என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் 7,655 பேர் தேர்வெழுதுகின்றனர்
- நாளை பிளஸ் 2 தேர்வு தொடங்குகிறது
- முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பெரம்பலூர்,
தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொது தேர்வு நாளை (13ம் தேதி) துவங்கிறது. இந்த தேர்வினை பெரம்பலூர் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 655 பேர் தேர்வெழுதுகின்றனர்.பெரம்பலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பில் 79 பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 906 மாணவர்களும், 3 ஆயிரத்து 749 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 655 பேரும், 11ம் வகுப்பில் 80 பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 692 மாணவர்களும், 3 ஆயிரத்து 605 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 297 பேரும் அரசு பொதுத்தேர்வை எழுதவுள்ளனர். பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கடந்த 1ம் தேதி முதல் 9ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடந்தது.இதனை தொடர்ந்து பிளஸ் 2 தேர்வு நாளை (13ம்தேதி) முதல் வரும் ஏப்ரல் 3ம் தேதி வரையும், பிளஸ் 1 தேர்வு நாளை மறுநாள் (14ம்தேதி) முதல் வரும் ஏப்ரல் 5ம்தேதி வரையும் அரசு பொதுத் தேர்வுகள் நடைபெறவுள்ளது. மாணவ,மாணவிகள் தேர்வு எழுதுவதற்காக 34 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுகள் காலை 10 மணிக்குத் தொடங்கி மதியம் 1.15 வரை நடத்தப்படும். முதல் 15 நிமிடங்கள் வினாத்தாளை வாசிக்க நேரம் வழங்கப்படுகிறது.11, 12 வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களுக்கு பள்ளிகளை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி முடிவடைந்துள்ளது. தேர்வு பணிகளில் தேர்வறை கண்காணிப்பாளர்கள், 60 பேர் கொண்ட நிலையான பறக்கும் படையினர், 10 பேர் கொண்ட பறக்கும் படை உறுப்பினர்கள் என ஆசிரியர்கள், அலுவலர்கள் என மொத்தம் 700 பேர் ஈடுபடவுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் போதிய அடிப்படை வசதிகள், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு எளிதில் சென்று வர போதிய பஸ் வசதிகள், வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல போதிய போலீஸ் பாதுகாப்பு என அனைத்து முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.






