என் மலர்
பெரம்பலூர்
- கீழக்கரை பகுதியில் வரத்துவாரிகள் தூர்வாரும் பணிகளை கலெக்டர் கற்பகம் நேரில் ஆய்வு செய்தார்
- நீர் தங்கு தடையின்றி வெளியேறிட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கிராம குட்டைகள், குளங்கள் மற்றும் வரத்து வாரி தூர்வாரும் பணிகளை வேளாண்மை பொறியியல் துறை அலுவலக இயந்திரங்களை கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டம் கீழக்கரை பகுதியில் உள்ள தடுப்பணையில் நீர் தங்கும் பரப்பில் உள்ள முட்புதர்கள் அகற்றி வண்டல் மண் தூர்வாரி கரைகளை பலப்படுத்தி செய்யப்பட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் நீர்வள தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி நீர்வரத்து பரப்பினை அதிகப்படுத்திடவும், தடுப்பணையின் கீழ் உள்ள வாரிகளை அகலப்படுத்திடவும், நீர் தங்கு தடையின்றி வெளியேறிடவும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த நிகழ்வுகளில் இணை இயக்குனர் (வேளாண்மை துறை) சங்கர்.எஸ்.நாராயணன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் யுவராஜ், உதவி செயற்பொறியாளர்.அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் சுற்றுலா பஸ் கார் மீது மோதியதில் 18 பேர் காயம் அடைந்தனர்.
- இந்த விபத்து குறித்து பெரம்பலூர் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பெரம்பலூர்:
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 41 பேர் தமிழ்நாட்டிற்கு பஸ் மூலம் சுற்றுலா வந்துள்ளனர். இந்த பஸ்சை ரமேஷ் (வயது 51) என்பவர் ஓட்டி சென்றார். ஆந்திர மாநில சுற்றுலா பயணிகள் நாகர்கோவிலில் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு சென்னையில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர்.இதற்காக அவர்கள் பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் சிறுவாச்சூர் சர்வீஸ் ரோடு அருகே நேற்று அதிகாலை பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர்.
சிறுவாச்சூர் பாலத்தின் அருகே சர்வீஸ் ரோட்டில் கீழே இறங்கும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்ற பஸ் அந்த வழியாக சென்ற கார் மீது மோதி பாலத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கார் டிரைவர் சென்னையை சேர்ந்த கிறிஸ்டோபர் (53), காரில் பயணம் செய்த பிரின்ஸ் (48), சியாந்த் (17), பஸ் டிரைவர் ரமேஷ், கண்டக்டர் சாய் (31), பஸ்சில் பயணம் செய்த பயணிகள் உள்பட 15 பேர் லேசான காயமும், 3 பேர் படுகாயமும் அடைந்தனர். இவர்களில் 5 பேர் பெண்கள் ஆவர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதையடுத்து, காயம் அடைந்த 18 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதில் படுகாயம் அடைந்த 3 பேர் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் குணசீலன் தலைமை வகித்தார்.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறறது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் குணசீலன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும், மாவட்ட பொறுப்பாளருமான வரகூர் அருணாசலம், முன்னாள் எம்.பி.க்கள் மருதராஜா, சந்திரகாசி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழ்செல்வன், பூவைசெழியன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வரகூர் அருணாசலம் பேசுகையில், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் முறைகேடுகள் நடந்து வருகிறது.
