என் மலர்tooltip icon

    நீலகிரி

    குவிந்து நிற்கும் முட்புதர்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ஊட்டி,

    ஊட்டி நகராட்சி 10-வது வார்டுக்கு உட்பட்ட ரெட்கிராஸ் சாலை மற்றும் குடியிருப்பு பகுதியில் முட்புதர்கள் வளர்ந்து புதர்கள் போல காட்சி அளித்தன. எனவே அங்கு குவிந்து நிற்கும் முட்புதர்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த நிலையில் ரெட்கிராஸ் சாலை மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள முட்புதர்களை அகற்றுவதற்காக, நகர மன்ற உறுப்பினர் அபுதாஹிர் முயற்சிகளை மேற்கொண்டார். இதன் அடிப்படையில் நகராட்சி ஊழியர்கள் அங்கு உள்ள முட்புதகர்களை வெட்டி அகற்றி சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது நகர மன்ற தலைவர் வாணிஸ்வரி மேகநாதன், 25-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கீதா மற்றும் வருவாய்த்துறை, மின்வாரிய அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • தியாகராஜன் கடந்த 20 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றார்.
    • லவ்டேல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

    ஊட்டி,

    குன்னூரை அடுத்த ஆறுகுச்சி மீன்மலையை சோ்ந்தவா் தியாகராஜன் (35), கூலி தொழிலாளி. இவருக்கு தங்க மணி என்ற மனைவியும், 2 மகன்கள் உள்ளனா்.

    தியாகராஜன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டார். எனவே தங்க மணி கணவரிடம் கோபித்து கொண்டு சொந்த ஊரான கூடலூருக்கு சென்று விட்டாா். இதனால் தியாகராஜன் பெற்றோருடன் வசித்து வந்தாா்.

    இந்த நிலையில் அவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் காசோலை பகுதியில் உள்ள பாலத்தின் கீழ் ஆண் சடலம் கிடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. எனவே அவர்கள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்தனா். அதில் பாலத்தின்கீழ் இறந்து கிடந்தவர் தியாகராஜன் என்பது தெரிய வந்தது.

    அவர் எப்படி இறந்தார் என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக தியாகராஜனின் மனைவி தங்கமணி அளித்த புகாரின் பேரில், லவ்டேல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

    • ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், ‘நீலகிரி நில அமைப்பு’ குறித்த மூன்று நாள் கருத்தரங்கு நடந்து வருகிறது.
    • பழங்குடியினர் விடுதிகள் மற்றும் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், 'நீலகிரி நில அமைப்பு' குறித்த மூன்று நாள் கருத்தரங்கு நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக 2-ம் நாள் கருத்தரங்கு நேற்று தொடங்கியது.

    இதில் தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    அப்போது அவர் கருத்தரங்கில் பேசியதாவது:-

    ஊட்டியின் மந்தமான வளர்ச்சி வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனை மாற்றும் வகையில், அனைவரும் வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டும். இதற்கு வெவ்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் ஒன்று சேர வேண்டும். அதற்கு இதுபோன்ற கருத்தரங்குகள் மிகவும் அவசியம்.

    கடந்த 2 ஆண்டுகளில் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து கிழக்கு தொடர்ச்சி மலைகள் வரை வனப்பகுதி விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இதற்கான பயன்களை 'டிஜிட்டல்' வரைபடம் ஏற்படுத்தி கொடுத்து உள்ளது.

    நீலகிரியில் உள்ள பழங்குடியினர் விடுதிகள் மற்றும் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. நான் நிதி அமைச்சராக இருந்தபோது, நில குத்தகை புதுப்பித்தல் பணிகள் முழுவதும் நிறுத்தப்பட்டது.

    அனைத்து நிலங்கள் மற்றும் குத்தகைகளையும் கணக்கெடுக்க நடவடிக்கை எடுத்தேன். வனப்பகுதிகளை ஒட்டிய நிலங்களை மீண்டும் காடுகளாக மாற்ற வேண்டும். அப்போது தான் மலை பகுதிகளின் சுற்றுச்சூழல் மேம்படும். உயிர்ச்சூழல் மண்டலம் பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு பழனிவேல் தியாகராஜன் பேசினார்.

