என் மலர்tooltip icon

    நீலகிரி

    சிங்காரா மற்றும் குன்னூர் அருகே சிறுத்தைப்புலி நடமாடி வருவதுடன் 3 நாய்களையும் தூக்கிச்சென்றது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கிளன்மார்கன் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து மலைப்பாங்கான அடர்ந்த வனம் வழியாக சிங்காரா மின் உற்பத்தி நிலையத்துக்கு ராட்சத குழாய் மூலம் (டனல்) தண்ணீர் செல்கிறது. மின் உற்பத்தி நிலையம் செயல்படுவதால் சிங்காரா, மாயாறு உள்ளிட்ட இடங்களில் மின் வாரிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் குடியிருப்புகள் உள்ளது.

    இந்த நிலையில் சிங்காரா மின் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றும் மின் வாரிய குடியிருப்பு பகுதியில் சிறுத்தைப்புலி நடமாடி வருகிறது. மேலும் அப்பகுதியில் மின் உற்பத்தி நிலையத்துக்குச் செல்லும் ராட்சத குழாய்கள் உள்ள இடத்தில் சிறுத்தைப்புலி பதுங்கி இருக்கிறது.

    பொதுமக்கள் நடமாடும்போது சிறுத்தைப்புலி அங்கிருந்து தப்பி ஓடி புதர்களுக்குள் சென்றுவிடுகிறது.இதனால் அப்பகுதி பொதுமக்களும் அச்சத்துடன் நடந்து செல்லும் நிலை காணப்படுகிறது. தொடர்ந்து சில மணி நேரம் கழிந்த பின்னர் சிறுத்தைப்புலி மீண்டும் அப்பகுதிக்கு வந்து விடுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். எனவே அந்த சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இந்த நிலையில் குன்னூர் அருகே சின்ன வண்டி சோலை குடியிருப்பு பகுதியில் மற்றொரு சிறுத்தைப்புலி புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இரவு நேரத்தில் அங்கு வந்த சிறுத்தைப்புலி மரி என்பவர் ஆசையுடன் வளர்த்து வந்த நாயை தூக்கிச்சென்றது. அந்த நாயின் உடல் பகுதி அருகில் உள்ள மரத்தில் இருந்தது.

    இது குறித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த சிறுத்தைப்புலி அந்த கிராமத்துக்குள் புகுந்து 3 நாய்களை தூக்கிச்சென்றதும் தெரியவந்தது.

    எனவே அந்த சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    குன்னூரில் ரூ.4½ கோடியில் போலீசாருக்கு கட்டப்பட்ட தங்கும் விடுதி மற்றும் மண்டபத்தை போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் திறந்து வைத்தார்.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் பருவமழை தீவிரம் அடையும்போது, பல்வேறு இடங்களில் இயற்கை பேரிடர் நிகழ்கிறது. அப்போது மீட்பு பணியில் ஈடுபட சமவெளி பகுதிகளில் இருந்து போலீசார் வரவழைக்கப்படுகின்றனர். அவர்கள் குன்னூரில் உள்ள திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் தங்க வைக்கப்படுகின்றனர். எனினும் போதிய வசதி இன்றி அவர்கள் அவதிப்படும் நிலை இருந்தது.

    இந்த நிலையில் காவல்துறை சார்பில் குன்னூரில் போலீசாருக்கு தங்கும் விடுதி மற்றும் அவர்களது குடும்பத்தினர் சுப நிகழ்ச்சி நடத்தி கொள்ள மண்டபம் ஆகியவை ரூ.4 கோடியே 50 லட்சம் செலவில் கட்டப்பட்டது.

    இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலந்துகொண்டு விடுதி மற்றும் மண்டபத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். இதில் கூடுதல் சூப்பிரண்டு சங்கு, குன்னூர் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார், நீலகிரி மாவட்ட குற்ற ஆவண காப்பக துணை சூப்பிரண்டு மகேஸ்வரன், குன்னூர் நகர இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன், வியாபாரிகள் சங்க தலைவர் பரமேஸ்வரன், மக்கள் மன்ற நிர்வாகி ஜெபரத்தினம், நகை வியாபாரிகள் சங்க நிர்வாகி உசேன் அலி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    அதன்பின்னர் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் வருகிற 4-ந் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தற்போது திறக்கப்பட்ட விடுதியில் 100 போலீசார் வரை தங்க வசதி உள்ளது. பேரிடர் காலங்களில் போலீசின் மீட்பு குழுவினர் 5 குழுக்களாக பிரிந்து, பணியில் ஈடுபடுவார்கள் என்றனர்.
    கோத்தகிரி அருகே காட்டுப்பன்றி தாக்கி பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கோத்தகிரி:

