என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • தொழில் நிறுவனங்கள் அரசு மானியத்துடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • நிவாரண திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதா–வது :

    2020 - 21 மற்றும் 2021-2022ம் நிதியாண்டுகளில் கோவிட் – 19 பெருந்தொற்று காரணமாக பொருளாதார இழப்பை சந்தித்த, தொழில் முனைவோர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மீண்டும் தொழில்களை நிறுவிட தமிழக அரசு 2022- 23ம் ஆண்டுக்கு இரண்டு கூறுகளுடன் கோவிட் உதவி மற்றும் நிவாரண திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

    கோவிட் – 19 பெருந்தொற்று காலத்தின் பொழுது பாதிக்கப்பட்ட தனிநபர், உரிமையாளர் மற்றும் பங்குதாரர்கள் நிறுவனங்கள், தாங்களாகவோ அல்லது தங்களது வாரிசுகள் அல்லது பங்குதாரர்கள் மூலம் பாதிக்கப்பட்ட தங்கள் தொழில் நிறுவனங்களை மறுசீரமைக்கவும் அல்லது அதே தொழிலை புதிதாக ஆரம்பிக்கவும் அல்லது வேறு தொழிலினை துவங்கவும் ரூ. 5 கோடி வரையிலான திட்டங்களுக்கு, இத்திட்டத்தின் கீழ் இயந்திரம் மற்றும் தளவாடங்களின் மதிப்பில் 25% அதிகபட்சமாக ரூ.25 லட்சம் மானியமாக தமிழக அரசினால் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவைத் தொழில் நிறுவனங்கள் பயன்பெற தகுதியுடையவை. இத்திட்டத்தின் கீழ் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 21 முதல் 55 வயதுக்குள் உள்ள தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுவோருக்கு தொழிற் பயிற்சியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில் நுட்பத்தை மேம்படுத்துதல், நவீனமயமாக்கலை மேற்கொண்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கோவிட் பெருந்தொற்றால் பொருளாதார வீழ்ச்சியடைந்திருந்தால் மட்டுமே மானியத்திற்கு தகுதியானவர்கள். மூலதன மானியமாக ஆலை மற்றும் இயந்திரங்களின் மதிப்பில் 25 சதவீதம். அதிகபட்சமாக ரூ.25 லட்சத்திற்கு உட்பட்டு வழங்கப்படும்.

    இந்த திட்டம்2022- 23ம் ஆண்டுக்கு மட்டுமே நடைமுறையில் இருக்கும். இந்நிலையில், இந்த பிரிவுகளின் கீழ் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தமிழக அரசு வழங்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தகுதியுடைய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தின்கீழ் மானியம் பெற்று பயனடைய பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், பெரம்பலூர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04328 – 225580, 224595 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மழைக்கால மின் தடையை சரிசெய்ய 12 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது
    • மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தகவல்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அம்பிகா வெளியிட்டுள்ள ஓர் செய்திக்குறிப்பில்தெரிவித்திருப்பதாவது:

    அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில்கனமழை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளதால், பெரம்பலூர் மின் பகிர்மான வட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின்தடை மற்றும் மின்பாதையில் ஏற்பட்டுள்ள குறைகளை உடனுக்குடன் சரி செய்ய செயற் பொறியாளர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் தலைமையில் 12 சிறப்பு பணியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது .

    மேலும் மின்கம்பங்கள் மற்றும் தளவாட பொருட்கள் தேவையான அளவு இருப்பில் வைக்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள் மழையின்போது மின் உபகரணங்களை மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.

