என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • குன்னம் அருகே மின்னல் தாக்கி விவசாயி பலியானார்
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் சாத்தனூர் மற்றும் குடிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்தது. அப்போது சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகன் (வயது 43) என்பவர் இலுப்பைக்குடி- சிறுவாச்சூர் சாலையில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். இந்தநிலையில் சாத்தனூர் பெரிய ஏரி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த போது இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது எதிர்பாராதவிதமாக முருகன் மீது மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே முருகன் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்னல் தாக்கி பலியான முருகனுக்கு காயத்ரி என்ற மனைவியும், சீதா என்ற மகளும், சிவா என்ற மகனும் உள்ளனர்


    • பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தின் 2-வது தளத்தில் உள்ள பிரதான கூட்டரங்கில் நடைபெறவுள்ளது
    • விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்

    பெரம்பலூர:

    பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தின் 2-வது தளத்தில் உள்ள பிரதான கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. கலெக்டர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை எந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படவுள்ளது. எனவே விவசாயிகள் அன்றைய தினம் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்

    • வைக்கோல் ஏற்றி வந்த ஆட்டோ தீயில் எரிந்து நாசமானது
    • மின்கம்பியில் உரசியதால் விபத்து ஏற்பட்டது

    பெரம்பலூர்

    திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்தவர் செங்கமுத்து (வயது 47), ஆட்டோ டிரைவர். இவர் லால்குடியில் இருந்து வைக்கோல்களை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா திருவளக்குறிச்சி கிராமத்திற்கு கொண்டு சென்றார். அப்போது அங்குள்ள பழமலையான் கோவில் செல்லும் பாதையில் சென்றபோது ஆட்டோவில் இருந்த வைக்கோல் எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின்கம்பியில் உரசியது. இதில் வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த செங்கமுத்து ஆட்டோவில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினர். தீ மளமளவென ஆட்டோ முழுவதும் பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த விபத்தில் ஆட்டோ முழுவதும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இலவச கோடைகால சிறப்பு சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது
    • கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர்.

    பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாபெரும் இலவச கோடைகால சிறப்பு சித்த மருத்துவ முகாமினை மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்.இந்த சிறப்பு மருத்துவ முகாமில் சித்த மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம் மற்றும் இயற்கை யோகா மருத்துவத்தின் சார்பாக கோடைகால உணவுகள், கோடைகால நோய்களை தீர்க்கக் கூடிய மருந்துகள் மற்றும் நமது அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தக்கூடிய இயற்கை பொருட்களின் நன்மைகள் குறித்தும், அதை எந்த நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் வகையில் அமைக்கப்பட்ட கண்காட்சியினை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.மேலும் பொது மக்களுக்கு இலவச மூலிகை கன்றுகள் வழங்கப்பட்டது முகாமில் பங்கு கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவத்திற்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகத்தினை கலெக்டர் கற்பகம் வழங்கினார்.முகாமில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ், மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் அர்ஜுனன், இருக்கை மருத்துவ அலுவலர் மருத்துவர் சரவணன், உதவி சித்த மருத்துவ அலுவலர்கள் மருத்துவர் விஜயன் ,மருத்துவர் செந்தமிழ்ச்செல்வி மருத்துவர் கற்பகம் ,மருத்துவர் கலைச்செல்வி, ஹோமியோபதி உதவி மருத்துவ அலுவலர் மருத்துவர் ராகுல்ஜி இயற்கை யோகா மருத்துவ உதவி அலுவலர் மருத்துவ கலைவாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மைய உறுப்பினர்களுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற்றது
    • நான் முதல்வன் மாணவர் வழிகாட்டி சார்பில் நடைபெற்றது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தேர்வு எழுதாத மாணவர்களை தேர்வு எழுத வைப்பதற்கும், அவர்களை தேர்ச்சி பெற வைப்பதற்கும், அனைவரையும் நூறு சதவிகிதம் உயர் கல்வியில் சேர்ப்பதற்காக மாணவர் வழிகாட்டி மைய உறுப்பினர்களுக்கு நடைபெற்று வரும் பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் கற்பகம் துவக்கி வைத்தார்.

    நான் முதல்வன் மாணவர் வழிகாட்டி மைய உறுப்பினர்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர் கற்பகம், மாணவர்களின் இடைநிற்றலை தவிர்ப்பதற்கும், உயர்நிலை கல்வி கற்பதன் அவசியம் குறித்தும், பயிற்சியின் முக்கியத்துவம், மாணவர் உயர்கல்விக்கான தேவை மற்றும் அவசியம் குறித்தும் இதற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

    அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பயிலும் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றோர், தேர்ச்சி பெறாதோர் மற்றும் இடைநின்ற மாணவர்கள் என ஒருவர் கூட விடுபடாமல் அவர்கள் விரும்பிய உயர் கல்வியினை அவர்களாகவே தேர்வு செய்து உயர் கல்வி பயில்வதற்கும், தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியர்களை உடனடி தேர்வு எழுத வைத்து உயர் கல்வியில் சேரும் வாய்ப்பு கிடைத்திடும் வகையிலும், இடைநின்ற மாணவ மாணவிகளுக்கு அதிக ஆலோசனைகள் மற்றும் விழிப்புணர்வினை வழங்கி உயர்கல்வி மற்றும் விரும்பும் திறன்சார் பயிற்சி பெறும் வாய்ப்பினை உறுவாக்குவதற்காக பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