    • டிசம்பா் முதல் பிப்ரவரி வரை உறைபனியின் தாக்கம் இருக்கும்.
    • சுற்றுலாப் பயணிகள் ரோஜா மலா்களை வேதனையுடன் பார்த்து ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டில் தென் மேற்குப் பருவமழை எதிா்பாா்த்த அளவு பெய்யவில்லை. இந்த நிலையில் ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை நேரத்தில் பனியின் தாக்கம் அதிகரித்து உள்ளது.

    அங்கு பொதுவாக நவம்பா் முதல் டிசம்பா் வரை பனி அதிகளவில் கொட்டித் தீா்க்கும். டிசம்பா் முதல் பிப்ரவரி வரை உறைபனியின் தாக்கம் இருக்கும். ஆனால், வழக்கத் துக்கு மாறாக நடப்பு ஆண்டில் ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பனி பொழிவு தற்போது அதிகரித்துக் காணப்படுகிறது.

    இதனால் ரோஜா பூங்காவில் உள்ள ரோஜா மலா்கள் தற்போது அழுகிய நிலையில் காணப்படுகின்றன.

    எனவே ரோஜா பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அழுகி வதங்கிய நிலையில் நிற்கும் ரோஜா மலா்களை வேதனையுடன் பார்த்து ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா்.

    • மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக காலை 10 மணிக்கு 10 ஆயிரம் விவசாயிகளை திரட்டி போராட்டம்.
    • என்.சி.எம்.எஸ். மூலம் வழங்கி வந்த உரங்கள் கடந்த சில மாதங்களாக சரியாக வழங்கப்படுவதில்லை.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அங்கு உள்ள விவசாயிகள் கடந்த பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இருந்தபோதிலும் அவர்களின் கோரிக்கைக்கு தீர்வு காணப்படவில்லை.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்ட சிறு, குறு விவசாயிகள் நல சங்கத்தின் செயற்குழு கூட்டம் கோத்தகிரியில் நடைபெற்றது. தும்பூர் போஜன் தலைமை தாங்கினார். மேற்கு நாடு அர்ஜுனன், ,தொதநாடு தேவராஜ், ஆலோசனைக் குழு பெள்ளி, கீதா, குணாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பனஹட்டி சண்முகம் வரவேற்றார். நிகழ்ச்சியில் நீலகிரியை சேர்ந்த 14 ஊர் தலைவர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பச்சை தேயிலுக்கு 30 ஆண்டுகளாக நிலையான விலை கிடைக்கவில்லை. எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராடி வருகின்றனர். ஆனாலும் பலன் இல்லை. எனவே வருகிற அக்டோபர் 23-ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக காலை 10 மணிக்கு 10 ஆயிரம் விவசாயிகளை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவது, அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்குள் பச்சை தேயிலைக்கு கட்டுப்படியாகும் விலை கிடைக்கவில்லை என்றால், ஊட்டியில் மாபெரும் மாநாடு நடத்தி, அதில் பலதரப்பட்ட விவசாயிகள், வாகன துறையினர் விவசாயக் கூலிகள் மற்றும் பொதுமக்களை திரட்டுவது, பாராளுமன்ற தேர்தலில் கோரிக்கையை வலியுறுத்தி எந்த கட்சிக்கும் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணிப்பது, கோத்தகிரி தாலுகா அலுவலகத்தில் கடந்த சில மாதங்களாக நில உரிமையாளர்களுக்கு வருவாய்த் துறை மூலம் தரப்படும் நில உரிமைச் சான்று நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    இதனால் நீலகிரி மாவட்ட சிறு குறு விவசாயிகள் பெரும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். எனவே விவசாயிகளுக்கு மீண்டும் உரிமைச் சான்று வழங்க வேண்டும்.

    என்.சி.எம்.எஸ். மூலம் வழங்கி வந்த உரங்கள் கடந்த சில மாதங்களாக சரியாக வழங்கப்படுவதில்லை. எனவே மாவட்ட கலெக்டர் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

    • மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் ஊர்வலம்
    • 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    மதுரை மாநகரில் அ.தி.மு.க மாநாடு நடக்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக நீலகிரி மாவட்டத்தில் இருந்து 1000க்கும் மேற்பட்டோர் செல்ல தயாராகி வருகின்றனர்.

