என் மலர்
பெரம்பலூர்
- பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி 10, 11-ம் தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்தது
- 400-க்கு மேல் 126 மாணவர்கள் பெற்றுள்ளனர்.
பெரம்பலூர்,
10 மற்றும் 11ம்வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அதிக மார்க் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளது. 2023 ஏப்ரல் மாதம் நடந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர் விக்னேஸ்வரன் 500-க்கு 493 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மாணவர் அஜய் 489 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், மாணவர் சைலாஸ் 484 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.
மேலும் அறிவியலில் 9 பேரும், கணிதத்தில் 7 பேரும், சமூக அறிவியலில் ஒருவரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்வு எழுதியவர்களில் 480-க்கு மேல் 11 மாணவர்களும், 450-க்கு மேல் 57 மாணவர்களும், 400-க்கு மேல் 126 மாணவர்களும் பெற்றுள்ளனர்.இதே போல் 11-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாணவி காமலி 600-க்கு 583 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மாணவி சுவேதா 582 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், மாணவி ஹர்சினி 579 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.
இயற்பியலில் 3 பேரும், உயிரியியல் மற்றும் கணக்குபதிவியில் ஆகிய பாடங்களில் தலா ஒருவரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும் 570 மதிப்பெண்களுக்கு மேல் 9 பேரும், 550 மார்க்கு மேல் 63 பேரும், 500க்கு மேல் 222 பேரும் பெற்றுள்ளனர்.அதிக மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளையும், உறுதுணையாக இருந்த பள்ளி முதல்வர் கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்களையும் ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவன குழும தலைவர் சிவசுப்ரமணியம், செயலாளர் விவேகானந்தன் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.
- வேளாண் வளர்ச்சிக்காக பெரம்பலூரில் 25 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.18.63 லட்சம் நிதி ஒதுக்கபட்டுள்ளது
- திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 25 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.18.63 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தோட்டக்கலை துணை இயக்குநர் இந்திரா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் 25 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
நடப்பு நிதியாண்டில் (2023-24) இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 25 கிராம ஊராட்சிகளில் காய்கறி சாகுபடியை ஊக்குவித்தல், ஊட்டச்சத்து தன்னிறைவை மேம்படுத்த பழச்செடி தொகுப்புகள் வழங்குதல் மற்றும் பல்லாண்டு தோட்டக்கலை பயிர்கள் பரப்பு விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் நடைபெறும். இத்திட்டத்தில் பயனடைய பெண்கள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகியோ அல்லது இணையதளத்தின் மூலமாக பதிவு செய்தோ பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாடு சிமெண்டு கழகத்தின் விற்பனை முகவராக ஆதிதிராவிடர்-பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள் தமிழ்நாடு சிமெண்டு கழகத்தின் விற்பனை முகவராக வயது வரம்பு 18 முதல் 65 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும்
பெரம்பலூர்:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு சிமெண்டு கழகத்தின் விற்பனை முகவர் திட்டத்தில் வருவாய் ஈட்டிட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்கள் விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் தமிழ்நாடு சிமெண்டு விற்பனை முகவர் திட்டத்தை அறிவித்தார்.
இத்திட்டத்தில் 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்கள் தமிழ்நாடு சிமெண்டு கழகத்தின் விற்பனை முகவராகவும் மற்றும் இதர கட்டுமான பொருட்கள் மூலம் விற்பனை செய்து வருவாய் ஈட்டிட தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள் தமிழ்நாடு சிமெண்டு கழகத்தின் விற்பனை முகவராக வயது வரம்பு 18 முதல் 65 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும்.
