கோத்தகிரியில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம்

வாகனங்களை நிறுத்துவதற்காக போக்குவரத்து போலீசார், குறிப்பிட்ட சில இடங்களை ஒதுக்கீடு செய்து உள்ளனர். பொதுமக்கள் நடுரோட்டில் நடக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
கோத்தகிரியில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம்
Published on

ஊட்டி,

கோத்தகிரியில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் 2, 4 சக்கர வாகனங்களை நிறுத்துவதற்காக போக்குவரத்து போலீசார், குறிப்பிட்ட சில இடங்களை ஒதுக்கீடு செய்து உள்ளனர்.

நெடுஞ்சாலைத்துறை சார்பிலும் கோத்தகிரியின் முக்கிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்த அனுமதியில்லை என்ற போர்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. ஆனால் ரோட்டில் காலியான இடங்களில் எல்லாம் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன.

கோத்தகிரி பஸ் நிலையம் முதல் காம்பாய்க்கடை பகுதி வரையிலான ரோட்டை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். எனவே அந்த சாலையின் ஒரு பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபாதை அமைப்பதற்காக சீரமைக்கப்பட்டு உள்ளது.

அங்கு வாகங்களை நிறுத்த அனுமதியில்லை என்று 2 போர்டுகள் உள்ளன. ஆனாலும் வாகன ஓட்டிகள் மீண்டும் மீண்டும் அதே பகுதிகளில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் நடுரோட்டில் நடக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதுதவிர விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிலிப் சார்லஸ் தலைமையில் போலீசார் விதிகளை மீறி பொதுமக்களுக்குக்கு இடையூறு அளிக்கும் வகையில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இது அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடம் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com