    மின்கம்பிகள் அறுந்து கிடப்பது தெரியவந்தால் அதன் அருகில் செல்லாமல் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் மேலும் பொதுமக்கள் தங்களது பகுதிகளில் மின் தடை மற்றும் அவசர புகார்களுக்கு 9498794987 என்கிற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நிலத்தரகர்கள் நலச் சங்கத்தின் ஆலோசனை கூட்டம்ந டைபெற்றது
    • புதிய நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது

    ெபரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு பெரம்பலூரில் உள்ள ஜி கே மஹாலில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு அச்சங்கத்தின் அகில இந்திய தலைவர் டாக்டர் வி. கண்ணன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மாநில அமைப்பாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில துணை செயலாளராக சிவகுமார், மாவட்ட தலைவராக செல்வம், மாவட்ட செயலாளராக முருகானந்தம், மாவட்ட பொருளாளராக ஆண்டாள் சண்முகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் புதியதாக 50 உறுப்பினர்கள் தங்களை சேர்த்துக் கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் சங்க பொன்விழா ஆண்டு சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. முன்னதாக மாவட்ட பொறுப்பாளர் சுந்தர்ராஜ் அனைவரையும் வரவேற்றார். பொறுப்பாளர் பொன்னுசாமி முடிவில் நன்றி கூறினார்.

    • கோவிலில் பூட்டை உடைத்து தங்கச் சங்கிலி திருடப்பட்டுள்ளது
    • 3 சிறிய உண்டியல்களும் திருடிச் செல்லப்பட்டிருந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் சாலையில் உள்ள உப்போடை பகுதியில் தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான சாய்பாபா கோவில் உள்ளது. நேற்று காலை வழக்கம் போல கோவிலை திறக்க வந்த பூசாரியான உப்போடை பகுதியைச் சேர்ந்த சவுந்தரராஜன் (வயது 55) கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அர்ச்சியடைந்தார். பின்னர் அவர் கோவிலுக்கு சென்று பார்த்த போது சாய்பாபா சிலை மீது அணிவிக்கப்பட்டிருந்த ஒன்றரை பவுன் தங்கச்சங்கிலி, 2 வெள்ளிக்காப்புகள், 3 சிறிய உண்டியல்கள், ஒரு பெரிய உண்டியல் ஆகியவை திருடிச் செல்லப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருட்டு போனவற்றின் மதிப்பு ரூ.1.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.  

    • அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • மத்திய அரசின் முடிவைக் கண்டித்து நடந்தது

    பெரம்பலூர்:

    அஞ்சல் துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் பெரம்பலூர் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் விஷ்ணுதேவன் தலைமை வகித்தார்.

    திருவரங்க அஞ்சல் கோட்ட உதவி செயலாளர் விஜயபாலாஜி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் செயல் தலைவர் செல்வகணேசன், நிர்வாகிகள் சரவணன், வெங்கடேசன் உட்பட அஞ்சல் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

    • செல்போனில் பேசி வாலிபரிடம் ரூ.6.34 லட்சம் மோசடி செய்யப்பட்டது
    • வட மாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, தொண்டமாந்துறை கிராமத்தைச் செர்ந்தவர் ராஜா மகன் அனந்தகுமார். இவருக்கு 15.7.2021 அன்று செல்போன் மூலம் ஒரு அழைப்பு வந்தது. நீங்கள் ஆன்லைன் மூலம் 6.8.2020 அன்று வாங்கிய ஸ்மார்ட் வாட்சுக்கு மஹிந்திரா எஸ்.யூ.வி கார் பரிசு விழுதுள்ளது. அந்த காரை பெற்றுகொள்ள வரி செலுத்த வேண்டும். அதற்கான தொகை ரூ.6 லட்சத்து 34 ஆயிரம் செலுத்த வேண்டும் எனக் கூறி வங்கி கணக்கு எண்களை வழங்கியுள்ளனர்.

