என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • நாளை பிளஸ் 2 தேர்வு தொடங்குகிறது
    • முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    பெரம்பலூர்,

    தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொது தேர்வு நாளை (13ம் தேதி) துவங்கிறது. இந்த தேர்வினை பெரம்பலூர் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 655 பேர் தேர்வெழுதுகின்றனர்.பெரம்பலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பில் 79 பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 906 மாணவர்களும், 3 ஆயிரத்து 749 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 655 பேரும், 11ம் வகுப்பில் 80 பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 692 மாணவர்களும், 3 ஆயிரத்து 605 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 297 பேரும் அரசு பொதுத்தேர்வை எழுதவுள்ளனர். பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கடந்த 1ம் தேதி முதல் 9ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடந்தது.இதனை தொடர்ந்து பிளஸ் 2 தேர்வு நாளை (13ம்தேதி) முதல் வரும் ஏப்ரல் 3ம் தேதி வரையும், பிளஸ் 1 தேர்வு நாளை மறுநாள் (14ம்தேதி) முதல் வரும் ஏப்ரல் 5ம்தேதி வரையும் அரசு பொதுத் தேர்வுகள் நடைபெறவுள்ளது. மாணவ,மாணவிகள் தேர்வு எழுதுவதற்காக 34 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுகள் காலை 10 மணிக்குத் தொடங்கி மதியம் 1.15 வரை நடத்தப்படும். முதல் 15 நிமிடங்கள் வினாத்தாளை வாசிக்க நேரம் வழங்கப்படுகிறது.11, 12 வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களுக்கு பள்ளிகளை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி முடிவடைந்துள்ளது. தேர்வு பணிகளில் தேர்வறை கண்காணிப்பாளர்கள், 60 பேர் கொண்ட நிலையான பறக்கும் படையினர், 10 பேர் கொண்ட பறக்கும் படை உறுப்பினர்கள் என ஆசிரியர்கள், அலுவலர்கள் என மொத்தம் 700 பேர் ஈடுபடவுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் போதிய அடிப்படை வசதிகள், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு எளிதில் சென்று வர போதிய பஸ் வசதிகள், வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல போதிய போலீஸ் பாதுகாப்பு என அனைத்து முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    • மகன் உட்பட 2 பேர் கைது
    • விளையாட்டு விபரீதமானது

