என் மலர்tooltip icon

    நீலகிரி

    கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமை தாங்கி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    அரவேணு,

    கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மனிதனை நேசிப்போம் அறக்கட்டளை மூலம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்து கூட்டம் நடைபெற்றது.

    இதில் கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமை தாங்கி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தலைமை ஆசிரியர் அமீலியா, பரணி கேசவன், மனிதனை நேசிப்போம் அறக்கட்டளை நிறுவனர் பரூக், நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் பாலகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர்.  

    • மரம் மின்சார கம்பிகள் மேல் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
    • மின்சாரத் துறையினர் மின்சார கம்பிகளை சரி செய்தனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கால நிலை மாற்றம் ஏற்பட்டு காற்றின் வேகம் அதிகமாக வீசி வருகிறது.

    இரவில் கோத்தகிரி மிளுதோன் செல்லும் சாலையில் சில்வர் ஊக் மரம் மின்சார கம்பிகள் மேல் சாய்ந்து அப்பகுதியில் வெகு நேரம் மின்சார துண்டிப்பு ஏற்பட்டது.

    உடனடியாக மின்சார துறையினர் கோத்தகிரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து கோத்தகிரி நிலைய அலுவலர் கருப்புசாமி முதன்மை அலுவலர் மாதன் தலைமையிலான குழுவினர் மரத்தை வெட்டி அகற்றினர்.

    பின்பு மின்சாரத் துறையினர் மின்சார கம்புகளை சரி செய்து அப்பகுதிக்கு மின்சாரம் வழங்கினர். 

    • 50 வாகனங்கள் உடனடியாக வரி செலுத்தியதால் விடுவிக்கப்பட்டன.
    • சொந்த வாகனங்களை டாக்சிகளாக பயன்படுத்திய வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வரி செலுத்தாமலும், சொந்த வாகனங்களை சட்ட விரோதமாக பயன்படுத்தி வருவதாகவும் மற்றும் தகுதிச் சான்று பெறாமல் சில வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாக வட்டார போக்குவரத்து அலுவலருக்கு புகார்கள் வந்தன.

    அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் விஜயா மற்றும் முத்துசாமி ஆகியோர் ஊட்டியில் திடீர் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, ஜூன் மாதம் முதல் தற்போது வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட இலகுரக வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் என மொத்தம் 61 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதில் 50 வாகனங்கள் உடனடியாக வரி செலுத்திய நிலையில், அவைகள் விடுவிக்கப்பட்டன. மீதமுள்ள 11 வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. சொந்த வாகனங்களை டாக்சிகளாக பயன்படுத்திய வாகனங்களுக்கு ரூ.27 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 50 வாகனங்கள் மூலம் ரூ.4 லட்சத்து 86 ஆயிரம் 985 ரூபாய் வரி வசூலிக்கப்பட்டது.

    வருகிற நாட்களில் நீலகிரி மாவட்டத்தில் சொந்த வாகனங்களை, டாக்சிகளாக பயன்படுத்தினாலும், பிற மாநில பதிவு எண் கொண்ட வாகனங்களை மறுப்பதிவு செய்யாமல் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து இயக்கும் பட்சத்தில் அவர்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

    வரி செலுத்தாமல் வாகனம் இயக்கும் பட்சத்தில், தகுதிச் சான்று இல்லாத வாகனங்களை இயக்கினால் வாகனத்தின் அனுமதி சான்று ரத்து செய்யப்படும் எனவும் 18 வயது பூர்த்தியடையாதவர்கள் வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் கூறினார்.

    • மார்க்கெட்டை சுற்றிலும் 6-க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்படுகிறது.
    • ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு நடை பாதைகள் சீரமைக்கப்பட்டன.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சாலை முழுவதும் இரு பக்கங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த மார்க்கெட்டை சுற்றிலும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குழந்தைகள் பயிலும் பள்ளி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என 6-க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன . காலையிலும், மாலையிலும் பள்ளி குழந்தைகள் செல்லும் மார்க்கெட் சாலையானது இரு புறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெருக்கடி காணப்பட்டது. நடைபாதையும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பராமரிப்பின்றி கிடந்தது.

    இதுதொடர்பாக கோத்தகிரி நீலமலை அனைத்து வாகனப் பிரிவு ஓட்டுநர்கள் நெடுஞ்சாலை த்துறை அலுவலகத்திற்கு மனு கொடுத்தனர். அதில் பள்ளி குழந்தைகள் இந்த பிரதான சாலையில் செல்கின்றனர்.

