என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • சொத்து வரியை 30-ந்தேதிக்குள் செலுத்தினால் ஊக்கத்தொகை பெறலாம் என பெரம்பலூர் நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்
    • சொத்துவரியை செலுத்துபவர்களுக்கு செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும்.

    பெரம்பலூர்:

    தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998- பிரிவு 84 (1)-ன்படி பெரம்பலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்துக்களின் உரிமையாளர்கள் தங்களது 2023-24-ம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்துவரியை ஏப்ரல் 30-ந்தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீத தொகை கட்டணச்சலுகையாக அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சொத்துவரியை செலுத்துபவர்களுக்கு செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும்.

    வரித்தொகையை செலுத்துவதற்கு வசதியாக நகராட்சி அலுவலக கணினி வசூல் மையங்கள், வங்கி ஏ.டி.எம். அட்டை மற்றும் கிரெடிட் அட்டைகள், காசோலை, வரைவோலை மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்துவரி செலுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அரையாண்டு சொத்துவரியை இம்மாத இறுதிக்குள் செலுத்தி தாங்களும் பயன்அடைந்து, நகராட்சி நிர்வாகத்திற்கும் துணைபுரியுமாறு பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராதா தெரிவித்துள்ளார்.

    • போக்குவரத்து இடையூறாக போர்டு வைக்க கூடாது என அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு டி.எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்
    • முக்கிய நிகழ்விற்காக வைக்கப்படும் பதாகைகளை அதிகப்பட்சமாக 3 நாட்களுக்குள் எடுத்துவிட வேண்டும்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவியின் உத்தரவின் பேரில், அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அனைத்து கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அரசியல் கட்சி தொடர்பான நிகழ்ச்சியில் அதிக பதாகைகள் வைப்பதை தவிர்க்க வேண்டும். முக்கிய நிகழ்விற்காக வைக்கப்படும் பதாகைகளை அதிகப்பட்சமாக 3 நாட்களுக்குள் எடுத்துவிட வேண்டும். அவ்வாறு வைக்கப்படும் பதாகைகள் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொது மக்களை அச்சுறுத்தும் வகையிலும் இருக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

    • மின்மாற்றி வெடித்து 2 பேர் காயம் அடைந்தனர்
    • மின்மாற்றியில் எரிந்து கொண்டிருந்த தீயானது தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தானாக அணைந்து விட்டது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள மின்மாற்றி நேற்று மாலை திடீரென்று வெடித்து தீப்பிடித்ததால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மின்மாற்றி வெடித்ததில் 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மின்மாற்றியில் எரிந்து கொண்டிருந்த தீயானது தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தானாக அணைந்து விட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்மாற்றியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    • விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்
    • இதுகுறித்து கை.களத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பில்லங்குளத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 58), விவசாயி. இவர் தீராத வயிற்று வலியால் அவதியடைந்து வந்துள்ளார். இதற்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முருகேசன் கடந்த 15-ந் தேதி வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார்.இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கை.களத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • பெரம்பலூர் எஸ்.பி. ஷியாமளா தேவி கோடையில் வாடும் பறவை இனங்களுக்கு தண்ணீர் வழங்கினார்
    • பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகாரித்துக் கொண்டே வருகின்றது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகாரித்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் மனிதர்கள் கோடை வெப்பத்திலிந்து தங்களை தற்காத்துக்கொள்ள பழங்கள் உட்கொள்வது குளிர்பானங்கள் அருந்துவது போன்ற பல்வேறு முறையில் வெப்பத்தை தணித்துக் கொள்கிறார்கள். மேலும் கோடை வாசஸ்தலங்களுக்கும் பயணம் மேற்கொள்கிறார்கள்.ஆனால் பறவை இனங்களோ கோடை வெயிலின் தாக்கத்தினை தணித்துக் கொள்ள முடியாமல் இருந்து வருகின்ற நிலையில் பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தின் வளாகத்தில் சுமார் 100 மரங்கள் உள்ளன. இங்கு பல்வேறு வகையான பறவைகள் கூடு கட்டி வாழ்ந்து வருகின்றன.

    மேற்படி பறவைகளின் கோடை காலத்தினை கருத்தில் கொண்டு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்மு ஷியாம்ளா தேவி பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள அனைத்து மரங்களிலும் பறவைகள் எளிதில் அமர்ந்து தண்ணீர் குடிக்கவும், தானியங்களை உண்ணவும் 28 மரங்களில் தண்ணீர் பாட்டில்களையும் 14 மரங்களில் தானிய உணவுகளையும் வைத்துள்ளார்.மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் அதன் சுற்றியுள்ள மரங்களில் பறவைகள் கோடை வெயிலில் தண்ணீர் குடிக்கவும் தானியங்கள் உண்ணவும் வழிவகை செய்துமாறு அறிவுறுத்தினார்.