    அனந்தகுமாரும் அவர்கள் கூறியதை நம்பி, பணத்தை செலுத்தியுள்ளார். ஆனால், ஓராண்டாகியும் பரிசு விழுந்ததாக கூறப்பட்ட கார் அனந்தகுமாருக்கு வந்து சேரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அனந்தகுமார் இதுகுறித்து பெரம்பலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    இது குறித்த புகாரி ன் பேரில் பெரம்பலூர் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மொபைல் எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை வைத்து மோசடி செய்த நபர்களை அடையாளம் கண்டனர். இதையடுத்து டெல்லி சென்ற தனிப்படை போலீசார் மோசடியில் ஈடுபட்ட உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டம், பிம் நகர் பகுதியைச் சேர்ந்த குல்சிராம் மகன் கிஷான் (வயது 32), காசியாபாத், விஜய நகர் ராம் கெலவன் மகன் ரோஹித் பால்(29), ஹரியானா மாநிலம், சோனிபட் மாவட்டம், ஆர்யா நகரைச் சேர்ந்த ஸ்ரீ நிவாஸ் பன்சால் மகன் அங்கித் பன்சால் (30) ஆகிய 3 பேரை கைது செய்து நேற்று பெரம்பலூர் அழைத்து வந்தனர். பின்னர் பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • புனித பனிமய மாதா ஆலய தேர்பவனி நடைபெற்றது
    • எம்.எல்.ஏ. பங்கேற்றார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் புனித பனிமய மாதா ஆலய பெருவிழாவையொட்டி தேர்பவனி நடந்தது.

    பெரம்பலூர் புனித பனிமய மாதா ஆலயத்தின் பெருவிழாவையொட்டி பெரம்பலூர் வட்டார முதன்மை பங்குகுரு ராஜமாணிக்கம் முன்னிலையில், கும்பகோணம் மறை மாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி கடந்த 27-ந் தேதி கொடி ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து அமிர்தசாமி தலைமையில் கூட்டு பாடல் சிறப்பு திருப்பலி நடந்தது. தேர் பவனியாக செல்லக்கூடிய முக்கிய வீதிகளில் கொடி ஊர்வலம் நடந்தது.

    விழா நாட்களில் தினமும் மாலையில் பல்வேறு திருத்தலங்களின் பங்கு குருக்களால் சிறப்பு பிரார்த்தனைகளும், திருப்பலிகளும் நடந்தது. பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று (4ம் தேதி) இரவு நடைபெற்றது.

    இதில் பெரம்பலூர் வட்டார முதன்மை பங்குகுரு ராஜமாணிக்கம் முன்னிலையில், கும்பகோணம் மறை மாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி தேர்பவனியை தொடங்கிவைத்தார். முக்கிய வீதிகளில் தேர்பவனி வந்தது. இதில் எம்.எல்.ஏ. பிரபாகரன் உட்பட கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். இன்று (5ம்தேதி) பெருவிழா முடிகிறது.புனித பனிமய மாதா ஆலய தேர்பவனி நடைபெற்ற போது எடுத்தப்படம்.

    • செல்போன் கடை ஊழியர் ஓட, ஓட விரட்டி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்
    • 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் பெரியார் சிலை அருகேயுள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் கோபால் மகன் வினோத் (வயது 28), செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இவரது நண்பர் பெரம்பலூர் சுப்பிரமணிய பாரதியார் தெருவை சேர்ந்த துரை மகன் கார்த்திக் (25). இவர்கள் இருவரும் நேற்று மாலை பெரம்பலூர் நிர்மலா நகரில் உள்ள மாரியம்மன் கோவில் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர். இருவரையும் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ஓட, ஓட வெட்டிவிட்டு தப்பினர்.

    இதில் அந்த இடத்திலேயே வினோத் உயிரிழந்தார். வெட்டுக்காயங்களுடன் தப்பிய கார்த்திக், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் கொலை நடைபெற்ற இடத்துக்கு சென்று, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தியதில், முன் விரோதகாரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக தெரிவித்தனர்.

    மேலும் கொலை செய்த 6 பேர் கொண்ட கும்பலை தேடிவருகின்றனர்.

    • மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியானார்.
    • தகர கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்

    பெரம்பலூர்:

    திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, சொக்கலிங்கபுரம் நாகம்மையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ஹரிகரன் (வயது 22). இவர் பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் புதிதாக பால் குளிரூட்டும் நிலையம் அமைப்பதற்காக மேலே தகர கொட்டகை அமைக்கும் பணியில் சக தொழிலாளர்களுடன் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    நேற்று இரவு பணி முடித்து விட்டு ஹரிகரன் தகர கொட்டகையின் மேலே இருந்து கீழே இறங்க முயன்ற போது பால் பண்ணையின் மின் விளக்கின் இரும்பு கம்பியை பிடித்துள்ளார். நேற்று மாலை பெய்த மழையின் காரணமாக அந்த இரும்பு கம்பி நனைந்து, அதில் மின் கசிவு இருந்துள்ளது. இதனை கவனிக்காமல் ஹரிகரன் இரும்பு கம்பியை பிடித்ததால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே தொங்கி கொண்டிருந்தார். இதனைக்கண்ட சக தொழிலாளர்கள் உடனடியாக மின்சாரத்தை நிறுத்தி விட்டு ஹரிகரனை மீட்டு சிகிச்சைக்காக அம்மாபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அங்கு ஹரிகரனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து ஹரிகரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை பிரேத கூடத்தில் வைக்கப்பட்டது. அவரின் உடலை சக தொழிலாளர்கள் பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிகண்டபுரம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • உதவி செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்

    பெரம்பலூர்:

    பேரளி துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின்சார வினியோகம் பெறும் பேரளி, அசூர், சித்தளி, பீல்வாடி, ஒதியம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், கே.புதூர், எஸ்.குடிகாடு, வாலிகண்டபுரம், கல்பாடி, க.எறையூர், நெடுவாசல், கவுல்பாளையம், மருவத்தூர், குரும்பாபாளையம், செங்குணம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்வினியோகம் இருக்காது என பெரம்பலூர் நகர உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் தெரிவித்து உள்ளார்.

    • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.
    • பெரம்பலூர், வேப்பந்தட்டை பகுதி கல்லூரிகளில் நடக்கிறது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான இளங்கலை மற்றும் இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் நடைபெறுகிறது. அதன்படி நாளை காலை 10 மணிக்கு ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் முதலான சிறப்பு ஒதுக்கீட்டிற்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

    நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு அனைத்து பாடப்பிரிவுகளுக்கான முதல் கட்ட பொது கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வில் கலந்து கொள்பவர்கள் தங்கள் இணையவழியில் விண்ணப்பித்த விண்ணப்பம், மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் 5 நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5 எடுத்து கொண்டு தங்களது பெற்றோருடன் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். கலந்தாய்வில் தேர்வு பெற்றவர்கள் சேர்க்கை கட்டணத்தை அன்றே கல்லூரி அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என்று கல்லூரி முதல்வர் ரேவதி தெரிவித்துள்ளார்.

    இதேபோல் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் பி.எஸ்சி கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடப்பிரிவுகளில் சேர கலந்தாய்வு நடைபெறுகிறது. இதையடுத்து, வருகிற 8-ந் தேதி காலை 10 மணியளவில் பி.ஏ. தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கும், பி.காம், பி.பி.ஏ. ஆகிய படிப்புகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    இதில் கலந்து கொள்ளக்கூடிய மாணவ- மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் 5 நகல்கள், பாஸ்போர்ட் அளவு போட்டோ-5 ஆகியவற்றை எடுத்துக்கொண்டு கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கல்லூரி முதல்வர் தெரிவித்து உள்ளார்.

    • பள்ளி கழிவறையில் ஆபாச படம் எடுத்த வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்
    • தொடக்கப்பள்ளி வளாகத்திற்கு செல்வார்கள்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே நன்னை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மாணவியர்களுக்கு கழிப்பறை இல்லாததால் தொடக்கப்பள்ளி வளாகத்திற்கு செல்வார்கள். நேற்று மாணவிகள் சென்ற போது அங்கு மறைந்திருந்த வாலிபர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுப்பது கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதியினர் வாலிபரை விரட்டி பிடித்து தாக்கி போலீச்சுக்கு தகவல் கொடுத்தனர்.போலீசார் வருவதற்குள் அந்த வாலிபர் அவர்கள் பிடியில் இருந்து தப்பிவிட்டார். குன்னம் சப் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் விசாரணை நடத்தியதில் தப்பிய வாலிபர் அதே ஊரை சேர்ந்த மணிகண்டன் (வயது 23) என்பது தெரியவந்தது. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரிபேரில் குன்னம் போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான மணிகண்டனை தேடிவருகின்றனர்.

    ×