என் மலர்
பெரம்பலூர்
- ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர்.
- கலெக்டரிடம் மனு அளித்தனர்
பெரம்பலூர்:
ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க அகில இந்திய ஓய்வூதியர் நல சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அகில இந்திய ஓய்வூதியர் நலச் சங்கத்தின் பெரம்பலூர் கிளை தலைவர் மகாலிங்கம், செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியாவிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது: பொதுத்துறை, கூட்டுறவுத்துறை சர்க்கரை ஆலைகளில் 30 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகள் வரை பணி செய்து ஓய்வுபெற்று, மத்திய அரசின் இபிஎஸ் ஓய்வூதிய தி ட்டத்தின் மூலம் ரூ.500 முதல் 2500 வரை மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வருகிறோம். இந்த ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி பலமுறை கோரிக்கைவிடுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே கோரிக்கையை பரிசீலனை செய்து ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
- சிறுபான்மையின மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- 31-ந்தேதி வரையிலும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பெரம்பலூர்:
தமிழ்நாட்டில் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ளவர்கள் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய-மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23-ம் கல்வியாண்டில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதற்கும், இதேபோல் 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐ.டி.ஐ., ஐ.டி.சி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப் படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உள்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு தகுதியான பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்னையின மாணவ-மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவி தொகை திட்டத்திற்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 30-ந்தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவி தொகைக்கு மாணவ-மாணவிகள் வருகிற அக்டோபர் மாதம் 31-ந்தேதி வரையிலும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இந்த தகவல் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
- ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றியை சீர் செய்ய பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் வட்டம்,நாட்டார்மங்கலம் கிராமத்தின் வடக்கே ஏரியின் ஓரமாக மின்மாற்றி உள்ளது.கடந்த சில ஆண்டுகளாக அந்த மின்மாற்றி அமைந்துள்ள கான்கிரீட் கம்பம் சேதமடைந்து மிகவும் பலவீனமாக காணப்படுகிறது.
இதுகுறித்து கிராம மக்கள் தமிழக முதல்வரின் தனிப்பிரிவு வரை புகார் மனு அனுப்பியதன் விளைவாக சேதமடைந்த கான்கிரீட் கம்பத்திலிருந்து மின்மாற்றியை இடமாற்றம் செய்வதற்காக மின்மாற்றிக்கு அருகே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கான்கிரீட் கம்பம் நடப்பட்டது. ஆனால், இதுவரை சேதமடைந்த கம்பத்திலிருந்து மின்மாற்றியை புதிய மின்கம்பத்துக்கு மாற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.அசம்பாவித சம்பவங்கள் நிகழும் முன்பே மின்மாற்றியை புதிய மின்கம்பத்தில் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,நாட்டார்மங்கலம் கிராமத்தில் மின் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளதால் அதற்கு தகுந்தாற்போல் மின்மாற்றியின் திறனை மேம்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கல்வி மேலாண்மை குழு தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மனு அளிக்கப்பட்டுள்ளது.
- தலைமையாசிரியர் மீது நடவடிக்கை கோரி மனு
பெரம்பலூர்:
கல்வி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்த தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரிகலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் அம்மா பாளையம் கிராமத்தில் கல்வி மேலாண்மை குழு தலைவர் அமுதா தலைமையில் கலெக்டர் ஸ்ரீவெங்க டபிரியா மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் ஆகியோரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது, அம்மாபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த 29ம் தேதி அன்று கல்வி மாலை மேலாண்மை குழு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் பள்ளிக்கு மேலாண்மை குழுவின் மூலம் பள்ளிக்கு தண்ணீர் வசதி இல்லாதது, சத்துணவு குறைபாடு மற்றும் கழிப்பறை குறித்து சில குறைகள் தெரிவித்து அதனை சரி செய்ய கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை அடுத்து கடந்த 1ம்தேதி பள்ளி தலைமை ஆசிரியர் மணிமொழி மேலாண்மை குழு தலைவர் அமுதாகிய எனக்கு பள்ளிக்கு வருமாறு செல்போன் மூலம் அழைப்பு விடுத்தார். நானும் பள்ளிக்கு சென்றேன். அதன் பின்பு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சில ஆசிரியர்கள் என் முகத்தில் தீர்மானம் போட்ட பேப்பரை விட்டு எரிந்து நீங்கள் யார் என்னை கேள்வி கேட்க என்றும், ஒருமையில் தகாத வார்த்தைகளில் அனைவரையும் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