    கோத்தகிரி அருகே உள்ள கீழ் கோத்தகிரி தென்றல் நகரை சேர்ந்தவர் சரோஜா என்ற காளியம்மாள் (வயது 53). இவர் நேற்று மாலை 7 மணியளவில் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த காட்டுப்பன்றி காளியம்மாளை தாக்கியது. இதில் நிலைகுலைந்த அவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காளியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    முன்னதாக அந்த காட்டுப்பன்றி அதே பகுதியை சேர்ந்த ஜோன் (76) என்பவரையும் தாக்கியது. இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் கதறிய அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காட்டுப்பன்றியை விரட்டினர். பின்னர் காயமடைந்த அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் வருகைக்கான இ-பதிவு நடைமுறை தொடரும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்கள் இன்னும் முழுமையாக திறக்கப்படவில்லை. நோய்த் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஏற்கெனவே பொதுப் பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தளர்வுகளுடன் ஊரடங்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுற்றுலாத் தலங்களுக்கு அனுமதிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. விரைவில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நீலகிரி மாவட்டம் அதிகமான சுற்றுலாப் பகுதிகளை கொண்டுள்ளதால் அதிகபடியான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். அரசு தெரிவித்துள்ளபடி மாவட்டத்திற்குள் நுழைவதற்கு முறையாக இ-பதிவு செய்த பின்னர் தான் வர வேண்டும். இ-பதிவு நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும். சுற்றுலாப் பயணிகள் தவறாமல் முக கவசம் அணிந்து அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    கூடலூர் பகுதியில் நெற்பயிர்களை காட்டு யானைகள் தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன. எனவே உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கூடலூர்:

    கூடலூர் வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் வாழ்ந்து வருகின்றன. இதனால் வனத்தை ஒட்டிய தேயிலை தோட்டங்கள் வழியாக காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் அடிக்கடி புகுந்து பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருகின்றன. கூடலூர் கோத்தர்வயல், தோட்டமூலா, கெவிப்பாரா, பாடந்தொரை, தேவாலா உள்பட பல கிராமங்களுக்குள் காட்டுயானைகள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    கூடலூர் அருகே பாடந்தொரை, மூச்சிக்கண்டி, சுண்டவயல், கர்க்கப்பாலி உள்பட பல குக்கிராமங்களில் 2 காட்டு யானைகள் கடந்த சில வாரங்களாக முகாமிட்டு வருகிறது. தற்போது கூடலூர் பகுதியில் பல ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதிக்கு காட்டு யானைகள் வர தொடங்கி உள்ளது. அது போல் வரும் காட்டு யானைகள் வயல்களுக்குள் புகுந்து நெற்பயிர்களை மிதித்து சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ஊருக்குள் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன்பேரில் வனத்துறை ஊழியர்களும் நேரில் வந்து காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது வனப்பகுதிக்குள் செல்லும் காட்டு யானைகள் மீண்டும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    நேற்று முன்தினம் சுண்டவயல் பகுதியில் காட்டுயானைகள் இரவு நேரத்தில் புகுந்தன. அவை அனந்தன், சண்முகம் உள்ளிட்ட விவசாயிகளின் வயலில் நெற்பயிர்களை மிதித்து சேதப்படுத்தின. இதில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் இருந்த நெற்கதிர்கள் நாசமானது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் மட்டுமே சுமார் 400 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள் ஆண்டுதோறும் விளைவிக்கப்படுகிறது. ஆனால் நெற்கதிர்களை அறுவடை காலம் நெருங்கும் போது காட்டு யானைகள் ஊருக்குள் அதிகளவில் வந்து சேதப்படுத்துகின்றன. இதனால் நாங்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகிறோம். ஆனால் உரிய இழப்பீடு தொகையை வனத்துறை மற்றும் வேளாண் துறையினர் வழங்குவது இல்லை. காப்பீடு திட்டத்தில் நெற்பயிர்களை சேர்க்காததால் காப்பீடு செய்ய முடியாமல் உள்ளது.

