என் மலர்
பெரம்பலூர்
- தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடனுதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
- ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் (டாப்செட்கோ) கடன் திட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த தனி நபர்கள் மற்றும் குழுக்கள் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.பொது கால கடன் திட்டம் அல்லது தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது. பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம் ஆகும்.
நுண்கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1¼ லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதம் ஆகும். மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும். மகளிர் திட்ட அலுவலரால் தரம் (கிரேடிங்) செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
நுண்கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்கள் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1¼ லட்சம் வரையும், ஒரு குழுவிற்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம் ஆகும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள், அனுமதிக்கப்படுவார்கள்.பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம் ஆகும். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும் பெற்று கடன் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சாதி, வருமானம் மற்றும் பிறப்பிட சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இவர் மீது பெரம்பலூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடிதடி வழக்கு, கஞ்சா விற்பனை உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன
- ரவிகரணை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்திரவிடுமாறு மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பரிந்துரை செய்தார்
பெரம்பலூர்:
பெரம்பலூரில் துறைமங்கலத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ராமநாதன். இவரது மகன் ரவிகரண் (வயது 30). இவர் மீது பெரம்பலூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடிதடி வழக்கு, கஞ்சா விற்பனை உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் ரவிகரண் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெரம்பலூரில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான ரவிகரணை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்திரவிடுமாறு மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் கலெக்டர் கற்பகம் உத்திரவின் பேரில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவிகரண் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவின் நகல் அவருக்கு வழங்கப்பட்டது. மேலும், ரவிகரணை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சிறப்பாக பணிபுரிந்த பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீஸ் ஏட்டு செல்வராணி ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பாராட்டினார்.
- பெரம்பலூரில் ஆசை வார்த்தை கூறி ரூ.8 கோடி மோசடி செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்
- இந்த வழக்கில் தொடர்புடைய ராதிகாவை அவரது சொந்த ஊரில் போலீசார் கைது செய்து அழைத்து வந்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, அணைப்பாடி கிராமத்தை சேர்ந்த தனவேல் என்பவர், ஜேஎன்ஆர் டிரேடிங் என்ற என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் 10 சதவீதம் லாபம் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தை கூறியதை நம்பி பணத்தை கட்டி ஏமாந்துவிட்டதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.இதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிந்துவிசாரணை நடத்தியதில், கன்னியா குமரி மாவட்டம், கடியா ப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த ஸ்டனிஸ்லாஸ் மகன் ஜெயபால், தோவாலை தாலுகா, விஷ்ணுபுரத்தை சேர்ந்த மதன் என்பவரின் மனைவி ராதிகா (வயது 28), அதே நிறுவனத்தை சேர்ந்த தர்மராஜ் ஆகியோர் புகார்தாரர் தனவேல் மற்றும் சில நபர்களிடமிருந்து ரூ. 8 கோடியே ஒரு லட்சத்தை ஆசை வார்த்தை கூறி பெற்று ஏமாற்றியது தெரியவந்தது.
இதையடுத்து எஸ்பி ஷ்யாம்ளாதேவி உத்தரவி ன்பேரில், ஏடிஎஸ்பி மதியழகன், மாவட்ட குற்றப்பிரிவி டிஎஸ்பி தங்கவேல் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் விஜய லெட்சுமி தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ராதிகாவை அவரது சொந்த ஊரில் போலீசார் கைது செய்து அழைத்து வந்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பெரம்பலூரில் நீட் தேர்வு மையம் அமைக்க கோரிக்கை வைத்தனர்
- கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் மக்கள் சக்தி இயக்கத்தின் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், பெரம்பலூரில் கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் அதிகம் உள்ளதால், மாவட்ட தலைநகர் என்ற அடிப்படையில் 'நீட்' தேர்வு மையம் அமைக்க வேண்டும். நீண்ட காலமாக கிடப்பில் வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். போக்குவரத்து நெருக்கடியாக உள்ள வடக்குமாதவி சாலையில் இருந்து எளம்பலூர் சாலையை உழவர் சந்தை அருகே இணைத்திட வேண்டும். துறைமங்கலத்தில் அமைந்துள்ள நகர்ப்புற சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
- அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- போலீசாரை கண்டதும் இன்னாசி தப்பி ஓடிவிட்டார்
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் போலீசார் அன்னமங்கலம் பகுதியில் தீவிர கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்த இன்னாசி (வயது 40) என்பவர் வீட்டில் சோதனையிட்டபோது அவரது வீட்டில் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். போலீசாரை கண்டதும் இன்னாசி தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய இன்னாசியை வலைவீசி தேடி வருகின்றனர்.
- சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது
- அன்னதான நிகழ்ச்சி தினந்தோறும் நடந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரில் உள்ள ஆதிசங்கரர் வழிபட்ட பெருமைபெற்ற ஸ்ரீமதுரகாளியம்மன் கோவிலில் ராஜகோபுரம் மற்றும் பெரியசாமி மலையில் உள்ள சுதை சிற்பங்கள் புதுப்பிக்கப்பட்டு பெரியசாமி மலைக்கோவிலுக்கு கடந்த மாதம் 3-ந் தேதியும், ஸ்ரீமதுரகாளியம்மன் கோவிலுக்கு 5-ந் தேதியும் அஷ்டபந்தன மகா கும்பாபிேஷகங்கள் விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகம் நடந்து முடிந்த மறுநாள் முதல் மண்டல பூஜை தொடங்கி தினந்தோறும் மண்டல அபிஷேக விழா நடந்தது.