    நடைபாதைகள் இரு பக்கம் ஆக்கிரமிப்பு செய்து வாகனங்கள் நிறுத்த ப்பட்டு வருவதால் பள்ளி குழந்தைகள் சாலையின் நடுவில் செல்கின்றனர். வாகனங்கள் அதிகமாக செல்வதால் அவர்கள் ஒதுங்குவதற்கு கூட இடமில்லாமல் முட்புதர்களால் நடைபாதை மூடி கிடக்கிறது. எனவே இதனை சரி செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.

    இதையடுத்து தலைமை சாலை பொறியாளர் சங்கரலால் மற்றும் பொறியாளர் ரமேஷ் ஆகியோர் கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் இருந்து பஸ் நிலையம் வரை இருக்கும் சாலைகளை சுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர். ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்க ப்பட்டு நடை பாதைகள் சீரமைக்கப்ப ட்டன. சாலை பாதுகாப்பு ஆய்வாளர் ஜெயக்குமார் மேற்பார்வை யில் நீலமலை அனைத்து ஓட்டுநர் சங்கத்தினரும் ஒன்றிணைந்து மார்க்கெட் சங்க ஓட்டுனரின் வாகனங்களைக் கொண்டே அனைத்து குப்பைகளும் அகற்றி நடைபாதை ஏற்படுத்தியது அனைவரது பாராட்டையும் பெற்றது. பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறும் முகாம் 2 கட்டமாக நடைபெற உள்ளது.
    • பொதுமக்கள் விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு டோக்கனில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் வர வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ஊட்டி சி.எஸ்.ஐ. எம்.எம் மேல்நிலைப்பள்ளி, ஒய்.எம்.சி.ஏ. அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய முகாம்களில் விண்ணப்பங்கள் பதிவு ஒத்திகை நிகழ்ச்சியினையும், ஸ்டோன்ஹவுஸ், அண்ணாகாலனி ஆகிய பகுதியில் ரேஷன் கடை பணியாளர்கள் வீடு -வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணியினையும், மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அதனை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர், முகாம் அலுவலர்களிடம் இணையதள வசதி உள்ளதா என்பதை முன்கூட்டியே சரி பார்த்து கொள்ள வேண்டும் எனவும், முகாம்களில் பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும் எனவும், அனைவரின் விண்ணப்பங்களும் சரியான முறையில் பதிவு செய்யப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    பின்னர் ஸ்டோன்ஹவுஸ், அண்ணாகாலனி பகுதியில் ரேஷன்கடை பணியாளர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்குவதை பார்வையிட்டு, பொதுமக்களிடம் விண்ணப்பபதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு டோக்கனில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் வருமாறு கலெக்டர் தெரிவித்தார். பின்னர் மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறும் முகாம் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 204 சிறப்பு முகாம்களும், இரண்டாம் கட்டமாக 200 சிறப்பு முகாம்களும் என மொத்தம் 404 சிறப்பு முகாம்கள் நடை பெற உள்ளது. முதற்கட்ட முகாமானது வருகிற 24-ந் தேதி முதல் 04-ந் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட முகாமானது 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    விண்ணப்பங்கள் பதிவு முகாம்களான மசினகுடி அரசு மேல்நிலைப்பள்ளி, வாழைத்தோட்டம் சமுதாய கூடம் ஆகிய இடங்களில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊட்டி நகராட்சிக்குட்பட்ட ஊட்டி சி.எஸ்.ஐ.சி.எம்.எம் மேல்நிலைப்பள்ளி, ஒய்எம்சிஏ, ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய முகாம்களில் விண்ணப்பங்கள் பதிவு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. அதனை பார்வையிட்டு, பணியாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, ஊட்டி வட்டாட்சியர் சரவணக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

    • 500-க்கும் மேற்பட்டோா் மழையையும் பொருட்படுத்தாமல் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.
    • ஆர்ப்பாட்டத்தில் விலைவாசியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பட்டன

    ஊட்டி,

    விலை உயர்வை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது மழை பெய்தது. இருந்த போதிலும் யாரும் கலையாமல் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர்.

    ஆர்பாட்டத்திற்கு அமைப்பு செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன், பேரவை மாவட்ட செயலாளர் சாந்தி ராமு, கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்ஜெயசீலன், மாவட்ட துணை செயலாளர் கோபால கிருஷ்ணன், பாசறை மாவட்ட செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான அக்கீம்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் பேசும் போது, அத்தியாவசிய பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டது. தமிழக அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறி விட்டது.

    இதனால் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியே வெற்றிபெறும் என்றார்.

    ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினா் காய்கறி, பால் பாக்கெட்களை மாலையாக அணிந்து நூதன முறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். 500-க்கும் மேற்பட்டோா் மழையையும் பொருட்படுத்தாமல் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா். ஆர்ப்பாட்டத்தில் விலைவாசியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பட்டன

    நகர செயலாளர் சண்முகம் ஏற்பாட்டில் நடந்த ஆர்பாட்டத்தில் குன்னூர் நகர செயலாளர் சரவணகுமார், ஊட்டி ஒன்றிய செயலாளர் கடநாடு குமார், கோத்தகிரி ஒன்றியசெயலாளர் தப்பகம்பை கிருஷ்ணன், குன்னூர் ஒன்றிய செயலாளர் பேரட்டிராஜி, குன்னூர் ஒன்றிய செயலாளர் ஹேம்சந்த், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி நகர செயலாளரும், கிளைசெயலாளருமான கார்த்திக், இளைஞர் அணி பிரபு துர்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • டம்பார் தாமி வேலை தேடி கோத்தகிரியில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டார்.
    • போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊட்டி,

    நேபாளத்தைச் சோ்ந்தவர் தேவ். இவரது மகன் டம்பாா் தாமி (வயது20). இவருக்கு திருமணம் ஆகி விட்டது.

    இந்த நிலையில் டம்பார் தாமி வேலை தேடி நீலகிரி மாவட்டம், கோத்தகிரிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்தார். பின்னர் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியாா் உணவகத்தில் வேலைக்கு சேர்ந்து பணியாற்றி வந்தார்.

    இதற்கிடையே அவருடன் வந்த உறவினா் ஒருவர் ஊட்டியில் உள்ளார். அவர் இவரை தொடர்பு கொண்டு ஊட்டிக்கு வந்து வேலை தேடு என கூறினார்.

    இதையடுத்து, டம்பார் தாமி கோத்தகிரியில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டார். இது தொடர்பாக தனது உறவினரிடமும் செல்போனில் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதையடுத்து அவரது உறவினர் கோத்தகிரி வந்து தேடி பார்த்தார். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து கோத்தகிரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டம்பார் தாமியை தேடி வந்தனர். இந்த நிலையில் கோத்தகிரியில் இருந்து குன்னூா் செல்லும் சாலையில் உள்ள தனியாா் கல்லூரி அருகே பலத்த காயங்களுடன் வாலிபர் ஒருவர் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பார்வையிட்டனர். அப்போது அது மாயமான டம்பார் தாமி என்பது தெரியவந்தது.

    உடனடியாக போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனா். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 5-0 கணக்கில் வெற்றி பெற்று உள்ளனர்.
    • 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 2-வது இடத்தையும் பிடித்தனர்.

    அரவேணு,

    சி.ஐ.எஸ்சி. மண்டல அளவிலான ஆக்கி போட்டி நடந்தது. இதில் நீலகிரி மாவட்டம் குன்னூர் பிருந்தாவன் பள்ளி அபார வெற்றி பெற்றது.

    குறிப்பாக 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 5-0 கணக்கில் வெற்றி பெற்று உள்ளனர். 19 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும் வெற்றி கிடைத்து உள்ளது.

    மேலும் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 2-வது இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிருந்தாவன் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர். 

    • முகாமில் 30-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் கலந்து கொண்டனர்.
    • முகாமில் பெண்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது.

    ஊட்டி,

    ஜெ.எஸ்.எஸ். உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்குழுமம், புதுடெல்லி அறிவியல் தொழில்நுட்பத் துறை ஆகியவை சார்பில் மகப்பேறு மற்றும் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு முகாம், அன்னை சத்யா நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் நடைபெற்றது.

    இதில் காப்பக அலுவலர் சோபனா மற்றும் 30-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் தனபால் தலைமை தாங்கினார். நிர்வாக செயலாளர் கோமதி சுவாமிநாதன் வரவேற்றார். மருந்தாக்கவியல் வேதியியல் துறை தலைவர் காளிராசன், நிர்வாக செயலர் பிரியங்கா முன்னிலை வகித்தனர்.

    ஆய்வு மாணவர்கள் நாகர்ஜுனா, தினேஷ்குமார், நீரு ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். அப்போது கல்லூரி பேராசிரியர்கள் ஜவகர், ஜுபி, கோமதி சானீஸ், சண்முகம் ஆகியோர் மகப்பேறு, மாதவிடாய் மற்றும் மனநலத்தின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து பேசினர்.

    பெண்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பார்த்திபன், பெங்களூரு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி, சம்பத்குமார், ஈரோடு காலேஜ் ஆப் பார்மசி முதல்வர் பூங்குழலி உள்பட பலர் பஙகேற்றனர். பேராசிரியர் ஷீகாந்த் ஜுப்டி, நன்றி கூறினார்.