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அத்தியூர் வடக்கு வீதி பகுதியை சேர்ந்தவர் மோகன் தாஸ் (வயது 40). இவரும் அதே பகுதியை சேர்ந்த ராஜதுரை (30) அங்குள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தியதாக கூறப்படுகிறது.பின்னர் மோகன்தாஸ் வீட்டில் பெட்ரோல் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தனது மோட்டார் சைக்கிளுக்கு ஒரு கேனில் பெட்ரோலை வாங்கியுள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர்.பின்னர் வழியில் மோகன்தாஸ் தனது அத்தையான அத்தியூர் இந்திரா நகர் பகுதியில் வசிக்கும் கதிர்வேல் மனைவி மஞ்சாயியை(75) பார்த்தார்.உடனே இருவரும் அங்கு இறங்கி மூதாட்டி இடம் நலம் விசாரித்தனர். அப்போது மஞ்சாயி மருமகனிடம் எதற்காக பெட்ரோல் வாங்கி செல்கிறாய் என கேட்டுள்ளார். அதற்கு உன் மீது ஊற்றி எரிப்பதற்காக என கூறிக்கொண்டு, விளையாட்டாக கையில் கேனில் இருந்த பெட்ரோலை எடுத்து அவர் மீது ஊற்றுவது போல் காண்பித்தார். ஆனால் எதிர்பாராத விதமாக மூடியிலிருந்து கசிந்த பெட்ரோல் மஞ்சாயி மீது பட்டது.அந்த கணம் அருகில் நின்று கொண்டிருந்த நண்பர் ராஜதுரை வாயில் சிகரட்டை வைத்து பற்ற வைத்ததாக தெரிகிறது. இதில் எதிர்பாராத விதமாக மூதாட்டி மீது தீப்பிடித்தது.இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இருவரும் உடனடியாக தீயை அணைத்து அவரை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மருமகன் மோகன்தாஸ் ராஜதுரை ஆகிய இருவரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். விளையாட்டாக மூதாட்டி மீது ஊற்றிய பெட்ரோல் துளிகளால் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் மங்களமேடு பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    • பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம் சார்பில் நடைபெற்றது
    • 6 ஆயிரம் மாணவிகள் கலந்து கொண்டனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. பல்கலைக் கழகத்தின் வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்தார். இதனைத் தொடர்ந்து வேந்தர் சீனிவாசன், இணைவேந்தர் அனந்தலட்சுமி கதிரவன் சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு செய்தனர். கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் உமாதேவி பொங்கியா வரவேற்புரை வழங்கினார்.இந் நிகழ்வின் துவக்கத்தில் வேந்தர் தலைமை உரையாற்றும் போது, பெண்களின் முக்கியத்துவம் குறித்தும் பெற்றோர்களின் பெருமை குறித்தும் வாழ்நாட்களில் நாம் வணங்கக்கூடிய தெய்வம் நம் பெற்றோர்கள் என்ற பொன்னான கருத்துகளை முன் மொழிந்தார்.இணைவேந்தர் அனந்தலட்சுமி கதிரவன் தம் உரையில், பெண்ணினத்தின் பெருமையினையும் பெண்களுக்கான வளர்ச்சி நிலைகளையும் எடுத்துக்கூறினார்.சிறப்பு விருந்தினர்களாக கலெக்டர் கற்பகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாமளா தேவி, வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் அ.லலிதா, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி ஆகியோர் கலந்து கொண்டு பெண்களின் சிறப்பை பற்றி பேசினர்.இதனைத் தொடர்ந்து தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமத்தின் அனைத்து கல்லூரி மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி முதல்வர் சாந்தா, நன்றியுரை வழங்கினார்.நிகழ்ச்சியில் அனைத்து கல்லூரி முதல்வர்கள். புல முதன்மையர்கள் அறக்கட்டளை உறுப்பினர்கள் துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் தனலட்சமி சீனிவாசன் கல்வி குழுமத்தில் பயிலும் 6000 மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

    • இளைஞர்கள் மீது தாக்குதல் சம்பவம் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • தாக்கியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்ட் அம்மா உணவகம் அருகில் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்ட த்திற்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமை வகித்தார். கடலூர் மாவட்டம், புவனகிரி ஒன்றியம், சாத்தப்பாடி கிராமத்தில் தலித் இளைஞர்களை தாக்கிய வர்களை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்து அவர்களின் மீது குண்டர் தடுப்பு சட்டம் பதிவு செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • சி.ஐ.டி.யூ. சார்பில் புது பஸ் ஸ்டாண்டு அருகே நடைபெற்றது
    • பொதுத்துறையை பாதுகாத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யூ. சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நேற்று தொடங்கியது. பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ரெங்கநாதன் தலைமை வகித்தார்.விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கலையரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் அகஸ்டின் பேசுகையில், பொது த்துறைகளை பாதுகா க்கவும், மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரம் செய்தனர்.பின்னர் குரும்பலூர், அம்மா பாளையம், நக்க சேலம், செட்டிகுளம், பாடாலூர், கொளக்கா நத்தம், சிறுவாச்சூர், குன்னம், வேப்பூர், அகரம் சீகூர், லப்பைகுடிக்காடு ஆகிய கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த பிரச்சாரம் இன்றும் நடைபெறுகிறது.நிகழ்ச்சியில் சி.ஐ.டி.யூ நிர்வாகிகள் ரெங்கராஜ், ஆறுமுகம். இன்பராஜ், பாபு, செல்லதுரை, கருணாநிதி, அருண், விவசாயி தொழிலாளர் சங்க நிர்வாகிகள் செ ல்வராஜ், அர்ச்சுனன், விவசாயிகள் சங்க நிர்வா கிகள் கோவிந்தன், கிருஷ்ண மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    குற்றவழக்கில் சம்மந்தப்பட்ட நபர்களின்வா ழ்க்கை முறை குறித்து விழிப்புணர்வு கூட்டம்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் குற்றவழக்கில் சம்மந்தப்பட்ட நபர்களின் வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.பெரம்பலூர் சங்குப்பேட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் நடந்த கூட்டத்திற்கு ஏரி பாசன சங்க தலைவர் கண்ணப்பிரான், நகராட்சி துணை தலைவர் ஹரிபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.எஸ்பி ஷ்யாம்ளாதேவி தலைமை வகித்து பேசுகையில், குற்றவழக்கில் சம்மந்தப்பட்ட நபர்கள் மீண்டும் குற்ற வழக்குகளில் ஈடுடாமல் இருப்பதால் எற்படும் நன்மைகள் குறித்தும், அவர்களது குடும்பத்தினரின் எதிர்காலம், அவர்களது குழந்தைகளின் எதிர்காலம் குறித்தும், குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபர்களுக்கு பெண் பிள்ளைகள் இருப்பின் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் நடைமுறையில் உள்ள சலுகைகள் மற்றும் கல்விக்கான வழிமுறைகள் , பெண் பிள்ளைகளின் முன்னேற்றம் குறித்தும் எடுத்துரைத்தார்.