கள்ளச்சாராயம் மற்றும் போலிமதுபானங்களால் தொடர் இறப்பு ஏற்படுகிறது. கொலை, கொள்ளை, வழிப்பறி, போதை பொருட்கள் புழக்கம் ஆகியவை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த அரசு தவறி வருகிறது. இதனால் தி.மு.க. அரசை கண்டித்தும், இதற்கு முழு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலகவேண்டும் என தெரிவித்தார்.இதில் தமிழக அரசை கண்டித்து வரும் 29-ந் தேதி பெரம்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, இதில் பெருந்திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை சிறப்பிப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், செல்வக்குமார், சிவப்பிரகாசம், செல்வமணி, ரவிச்சந்திரன், சசிக்குமார், மாவட்ட அணி நிர்வாகிகள் ராஜாராம், ராணி, ராஜேஸ்வரி, லெட்சுமி, முத்தமிழ்செல்வன், ராஜேந்திரன், கருணாநிதி மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்பாளர்கள் மாவட்ட அணி செயலாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நகர செயலாளர் ராஜபூபதி வரவேற்றார். முடிவில் குரும்பலூர் பேரூர் செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
- அத்தியூர் கிராமத்தில் புதிய சிமெண்ட் சாலை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்
- சாலை அமைத்து 4-மாதங்களிலேயே இச் சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளதால் மழை காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கக்கூடிய சூழ்நிலையில் உள்ளது.
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து அத்தியூர் கிராமத்தில் 2-வது வார்டு கக்கன்ஜி நகரில் சுமார் 5.66 லட்சம் மதிப்பீட்டில் கடந்த நான்கு மாதங்களுக்கு சிமெண்ட் சாலை அமைத்துள்ளனர். அப்போதே இந்த சாலை தரமற்றதாக உள்ளதாக அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. சாலை அமைத்து 4-மாதங்களிலேயே இச் சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளதால் மழை காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கக்கூடிய சூழ்நிலையில் உள்ளது. எனவே தரமற்ற இந்த சிமெண்ட் சாலையை அகற்றி தரமான சிமெண்ட் சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுத்து தரமான சிமெண்ட் சாலை அமைக்க இப்பகுதி மக்கள் கோரிக்கையாக வைக்கின்றனர்.
- நோய் அவதியால் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்
- இதுகுறித்து பாடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் கவுண்டர் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 70). இவரது மனைவி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு தீராத நீரிழிவு நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த கோவிந்தன் வீட்டில் தனியாக இருக்கும் போது பூச்சி கொல்லி மருந்தை குடித்துவிட்டார். இதையடுத்து உறவினர்கள் கோவிந்தனை துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த கோவிந்தன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து பாடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் உட்பட இருவர் பலியானர்
- இச்சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அகரம்சீகூர்,
அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மங்களமேடு இ.பி ஆபிஸ் எதிரே இருசக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத 2 நபர் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தில் மோதியதில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் 25 வயது மதிக்கத்தக்க பெண் உட்பட இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானர். தகவல் அறிந்து வந்த மங்களமேடு காவல்துறையினர் இறந்தவர்களின் உடல்நிலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சிறப்பு மனு முகாம் நடைபெற்றது.
- போலீஸ் அலுவலக வளாகத்தில் நடந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் பொதுமக்கள் சிறப்பு மனு முகாம் நேற்று நடந்தது. முகாமை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தொடங்கி வைத்தார். இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்கள், சிறப்பு பிரிவு காவல்துறையினர் கலந்து கொண்டார்கள். இந்த சிறப்பு மனு முகாம் மூலம் பொதுமக்களிடம் இருந்து 24 மனுக்கள் பெற்றப்பட்டு அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
- நவோதயா பள்ளியை பெரம்பலூரில் தொடங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பெரம்பலூர்:
பெரம்பலூர் பா.ஜனதா மாவட்ட செயற்குழு கூட்டம் துறைமங்கலத்தில் உள்ள தனியார் மகாலில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் பா.ஜனதா பிற்பட்டோர் பிரிவு அணியின் மாநில செயலாளர் சாய்குமார் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் 2024-ம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று, பா.ஜனதா ஆட்சி அமைந்திட தீவிர தேர்தல் களப்பணி ஆற்ற வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடைபெறுவதால் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது. எனவே கஞ்சா விற்பனையை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும்.