    எனவே காட்டு யானைகளால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட இழப்பீட்டு தொகையை விரைவாக வழங்க வேண்டும். மேலும் நெற்பயிர்களை காப்பீடு செய்யவும் வழிவகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    நீலகிரியில் இதுவரை 2 லட்சத்து 16 ஆயிரம் பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 7 ஆயிரத்து 350 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீலகிரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகளால் பாதிப்பு குறைந்து உள்ளது. கடந்த சில நாட்களாக 20-க்கும் கீழ் தினமும் கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. அரசு தெரிவித்த வழிமுறைகளின்படி சிகிச்சை அளிக்கப்படுவதால் இதுவரை 7 ஆயிரத்து 154 பேர் பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த சுற்றுலா பயணிகள், பூங்கா பணியாளர்கள், வியாபாரிகள், தங்கும் விடுதி ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரியில் இதுவரை 2 லட்சத்து 16 ஆயிரம் பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
    ஊட்டியில் புதிய வீடுகள், அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கேத்தி பிரகாசபுரம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.15.49 கோடி மதிப்பில் 172 வீடுகள் கட்டப்பட்டு உள்ளது. ஊட்டி, குன்னூர் உள்பட நீர்நிலைகளை ஒட்டி வசித்து வரும் மக்களின் வீடுகளுக்குள் பருவமழை காலங்களில் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. இதனால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றி அங்கு வசித்தவர்களுக்கு மாற்றிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீர் நிலைகளை ஒட்டி வசிப்பவர்கள், அபாயகரமான இடங்களில் இருப்பவர்களுக்கு பிரகாசபுரத்தில் புதிய வீடுகள் வழங்கப்பட உள்ளது.

    இங்கு 43 பிளாக்குகளாக வீடுகள் கட்டப்பட்டு இருக்கிறது. ஒரு வீடு 392 சதுர அடியில் கட்டப்பட்டு உள்ளது. மின் வினியோகம் கொடுப்பதற்காக மின்கம்பங்கள் நடப்பட்டு உள்ளன. குடிநீர் வினியோகம் செய்ய மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வீடுகள் விரைவில் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதால், தற்போது நடைபெற்று வரும் இறுதி கட்ட பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாலை அமைப்பது, குழாய்கள் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு போன்ற பணிகள் நடந்து வருவதை ஆய்வு மேற்கொண்டார்.

    அதனை தொடர்ந்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஊட்டி எச்.பி.எப். பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மருத்துவமனை, நிர்வாக கட்டடம், விடுதிகள் போன்ற கட்டட பணிகளை ஆய்வு மேற்கொண்டு அதிகமான பணியாளர்களை கொண்டு பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆய்வின் போது அரசு மருத்துவக்கல்லூரி டீன் ரவீந்திரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். சென்னை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து வெளிநாட்டு மரங்கள் வெட்டப்பட்டு, அங்கேயே ஒதுக்கி வைக்கப்பட்டு உள்ளது. மருத்துவமனை கட்டிடங்கள் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகின்றது.
    வனத்துக்குள் அத்துமீறி நுழைந்த கேரள சுற்றுலா பயணிகளுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    கூடலூர்:

    முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினகுடியில் இருந்து மாயார் செல்லும் சாலையில் வன ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனால் வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். இந்த சமயத்தில் வனத்துக்குள் சிலர் அத்துமீறி நுழைந்து வனத்தை புகைப்படம் எடுத்து கொண்டிருந்தனர்.

    இதைக்கண்ட வனத் துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் வனத்துறையின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வனச்சரகர் மாரியப்பன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வனத்துக்குள் அத்துமீறி நுழைந்த 4 பேரை பிடித்து மசினகுடி வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

    மேலும் அவர்களுடைய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் புலிகள் காப்பக வெளி மண்டல துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து வனத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த சிஜூ (வயது 48) , மது (40) , கொல்லம் பகுதியை சேர்ந்த சுகுமாரன் (46) , ஆலப்புலாவை சேர்ந்த சுனில் (40) ஆகியோர் நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா வந்து இரவில் மசினகுடியில் தங்கி இருந்தது தெரிய வந்தது.