    • புதுநடுவலூர் கிராம ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்
    • ராஷ்ட்ரிய கிராம சுராஜ் அபியான் திட்டத்தின் கீழ் ரூ.23.56 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் ஒன்றியத்துக்குட்பட்ட புதுநடுவலூர் கிராம ஊராட்சி சிறப்பாக தூய்மை பணிகளை மேற்கொண்டதற்காகவும், சிறப்பு திட்டங்களை செயல்ப டுத்தியமைக்காகவும் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறந்த முன் மாதிரி கிராம ஊராட்சிக்கான விருது வழங்கப்பட்டது.இதற்கிடையே புதுநடுவலூர் கிராம ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் கற்பகம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஊராட்சியில் கழிவு நீரினை உறிஞ்சி குழிகள் அமைத்து நல்ல நீராக மாற்றி நீர் நிலைகளில் விடும் திட்டத்தின் கீழ் 437 வீடுகளில் தனிநபர் உறிஞ்சி குழிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதையும்,உறிஞ்சி குழி அமைக்க இடம் இல்லாதவர்களின் வீடுகளில் இருந்து வரும் கழிவு நீரினை கழிவு நீர் வாய்க்காலில் கொண்டு சென்று கிடைமட்டமான உறிஞ்சி குழி அல்லது செங்குத்தான உறிஞ்சி குழிகள் அமைத்து கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் நல்ல நீராக மாற்றி நீர்நிலைகளில் விடப்பட்டு வருவதை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.40.15 லட்சம் மதிப்பில் திறந்த வெளி கிணறு அமைத்து அனைவருக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருவதையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.24 லட்சம் மதிப்பில் நூலக கட்டிடத்தினை பழுது நீக்கம் செய்து புதுப்பிக்க ப்பட்டுள்ளதையும், ராஷ்ட்ரிய கிராம சுராஜ் அபியான் திட்டத்தின் கீழ் ரூ.23.56 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, ஆர்.டி.ஓ. (பொறுப்பு) சத்திய பால கங்காதரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அருளாளன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் விபத்தை தடுக்க போக்குவரத்து-நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது
    • எஸ்.பி. ஷியாமளா தேவி வழங்கினார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு உபகரணங்கள் போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலை ரோந்து போலீசாரிடம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி சாலை போக்குவரத்து பாதுகாப்புக்காக இரும்பு தடுப்புகள் 89, ஒளிரும் பட்டைகள் 25, சோலார் ஒளிரும் விளக்குகள் 32 மற்றும் ஒளிரும் செங்குத்து கூம்புகள் 63 என மொத்தம் 184 முன்னெச்சரிக்கை சாலை பாதுகாப்பு உபகரணங்களை நகர, நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசாரிடம் வழங்கினார்.

    இந்த பாதுகாப்பு உபகரணங்கள் சாலை விபத்துகளை குறைக்கும் வகையில், தேசிய மாநில நெடுஞ்சாலைகளில் விபத்து அதிகம் நடைபெறும் இடங்களை கண்டறிந்து அந்த இடங்களில் வைக்கப்படவுள்ளது. இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி நிருபர்களிடம் கூறியதாவது:-பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் இல்லாமல் பயணிப்பது, அதிவேகத்தில் பயணிப்பது, தவறான பாதையில் பயணிப்பது, நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பது, மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டுவது, அளவுக்கு அதிகமாக பொருட்களை ஏற்றி செல்வது என என பல்வேறு பிரிவுகளில் 24 ஆயிரத்து 230 வழக்குகள் பதிவு செய்து ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    சாலை விதிகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டியதாக 11 ஆயிரத்து 122 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.68 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டுடன் இந்த ஆண்டு இதுவரை நடந்த சாலை விபத்துகளுடன் ஒப்பிடும்போது 18 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில் பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி, இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேஷ் (தனிப்பிரிவு), மதுமதி (நகர போக்குவரத்து), சுப்பையா (நெடுஞ்சாலை போக்குவரத்து), சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலை ரோந்து போலீசார் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூரில்கோடைகால இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது
    • இலவச கோடைகால சிறப்பு சித்த மருத்துவ முகாம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இலவச கோடைகால சிறப்பு சித்த மருத்துவ முகாம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இந்த சிறப்பு முகாமை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடங்கி வைக்கிறார். முகாமில் பெண்களுக்கான கருப்பை கட்டி, சினைப்பை நீர்க்கட்டி, தைராய்டு, அதிக உதிரப்போக்கு, மாதாந்திர தீட்டுப்பிரச்சினை, மூட்டுவலிகள், தோல்நோய்கள், சளி, இருமல், மூக்கடைப்பு, சைனஸ் தொந்தரவு, ஆஸ்துமா, சர்க்கரைநோய், இதயநோய், ரத்த கொதிப்பு நோய்க்கு இலவச பரிசோதனை மற்றும் இலவச மருந்துகள் வழங்கப்பட இருக்கிறது.