திட்டத்தொகையில் 30 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.2¼ லட்சம் மானியமும் மற்றும் பழங்குடியினர் தனி நபர்களுக்கான திட்ட தொகையில் 50 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.3¾ லட்சம் மானியம் அளிக்கப்படும். இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் www.tahdco.co என்ற இணையதள முகவரியில் புகைப்படம் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும். மேலும், விவரங்களுக்கு பெரம்பலூர் ஆர்.டி.ஓ. வளாகத்தில் இயங்கி வரும் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை நேரில் அணுகலாம் என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
- பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 3 லட்சத்து 43 ஆயிரம் டன் கரும்பு அருவை செய்யப்பட்டது
- வெளி ஆலைக்கு 17 ஆயிரத்து 423 டன் அனுப்பப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூர் கிராமத்தில் பெரம்பலூர் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் 2022-23-ம் ஆண்டிற்கான கரும்பு அரவை பணி கடந்த டிசம்பர் மாதம் 22-ந்தேதி தொடங்கியது. கரும்பு அரவை பணி நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. 144 நாட்களில் சுமார் 3 லட்சத்து 43 ஆயிரத்து 772 டன் கரும்பு அரைக்கப்பட்டிருக்கிறது. ஆலையில் சுமார் 3 லட்சத்து 29 ஆயிரத்து 104 குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. வெளி ஆலைக்கு 17 ஆயிரத்து 423 டன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் கரும்பு விவசாயிகளுக்கு இதுவரை இல்லாத வகையில் உடனுக்குடன் பணம் வழங்க ஆணையிட்ட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சருக்கும் அனைத்து கரும்பு விவசாயிகள் நன்றியை தெரிவித்து கொண்டனர்.
- அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது
- தீ மிதிக்கும் பக்தர்கள் காப்புக்கட்டி கொண்டு பூ கரகம் ஜோடிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வந்தனர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள வாலிகண்டபுரத்தில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 6-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேக, ஆராதனைகள், இரவு கரக திருவிழா மற்றும் அம்மன் வீதியுலா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக நேற்று மதியம் தீ மிதிக்கும் பக்தர்கள் காப்புக்கட்டி கொண்டு பூ கரகம் ஜோடிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
பின்னர் கோவில் அருகே உள்ள அக்னி குண்டத்தில் பக்தர்கள் ஒவ்வொருவராக இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைத் தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகமும், இரவு தெருக்கூத்து நிகழ்ச்சியும் நடைபெற்றது. தீமிதி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- பார்த்திபனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பரிந்துரை செய்தார்.
- பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து பார்த்திபனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 27). இவர்17 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்கார செய்தார். இது தொடர்பான புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து பார்த்திபனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பார்த்திபனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பரிந்துரை செய்தார்.
அவரின் பரிந்துரையை ஏற்று பார்த்திபனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கற்பகம் நேற்று உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து பார்த்திபனை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவின் நகலை பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் திருச்சி மத்திய சிறை உயர் அதிகாரிகளிடம் வழங்கினர். பார்த்திபனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சிறப்பாக பணிபுரிந்த பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கலா, ஏட்டு பார்வதி ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பாராட்டினார்.
- பெரம்பலூரில் நடைபெற்று வரும் சாலை பணிகள் தரம் குறித்து ஆய்வு
- கண்காணிப்பு பொறியாளர் தலைமையில் நடைபெற்றது
பெரம்பலூர்,
பெரம்பலூர்- மானாமதுரை சாலை முதல் அருமடல் சாலை, வேப்பந்தட்டை உட்கோட்டத்தில் உள்ள சின்னாறு சந்திப்பு முதல் எறையூர் சாலை (வழி) சர்க்கரை ஆலை சாலை வரையும், மேலமாத்தூர்-ஆதனூர் சாலை (வழி) பெரியம்மாபாளையம் சாலை ஆகிய சாலைப்பணிகளை சென்னை வட்ட திட்டங்கள் அலகு கண்காணிப்புப் பொறியாளர் தனசேகர் தலைமையிலான உள் தணிக்கைக் குழுவினர் நேரில் பார்வையிட்டு சாலையின் தரம் குறித்து கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது பெரம்பலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் கலைவாணி. சென்னை திட்டங்கள் அலகு கோட்டப்பொறியாளர் அருணா , உதவிக்கோட்ட பொறியாளர்கள் தமிழ்அமுதன், கோவிந்தராஜன் (திட்ட அலகு), செல்வராஜ் (தரக்கட்டுப்பாடு) ஆகியோர் உடனிருந்தனர்.
