என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் தம்பதி  வீட்டில் 12 பவுன் நகை கொள்ளை
    X

    போலீஸ் தம்பதி வீட்டில் 12 பவுன் நகை கொள்ளை

    • போலீஸ் தம்பதி வீட்டில் 12 பவுன் நகை கொள்ளை போனது
    • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் அழகுவேல் (வயது 38). இவரது மனைவி சுகுணாவும் முதல் நிலை போலீஸ்காரராக பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியிருந்து பணிக்கு சென்று வருகின்றனர். அழகுவேலும், சுகுணாவும் வீட்டில் கடந்த 15-ந்தேதி கடைசியாக பீரோவில் வைத்திருந்த 12¾ பவுன் நகைகளை பார்த்துள்ளனர்.

    நேற்று மதியம் அழகுவேல் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகா, ஒதியத்தூருக்கு செல்வதற்காக மனைவியுடன் புறப்பட்டார். அப்போது நகைகள் அணிந்து செல்லலாம் என்று எண்ணிய சுகுணா நகைகளை எடுக்க பீரோவை திறந்து பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த நகைகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் 2 பேரும் தாங்கள் வேலைக்கு சென்ற நேரத்தில் மர்ம ஆசாமிகள் வீட்டிற்குள் புகுந்து நகைகளை திருடி சென்றிருக்கலாம், என்று சந்தேகிக்கின்றனர்.

    பின்னர் இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். இதற்கிடையே போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.


    Next Story
    ×