    • சமீபகாலமாக வன விலங்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    • வனவிலங்குகளை துன்புறுத்தக்கூடாது, வன விலங்குகள் தற்காத்து கொள்வதற்காகவே தாக்குதலில் ஈடுபடும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக வன விலங்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காட்டெருமை, கரடி, சிறுத்தை, புலி ஆகியவை பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புப்பகுதிகளில் இரவு, பகல் நேரங்களில் சா்வசாதாரணமாக திரிகின்றன.

    இதனால் அங்கு மனிதன்-விலங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில் நீலகிரி மாவட்ட வன அலுவலா் கவுதம் உத்தரவின் பேரில் குன்னூா் வனச்சரகா் ரவீந்திரநாத் தலைமையில் குன்னூா் அறிஞா் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு விழிப்புணா்வு கூட்டம் நடத்தப்பட்டது.

    இதில் வனவிலங்குகளை துன்புறுத்தக்கூடாது, வன விலங்குகள் தற்காத்து கொள்வதற்காகவே தாக்குதலில் ஈடுபடும். அவைகளிடம் இருந்து நாம் எப்படி விலகிச் செல்ல வேண்டும் என்று வனச் சரகா் விளக்கிக் கூறினாா். மேலும் காடுகள் கான்கிரீட் வீடுகளாக மாறி வருவதால், அங்கு உள்ள விலங்குகள் போக்கிடம் இன்றி நகரப் பகுதிக்குள் நுழைவதாக கூறினார்.

    கூட்டத்தில் குன்னூா் வனவா்கள் கோபாலகிருஷ்ணன், ராஜ்குமாா் வனக்காப்பாளா்கள் திலீப், ஞானசேகா் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த வாரம் பெய்த தொடர்மழை காரணமாக பூண்டு விளைச்சல் மிகவும் பாதிக்கப்பட்டது.
    • தக்காளி, சின்ன வெங்காயம் விலை உயர்வால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    ஊட்டி:

    மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக மலைத்தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, பூண்டு, பீன்ஸ் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

    இதைபோல கோத்தகிரி, மஞ்சூர், ஆடாசோலை, தேனோடு, கம்பை, அணிக்கொரை உள்பட பல்வேறு இடங்களில் மலைப் பூண்டு பயிரிடப்பட்டு உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு சந்தைகளுக்கு விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ பூண்டு ரூ.170 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில், ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த வாரம் பெய்த தொடர்மழை காரணமாக பூண்டு விளைச்சல் மிகவும் பாதிக்கப்பட்டது.

    இதனால், தற்போது ஊட்டி மார்க்கெட் மற்றும் உழவர் சந்தையில் ஊட்டி மலைப்பூண்டு கிலோ ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படும் பூண்டு ரூ.160 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    ஏற்கனவே தக்காளி, சின்ன வெங்காயம் விலை உயர்வால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்தநிலையில் மலைப்பூண்டின் விலையும் உயர்ந்துள்ளதால் பெண்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். வடமாநிலங்களில் பெய்த மழையால் அங்குள்ள வியாபாரிகள் மேட்டுப்பாளையம் மொத்த விற்பனை மண்டிக்கு வந்து மலைப்பூண்டை மொத்தமாக வாங்கிச் சென்று விடுகிறார்கள். மேலும் மருத்துவ குணம் நிரம்பி உள்ளதால் மலைப்பூண்டுக்கு ஏற்கனவே வரவேற்பு அதிகம். இந்த இரண்டும் சேர்ந்து கொள்ள மலைப்பூண்டின் விலையும் உயர்ந்து வருகிறது.

    • கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக மழை குறைவாகவே பெய்தது.
    • அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் 12 மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் அப்பர்பவானி, அவலாஞ்சி, கிளன்மார்கன், பைக்காரா உள்ளிட்ட ஏராளமான அணைகள் உள்ளன. இந்த அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் 12 மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    மஞ்சூர்அருகே உள்ள எமரால்டு அணை மூலம் குந்தா மின்நிலையத்தில் 60 மெகாவாட், கெத்தை மின்நிலையத்தில் 150 மெகாவாட், பரளி மின்நிலையத்தில் 180 மெகாவாட் என மொத்தம் 390 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    எமரால்டு அணையின் மொத்த கொள்ளளவு 184 அடி. கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக மழை குறைவாகவே பெய்தது.

    இதனால், எமரால்டு பகுதியை சுற்றி உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. சிற்றாறுகள் அனைத்தும் வறண்டு கிடக்கின்றன. எனவே அணைக்கு நீர்வரத்து வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அணையில் உள்ள தண்ணீரின் இருப்பு பெருமளவு குறைந்து உள்ளது.

    ×