- பென்னக்கோணம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டார்
- விசாரணைக்கு பின்னர் போலீசார் சிறையில் அடைத்தனர்
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து லப்பை குடிக்காடு அருகேயுள்ள பென்னகோனம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி .இவர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது மகன் சந்தோஷ்குமார் துபாயில் டிரேடிங் செய்து ஐந்து சதவீத வட்டி தருவதாக கூறி தொழில் செய்து வந்துள்ளார். இதே தொழிலை பெரம்பலூர் மற்றும் சென்னையில் அலுவலகம் அமைத்து 5 சதவீத வட்டி தருவதாக கூறி சுமார் 1300 கோடி ரூபாய் ஆயிரக்கணக்கான பேரிடம் வசூல் செய்து கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக ஒருவருக்கும் வட்டி தொகை தராததைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்திருந்தனர்.இதன் அடிப்படையில் சந்தோஷ் குமாரின் மனைவி சிவசங்கரி சென்னையில் வைத்து கைது செய்தனர். இந்த நிலையில் பென்னகோணம் ஊராட்சி மன்ற தலைவரும் சந்தோஷ் குமார் என்பவருடைய தாயாருமான ஜெயலட்சுமி மீது மங்களமேடு காவல் நிலையத்தில் சுமார் 5 கோடியே இருவது லட்சம் பண மோசடி புகாரை சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த வினோத்துடன் ஐந்து பேர் புகார் அளித்திருந்தனர் .புகாரை விசாரித்த மங்களமேடு போலீசார் ஜெயலட்சுமியை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததை தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு தபால் அனுப்பப்பட்டது
- வைத்தியநாதபுர தபால் நிலையத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட தபால்கள் அனுப்பப்பட்டது
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து மங்களமேடு அருகே வைத்தியநாதபுரம் கிராமத்தில் பாமக மற்றும் வன்னியர் நிர்வாகிகள் வன்னியர்களுக்கு 10.5% சதவீத இட ஒதுக்கீடு நிறைவேற்ற கோரிசெங்கல்பட்டு பாமக மாவட்ட துணை தலைவர் பழனிவேல் தலைமையில் மாண்புமிகு உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு தபால் மூலம் கடிதம் அனுப்பும் போராட்டம் கிராம முக்கிய வீதி வழியாக 300- க்கும் மேற்பட்ட தபால்களை எடுத்து கொண்டு அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று அலுவளகத்தில் உள்ள தபால் அதிகாரியிடம் மனுக்களை கையில் கொடுத்தனர்.இந்நிகழ்ச்சியில் முன்னாள் வன்னியர் சங்க ஒன்றிய தலைவர் இராமசாமி,கிளை செயலாளர் கலையரசன், பாமக நிர்வாகிகள் கண்ணன்,ராமநாதன்,மஞ்சன்,பெரியசாமி எஸ். பி.ஆர்.அருண், வினித்,ச ங்கர்,மணிகண்டன்,விக்கி, அதியமான், பிரகாஷ், பாண்டியன், ஜயப்பன்,ராமலிங்கம், தங்கராசு, தேவேந்திரன்,ராசு உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட விதை பரிசோதனை நிலையத்தில் ஆய்வு நடைபெற்றது
- விதை பரிசோதனை அலுவலர் ஆனந்தி ராதிகா மேற்கொண்டார்
பெரம்பலூர்,மே.19-
பெரம்பலூர் மாவட்ட மைய நூலகம் அருகில் உள்ள மாவட்ட விதை பரிசோதனை நிலையத்தில் திருநெல்வேலி மாவட்ட விதைப்பரிசோதனை அலுவலர் ஆனந்தி ராதிகா தொழில்நுட்பு ஆய்வு மேற்கொண்டார்.அப்போது விதைப்பரிசோதனை நிலையத்தில் பயன்படுத்தப்படும் உபகரணங்களின் செயல்பாடுகள் மற்றும் பதிவேடுகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.மேலும் 2022-2023 ஆம் ஆண்டு இலக்கு 2 ஆயிரத்து 800 விதை மாதிரிகளுக்கு 2 ஆயிரத்து 962 விதை மாதிரிகள் பகுப்பாய்வு செய்து சாதனை அடையப்பட்டுள்ளது. அதில் 256 விதை மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டு ள்ளதையும் ஆய்வு செய்தார்.விதையின் தரத்தை அறிந்திட முளைப்புதிறன், ஈரப்பதம், புறந்தூய்மை மற்றும் பிற ரக கலப்பு ஆகிய பரிசோதனைகள் முறையாக செய்யப்படுகிறதா எனவும், விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் விதைகள் கிடைத்திட பகுப்பாய்வு முடிவுகள் இணையதளத்தின் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு உடனுக்குடன் வழங்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தார்.விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைத்திடவும், பகுப்பாய்வு முடிவுகளை உரிய காலத்தில் வழங்கிடவும் வேளாண் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.filஆய்வின் போது வேளாண்மை அலுவலர்கள் தயாமதி, ஆஷாலதா, உதவியாளர் ஆனந்தராஜ், ஆய்வக உதவி யாளர் ஜெயமோனிகாமேரி ஆகியோர் உடனிருந்தனர்.