    பின்னர் காரில் வனப்பகுதியை பார்வையிட சென்றபோது வனத்துக்குள் அத்துமீறியது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிடிபட்ட 4 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இத்தொகையை சுற்றுலா பயணிகள் உடனடியாக செலுத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, புலிகள் காப்பக வனத்தில் எக்காரணம் கொண்டும் அத்துமீறி செல்லக்கூடாது. தடையை மீறி சென்றால் சம்பந்தப்பட்ட சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    முதுமலை ஊராட்சியில் நெற்பயிர்களை அடிக்கடி காட்டு யானை சேதப்படுத்துவதால் விவசாயிகள் மிகுந்த நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர்.
    கூடலூர்:

    கூடலூர் தாலுகா முதுமலை ஊராட்சி புலிகள் காப்பக வனத்தில் உள்ளது. ஊராட்சி பகுதியில் முதுகுளி, நாகம்பள்ளி, மண்டக்கரை, புலியாளம், கோழிமலை உள்பட பல குக்கிராமங்கள் உள்ளது. இங்கு விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். அடர்ந்த வனத்தின் கரையோரம் வசிப்பதால் காட்டு யானைகள்,மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் ஊருக்குள் அடிக்கடி வந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    தற்போது நெல், வாழை மற்றும் பலவகை காய்கறிகள் பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில் ஊராட்சி பகுதியில் கடந்த ஒரு வாரமாக காட்டு யானை ஒன்று முகாமிட்டு வருகிறது. தொடர்ந்து அங்கு பயிரிட்டுள்ள நெற்பயிர்களை மிதித்து சேதப்படுத்தி வருகிறது. இன்னும் 2 வாரங்களில் நெற்கதிர்கள் அறுவடை செய்ய உள்ள நிலையில் அந்த காட்டு யானை அவைகளை சேதப்படுத்தி வருகிறது.

    இதில் கோழிமலை கமலா, குட்டி, கிருஷ்ணன் குஞ்சன், வாசு, கல்லஞ்சேரி வேலாயுதன், மணி உள்பட பல விவசாயிகளின் நெற்பயிர்களை ஏக்கர் கணக்கில் மிதித்து நாசம் செய்துள்ளது. இதனால் மிகுந்த நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர்.

    காட்டு யானை ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது. இதனால் தொடர் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:-

    காட்டு யானைகள் ஒவ்வொரு காலக்கட்டங்களில் விளையும் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் பாதிப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை வனத்துறையினரிடம் நேரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் எந்த நடவடிக்கை எடுப்பதில்லை. குறிப்பிட்ட சில யானைகள் மட்டுமே ஊருக்குள் வந்து இடையூறு செய்கிறது. தற்போது நெற்கதிர்களை மிதித்தும் சேதப்படுத்தி வருகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கவலையுடன் கூறினர்.
    வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? என்று சரிபார்க்கவும், சந்தேகங்களை கேட்டு அறியவும் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் உதவி மையம் செயல்பட்டு வருகிறது.
    ஊட்டி:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி கடந்த 16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்தல், முகவரி மாற்றம் செய்ய வருகிற டிசம்பர் மாதம் 15-ந் தேதி வரை சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடந்து வருகின்றது. 1.1.2021-ந் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள மக்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என்பதை சரிபார்க்க 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். தங்களது பெயர் எந்த சட்டமன்ற தொகுதியில் உள்ளது, சம்பந்தப்பட்ட வாக்காளர் ஓட்டு போடும் வாக்குச்சாவடி என்ன என்பது குறித்து அறியலாம். மேலும் வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் சம்பந்தமான சந்தேகங்களை கேட்கலாம். உதவி மையத்தில் சுழற்சி முறையில் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை 50 அழைப்புகள் வந்து உள்ளன.

    திருத்தம், முகவரி மாற்றம் செய்ய எந்த படிவங்களில் ஆதாரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்று விளக்கப்படுகிறது. உதவி மையம் மட்டுமின்றி www.nvsp.in, http://eci.gov.in என்ற இணையதள முகவரியில் வாக்காளர்கள் தங்களது பெயர், புகைப்படம், முகவரி போன்றவை சரியாக இடம் பெற்று உள்ளதா என்று சரிபார்க்கலாம். திருத்தம், முகவரி மாற்றம் செய்ய வேண்டியதற்கான படிவங்களை பதிவிறக்கம் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். புதியதாக பெயர் சேர்ப்பவர்கள் வயது சான்றாக பிறப்பு சான்று, பள்ளி மாற்றுச்சான்று, மதிப்பெண் சான்று ஆகியவற்றில் ஏதேனும் ஒரு நகல், முகவரி சான்றுக்காக ஆதார் அடையாள அட்டை, ஸ்மார்ட் கார்டு, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு நகலை சமர்ப்பிக்க வேண்டும்.

