என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • விளையாட்டு பூங்கா அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது
    • பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று பூங்காவுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், கவுள்பாளையம் கிராமத்தில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் விளையாட்டு பூங்கா அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது.கவுள்பாளையத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு குடியிருப்பு வளாகத்தில் 504 வீடுகள் உள்ளது. இங்கு பொதுமக்கள், மாணவ,மாணவிகள் பொழுதுபோக்கிற்காக பூங்காவுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்படி விளையாட்டு பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது.பூஜை விழா நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் உத்திரக்குமார் தலைவர் வகித்தார். செயலாளர் முருகேசன், பொருளாளர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக லயன்ஸ் கிளப் தலைவர் ஆனந்த் கலந்து கொண்டார். இதில் துணைத் தலைவர் செங்கமலை, துணை செயலாளர்முருகையா மற்றும் உதிரம் நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாலையூரில் அருள்சக்தி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா நடைபெற்றது
    • கொட்டும் மழையில் தேரை வடம் பிடித்து பக்தர்கள் இழுத்தனர்

    வேப்பந்தட்டை,

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூரில் அருள் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேர்திருவிழா கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பூச்சொரிதல் விழா உடன் தொடங்கி 13 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து தினமும் கரகாட்டம் மற்றும் வாண வேடிக்கையுடன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர், மாரியம்மன் திருவீதி உலா ஊரின் முக்கிய வீதிகளில் நடைபெற்றது. நேற்று முன்தினம் பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல், அங்க பிரதட்சணம் செய்தல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்திய பக்தர்கள், பொங்கல், மாவிளக்கு பூஜையிலும் கலந்து கொண்டனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. மேளதாள, வாணவேடிக்கை முழங்க, மாரியம்மன் எழுந்தருளிய திருத்தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுந்தனர். கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர், ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தது. தேரோட்டத்தின் போது, திடீரென மழை பெய்தது. கொட்டும் மழையில் நனைந்தபடியே பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். இன்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.

    • பெரம்பலூர் பகுதியில் சின்ன வெங்காய நடவு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது
    • இப்பகுதி விவசாயிகள் வெங்காயத்தின் விலை அதிகரித்தாலும் அல்லது குறைந்தாலும் பயிர் சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சின்ன வெங்காயம் பயிர் சாகுபடி செய்வோர் அதிகம் உள்ளனர். தற்போது அதற்கான பருவகாலம் என்பதால் நடவு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக விவசாயிகள் முதலில் வயலை நன்கு உழுது இயற்கை உரமான எரு உள்ளிட்டவற்றை நிலத்தில் இட்ட பின்னரே விதை வெங்காயத்தை வயலில் நடவு செய்கின்றனர். இப்பகுதி விவசாயிகள் வெங்காயத்தின் விலை அதிகரித்தாலும் அல்லது குறைந்தாலும் பயிர் சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    • பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் காணாமல்போன நோயாளி ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார்.
    • இறந்த மதியழகனுக்கு சர்மிளா என்ற மனைவியும், 5 வயதில் கபில் வளவன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெரம்பலூர்;

    பெரம்பலூர் சங்குபேட்டை பின்புறம் உள்ள பெரம்பலூர் கீழேரி எனப்படும் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரியில் நேற்று காலை 6.15 மணியளவில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் மிதந்து கொண்டிருந்தார். அவர் உள்ளாடை மட்டும் அணிந்திருந்தார். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஏரியில் பிணமாக மிதந்து கொண்டிருந்த ஆண் உடலை பார்வையிட்டனர்.

    பின்னர் போலீசார் பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் ஏரியில் இருந்து இறந்தவரின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அதனை தொடர்ந்து போலீசார் இறந்தவர் யார்?, அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்?, எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். ஏரியில் பிணமாக மிதந்தவர் கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, கொரக்கவாடி கிராமத்தை சேர்ந்த மருதமுத்துவின் மகன் மதியழகன் (வயது 29) என்பது தெரியவந்தது.

    மதியழகன் அதிக மது போதையில் உயர் ரத்த அழுத்தத்தால் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு மனநலம் சரியில்லாதவர்போல் நடந்து கொண்ட காரணத்தால் சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் கடந்த 24-ந் தேதி காலை 10 மணியளவில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் 25-ந் தேதி மாலை 5 மணியளவில் மருத்துவமனையில் இருந்து மதியழகன் தப்பித்து சென்றவர் மீண்டும் வீட்டிற்கு செல்லவில்லை.

    இதனால் அவரை அவரது குடும்பத்தினர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் மதியழகன் கிடைக்காததால் அவரது குடும்பத்தினர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதியழகனை தேடி வந்தனர். இந்த நிலையில் பெரம்பலூர் வெள்ளந்தாங்கியம்மன் ஏரியில் மதியழகன் நேற்று காலை இறந்த நிலையில் மிதந்து கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    மதியழகன் இறந்தது தொடர்பாக, அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மதியழகன் உடலில் காயங்கள் ஏதும் இல்லாததால், அவர் ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மதியழகனுக்கு சர்மிளா என்ற மனைவியும், 5 வயதில் கபில் வளவன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மேம்பால பணியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலம் கிராமத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் கடந்த 3 மாதங்களாக எவ்விதமான பணிகளும் நடைபெறவில்லை. சாலையின் இருபுறங்களிலும் பள்ளங்கள் உள்ளதால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதேபோல் சிறுவாச்சூர் பகுதியில் மேம்பால பணிகள் நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன

    . இத்தகைய காரணத்தினால் வார விடுமுறை நாட்களில் சிறுவாச்சூரில் இருந்து விஜயகோபாலபுரம் வரை வாகனங்கள் நிற்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. அதே சமயம் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • டிராக்டர் டிப்பர் கதவு அடித்ததில் படுகாயமடைந்த மூதாட்டி உயிரிழந்தார்.
    • போலீசாா்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, சிறுகளப்பூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பு. இவரது மனைவி விஜயா(வயது 70). இவர் கடந்த 23-ந் தேதி பெரம்பலூர் மாவட்டம், நொச்சியம் கிராமத்தில் நடந்த கோவில் தேர் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக உறவினர் சுரேஷ் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது இரவில் விஜயா இயற்கை உபாதை கழிப்பதற்காக நொச்சியத்தில் இருந்து சிறுவாச்சூருக்கு செல்லும் குறுக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நொச்சியத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் டிராக்டர் ஓட்டி வந்தார்.

    அந்த டிராக்டர் பின்னால் உள்ள டிப்பரில் (பெட்டி) திறந்த நிலையில் இருந்த கதவு சாலையோரம் நின்று கொண்டிருந்த விஜயா மீது அடித்தது. இதில் படுகாயமடைந்த விஜயாவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயா நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக விஜயாவின் மகன் செல்வராசு கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசாா் டிராக்டர் டிரைவர் சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
    • பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    பெரம்பலூர்,

    108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூரில், நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பாபு தலைமை தாங்கினார். பொதுமக்கள் நல்லுறவு கமிட்டி ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். பொருளாளர் வெங்கடேசன் சங்கத்தின் நிதி நிலை அறிக்கையை வாசித்தார். சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் ஆனந்தராஜ் சிறப்புரையாற்றினார். பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதிமன்ற உத்தரவின் படி ஆம்புலன்ஸ் நிர்

    வாகம் உடனடியாக பணி வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு வழக்கம் போல் சதவீத அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் முறையாக வார விடுமுறை வழங்கப்பட வேண்டும். தற்பொழுது வழங்கப்பட்ட பணி வரையறை அட்டவணைப்படி தொழிலாளர்களை அழைக்கழிக்காமல் நாளுக்கு ஒரு லொகேஷன் என்று மாறி மாறி பணி வழங்குவதை கைவிட வேண்டும். தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு முன்பாகவே அதாவது கடைசி நேரத்தில் எந்த இடத்தில் பணி என்பதை கூறாமல், உரிய நேரத்தில் பணி மாவட்ட அதிகாரிகளால் கூற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமையில் உறுதி மொழி ஏற்கப்பட்டது.

    • புதிய தமிழகம் கட்சியினர் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோஷங்கள் எழுப்பப்ட்டது.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சியினர், புதிய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் அருண்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விஷசாராயம் உயிரிழப்பு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், டாஸ்மாக்கில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக வாங்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சட்டவிரோத டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். தமிழகத்தில் பூரண மது விலக்கை அமுல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்ட்டது.

    • தொழில் முனைவோருக்கு கடனுதவியுடன் மானியம் வழங்கபடும் என கலெக்டர் தெரிவித்தார்
    • மேலும் விவரங்களை பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், பெரம்பலூர் என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 8925533976 என்ற தொலைபேசி எண்ணிலோ அணுகலாம்.

    பெரம்பலூர்,

    தமிழக அரசு எஸ்.சி., மற்றும் எஸ்.டி. பிரிவு தொழில் முனைவோருக்கென பிரத்யேக சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் வெல்லும் தொழில் முனைவோர் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள புதிய தொழில் முனைவோர் முன்மொழியும், நேரடி வேளாண்மை தவிர்த்த உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த எந்த தொழில் திட்டத்துக்கும் கடனுதவியுடன் இணைந்த மானியம் வழங்கப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர்களுக்கு வேறெந்த கல்வித் தகுதியும் தேவையில்லை. மொத்த திட்ட தொகையில் 65 சதவீதம் வங்கி கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு, 35 சதவீத அரசின் பங்காக மானியம் வழங்கப்படும். எனவே பயனாளர்களுக்கு தம் பங்காக நிதி செலுத்த வேண்டிய தேவை இருக்காது. தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மற்றும் குறிப்பிட்ட திட்டம் தொடர்பான சிறப்பு பயிற்சி அல்லது திறன் மேம்பாட்டு பயிற்சி தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக இலவசமாக வழங்கப்படும்.

    ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு தேவையான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், திட்ட அறிக்கை தயாரித்தல், விண்ணப்பித்தல் தொடர்பான உதவிகள் மாவட்ட தொழில் மையத்தில் வழங்கப்படும். மேலும் விவரங்களை பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், பெரம்பலூர் என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 8925533976 என்ற தொலைபேசி எண்ணிலோ அணுகலாம். இத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் வருகிற 30-ந் தேதி மாலை 5 மணியளவில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ள எஸ்.சி., எஸ்.டி., பிரிவு தொழில் முனைவோர்கள், இக்கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறுமாறு, கலெக்டர் கற்பகம் அழைப்பு விடுத்துள்ளார்.

    • பெரம்பலூர் காவல்துறையில் பணிபுரிய 11 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கபட்டது
    • மாவட்ட எஸ்.பி. ஷ்யாமளாதேவி வழங்கினார்

    பெரம்பலூர்,

    தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வு, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்திற்கான எழுத்து தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு, தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வுகள் மருத்துவ சோதனைகள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை முடித்து தகுதியுள்ள நபர்களை தமிழக காவல்துறைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் 11 நபர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தகுதி பெற்ற 11 நபர்களில் 3 பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு செய்யப்பட்ட 11 பேருக்கும், பெரம்பலூர் எஸ்.பி. ஷ்யாமளாதேவி பணி நியமன ஆணைகளை வழங்கினார். இவர்களி 9 பேர் மாவட்ட சேமநலப்படை, 2 பேர் தமிழக சிறப்பு காவல்படையில் பணிபுரிவதற்கான ஆணைகளை அவர் வழங்கினார்.

    • விதிமுறைகள் மீறி இயக்கப்படும் பள்ளி வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்படும் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
    • 16 பஸ்களுக்கு நோட்டீஸ் விடபட்டுள்ளது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகன ஆய்வு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம், போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், வட்டார போக்குவரத்து அலுவலர் கணேஷ், சரக துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் (பொறுப்பு) ராஜாமணி, கண்காணிப்பாளர் வேலாயுதம், பெரம்பலூர் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு ஆகியோர் தனியார் பள்ளி வாகனங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    வாகனங்களில் அவசரகால வழி, வேக கட்டுப்பாட்டு கருவி, முதலுதவி பெட்டி, தீயணைப்பான் கருவி உள்ளிட்ட உச்ச நீதிமன்றம் மற்றும் அரசு வகுத்துள்ள விதிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வு குறித்து கலெக்டர் கற்பகம் கூறும்போது, பெரம்பலூர் மாவட்டத்தில் 64 தனியார் பள்ளிகளில், மொத்தம் 380 பஸ்கள் உள்ளன. முதற்கட்டமாக 225 பஸ்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய விதிமுறைகள் பின்பற்றாத, குறைபாடுடைய 16 பஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது.அதனை சரி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. குறைபாடு கண்டறியப்பட்ட வாகனங்கள் மறு ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மீண்டும் இயக்க அனுமதிக்கப்படும்.

    பஸ்களில் முன்புறமும், பின்புறமும் சென்சார், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கப்படும் தனியார் பள்ளி பஸ்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.முன்னதாக விபத்து போன்ற அவசர காலங்களில் டிரைவர்கள் மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் குறித்தும், தீ விபத்துகளில் இருந்து பள்ளி குழந்தைகளை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மூலமாக செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    • அதிவேகமாக செல்லும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ஆட்டோ நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோ நிறுத்தத்தில் இருந்து செல்லும் ஆட்டோக்கள் சாலைகளில் அதிவேகமாக செல்வதினால் பொதுமக்களும், ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளும் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



    ×