search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபராதம்
    X
    அபராதம்

    வனத்துக்குள் அத்துமீறி நுழைந்த கேரள சுற்றுலா பயணிகளுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம்

    வனத்துக்குள் அத்துமீறி நுழைந்த கேரள சுற்றுலா பயணிகளுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    கூடலூர்:

    முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினகுடியில் இருந்து மாயார் செல்லும் சாலையில் வன ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனால் வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். இந்த சமயத்தில் வனத்துக்குள் சிலர் அத்துமீறி நுழைந்து வனத்தை புகைப்படம் எடுத்து கொண்டிருந்தனர்.

    இதைக்கண்ட வனத் துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் வனத்துறையின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வனச்சரகர் மாரியப்பன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வனத்துக்குள் அத்துமீறி நுழைந்த 4 பேரை பிடித்து மசினகுடி வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

    மேலும் அவர்களுடைய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் புலிகள் காப்பக வெளி மண்டல துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து வனத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த சிஜூ (வயது 48) , மது (40) , கொல்லம் பகுதியை சேர்ந்த சுகுமாரன் (46) , ஆலப்புலாவை சேர்ந்த சுனில் (40) ஆகியோர் நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா வந்து இரவில் மசினகுடியில் தங்கி இருந்தது தெரிய வந்தது.

    பின்னர் காரில் வனப்பகுதியை பார்வையிட சென்றபோது வனத்துக்குள் அத்துமீறியது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிடிபட்ட 4 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இத்தொகையை சுற்றுலா பயணிகள் உடனடியாக செலுத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, புலிகள் காப்பக வனத்தில் எக்காரணம் கொண்டும் அத்துமீறி செல்லக்கூடாது. தடையை மீறி சென்றால் சம்பந்தப்பட்ட சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×