ஏழை, எளிய அடித்தள மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் மத்திய அரசின் நவோதயா பள்ளியை பெரம்பலூரில் தொடங்க வேண்டும். மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை சரியான பயனாளிகளுக்கு சேர்க்காமல் தி.மு.க.வினருக்கு கொண்டு சேர்க்கும் தி.மு.க. அரசை கண்டிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் சேகர், நகர தலைவர் சுரேஷ் மற்றும் மாவட்ட, மண்டல், நகர பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- 190 மனுக்களுக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
- பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் 1432-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) அனைத்து தாலுகாக்களிலும் கடந்த 16-ந் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் வேப்பந்தட்டை தாலுகாவில் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் பசும்பலூர் மற்றும் வாலிகண்டபுரம் குறுவட்ட பகுதிகளுக்குட்பட்ட திருவாளந்துறை, அகரம், தொண்டபாடி, நெய்குப்பை மற்றும் அனுக்கூர் ஆகிய கிராமங்களிலும், குன்னம் தாலுகாவில் கீழப்புலியூர் குறுவட்ட பகுதிக்குட்பட்ட சித்தளி (கிழக்கு), சித்தளி (மேற்கு), பேரளி (வடக்கு), பேரளி (தெற்கு) மற்றும் ஒதியம் ஆகிய கிராமங்களிலும், ஆலத்தூர் தாலுகாவில் கொளக்காநத்தம் மற்றும் கூத்தூர் குறுவட்ட பகுதிகளுக்குட்பட்ட கொளத்தூர் (கிழக்கு), தொண்டபாடி, மேலமாத்தூர், அழகிரிபாளையம் மற்றும் ஆதனூர் (வடக்கு) ஆகிய கிராமங்களிலும் நடைபெற்றது.
வேப்பந்தட்டை தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில் 192 மனுக்கள் பெறப்பட்டன. குன்னம் தாலுகாவில் 76 மனுக்களும், ஆலத்தூர் தாலுகாவில் 26 மனுக்களும் என மொத்தம் 294 மனுக்கள் பெறப்பட்டன. இதில் வேப்பந்தட்டை தாலுகாவில் 39 மனுக்களும், குன்னம் தாலுகாவில் 41 மனுக்களும், ஆலத்தூர் தாலுகாவில் 24 மனுக்களும் என மொத்தம் 104 மனுக்கள் ஏற்கப்பட்டன. 190 மனுக்களுக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
- விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது
- விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருகிற 31-ந்தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் கற்பகம் தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில், வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், கடனுதவிகள், வேளாண் இடுபொருட்கள், வேளாண் எந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் மற்றும் முறையீடுகள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதால், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.
- காடூர் கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
- பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பெரம்பலூர்:
அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் காடூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு விநாயகர், மாரியம்மன், பொன்னியம்மன், பூர்ணபுஷ்பகலாம்பிகா, சமேத படைகாத்த அய்யனார், செம்மலையப்பா, பூமலையப்பா, முத்தையா , ராகு. கேது, 27 நட்சத்திர லிங்கங்கள், 12 ராசி லிங்கங்கள், 9 கிரக லிங்கங்கள், அஷ்ட லிங்கங்கள், கருப்புசாமி ஆகிய பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய நாளான நேற்று அதிகாலை மங்கள இசையுடன் சிறப்பு பூஜைகள் செய்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகள் காடூர் பரம்பரை அறங்காவலர்கள், கிராம பொதுமக்கள் மற்றும் குலதெய்வ காணியானர்கள், ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
- திருவாலந்துறை கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் 30-ந்தேதி நடக்கிறது.
- இந்த முகாமில் திருவாலந்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முன்னதாகவே மனுக்களை அளித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா திருவாலந்துறை கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது. இந்த முகாமில் திருவாலந்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முன்னதாகவே மனுக்களை அளித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மக்கள் தொடர்புத்திட்ட முகாமிற்கு முன்னதாக பொது சுகாதாரத்துறையின் சார்பில் மருத்துவ முகாம் இன்று (புதன் கிழமை) நடக்கிறது. கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே, மக்கள் தொடர்புத் திட்ட முகாமினை சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் தவறாது பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.






