என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்து
    • வழக்கு பதிந்து போலீசார் லாரி டிரைவரை கைது செய்துள்ளனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சிறுகுடல் கிராமத்தை சேர்ந்தவர் சுகுமார் (வயது 37). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு சுகுமார் பேரளி கிராமத்தில் இருந்து பெரம்பலூர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். க.எறையூர் பிரிவு பாதை அருகே சென்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சுகுமார் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குருநாதன் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான டிப்பர் லாரி டிரைவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த நல்லுசாமியை (37) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ரூ.60 லட்சம் மதிப்பிலான 3 ஏக்கர் கோவில் நிலம் மீட்கப்பட்டுள்ளது
    • அறநிலையத்துறையினர் அதிரடி

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் மேலமடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் பேரளியில் 3 ஏக்கர் நிலம் விவசாயி ஒருவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையின் திருச்சி இணை ஆணையர் செல்வராஜ், பெரம்பலூர் உதவி ஆணையர் லட்சுமணன் ஆகியோருக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து அவர்களது உத்தரவின் பேரில், இந்து சமய அறநிலையத்துறை பெரம்பலூர் தனி தாசில்தார் (கோவில் நிலங்கள்) பிரகாசம் முன்னிலையில் கோவில் செயல் அலுவலர் கோவிந்தராஜன், குன்னம் ஆய்வாளர் சுசிலா, பேரளி (வடக்கு) கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல், நில அளவையாளர் கண்ணதாசன் மற்றும் பேரளி கிராம பொதுமக்கள் ஒத்துழைப்புடன் ரூ.60 லட்சம் மதிப்பிலான மேற்கண்ட கோவில் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டது. மேலும் மேலமடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமாக பேரளியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள 60 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த நிலமும் விரைவில் மீட்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறையினர் தெரிவித்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில்களின் நிலங்களை யாரேனும் ஆக்கிரமிப்பு செய்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

    • சிறப்பு விசாரணை முகாமில் 42 மனுக்கள் பெறப்பட்டது
    • மனு அளிக்க வந்தவர்களுக்கு சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமையில் நடந்தது. முகாமில் போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி மற்றும் போலீசார் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். இதில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 42 மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு ஏதுவாக போலீசார் சார்பாக பாலக்கரையில் இருந்து மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கும், மீண்டும் போலீஸ் அலுவலகத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்வதற்கும் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது, என்று போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தெரிவித்தார்.

    • முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி மோசடி
    • போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்தில் மோசடி புகார்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் திரண்டு வந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மோசடி புகார் மனுக்களை தனித்தனியாக கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- பெரம்பலூர் அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவர் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஸ்டான்லி சைமன் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். அவர் பெரம்பலூரில் உள்ள தனியார் விடுதியில் வைத்து கிரிப்டோ கரன்சியில் ஒரு காயினில் முதலீடு செய்தால் 10 முதல் 20 சதவீதம் வரை அதிக லாபம் பெறலாம் என்று மூளைச்சலவை செய்தார். மேலும் முதலீடு செய்யும் அசல் தொகைக்கு தாமே பொறுப்பு என்றும் கூறினார். அவர் கூறியதை நம்பி நாங்கள் பணத்தை முதலீடு செய்தோம். ஆனால் அந்த பணத்துக்கு லாபமும் தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். எங்களிடம் பெறப்பட்ட பணமானது அவரது மனைவி மற்றும் மகளிடம் கொடுத்து வைத்துள்ளதாக தெரிகிறது. பணப்பரிவர்த்தனை அவரது மனைவியால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. எனவே அவரது மனைவி, மகளை இந்த வழக்கில் சேர்த்தால் தான் எங்களுக்கு பணம் திரும்ப கிடைக்கும். அவர்களிடம் விசாரணை செய்து எங்களுடைய பணத்தை திரும்ப பெற்று தருவதுடன், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 200 பேரிடம் மொத்தம் சுமார் ரூ.18 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பெரியம்மாபாளையத்தில் கோவிலுக்கு சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது
    • இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில்களின் நிலங்களை யாரேனும் ஆக்கிரமிப்பு செய்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வெங்கனூர் விருத்தாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பெரியம்மாபாளையம கிராமத்தில் அமைந்துள்ள 0.88 சென்ட் நிலம் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை திருச்சி இணை ஆணையர் செல்வராஜூக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், இந்து சமய அறநிலையத்துறை பெரம்பலூர் தனி தாசில்தார் (கோவில் நிலங்கள்) பிரகாசம் முன்னிலையில் கோவில் செயல் அலுவலர் தேவி, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பெரியம்மாபாளையம் கிராம பொதுமக்கள் ஒத்துழைப்புடன் ரூ.25 லட்சம் மதிப்பிலான மேற்கண்ட கோவில் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு, அந்த இடத்தில் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று பதாகை வைக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில்களின் நிலங்களை யாரேனும் ஆக்கிரமிப்பு செய்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