    வேப்பூர் ஒன்றியத்தில் 185 உறுப்பினர்களுக்கும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 164 உறுப்பினர்களுக்கும், பெரம்பலூர் ஒன்றியத்தில் 144 உறுப்பினர்களுக்கும், ஆலத்தூர் ஒன்றியத்தில் 150 உறுப்பினர்களுக்கும், பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

    இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்துக்குமார், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி உதவித்திட்ட அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே வெண்பாவூர் வனப்பகுதியில் தண்ணீர் பந்தல் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பாலையூரை சேர்ந்த பொதுமக்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு படையல் செய்தும் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி, அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    • மாவட்ட போலீசார் சார்பில் நடத்தப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூரை அடுத்த மங்களமேடு போலீஸ் சரகம் லெப்பைக்குடிகாடு பேரூராட்சி பகுதியில் மாவட்ட போலீஸ் அலுவலகம் சார்பில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டமும் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி தலைமை தாங்கி பேசும்போது பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றச்செயல்கள் குறைத்திட, இளைஞர்கள் அனைவரும் போதை பழக்கங்களுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்க வேண்டும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு பிறர் தவறான கண்ணோட்டத்தில் தொடாமல் தங்களை பாதுகாத்து கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் மங்களமேடு உட்கோட்ட துணை சூப்பிரண்டு சீராளன், இன்ஸ்பெக்டர் நடராஜன், மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும்-எழுத்தும் பயிற்சி தொடங்கியது.
    • 114 தொடக்கநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பெரம்பலூர் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் 1 முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 2023-24-ம் கல்வி ஆண்டிற்கான எண்ணும்-எழுத்தும் திட்டத்தினை தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அறிமுகம் செய்து 2-ம் ஆண்டிற்கான தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான 3 நாள் பயிற்சியை தொடங்கியது. பெரம்பலூர் ஒன்றியத்தில் நடந்த பயிற்சியில் 114 தொடக்கநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    • துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் கோட்ட தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் மூன்று ரோடு மேம்பாலம் அருகே புறப்பட்ட ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் கற்பகம் கொடியசைத்து தொடங்கி வைத்து வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

    ஊர்வலத்தில் கலந்து கொண்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், ஊழியர்கள், சாலை பணியாளர்கள் இரு சக்கர வாகனத்தில் செல்வோர்கள் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். மது அருந்தி வாகனங்கள் ஓட்டாதீர்கள், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர்கள் சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பிடித்தவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.

    மேலும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. 

    • மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    • பேரளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பேரளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மேளதாளத்துடன் நடைபெற்றது. இதற்கு பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ரேகா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சிராணி வரவேற்றார். ஊர்வலத்தை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தமிழரசன் தொடங்கி வைத்தார்.

    ஊர்வலத்தில் 5 வயது நிரம்பிய குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்ப்போம். நமது பள்ளி அரசுப்பள்ளி போன்ற விழிப்புணர்வு முழக்கம் எழுப்பப்பட்டது. எண்ணும் எழுத்தும் செயல்பாட்டினையும் அரசின் நலத்திட்டங்கள் குறித்தும் விளக்கி துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. ஊர்வலமானது முக்கிய தெருக்களின் வழியாக சென்று இறுதியில் பள்ளியை அடைந்தது. இதில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், பெற்றோர்கள், கிராம மக்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியானார்
    • சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வந்தார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து எறையூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முஸ்தபா மகன் அக்பர்அலி (வயது 20). இவர் எறையூர் சர்க்கரை ஆலையில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் தனது மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர் வரை சென்றதாக கூறப்படுகிறது.

    அப்போது மங்களமேடு அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அக்பர்அலி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது
    • வருகின்ற 29-ந் தேதி நடைபெறுகிறது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம், பெரம்பலூர் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 29-ந் தேதி அன்று பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழும வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது.

    இவ்வேலைவாய்ப்பு முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள எம்ஆர்எப் நிறுவனம் உட்பட சென்னை, காஞ்சிபுரம், ஓசூர்,கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை பகுதிகளில் அமைந்துள்ள 150க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட தகுதியான நபர்களை தங்களது நிறுவனங்களுக்கு தேர்வு செய்ய உள்ளனர்.

    இந்த முகாமில் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு நிறுவனத்தின் பதிவு வழிகாட்டுதல்கள், தொழில் பழகுநர் மற்றும் குறுகிய கால திறன் பயிற்சிக்கு வழிகாட்டுதல்கள் மற்றும் சுயதொழில் மற்றும் அரசு கடன் உதவி தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலை நாடுநர்கள் தங்களது ஆதார் எண், பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளுடன் வரும் 29-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8.00 முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் Candidate Login –ல் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். இம்மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு அனுமதி இலவசம் என மாவட்ட கலெக்டர் க.கற்பகம் தெரிவித்துள்ளார் .

    ×