என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் தேயிலை விவசாயிகள் அக்டோபர் 23-ந்தேதி ஆர்ப்பாட்டம்
- மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக காலை 10 மணிக்கு 10 ஆயிரம் விவசாயிகளை திரட்டி போராட்டம்.
- என்.சி.எம்.எஸ். மூலம் வழங்கி வந்த உரங்கள் கடந்த சில மாதங்களாக சரியாக வழங்கப்படுவதில்லை.
அரவேணு,
நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அங்கு உள்ள விவசாயிகள் கடந்த பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இருந்தபோதிலும் அவர்களின் கோரிக்கைக்கு தீர்வு காணப்படவில்லை.
இந்த நிலையில் நீலகிரி மாவட்ட சிறு, குறு விவசாயிகள் நல சங்கத்தின் செயற்குழு கூட்டம் கோத்தகிரியில் நடைபெற்றது. தும்பூர் போஜன் தலைமை தாங்கினார். மேற்கு நாடு அர்ஜுனன், ,தொதநாடு தேவராஜ், ஆலோசனைக் குழு பெள்ளி, கீதா, குணாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பனஹட்டி சண்முகம் வரவேற்றார். நிகழ்ச்சியில் நீலகிரியை சேர்ந்த 14 ஊர் தலைவர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பச்சை தேயிலுக்கு 30 ஆண்டுகளாக நிலையான விலை கிடைக்கவில்லை. எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராடி வருகின்றனர். ஆனாலும் பலன் இல்லை. எனவே வருகிற அக்டோபர் 23-ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக காலை 10 மணிக்கு 10 ஆயிரம் விவசாயிகளை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவது, அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்குள் பச்சை தேயிலைக்கு கட்டுப்படியாகும் விலை கிடைக்கவில்லை என்றால், ஊட்டியில் மாபெரும் மாநாடு நடத்தி, அதில் பலதரப்பட்ட விவசாயிகள், வாகன துறையினர் விவசாயக் கூலிகள் மற்றும் பொதுமக்களை திரட்டுவது, பாராளுமன்ற தேர்தலில் கோரிக்கையை வலியுறுத்தி எந்த கட்சிக்கும் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணிப்பது, கோத்தகிரி தாலுகா அலுவலகத்தில் கடந்த சில மாதங்களாக நில உரிமையாளர்களுக்கு வருவாய்த் துறை மூலம் தரப்படும் நில உரிமைச் சான்று நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இதனால் நீலகிரி மாவட்ட சிறு குறு விவசாயிகள் பெரும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். எனவே விவசாயிகளுக்கு மீண்டும் உரிமைச் சான்று வழங்க வேண்டும்.
என்.சி.எம்.எஸ். மூலம் வழங்கி வந்த உரங்கள் கடந்த சில மாதங்களாக சரியாக வழங்கப்படுவதில்லை. எனவே மாவட்ட கலெக்டர் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.






