்மாள் மாயவேல், துணைத் தலைவர் கணேசன், முன்னாள் தலைவர் பிச்சமுத்து, நெல் கொள்முதல் கண்காணிப்பாளர் சையது முஸ்தபா, பட்டியல் எழுத்தர் அழகுதுரை, அகரம் காமராஜ், பழைய அரசமங்கலம் குருசாமி, கத்தாழை மேடு செல்வகுமார் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். இதனால் இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அகரம்சீகூர்,
அகரம்சீகூர் அடுத்துள்ள பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வசிஷ்டபுரம் ஊராட்சிக்குட்பட்ட பள்ளகாளிங்கராய நல்லூர் கிராமத்திற்கும், அங்கனூர் கிராமத்திற்கும் இடையே ஓடும் சின்னாற்றில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால் சில மாதங்களாக இந்த பாலத்தின் பக்கவாட்டு சுவர் சேதம் அடைந்து பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்த பகுதியில் குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் இரவு நேரங்களில் இந்த பள்ளத்தில் விழுந்து காயமடைந்து விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை உடனடியாக இந்த பாலத்தின் சேதமடைந்த பகுதிகளை சரி செய்து தர இப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பெரம்பலூர் அருகே பரிதாபம்
- போலீசார் விசாரணை
குன்னம்,
பெரம்பலூர் பனிமலர் பள்ளி எதிரில் வசிப்பவர் குணசேகரன். இவரது மகன் சாரதி (வயது 22). இவர் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று இரவு திருமாந்துறை சுங்கச்சாவடியில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சாரதி சென்று கொண்டிருந்தார்.சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, எதிரே திண்டுக்கல்லில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் சாரதி மோதி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சாரதியை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு முதலுதவி சிகிச்சை முடிந்த உடன் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சாரதி பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்தவர்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
பெரம்பலூர்,
குன்னம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் உடையான் (வயது 73), விவசாயி. இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உண்டு. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் தனித்தனியாக சமைத்து சாப்பிட்டு வந்தனர். மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது 2 மகன்களும் இறந்துவிட்டனர்.இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு 2-வது மகனின் நினைவு நாள் வந்தது. அப்போது தனது 2 மகன்களுமே இறந்து விட்டனரே என்ற மன உளைச்சலிலும், வேதனையிலும் உடையான் காணப்பட்டார். இந்நிலையில் நேற்று காலை பழைய தாலுகா அலுவலகம் பின்புறம் உள்ள தனது வயலுக்கு சென்ற உடையான், அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மீனாட்சி கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- போலீசார் சோதனையில் சிக்கினார்
- 33 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது
பெரம்பலூர்.
பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் சட்ட விரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி மேற்பார்வையில் பெரம்பலூர் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீஸ் குழுவினர் சோதனை மேற்கொண்டு, எம்.ஜி.ஆர். நகர் அருகே இருந்த முட்புதருக்கு அருகில் அரசு மதுபான பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த காமராஜை(வயது 47) கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுபோன்று தங்களது பகுதிகளில் யாரேனும் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயம் தயாரித்தாலோ அல்லது அரசு அனுமதியின்றி மதுபான பாட்டில்களை விற்பனை செய்தாலோ மாவட்ட போலீஸ் அலுவலகத்தை 94981 00690 என்ற செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி தெரிவித்தார்.
- 25-ந் தேதி நடக்கிறது
- அடையாள அட்ைடயுடன் கலந்து கொள்ள கலெக்டர் அறிவிப்பு
பெரம்பலூர்
ெபரம்பலூர் மாவட்ட முன்னாள் படை வீரர், அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம், வருகிற 25-ந் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கத்தில் நடைபெறவுள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர், அவர் தம் குடும்பத்தினர் மற்றும் படையில் பணிபுரிபவர்களை சேர்ந்தவர்கள் தங்களது கோரிக்கை, குறையை மனுவாக கூட்டத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம். மேலும் மனுக்கள் அளிக்க விரும்புவோர் மனுவின் இரு பிரதிகளை அடையாள அட்டை நகலுடன் அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவல் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