    • பெரம்பலூரில் ஒரே கட்டிடத்தில் 2 கடைகளில் ரூ.1¾ லட்சம் திருட்டு போனது
    • கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது வெளியே தெரிந்துவிடாமல் இருப்பதற்காக டி.வி.ஆர். கருவியையும் எடுத்துச்சென்றனர்.

    பெரம்பலூர்

    திருச்சி லால்குடியை சேர்ந்த சந்திரசேகர் மனைவி ரேவதி (வயது 37). இவர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே சூப்பர் மார்க்கெட் கடையை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது கடையின் பக்கவாட்டில் உள்ள ஜன்னல் கம்பியை மர்ம ஆசாமிகள் உடைத்து உள்ளே நுழைந்து ரூ.1¾ லட்சத்தை திருடி சென்றனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது வெளியே தெரிந்துவிடாமல் இருப்பதற்காக டி.வி.ஆர். கருவியையும் எடுத்துச்சென்றனர்.

    இதேபோல் பெரம்பலூர் ரோஸ் நகரில் வசித்துவரும் சவுந்தர்ராஜன் என்பவர் இதே கட்டிடத்தில் குழந்தைகளுக்கான பொருட்களை விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம ஆசாமிகள் கல்லாபெட்டியில் இருந்த ரூ.5 ஆயிரத்தை திருடி சென்றனர்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீஸ் மோப்பநாய் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அந்த நாய் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.பெரம்பலூர் நகரில் தினமும் வீடுகள் மற்றும் கடைகளை குறிவைத்து ஒரு கும்பல் போலீசாருக்கு சவால்விடும் வகையில் திருட்டு சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது.

    எனவே பெரம்பலூரில் சிறப்பு போலீசாரை நியமித்து திருட்டு சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், ஏற்கனவே திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் துப்புதுலக்கி, தொடர்ந்து கைவரிசை காட்டிவரும் மர்ம கும்பலை கைது செய்து திருட்டுப்போன பொருட்களையும் மீட்க வேண்டும் என்று வியாபாரிகள் மாவட்ட போலீஸ் அதிகாரிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • பேரளி பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • காலை 9.45 மணிமுதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது

    பெரம்பலூர்:

    பெரம்பலூரை அடுத்த பேரளியில் உள்ள துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே பேரளி துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பேரளி, அசூர், சித்தளி, பீல்வாடி, ஒதியம், சிறுகுடல், அருமடல், செங்குணம், கீழப்புலியூர், கே.புதூர், எஸ்.குடிக்காடு, வாலிகண்டபுரம், கல்பாடி, கே.எறையூர், நெடுவாசல், கவுல்பாளையம், மருவத்தூர், குரும்பாபாளையம், ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணிமுதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்தின் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூரில் காலை உணவு திட்டத்தில் சமையலர் தேர்வு நடைபெற உள்ளது
    • விண்ணப்பிக்க மாவட்ட கலெக்டர் கற்பகம் அழைப்பு விடுத்துள்ளார்

    பெரம்பலூர்,

    முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் சமையலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது குறித்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- சமையலர்கள் பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. சமையலர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் அதே பகுதியை வசிப்பிடமாக கொண்டவராக இருக்க வேண்டும். மகளிர் சுய உதவி குழுவில் 3 வருடம் உறுப்பினராக இருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினரின் குழந்தை அதே பள்ளியில் 1 முதல் 5 வரை படிப்பவராக இருத்தல் வேண்டும்.

    குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். பழங்குடியின கிராமங்களில் 8-ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். ஆண்டிராய்டு மொபைல் போன் வைத்திருக்க வேண்டும். கடன்களை தவணை தவறாது நிலுவையின்றி செலுத்தியிருக்க வேண்டும்.மேற்கண்ட தகுதிகளின் அடிப்படையில் மட்டுமே ஊராட்சி அளவிலான தேர்வுக்குழுவால் சமையலர் பணி நியமனம் நடைபெறும். மேற்படி, சமையலர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடைய மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட ஊராட்சி அளவிலான குழுவிடம் வருகிற 23-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு கலெக்டர் கற்பகம் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • பிரம்மதேசம் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது
    • அலங்கரிக்கப்பட்ட 30 அடி உயரமுள்ள தேரில் செல்லியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து மங்களமேடு அருகே உள்ள பிரம்மதேசம் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 9-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் செல்லியம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட 30 அடி உயரமுள்ள தேரில் செல்லியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பின்னர் ஓம் சக்தி, பராசக்தி என பக்தி கோஷங்கள் முழங்க தேரை பக்தர்கள் வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்து சென்றனர். பின்னர் தேர் நிலையை வந்தடைந்தது. விழாவில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிகண்டபுரம், அனுக்கூர், தேவையூர், வேப்பந்தட்டை உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பிரம்மதேசம் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.



    • கண்காணிப்பு கேமிரா பழுது நீக்கும் தொழில் செய்பவர் வீட்டில் கொள்ளை
    • மோப்பநாய் உதவியுடன் போலீசார் விசாரணை

    பெரம்பலூர்,

    அன்னை இந்திரா நகரில் வசித்து வருபவர் குணசேகரன். இவரது மகன் கிஷோர்குமார்(வயது 32). இவர் தனது சொந்த வீட்டின் ஒரு பகுதியில் கண்காணிப்பு கேமரா, குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் மற்றும் யூ.பி.எஸ். உபகரணங்கள் பழுதுநீக்கும் வேலை செய்து வருகிறார். இவர் தனது சொந்த ஊரான குன்னம் தாலுகா வடக்கலூரில் நேற்று முன்தினம் நடந்த கோவில் திருவிழாவிற்கு குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை அவர் பெரம்பலூருக்கு திரும்பினார். வீட்டிற்கு சென்றபோது முன்பக்க கதவை திறக்க முடியவில்லை. கதவு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்து. இதனால் வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தபோது பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு, திறந்தபடி கிடந்தன.இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த தாலிச்சங்கிலி, கம்மல் மற்றும் தங்கச்சங்கிலி உள்பட 7 பவுன் நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து பெரம்பலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை பிரிவு போலீசார் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து நகைகள் மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் அரசு கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • பணிக்கு வரவேண்டாம் என்று கல்லூரி நிர்வாகம் கூறியதால் போராட்டம்

    பெரம்பலூர்,

    பெரம்பலூரை அடுத்த குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்கலைக்கழக ஒப்பந்த அடிப்படையில் ஜெயலட்சுமி உள்பட 4 பேர் துப்புரவு பணியாளர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்களை 1-ந் தேதி முதல் பணிக்கு வர வேண்டாம் என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்துவிட்டது. இதைத்தொடர்ந்து நேற்று கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள் ஜெயலட்சுமி தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். கல்லூரி கல்வி இயக்ககம் துப்புரவு பணியாளர்களை அவுட் சோர்சிங் மூலமாக நிரப்ப உத்தரவு பிறப்பித்ததை கைவிடக்கோரியும், தங்களை பல்கலைக்கழக ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்த வலியுறுத்தியும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை முதல் மதியம் வரை இந்த போராட்டம் நடைபெற்றது.

    • 1634 லிட்டர் மதுபான பாட்டில்கள் பறிமுதல்
    • பெரம்பலூர் போலீசார் அதிரடி நடவடிக்கை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி அறிவுரையின்பேரில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் மேற்பார்வையில், பெரம்பலூர் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பழனிச்சாமி (பெரம்பலூர்), சீராளன் (மங்களமேடு), போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களை கொண்டு போலீஸ் குழுவினர் மாவட்டம் முழுவதும் மதுவேட்டை நடத்தினர்.இதில் மது விற்ற 38 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து சுமார் 1,634 லிட்டர் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சாராயம் விற்றதாக ஒருவர் மற்றும் மது விற்றதாக 6 பேரை போலீசார் கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மாவட்டத்தில் மொத்தம் 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் ரூ.58 ஆயிரம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட சாராயம் தயாரித்தால் அல்லது விற்பனை செய்தால் மாவட்ட போலீஸ் அலுவலக செல்போன் எண் 94981 00690-ஐ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ×