என் மலர்tooltip icon

    நீலகிரி

    குன்னூர் தேயிலை ஏல மையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்து கொண்டு தேயிலைத்தூளை ஏலம் எடுக்கிறார்கள்.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலைகள் உற்பத்தி செய்யும் தேயிலைத்தூள் குன்னூரில் உள்ள தேயிலை ஏல மையத்தில் விற்பனை செய்யப்படுகிறது. குன்னூர் தேயிலை வர்த்தகர் அமைப்பின் சார்பில் நடத்தப்படும். இந்த ஏலம் வாரந்தோறும் வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது.

    ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்து கொண்டு தேயிலைத்தூளை ஏலம் எடுக்கிறார்கள். விற்பனை எண் 25-க்கான ஏலம் கடந்த 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

    ஏலத்திற்கு மொத்தம் 26 லட்சத்து 92 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் வந்தது. இதில் 19 லட்சத்து 87 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 7 லட்சத்து 4 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் டஸ்ட் ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 88 சதவித தேயிலைத்தூள் விற்பனையானது. அதாவது 23 லட்சத்து 37 ஆயிரம் கிலோ விற்பனையான தேயிலைத்தூளின் விற்பனையானது. இதன் மதிப்பு ரூ.22 கோடியே 32 லட்சம் ஆகும்.

    இதில், சி.டி.சி. தேயிலைத்தூளின் உயர்ந்தபட்ச விலை கிலோ ஒன்று ரூ..305-க்கும், ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் உயர்ந்தபட்ச விலை கிலோ ஒன்று ரூ.280-க்கும் ஏலம் போனது. விற்பனையான அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் கிலோவுக்கு ரூ.3 விலை வீழ்ச்சி ஏற்பட்டது.

    சராசரி விலையாக இலை ரகத்தின் சாதாரண வகை கிலோ ஒன்று ரூ.80-ல் இருந்து ரூ.82 வரையும், விலை உயர்ந்த தேயிலைத்தூள் கிலோ ஒன்று ரூ.150-ல் இருந்து ரூ.189 வரையும் ஏலம் சென்றது. டஸ்ட் ரகத்தின் சாதாரண வகை கிலோ ஒன்று ரூ.80-ல் இருந்து ரூ.87 வரையும், விலை உயர்ந்த தேயிலைத்தூள் கிலோ ஒன்று ரூ.161-ல் இருந்து ரூ.206 வரையும் ஏலம் சென்றது.

    விற்பனை எண்.26-க்கான ஏலம் வருகிற 1, 2 ஆகிய தேதிகளில் நடக்கிறது. ஏலத்திற்கு மொத்தம் 23 லட்சத்து 37 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் வருகிறது. கடந்த 5 வாரமாக தேயிலைத்தூளின் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    ஊட்டி அருகே கள்ளக்காதலியை கொன்று நாடகமாடிய சப்-இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே உள்ள காந்தல் புதுநகரை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி மாகி(53). இவர்களுக்கு ஷீலா என்ற மகள் உள்ளார். மாகி ஊட்டி மத்திய பஸ்நிலையம் அருகே தள்ளுவண்டியில் உணவு வியாபாரம் செய்து வந்தார்.

    கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த மாகி 3 நாட்களுக்கு முன்பு குணமாகி வீடு திரும்பினார். நேற்று முன்தினம் மதியம் மாகி பொருட்கள் வாங்க செல்வதாக கூறிவிட்டு மொபட்டில் ஊட்டிக்கு சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் நேற்று காலை ஊட்டியில் கியூ பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கும் முஸ்தபா என்பவர் மாகியின் வீட்டிற்கு வந்தார். அவர், அங்கிருந்த மாகியின் மகள் ஷீலாவிடம், உனது தாய் நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்ததாகவும், ஆஸ்பத்திரியில் இருந்து உடலை தான் எடுத்து வந்ததாகவும் கூறி உடலை ஒப்படைத்து விட்டு புறப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் மாகியின் உடலை பார்த்தபோது, முகம், கண் ஆகிய பகுதிகளில் காயங்கள் இருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் ஊட்டி நகர மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். மேலும் உடலை ஒப்படைத்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அவரை பிடித்து விசாரித்த போது, அவர் மாகியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு 20 வருடங்களுக்கு முன்பு தள்ளுவண்டி கடை நடத்தி வரும் மாகியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தோம்.

    எங்களது விவகாரம் இருவரது வீட்டிற்கு தெரிந்து எங்களை கண்டித்தனர். ஆனாலும் எங்களது கள்ளக்காதல் தொடர்ந்தது.

    மாகி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் கடந்த ஒருவாரமாக அவரை சந்திக்க முடியவில்லை. இந்த நிலையில் தொற்று குணமடைந்து மாகி வீட்டிற்கு வந்த தகவலை அறிந்த நான் சம்பவத்தன்று அவருக்கு போன் செய்து ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள விடுதிக்கு வருமாறு அழைத்தேன்.

    அவரும் அந்த விடுதிக்கு வந்தார். அங்கு இருவரும் உல்லாசம் அனுபவித்தோம். அப்போது மாகி செலவுக்கு என்னிடம் பணம் கேட்டார். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த நான் அவரை தாக்கினேன். இதனால் அவர் மயங்கி விழுந்து விட்டார். பின்னர் நான் அவரை அங்கேயே விட்டு விட்டு எனது வீட்டிற்கு சென்றேன்.

    மறுநாள் காலை வந்து பார்த்தபோது மாகி உயிரிழந்திருப்பதை அறிந்ததும் அதிர்ச்சியடைந்தேன். இதனால் என்ன செய்வது என்று யோசித்த நான், அவரது உடலை ஒரு வெள்ளை துணியை எடுத்து சுற்றினேன். பின்னர் அதனை எடுத்து கொண்டு அவரது வீட்டிற்கு சென்று, நெஞ்சுவலியால் இறந்து விட்டதாக கூறி கொடுத்து விட்டு, எனது வீட்டிற்கு சென்று எதுவும் தெரியாதது போல் இருந்து கொண்டேன். ஆனால் போலீசாரின் தீவிர விசாரணையில் சிக்கி கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து போலீசார் முஸ்தபாவை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கூடலூரில் உள்ள சிறையில் அடைத்தனர். 

    முஸ்தபாவிடம் மாகி செலவுக்கு பணம் கேட்டதால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் முஸ்தபா, மாகியை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கியூ பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் முஸ்தபா (56). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் முஸ்தபாவுக்கும், காந்தல் புதுநகரை சேர்ந்த மாகி(51) என்ற பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. அவருக்கும் ஏற்கனவே திருமணமாகி கணவர் மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாகி, குணமடைந்து வீடு திரும்பினார்.

    இந்தநிலையில் இருவரும் ஊட்டியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி உல்லாசம் அனுபவித்தனர். அப்போது முஸ்தபாவிடம் மாகி செலவுக்கு பணம் கேட்டதால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் முஸ்தபா, மாகியை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் உடலை அவரது வீட்டுக்கு கொண்டு வந்த முஸ்தபா அங்குள்ளவர்களிடம் கொரோனா பாதிப்பால் மாகி இறந்து விட்டதாக கூறினார். எனினும் சந்தேகம் அடைந்த அவர்கள், ஊட்டி நகர மேற்கு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீஸ் விசாரணையில் முஸ்தபாவின் குட்டு வெளிப்பட்டது. தன்னிடம் பணம் கேட்டு தகராறு செய்த கள்ளக்காதலி மாகியை கொலை செய்துவிட்டு நாடகமாடியதை அவர் ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முஸ்தபாவை கைது செய்தனர்.
    கொரோனா தடுப்பூசி முகாமில் பழங்குடியினநல வருவாய் ஆய்வாளர் காமு, மாவோயிஸ்டு தடுப்பு பிரிவு காவலர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    பந்தலூர்:

    பந்தலூர் அருகே உள்ள கிளன்ராக் ஆதிவாசி காலனியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறையினர் ஆதிவாசி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். இந்த முகாமில் பழங்குடியினநல வருவாய் ஆய்வாளர் காமு, மாவோயிஸ்டு தடுப்பு பிரிவு காவலர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த முகாம் முடிந்து 2 ஜீப்களில் சுகாதாரத்துறையினர் மற்றும் அதிகாரிகள் பந்தலூருக்கு சென்றனர். கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் சாலை சேறும், சகதியுமாக இருந்தது. இதனால் நடுவழியில், ஜீப் சேற்றில் சிக்கி கொண்டது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் நடந்தே பந்தலூருக்கு சென்றனர்.
    டேரேமியா கிராமத்திற்கு அருகே உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து தேயிலை தொழிலாளர்கள் குந்தா வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
    குன்னூர்:

    குன்னூர் அருகே மேல் டேரேமியா என்ற கிராமம் உள்ளது. வனப்பகுதியையொட்டி உள்ள இந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. இங்கு அடிக்கடி காட்டு யானைகள், காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    இந்த நிலையில் மேல் டேரேமியா கிராமத்திற்கு அருகே உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து தேயிலை தொழிலாளர்கள் குந்தா வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்த குந்தா வனத்துறை உதவி வன பாதுகாவலர் ராஜேஸ் மற்றும் வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள் ராஜா, நந்தினி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து இறந்து கிடந்த சிறுத்தையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து சிறுத்தையின் உடலை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், இறந்தது 9 மாத பெண் சிறுத்தை ஆகும். சிறுத்தையின் உடலில் காயங்கள் உள்ளன. எனவே பிற வனவிலங்குகள் தாக்கியதால் சிறுத்தை இறந்திருக்கலாம் என்றனர்.
    ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்துக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்க பெறுவதை தொடர்ந்து முன்னுரிமை அடிப்படையில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று கூடுதலாக 6,400 தடுப்பூசி வந்தது. பின்னர் பழங்குடியின மக்கள், தோட்ட தொழிலாளர்களுக்கு செலுத்த அனுப்பி வைக்கப்பட்டது.

    ஊட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று நடைபெற்றது. இதையறிந்த ஊட்டி நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பொதுமக்கள் ஆர்வத்துடன் அரசு ஆஸ்பத்திரிக்கு படையெடுத்தனர். இதனால் நேரம் செல்ல, செல்ல பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து அலைமோதியது.

    அங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் 2 வரிசைகளில் முண்டியடித்தபடி பொதுமக்கள் நின்று கொண்டிருந்தனர். 250 டோஸ்கள் மட்டும் ஒதுக்கப்பட்டு இருந்ததால், முதலில் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தடுப்பூசி செலுத்த வந்து காத்திருந்த 80 பேருக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு இருந்தது. அவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    காலை முதல் மதியம் வரை டோக்கன் கிடைக்கும் என்று 300-க்கும் மேற்பட்டோர் மையம் முன்பு காத்திருந்தனர். பின்னர் டோக்கன் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கொரோனா தடுப்பூசி 2-வது டோஸ் செலுத்த குறிப்பிட்ட நாட்களை கடந்தும் செலுத்த முடியாமல் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக சிலர் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் நாட்களில் தீர்ந்தாலும் வரிசையில் காத்திருப்பவர்களுக்கு டோக்கன் வழங்கி, இனிவரும் நாட்களில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வார்டுகள் உள்ள பகுதியில் பொதுமக்கள் அதிகம் பேர் தடுப்பூசி செலுத்துவதற்காக கூடுவதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் தடுப்பூசி குறித்த தகவல்கள் முறையாக தெரிவிப்பது இல்லை. எனவே, திறந்தவெளியில் உள்ள பள்ளியில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    தமிழகத்தில் பரவிய கொரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக நீலகிரிக்கு ஏப்ரல் 20-ந் தேதியில் இருந்து சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு, மீண்டும் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

    ஊட்டி:

    சர்வதேச சுற்றுலா தலமாக நீலகிரி மாவட்டம் விளங்குகிறது.

    இந்த மாவட்டத்தில் நிலவும் இயற்கை சூழல், சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதற்காக வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

    குறிப்பாக கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் சுமார் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருவார்கள். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் ஊட்டி படகு இல்லம், பைக்கார படகு இல்லம், தொட்டபெட்டா காட்சி முனை போன்றவைகள் உள்ளன.

    கோடை சீசனின் போது இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பதற்கு வசதியாக கோடை விழாக்கள் நடத்தப்படும். கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் சுற்றுலா பயணிகள் வர தடை விதித்ததால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு கோடை விழா ரத்து செய்யப்பட்டது. இதனால் நீலகிரியில் சுற்றுலா தொழில் கடும் சரிவை சந்தித்தது.

    தொற்று குறைந்த பின் கடந்த ஆண்டு செப்டம்பரில் மீண்டும் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டது. சுற்றுலா தலங்கள் திறப்பு மற்றும் சுற்றுலா பயணிகள் வருகையால் இந்த ஆண்டும் கோடை விழா நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் பரவிய கொரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக நீலகிரிக்கு ஏப்ரல் 20-ந் தேதியில் இருந்து சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு, மீண்டும் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதன் காரணமாக இந்த ஆண்டு நடைபெற இருந்த கோடை விழாவும் ரத்து செய்யப்பட்டது.

    கடந்த 2 மாதங்களாக சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு ரூ.6 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. படகு இல்லத்தில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் டிசம்பர் வரை படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் 8 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்தது. அதன்பின் டிசம்பரில் திறக்கப்பட்ட நிலையில் 3 மாதம் மட்டுமே திறக்கப்பட்டிருந்தது. அதன்பின் கொரோனா 2-வது அலையால் தற்போது 2 மாதங்களாக மூடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டில் இருந்து தற்போது வரை கடந்த 14 மாதங்களில் சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு ரூ.20 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திடீரென பெய்த மழையால் கூடலூர் புளியம்பாரா ஆற்று வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.

    கூடலூர்:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தால் கடந்த வாரத்தில் கனமழை கொட்டியது. அதன்பின்னர் சற்று மழை குறைந்து வெயில் அடிக்க தொடங்கியது.

    இந்த நிலையில் கூடலூர், பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மதியத்திற்கு பிறகு வானத்தில் கருமேகங்கள் திரண்டிருந்தன. தொடர்ந்து மாலையில் கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

    திடீர் என பெய்த இந்த மழையால் கூடலூர் புளியம்பாரா ஆற்று வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. மேலும் ஆற்று வாய்க்கால் தண்ணீர் அருகே உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்ததால் அங்கு பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அனைத்தும் சேதமடைந்தது. இதன் காரணமாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    கூடலூர் அருகே பாடந்தொரை ஆற்று வாய்க்காலிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் அருகே உள்ள ஆலவயல் பகுதியில் இருந்த 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து அந்த பகுதியே வெள்ளக்காடாக காட்சியளித்தது.

    இந்த வெள்ளத்தில் வி‌ஷ பாம்புகளும் அடித்து வரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    நடுவட்டம்-38, கூடலூர்-16, பந்தலூர்-40 செருமுள்ளி-30, பாடந்தொரை-35, ஓவேலி-17, தேவாலா-21 அப்பர் கூடலூர்-16, சேரங்கோடு-18.

    பள்ளியை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள மதில் சுவரின் மறுபுறம் அடர்ந்த புதர்களும் தேயிலை தோட்டங்களும் உள்ளது. இதனால் காட்டு பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பள்ளி வளாகத்திற்குள் ஊடுறுவுகிறது. சமீபகாலமாக சிறுத்தை ஒன்று அவ்வப்போது பள்ளி வளாகத்திற்குள் நடமாடி வருகிறது.

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மேல்பஜார் பகுதியில் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி உள்ளது. தற்போது கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள், மாணவிகள் நடமாட்டம் இல்லாமல் பள்ளி வளாகம் வெறிச் சோடியுள்ளது.

    இந்தநிலையில் பள்ளியை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள மதில் சுவரின் மறுபுறம் அடர்ந்த புதர்களும் தேயிலை தோட்டங்களும் உள்ளது. இதனால் காட்டு பன்றிகள், காட்டு மாடுகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பள்ளி வளாகத்திற்குள் ஊடுறுவுகிறது. சமீபகாலமாக சிறுத்தை ஒன்று அவ்வப்போது பள்ளி வளாகத்திற்குள் நடமாடி வருகிறது.

    நேற்று மாலை சுமார் 4 மணியளவில் பள்ளிமனை பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான ஆடுகள் பள்ளி வளாகத்திற்குள் மேய்ச்சலில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அப்போது புதர் மறைவில் பதுங்கி இருந்த சிறுத்தை மதில் சுவர் மீது தாவி ஏறியதுடன் மேய்ச்சலில் ஈடுபட்டு கொண்டிருந்த பெரிய ஆட்டின் மீது பாய்ந்து அதை கடித்து கொன்று அதன் ரத்தத்தை ருசித்தது.

    இதை தொடர்ந்து ஆட்டின் உடலை வாயில் கவ்வியபடி மதில் சுவரை தாண்ட முற்பட்டபோது ஆட்டின் உடல் பள்ளி வளாகத்திற்குள்ளேயே விழுந்தது. இதை கண்ட அப்பகுதியை சேர்ந்த சிலர் கத்தி கூச்சலிடவே சிறுத்தை அருகில் இருந்த தேயிலை தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.

    இதை தொடர்ந்து ஆட்டின் உரிமையாளரான முருகன் விரைந்து சென்று பள்ளி வளாகத்தில் கிடந்த ஆட்டின் உடலை எடுத்து சென்று விட்டார். இந்நிலையில் மாலை சுமார் 6 மணியளவில் ஆட்டின் உடலை தேடி அப்பகுதிக்கு மீண்டும் சிறுத்தை வந்துள்ளது.