எனவே தலைமை ஆசிரியர் மணிமொழி மீது நடவடிக்கை மேற்கொண்டு தலைமை ஆசிரியர் பணி மாறுதல் செய்யும்படி அனைவரும் ஒன்று சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றுகின்றோம், விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
- மின்கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு
பெரம்பலூர் :
பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கநாதன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் பி.ரமேஷ் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்லதுரை, கலையரசி, அகஸ்டின், ராஜாங்கம், கோகுலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலக்குழு சாமி.நடராஜன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் செல்லமுத்து, செல்லதுரை, ராஜேந்திரன், சிவானந்தம், கருணாநிதி, சரவணன், ரெங்கராஜ், மகேஸ்வரி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், மாவு வகைகள், வெல்லம் மோர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5 சதவீதம் விதிக்கப்பட்டது. மத்தியஅரசின் நடவடிக்கையால் ஏழை எளிய மக்களின் அன்றாட வாழ்க்கை சீர்குலைக்கும் எனவே உடனடியாக ரத்து செய்ய வேண்டும்,
தமிழகத்தில் ரூபாய் 55 முதல் ஆயிரத்து 130 வரை மின் கட்டணம் உயரும் என மின்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசு அறிவித்துள்ள உத்தேச மின்கட்டண உயர்வு நடுத்தர குடும்பத்தினருக்கும் வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும், ஏற்கனவே மத்திய அரசின் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்ப்பெற வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட மக்களை அணி திரட்டி மின்வாரிய அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவது,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட நிதியை ஒதுக்குவதை கைவிட வேண்டும், பெரம்பலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெறும் குவாரி மற்றும் கிரஷர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு கடந்த சில தினங்களுக்கு முன் பெரம்பலூர் அருகே கவுள்பாளையம் குவாரியில் பாறை சரிந்து இருவுர் பலி ஆனார்கள் அவர்கள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.
- கைபந்து போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளை கலெக்டர் பாராட்டினார்
- வெற்றி கோப்பையுடன் கலெக்டரை சந்தித்தனர்
பெரம்பலூர்:
தமிழ்நாடு ஹேண்ட்பால் சங்கம் மற்றும் சேலம் மாவட்ட ஹேண்ட்பால் சங்கம் இணைந்து நடத்திய மாநில அளவிலான 19-வது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஹேண்ட்பால் போட்டி சேலம் மாவட்டம் மேச்சேரியில் கடந்த 30, 31-ந்தேதிகளில் நடந்தது.
இதில் பெண்களுக்கு நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பெரம்பலூர் மாவட்ட பள்ளி மாணவிகள் விளையாட்டு விடுதி ஹேண்ட்பால் அணியினர் கலந்து கொண்டு முதல் போட்டியில் திண்டுக்கல் மாவட்ட அணியையும், கால் இறுதி போட்டியில் திருவண்ணாமலை மாவட்ட அணியையும், அரை இறுதிப்போட்டியில் கோவை மாவட்ட அணியையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர்.
சேலம் மாவட்ட அணியுடன் நடந்த இறுதிப்போட்டியில் பெரம்பலூர் மாவட்ட பள்ளி மாணவிகள் விளையாட்டு விடுதி அணியினர் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்தனர். அவர்கள் வெற்றி கோப்பையுடன் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
வீராங்கனைகளை கலெக்டர் பாராட்டினார். அப்போது பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட பள்ளி உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன், ஹேண்ட்பால் பயிற்றுனர் வாசுதேவன் ஆகியோர் உடனிருந்தனர்.
- மின்சாரம் பாய்ந்து மாடு உயிரிழந்தது
- இணைப்பு கம்பி மீது மாடு உரசியது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மாவிலிங்கை கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 40). விவசாயி. இவர் நேற்று மாலை வயல் அருகே பசுமாட்டை மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த மாடு ஏரிக்கரை அருகே உள்ள மின்மாற்றியின் அருகில் சென்றது. அதற்கான இணைப்பு கம்பி மீது மாடு உரசியது, அப்போது மாடு மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கை களத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்திய தொழிலாளர் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய தொழிலாளர் கட்சி சார்பில் நடந்த கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் காவியமூர்த்தி, மாவட்டசெயலாளர் சசிகுமார், மாநில பொதுசெயலாளர் அய்யாசாமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கல்குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்தும், கல்குவாரியில் இறந்த செந்தில்குமாரின் குடும்பத்திற்கு நிவாரண வழங்க வலியுறுத்தியும், பழங்குடியினரான குறவர் கலைக்கூத்தாடிகள் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் பட்டியல் சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தியும் , கல்குவாரிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் சமூக நீதிக்கான 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகர், வேல்முருகன், அலெக்ஸ், சுரேஷ் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியாவிடம் கோரிக்கை மனு அளித்து கலைந்து சென்றனர்.