    இந்த நிலையில் மதுரையில் நடக்க உள்ள அ.தி.மு.க மாநாடு வெற்றி பெறவும், அதிமுக ஆட்சி மலரவும் வேண்டி ஊட்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்துவது என்று கட்சி நிர்வாகிகள் முடிவு செய்துனர்.

    இதற்காக அவர்கள் ஊட்டி காபிஹவுஸ் பகுதியில் இருந்து மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர்.

    நிகழ்ச்சிக்கு நகர கழக செயலாளர் சண்முகம் ஏற்பாடு செய்து இருந்தார். அமைப்பு செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன், பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு, கூடலூர் எம்.எல்.ஏ பொன்ஜெயசீலன், மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், பாசறை மாவட்ட செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான அக்கீம்பாபு ஆகியேர் முன்னிலை வகித்தனர்.

    குன்னூர்நகர செயலாளர் சரவணகுமார், ஒன்றிய செயலாளர்கள் கடநாடுகுமார், பேரட்டி ராஜி, ஹேம்சந்த், தப்பகம்பை கிருஷ்ணன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் டாக்டர் குருமூர்த்தி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி நகர செயலாளரும், கிளை கழக செயலாளருமான நொண்டிமேடு கார்த்திக், வண்டிசோலை முன்னாள் ஊராட்சி தலைவர் சதிஷ்குமார், ஓ.சி.எஸ். தலைவர் ஜெயராமன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    ஊட்டி காபி ஹவுஸ் பகுதியில் தொடங்கிய அ.தி.மு.க.வினரின் ஊர்வலம், ஊட்டி மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது.

    அதன்பிறகு மதுரை மாநாடு வெற்றி பெறவும், அ.தி.மு.க ஆட்சி அமைத்து கழக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராகவும் வேண்டி, ஊட்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

    • ஊராட்சி தலைவர் டி.டி.சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உல்லத்தி ஊராட்சி கடசோலை பகுதியில் கிராமசபை கூட்டம் நடந்தது.

    ஊராட்சி தலைவர் டி.டி.சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் சதிஷ் முன்னிலை வகித்தார். கிராமசபை கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு பொதுமக்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தனர். பின்னர் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.a

    • கோர்த்தகிரி காந்தி மைதானத்தில் தாலுகா அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.
    • கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் விளையாட்டு உபகரணங்களை வழங்கி ஊக்கப்படுத்தினர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோர்த்தகிரி காந்தி மைதானத்தில் தாலுகா அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக அரவோனு ட்ரீம்ஸ் லெவன் கிரிக்கெட் அணியும், கோத்தகிரி ஸ்டார் ஓம்நகர் கிரிக்கெட் அணியும் தகுதிசுற்று 2வது போட்டியில் மோதின.

    இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ட்ரீம்ஸ் லெவன் அணி, நிர்ணயிக்கப்பட்ட ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 143 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு களமிறங்கிய ஸ்டார் ஹோம் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ட்ரீம்ஸ் லெவன் அணி 3வது தகுதி சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளது.

    அப்போது கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கெங்கரை ஊராட்சி மன்ற தலைவர் முருகன், கோத்தகிரி பேரூராட்சி வார்டு உறுப்பினர் அமுதம் பாபு ஆகியோர் விளையாட்டு உபகரணங்களை வழங்கி ஊக்கப்படுத்தினர்.

    • மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் தற்போது நீலகிரி பூண்டு அதிகபட்சமாக ரூ.400-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
    • விலை உயர்வு விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறி விவசாயம் பிரதான தொழிலாக உ ள்ளது. அங்கு உள்ள விவசாயிகள் விளைநிலங்களை பதப்படுத்தி கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.

    இதன் ஒருபகுதியாக கோத்தகிரி மற்றும் கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, மிளிதேன், நெடுகுளா உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் முதல் போகமாக கடந்த ஜனவரி மாதமும், 2-வது போகமாக ஏப்ரல் மாதத்திலும் பூண்டு பயிரிட்டு இருந்தனர்.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக போதிய மழை பெய்து உள்ளது. இதனால் அங்கு பூண்டு பயிர்கள் செழித்து வளர்ந்தது. எனவே விவசாயிகள் பூண்டுக்களை சாகுபடி செய்து விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் தற்போது நீலகிரி பூண்டு அதிகபட்சமாக ரூ.400-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் 300 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டது. இதேபோல சைனாரக பூண்டு கிலோ ரூ.140-க்கு கொள்முதல் செய்யப்ப டுகிறது.

    இமாச்சலபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பூண்டு விதை வாங்குவதற்காக ஏராளமான வியாபாரிகள் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு வந்து செல்கின்றனர். இதனால் அங்கு நீலகிரி பூண்டின் கொள்முதல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • வசிக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அடிக்கடி உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.
    • நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி டானிக் டன் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் அங்கு உள்ள இறைச்சி கடைகளில் சேகரமாகும் கழிவுகள், பொதுகால்வாயில் கொட்டப்பட்டு வருகின்றன.

    இதனால் அங்கு ஈக்கள் மொய்த்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே அங்கு வசிக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அடிக்கடி உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    மேலும் நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ப்ளூ மவுண்டன் நுகர்வோர் அமைப்பு கேட்டுக் கொண்டு உள்ளது.

    • வாகனங்களை நிறுத்துவதற்காக போக்குவரத்து போலீசார், குறிப்பிட்ட சில இடங்களை ஒதுக்கீடு செய்து உள்ளனர்.
    • பொதுமக்கள் நடுரோட்டில் நடக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    ஊட்டி,

    கோத்தகிரியில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் 2, 4 சக்கர வாகனங்களை நிறுத்துவதற்காக போக்குவரத்து போலீசார், குறிப்பிட்ட சில இடங்களை ஒதுக்கீடு செய்து உள்ளனர்.

    நெடுஞ்சாலைத்துறை சார்பிலும் கோத்தகிரியின் முக்கிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்த அனுமதியில்லை என்ற போர்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. ஆனால் ரோட்டில் காலியான இடங்களில் எல்லாம் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன.

    கோத்தகிரி பஸ் நிலையம் முதல் காம்பாய்க்கடை பகுதி வரையிலான ரோட்டை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். எனவே அந்த சாலையின் ஒரு பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபாதை அமைப்பதற்காக சீரமைக்கப்பட்டு உள்ளது.

    அங்கு வாகங்களை நிறுத்த அனுமதியில்லை என்று 2 போர்டுகள் உள்ளன. ஆனாலும் வாகன ஓட்டிகள் மீண்டும் மீண்டும் அதே பகுதிகளில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் நடுரோட்டில் நடக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதுதவிர விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிலிப் சார்லஸ் தலைமையில் போலீசார் விதிகளை மீறி பொதுமக்களுக்குக்கு இடையூறு அளிக்கும் வகையில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இது அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடம் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

    • பெண்கள் உள்பட 200 தன்னாா்வலா்கள் தோ்வு செய்யப்பட்டு உள்ளனர்.
    • மழையில் நனையாமல் இருக்க உடைகள், தலைக்கவசம், கையுறை போன்றவையும் வழங்கப்பட்டன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் ஜூன் முதல் செப்டம்பா் வரை தென்மேற்குப் பருவ மழையும், அக்டோபா் முதல் நவம்பா் வரை வடகிழக்குப் பருவ மழையும், ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழையும் பெய்து வருகிறது.

    இது மலைப் பிரதேசம் என்பதால் அதிகளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும் சாலையோரங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து மின்கம்பங்களில் விழுவதால் பெரும் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இதுதவிர நீலகிரியின் குறுகிய மலைச்சாலை வழியாக தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட காலதாமதம் ஆகிறது.

    இதனைக் கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்ட பேரிடா் மேலாண்மைத் துறை மற்றும் தீயணைப்புத் துறை ஆகியவை ஒருங்கிணைந்து 200 பேருக்கு பேரிடர்மீட்பு பயிற்சி தருவது என்று முடிவு செய்தனர். இதற்காக பெண்கள் உள்பட 200 தன்னாா்வலா்கள் தோ்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து பேரிடர்மீட்பு தன்னார்வலர்கள் வெள்ள பாதிப்பு பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபடுவா்.

    இதற்காக அவா்களுக்கு தனி அடையாள அட்டை, பயிற்சி சான்றிதழ், பேரிடா் கால மீட்புப் பணிக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் மழையில் நனையாமல் இருக்க உடைகள், தலைக்கவசம், கையுறை போன்றவையும் வழங்கப்பட்டன.

    ×