கடந்த 20-ந் தேதி பெரியசாமி மலைக்கோவிலில் மண்டலபூஜை நிறைவுவிழா நடந்தது. இதில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதால், ஆண் பக்தர்கள் திரளானவர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். ஸ்ரீமதுரகாளியம்மன் கோவிலில் நேற்று மண்டலாபிஷேக நிறைவுவிழா நடந்தது. இதனை முன்னிட்டு கோவில் பிரகாரத்தில் உற்சவ அம்பாள் அலங்கரித்து வைத்து 2 கால யாகசாலை பூஜைகள் நடந்தன. கும்பகலசத்திற்கு சிறப்பு பூஜைகளும் நடந்தன.
யாகசாலை மற்றும் கும்ப பூஜைகளை திருமணஞ்சேரி உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார் குழுவினர் நடத்திவைத்தனர். அதனைத்தொடர்ந்து கடம்புறப்பாடும் நடந்தது. மூலவர் சன்னதியில் மதுரகாளியம்மனுக்கு கலச நீர் அபிஷேகம் செய்விக்கப்பட்டு, பக்தர்கள் மீது கோவில் பூசாரியார்கள் புனிதநீரை தெளித்தனர். மண்டலாபிஷேக நிறைவுவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அசனாம்பிகை மற்றும் திருப்பணிக்குழுவினர், இந்துசமய அறநிலையத்துறையினர், சேவார்த்திகள் செய்திருந்தனர். கும்பாபிஷேகம் தொடங்கி மண்டல அபிஷேக நிறைவு விழா நேற்று வரை 48 நாட்களும் கோவில் திருமணமண்டபத்தில் மகா அன்னதான நிகழ்ச்சி தினந்தோறும் நடந்தது.
- வாலிகண்டபுரத்தில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யபட்டார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள வாலிகண்டபுரம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் மங்கலமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது கடலூர் மாவட்டம் தொழுதூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்தையா மகன் காசிநாதன் வயது (30) இவர் தனது இருசக்கர வாகனத்தில் லாட்டரி சீட்டு விற்பனைசெய்து கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து அவரை கையும் களவுமாக பிடித்த மங்களமேடு போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மின்னல் தாக்கி பசு மாடு இறந்தது
- இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் அங்கமுத்து(வயது50). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான வயலில் கொட்டகை அமைத்து மாடு வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வரும் 3 மாடுகளையும் நேற்று முன்தினம் மாலை மேய்ச்சல் முடிந்த பிறகு கொட்டகையில் கட்டி விட்டு கிராமத்தில் உள்ள சொந்த வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று காலை கொட்டகைக்கு சென்று பார்த்தபோது அவரது பசு மாடுகளில் ஒன்று மின்னல் தாக்கி உயிரிழந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் தனது பசுமாடு உயிரிழந்ததால் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விட்டதாகவும், தனக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரம்பலூர் மாவட்டம் தபால் கீரனூரில் மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்த தபால் கீரனூர் கிராமத்தில் அமைந்துள்ள மூப்பனார் மற்றும் மகா மாரியம்மன் கோவிலில் 2-ம் ஆண்டு சித்திரை தேர்த்திருவிழா நடைபெற்றது. இதற்காக மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் எழுந்தருளிய தேரோட்டம் நடைபெற்றது. தபால் கீரனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தது. திருவிழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தபால் கீரனூர் பொதுமக்கள் இளைஞர்கள், துபாய் வாழ் பக்தர்கள் செய்திருந்தனர்.
- சிறுபான்மையின மக்கள் டாம்கோ மூலம் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும் கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
பெரம்பலூர்:
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனி நபர் கடன், சுய உதவிக்குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும் கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
1-ன் கீழ் தனி நபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சம் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம் வட்டி விகிதத்திலும், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30 லட்சம் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழுக்கடன் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் ஆண்டுக்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.
திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1½ லட்சம் கடன் வழங்கப்படுகிறது. மேலும், சிறுபான்மையின மாணவ-மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை/ முதுகலை தொழிற்கல்வி / தொழில்நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கு அதிக பட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20 லட்சம் வரையில் 3 சதவீதம் வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்திலும் ரூ.30 லட்சம் வரை கல்விக்கடன் உதவி வழங்கப்படுகிறது.
கடன் மனுக்களுடன் தாங்கள் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிட சான்று, கடன் பெரும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுனர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்றுச்சான்றிதழ், உண்மை சான்றிதழ், கல்விக்கட்டணங்கள் செலுத்திய ரசீது, செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் மேற்காணும் திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பினால் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் கடன் விண்ணப்பங்களை பெற்று அதை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
- சாலையில் நடந்து சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்
- இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்,
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரில் பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையம் அருகே நேற்று மாலை நடந்து சென்று கொண்டிருந்த ஆண் ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்தார். இதனை கண்டவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது. ஆனால் மயங்கி விழுந்தவரை மருத்துவ உதவியாளர் பரிசோதனை செய்ததில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுகா, கல்யாணம் பூண்டி கிராமம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 43) என்பது தெரியவந்தது. நேற்று பகல் நேரத்தில் பெரம்பலூரில் வெயில் கடுமையாக கொளுத்தியது. இதனால் ராமமூர்த்தி சுருண்டு மயங்கி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போக்சோ குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
- எஸ்.பி. பரிந்துரையின்பேரில் கலெக்டர் கற்பகம் போக்சோ குற்றவாளியாக பார்த்திபனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை கிராமத்தைச் சேர்ந்தtu; பாஸ்கர் மகன் பார்த்திபன் (27). இவர் 17 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து பார்த்திபனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் எஸ்.பி. பரிந்துரையின்பேரில் கலெக்டர் கற்பகம் போக்சோ குற்றவாளியாக பார்த்திபனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதன்பேரில் பார்த்திபன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.