- வீட்டுமனை பட்டா வழங்க கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்
- நெய்குப்பை கிரமத்தில் வசிக்கும் மீனவர்களுக்கு
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே நெய்குப்பை கிராமத்தில் வசிக்கும் மீனவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட தலைவர் ஞானசேகரன் தலைமையில் நெய்குப்பை மீனவர்கள் சார்பில் அளிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, நெய்குப்பை கிராமத்தில் மீனவ பகுதியில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர், காலம் காலமாக மீன் பிடிக்கும் சுண்ணாம்பு கால்வாய் பணியும் செய்து பிழைப்பு நடத்திவருகிறோம். இந்நிலையில் மீனவர் தெருவில் வசிக்கும் மக்களை இடத்தை காலி செய்யவேண்டும், இது அரசு புறம்போக்கு இடம், இங்கு பால் குளிர்வு நிலையம் அமைக்கப்படவுள்ளது எனவே நீங்களாகவே வீட்டை காலி செய்யவேண்டும், இல்லையென்றால் நாங்களகவே புல்டோசர் வைத்து இடித்து அப்புறப்படுத்துவோம் என பால்பண்ணை தலைவர், செயலாளர், விஏஓ ஆகியோர் எங்களை மிரட்டுகின்றனர். எனவே அதனை தடுத்து மீனவ மக்கள் வசிக்கும் வீட்டிற்கு வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
- போட்டித்தேர்வுகள் எழுதுவோருக்கு இலவச பயிற்சி வகுப்பு நாளை முதல் தொடங்குகிறது
- வேலைவாய்ப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை) இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 போட்டித் தேர்வு ஆகியவற்றில் கலந்து கொள்ள இருப்பவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (3-ந்தேதி) தொடங்க உள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் நடத்தப்படும் இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய விவரங்களை இன்று மாலைக்குள் இணையதளத்தில் உள்ளீடு செய்து பதிவு செய்ய வேண்டும். மேலும் போட்டித்தேர்வு விண்ணப்பித்தற்கான நகல், ஆதார் கார்டு, புகைப்படங்கள் ஆகியவற்றை பயிற்சி வகுப்புக்கு வரும் போது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்க வேண்டும் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
- வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆலோசனை கூட்டம் நடந்தது
- அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நடந்தது
பெரம்பலூர்:
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எணை இணைப்பது தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் விவரங்களை உறுதி செய்யவும், ரே வாக்காளரின் பெயர், ஒன்றுக்கு மேற்பட்ட முறை இடம் பெறுவதை தவிர்க்கவும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் தொடங்கியது. அதன்படி, பெரம்பலூர் மாவட்ட வாக்காளர்கள் நேஷனல் வோட்டர் சர்வீஸ் போர்ட்டல் மற்றும் வோட்டர் ஹெல்ப்லைன் ஆப் ஆகியவற்றை பயன்படுத்தி ஆன்லைன் வழியாக தங்களின் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எணை இணைத்துக் கொள்ளலாம். இது தவிர வாக்கு சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக ஆய்வுக்கு வரும் போதோ அல்லது இதற்காக வாக்குச்சாவடி அளவில் நடத்தப்பட உள்ள சிறப்பு முகாமிலோ, பூர்த்தி செய்யப்பட்ட படிவம்-6 பி உடன் ஆதார் அட்டையின் நகலை தாக்கல் செய்து இணைத்துக் கொள்ளலாம். இப்பணியை விரைவாக முடிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
- பயனாளிகள் கோழி கொட்டகை அமைக்க குறைந்த பட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்.
- விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
பெரம்பலூர் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவில் (250 கோழிகள்) நாட்டு கோழி பண்ணைகள் நிறுவ 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற பின் வரும் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.
கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ள மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளியாக இருக்க வேண்டும். பயனாளிகள் கோழி கொட்டகை அமைக்க குறைந்த பட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும். இந்த பகுதி மனித குடியிருப்புகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் 30 சதவீத தாழ்த்தப்பட்ட/ பழங்குடி இனத்தவரை சார்ந்தவராக இருக்க வேண்டும். இதற்கு முன்னர் அரசு வழங்கிய கோழி வளர்ப்பு திட்டத்தில் பயனடைந்தவராக இருத்தல் கூடாது. பயனாளிகள் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் பண்ணையை பராமரிக்க உறுதியளிக்க வேண்டும்.
இத்திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கி கடன் மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ திரட்ட வேண்டும். எனவே, இத்திட்டத்தில் சேர விருப்பமுள்ள மேற்காணும் தகுதிகளை உடைய பெரம்பலூர் மாவட்ட பயனாளிகள் அருகாமையில் உள்ள கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் வருகிற 15-ந்தேதிக்குள் கால்நடை மருந்தகத்தில் ஒப்படைத்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