    தகுதியான வாக்காளர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்க படக்கூடாது. இதை கருத்தில் கொண்டு சிறப்பு முகாம் கடந்த வாரம் நடந்தது. இதில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க போன்றவற்றுக்கு ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்க கடைசி நாள் டிசம்பர் 15-ந் தேதி ஆகும். வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    திருமண ஆசை வார்த்தை கூறி 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை விதித்து ஊட்டி மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த மாதன் என்பவரது மகன் ஈஸ்வரன் (வயது 24). பழங்குடியினரான இவர் கூலி வேலை செய்து வந்தார். இவர் 10-ம் வகுப்பு படித்து வந்த 15 வயதான பழங்குடியின சிறுமியிடம் பழகினார்.

    பின்னர் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ந் தேதி பலாத்காரம் செய்தார். பின்னர் அங்குள்ள ஒரு கோவிலில் சிறுமிக்கு தாலியும் கட்டினார். இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது தொடர்பாக கூடலூர் மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் போலீசார் சிறுமியை கடத்திச்சென்றது, ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்தது, பலாத்காரத்தில் ஈடுபட்டது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் ஈஸ்வரனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

    வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட ஈஸ்வரனுக்கு, சிறுமியை கடத்தி சென்ற குற்றத்துக்கு 3 ஆண்டுகள், திருமணம் செய்ததற்கு ஒரு ஆண்டு, பலாத்காரத்தில் ஈடபட்டதற்கு 10 ஆண்டு என்று நீதிபதி அருணாசலம் தீர்ப்பளித்தார். அத்துடன் இந்த தீர்ப்பை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் போக்சோ சிறப்பு வக்கீல் மாலினி ஆஜராகி வாதாடினார். சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஈஸ்வரனை போலீசார் கோவைக்கு அழைத்துச்சென்று மத்திய சிறையில் அடைத்தனர். தற்போது அந்த சிறுமி அரசு குழந்தைகள் நல காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து வக்கீல்கள் கூறும்போது, ஒரு வழக்கில் ஒன்றுக்கு மேல் பிரிவு இருக்கும் பட்சத்தில், அதில் ஒவ்வொரு பிரிவுக்கும் தண்டனை வழங்கப்பட்டு, ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டால், அந்த தண்டனையில் எது அதிகமாக இருக்கிறதோ அதை அனுபவிக்க வேண்டும். அதன்படி ஈஸ்வரனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையில் அவர் 10 ஆண்டு அனுபவிக்க வேண்டும் என்றனர்.
    கோத்தகிரியில் சிறுத்தை குட்டியை தேடி தாய் சிறுத்தை ஊருக்குள் வர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கிளப் ரோடு பகுதி அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. இந்த வனத்தில் சிறுத்தை, புலி, காட்டெருமை, மான், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் வசிக்கின்றன. வனவிலங்குகள் குடிநீர், உணவு தேடி அடிக்கடி ஊருக்குள் நுழைவது இந்த பகுதியில் வாடிக்கையாக உள்ளது.

    இந்நிலையில் இன்று காலை லாங்வுட் சேலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 1½ வயது ஆண் சிறுத்தை கிளப் ரோடு பகுதிக்கு வந்தது. அப்போது அடையாளம் தெரியாத வாகனம் சிறுத்தை மீது மோதியது. இதில் சிறுத்தை குட்டி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சம்பவ இடத்திலேயே இறந்தது.

    இன்று காலை அந்த வழியே சென்றவர்கள் சிறுத்தை குட்டி காயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து கோத்தகிரி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    ரேஞ்சர் செல்வக்குமார், வனவர் வீரமணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து இறந்து கிடந்த சிறுத்தை குட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்சென்றனர்.

    சிறுத்தை குட்டியை தேடி தாய் சிறுத்தை ஊருக்குள் வர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வன ஊழியர்கள் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×