    மேலும் அப்பகுதியில் வசிக்கும் படித்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் காவல்துறையில் பணியாற்ற விருப்பப்ப டின் அவர்களுக்கு காவ ல்துறையில் சேருவத ற்கான தக்க பயிற்சி வழங்கப்படும், மேலும் சிறுவர் மன்றம் அமைத்து சிறுவர்களின் தனிப்பட்ட திறமைகளை வளர்க்கும் வகையில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும், வேலையில்லாத இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் அவர்தம் குடும்ப உறுப்பினர்களும் தற்போது தங்களது வாழ்க்கையில் எத்தகைய இடர்பாடுகளை சந்திக்கிறார்கள் என்பது குறித்து கலந்துரையாடினார். பின்னர் இனிமேல் குற்ற வழக்குகளில் ஈடுபடமா ட்டோம் என உறுதி மொழி ஏற்றனர்.கூட்டத்தில் ஏடிஎஸ்பி மதியழகன், டிஎஸ்பி பழனிச்சாமி, வளவன், மதுமதி (பயிற்சி), இன்ஸ்பெ க்டர் முருகேசன் மற்றும் எஸ்ஐக்கள், போலீசார் கலந்துகொண்டனர்.

    • குன்னம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது

    பெரம்பலூர்:

    தமிழ்நாடு மின்வாரியத்தின் பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான அந்தூர், குன்னம், வேப்பூர், நன்னை, ஓலைபாடி, எழுமூர், ஆய்க்குடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது என்று லெப்பைக்குடிகாடு உதவி செயற்பொறியார் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

    • பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்கள் நாளை நடக்கிறது.
    • 4 கிராமங்களில் இந்த முகாம் நடக்கிறது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் வட்டாரத்திற்கு சத்திரமனை, வேப்பந்தட்டை வட்டாரத்திற்கு அரும்பாவூர், குன்னம் வட்டாரத்திற்கு காடூர் (வடக்கு), ஆலத்தூர் வட்டாரத்திற்கு கூடலூர் ஆகிய 4 கிராமங்களில் இந்த முகாம் நடக்கிறது. இதேபோல் அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் வட்டாரத்திற்கு புதுப்பாளையம், உடையார்பாளையம் வட்டாரத்திற்கு வெண்மான்கொண்டான் (மேற்கு), செந்துறை வட்டாரத்திற்கு ஆலத்தியூர், ஆண்டிமடம் வட்டாரத்திற்கு கூவத்தூர் (தெற்கு) ஆகிய 4 கிராமங்களில் இந்த முகாம் நடக்கிறது.