- கல்குவாரியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த டெட்டனேட்டர்கள் பறிமுதல்
- வருவாய் கோட்டாட்சியர் ஆய்வில் சிக்கியது
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை(வயது 50). இவர் மருவத்தூர் அருகே உள்ள கல்பாடி கிராமத்தில் அரசு அனுமதி பெற்று கல்குவாரி நடத்தி வருகிறார். இந்நிலையில் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி நேற்று அந்த கல்குவாரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த கல் குவாரியில் பாறைகளை வெடி வைத்து தகர்க்க பயன்படுத்தக்கூடிய 100 டெட்டனேட்டர்களை பாதுகாப்பற்ற முறையில் திறந்த வெளியில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட கோட்டாட்சியர் நிறைமதி, பாதுகாப்பின்றி திறந்த வெளியில் வைத்திருந்த டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்து, உரிய கிடங்கில் வைத்து பாதுகாக்குமாறு உத்தரவிட்டார். மேலும் அதற்குரிய ஆவணங்களை சரி பார்த்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பெரம்பலூர் மாவட்ட மதிமுக செயலாளராக ஜெயசீலன் தேர்தெடுக்கப்பட்டு உள்ளார்
- 5வது அமைப்பு தேர்தலில் தேர்தெடுக்கப்பட்டார்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான 5-வது அமைப்பு தேர்தல் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டல் கூட்டரங்கில் நடந்தது.இதில் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் வந்தியத்தேவன், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர்களான ரோவர் வரதராஜன், துரைராஜ் ஆகியோர் முன்னிலையில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க.வின் புதிய நிர்வாகிகளாக மாவட்ட அவைத்தலைவராக அய்யலூர் சுப்பிரமணியனும், மாவட்ட செயலாளராக செ.ஜெயசீலனும், மாவட்ட பொருளாளராக பேரளி சரவணனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி கவுன்சிலர் ரபியுதினும், மாவட்ட துணைச் செயலாளர்களாக ஆசிரியர் காமராஜ், கே.எஸ்.ரெங்கராஜ், அடைக்கப்பட்டி எல்.ஐ.சி. பாண்டியன், மங்கையர்கரசி சிகமணி ஆகியோரும், தலைமை பொதுக்குழு உறுப்பினர்களாக மெடிக்கல் முத்து, வெண்மணி ராஜசேகர், பம்பரம் பழனிமுத்து, அம்மாபாளையம் ஆசிரியர் துரைராஜ் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தேர்ந்தெடுக்கப்பட்ட பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க. புதிய நிர்வாகிகள் அனைவரும் சென்னை சென்று ம.தி.மு.க தலைமை அலுவலகமான தாயகத்தில் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் தலைமை கழக செயலாளர் துரை வைகோ, உயர்நிலை குழு உறுப்பினரும், அரியலூர் சட்டமன்ற உறுப்பினரான சின்னப்பா ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். ஏற்கனவே ம.தி.மு.க. தலைமை பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளராக ஜெயசீலனை நியமித்த நிலையில் இப்பொழுது. அமைப்பு தேர்தலின் மூலம் அவர் மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