    முகாமில் மூலிகை கண்காட்சி மற்றும் சித்தமருந்துகள் கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது. ஆங்கில மருந்துகளை பல ஆண்டுகள் தொடர்ந்து உட்கொண்டு வரும் நிலையில், கட்டுப்படாத நிலையில் உள்ளவர்களும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் முகாமில் பங்கேற்பவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் சூரணம், கபசுரகுடிநீர் சூரணம் இலவசமாக வழங்கப்படும். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.காமராஜ் தெரிவித்துள்ளார்.




    • வேப்பந்தட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியானர்
    • போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நூத்தப்பூரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 80). அதே ஊரை சேர்ந்தவர் தங்கராசு (50). ராமசாமி நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக தங்கராசு ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக ராமசாமி மீது மோதியது.

    இதில் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் தங்கராசு பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், ராமசாமி திருச்சி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராமசாமி, தங்கராசு ஆகியோர் நேற்று பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நரிக்குறவர்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்க வலியுறுத்தபட்டது
    • மனுவினை பெற்றுக்கொண்ட கலெக்டர் விரைவில் நரிக்குறவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படும் என கூறினார்

    பெரம்பலூர்:


    பெரம்பலூர் கலெக்டர் கற்பகத்திடம் தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு மாநில தலைவர் காரை சுப்ரமணியன் அளித்துள்ள மனுவில், மத்திய, மாநில அரசுகள் நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அரசிதழில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி நரிக்குறவர் இன பிள்ளைகள் மேல்படிப்பு படிப்பதற்க்காக நடப்பு கல்வியாண்டில் சாதி சான்றிதழ் அவசியம் தேவைபடுகிறது. எனவே உரிய நடவடிக்கை எடுத்து நரிக்குறவர்களுக்கு பழங்குடியினர் என சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மனுவினை பெற்றுக்கொண்ட கலெக்டர் விரைவில் நரிக்குறவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படும் என கூறினார் .


    • பெரம்பலூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • பெரம்பலூர் வருமான வரி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார்.

    பெரம்பலூர்:

    காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் எம்பி பதவியை பறித்து பழிவாங்கும் நோக்குடன் செயல்பட்டதாக கூறி மத்திய அரசை கண்டித்து பெரம்பலூரில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.பெரம்பலூர் வருமான வரி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். வட்டார தலைவர்கள் சின்னசாமி, ராஜேந்திரன், மாவட்ட துணை தலைவர் அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மத்திய அரசை கண்டித்து பலர் பேசினர். பின்னர் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிரணி இணை செயலாளர் ராணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சையத்பதோதீன், நகர தலைவர்கள் நல்லுசாமி, தேவராஜன், சட்டசபை ஊடகப்பிரிவு தலைவர் வசந்த் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




    • பெரம்பலூரில் அ.தி.மு.க.வினர் வெடிவெடித்து கொண்டாடினர்
    • அ.தி.மு.க. பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமியை தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது
    பெரம்பலூர்:


    அ.தி.மு.க. பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமியை தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை முன்னிட்டு பெரம்பலூரில் அதிமுகவினர் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட் பகுதியில் நகர செயலாளர் ராஜபூபதி தலைமையில், பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் செல்வகுமார் முன்னிலையில் அ.தி.மு.க.வினர் வெடி வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் குணசீலன், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜா, ஒன்றிய கவுன்சிலர் அருணாபாண்டியன், நகர துணை செயலாளர் சின்னசாமி. இளைஞரணி ஒன்றிய செயலாளர் காடூர் ஸ்டாலின் , கோவில் பாளையம் வக்கீல் ராமசாமி, வக்கீல் கதிர்கனகராஜ், கீழப்புலியூர் நடராஜன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




    ×