    கூட்டத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகளை தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகார சான்று வழங்குதல், குடும்ப தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்ப தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம். மேலும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை அளித்து நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-ன் படி பயன்பெறலாம் என்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெள்ளுவாடி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வெள்ளுவாடி ஆற்றுப்பாலம் அருகே கடலூர் மாவட்டம், கொரக்கவாடி கிராமத்தை சேர்ந்த முருகன்(வயது 40) என்பவர் லாரி டியூப்களில் அடைத்து வைத்து சாராயம் விற்றது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து முருகன் விற்பனைக்காக வைத்திருந்த 75 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மகா மாரியம்மன் கோவிலில் பாலாலயம் நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் கடைவீதியில் உள்ள பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 1971-ம் ஆண்டு நடைபெற்றது. பின்னர் இந்த கோவிலில் திருப்பணிகளும், கும்பாபிஷேகமும் நடைபெறவில்லை. இந்நிலையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலுக்கு ஆய்வு செய்ய வந்தபோது, மகா மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த அனுமதி கோரி, பெரம்பலூர் தர்ம பரிபாலன சங்கத்தின் சார்பில் மனு அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர், இணை மற்றும் உதவி ஆணையர்கள் மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் தொடங்கிட ஆணை வழங்கினர். இதைத்தொடர்ந்து மகா மாரியம்மன் கோவிலில் சிவாச்சாரியார்கள் பாலாலயம் பூஜை செய்து, கும்பாபிஷேக திருப்பணி தொடங்கிட யாகசாலை அமைத்து, கடங்கள் புறப்பாடு செய்து சக்தி அழைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.

    • புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • கல்லூரி முதல்வர் தலைமை தாங்கினார்.

    பெரம்பலூர்

    குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையின் புகையிலை தடுப்பு மையம் ஆகியவற்றின் சார்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

    கல்லூரி முதல்வர் ரேவதி தலைமை தாங்கினார். மாவட்ட சுகாதரத்துறை திட்ட உதவி அலுவலர் டாக்டர் கலைமணி, மாவட்ட புகையிலை தடுப்பு மைய ஆலோசகர் டாக்டர் வனிதா, மாவட்ட துணை சுகாதார செயலரின் நேர்முக உதவியாளர் இளங்கோவன், மாவட்ட சுகாதார நலக் கல்வியாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் மாணவ-மாணவிகளிடையே புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசினர்.

    இதில் இளைஞர் செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக வரலாற்றுத்துறை தலைவரும், கவுரவ விரிவுரையாளரும், இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலருமான செந்தில்குமார் வரவேற்றார். முடிவில் இளைஞர் செஞ்சிலுவை சங்க மாணவ செயலாளர் மணிமுருகன் நன்றி கூறினார்.

    • அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது
    • பெரம்பலூர் கனிம வளத்துறையில் ரூ.15 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவின் தலைவர் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. தலைமையில், எம்.எல்.ஏ.க்கள் வேல்முருகன், டாக்டர் சரஸ்வதி, சிந்தனை செல்வன், மாரிமுத்து, கார்த்திகேயன், பிரகாஷ், பூண்டி கலைவாணன் ஆகியோர் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் முன்னிலையில் மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அக்குழுவினர் கவுல்பாளையத்தில் இலங்கை தமிழ் மக்களுக்காக ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் 72 வீடுகளின் கட்டுமான பணிகளையும், பின்னர் எளம்பலூர் சமத்துவபுரத்தில் ரூ.79.40 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் பெரம்பலுார் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். திருநகரில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட சுமார் 1.5 ஏக்கர் அரசு நிலம் பாதுகாக்கப்பட்டு, முள்வேலி அமைக்கப்பட்டுள்ளதையும், பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அமோனைட்ஸ் மையத்தினையும் சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவினர் பார்வையிட்டனர்.அதனை தொடர்ந்து அக்குழுவினர் அரசுத்துறைகளின் முதல்நிலை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,பெரம்பலூர் மாவட்டத்தில் கனிம வளத்துறையில் பொறுத்தவரை சுமார் ரூ.15 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் மாவட்ட கலெக்டரும், கனிம வளத்துறை அதிகாரிகளும் இணைந்து அந்த வருவாயை திரும்ப பெற நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதே போன்று கூட்டுறவுத்துறையில் ஒரு அலகு பராமரிப்பதற்காக ஒரு ஒப்பந்ததாரிடம் கொடுக்கின்றனர். ஒரு திட்டத்திற்கு குறிப்பாக ரூ.11 லட்சம் கொடுக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு ரூ.21 லட்சம் கொடுத்து கோடிக்கணக்கில் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அரியலூர் மாவட்டத்தில் என்ன ஊழல் நடந்ததோ, அதே போன்று தான் பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்திருக்கிறது. பெரம்பலூர் மாவட்டத்துக்கு அரசு மருத்துவக்கல்லூரி வரும், என்றார்.

    ×