    அப்போது பள்ளியை ஒட்டி இருந்த தேயிலை தோட்டத்தில் சுப்ரமணி என்பவரது ஆடுகள் மேய்ச்சலில் ஈடுபட்டு கொண்டிருந்தது. இதை கண்ட சிறுத்தை நைசாக பதுங்கி சென்று ஒரு ஆட்டின் மீது பாய்ந்து அதை கடுமையாக தாக்கி காட்டிற்குள் தூக்கி சென்று விட்டது.

    2 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் பள்ளி அருகே உள்ள குடியிருப்புகள் வசிப்பவர்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தியது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து குந்தா ரேஞ்சர் சரவணன் மேற்பார்வையில் வனவர் ரவிக்குமார் மற்றும் வனத்துறையினர் நேற்று காலை முதல் அரசு மகளிர் பள்ளியை ஒட்டியுள்ள தேயிலை தோட்டம் மற்றும் புதர்களில் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து காண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    வீட்டினுள் ஆட்கள் இருப்பதை கண்ட கரடி திரும்பி சென்றது. பின்னர் தேயிலை தோட்டத்துக்குள் சென்று மறைந்தது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளது. அவ்வப்போது வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் உணவு மற்றும் தண்ணீர் தேடி புகுந்து வருகின்றன. ஊட்டி அருகே கொடலட்டி கிராமத்தில் 50-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தையொட்டி தேயிலை தோட்டங்கள் உள்ளது.

    இந்தநிலையில் நேற்று வனப்பகுதியில் இருந்து தேயிலை தோட்டம் வழியாக கரடி ஒன்று கிராமத்துக்குள் புகுந்தது. அங்கு ஒரு வீட்டின் சுற்றுச்சுவரை தாண்டி உள்ளே நுழைந்தது. வீட்டு வளாகத்தில் சுற்றித்திரிந்த கரடி வீட்டின் கதவை தட்டியது. இதனை வீட்டில் இருந்தவர்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்தனர். வீட்டினுள் ஆட்கள் இருப்பதை கண்ட கரடி திரும்பி சென்றது. பின்னர் தேயிலை தோட்டத்துக்குள் சென்று மறைந்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். மேலும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து வனத்துறையினர் கரடி நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
    குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் கே.என்.ஆர். நகர் பகுதியில் 2 யானைகள் நடந்து சென்றன. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் சிறிது நேரம் வரிசையாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதையொட்டி சமவெளிப் பகுதிகளில் இருந்து வனப்பகுதிகளுக்கு காட்டு யானைகள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக குன்னூர்- மேட்டுப் பாளையம் சாலையோரத்தில் காட்டு யானைகள் அதிக அளவில் உலா வருகின்றன. இந்த யானைகள் அவ்வப்போது சாலையை கடந்து செல்வதால் சில சமயங்களில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காலை குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் கே.என்.ஆர். நகர் பகுதியில் 2 யானைகள் நடந்து சென்றன. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் சிறிது நேரம் வரிசையாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    இதுகுறித்து, வனத்துறையினர் கூறும்போது, ‘‘உணவு மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது யானைகள் சாலையை கடந்து செல்கின்றன. அப்போது யாரும் யானைகளுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது. யானைகளை கண்டால் வனத் துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும். வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும், வன விலங்குகளை சாலைகளில் கண்டால், அவற்றை புகைப்படப் எடுக்கக் கூடாது’’ என்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த தடுப்பு நடவடிக்கையால் கொரோனாதொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    ஊட்டி:

    வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஊட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 26,662 நபர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோயினால் 141 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 174 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் சுமார் 2,700 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2,474 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதில் 1,435 படுக்கைகள் காலியாக உள்ளன. 

    நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த தடுப்பு நடவடிக்கையால் கொரோனாதொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இருப்பினும் இந்நோயை முழுமையாகக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.இதுவரை 2 லட்சத்து 26,822 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் சிறிய மாவட்டமாக உள்ளதால் அரசு தெரிவித்துள்ள வயதுக்கு உள்பட்ட அனைவருக்குமே தடுப்பூசி செலுத்த தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    குறிப்பாக, நீலகிரியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக கூடுதலாக தடுப்பூசிகள் பெறப்பட்டு வருவதால், இவர்கள் அனைவருக்குமே தடுப்பூசி செலுத்தி இந்தியாவிலேயே தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதன்மை மாவட்டமாக நீலகிரி மாவட்டத்தை மாற்றுவதற்கு அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.அதே போல, மாவட்டத்தில் 5,429 மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். அவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதில் இதுவரை 307 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எஞ்சியுள்ளவர்களுக்கும் அவர்களது இருப்பிடத்துக்கே சென்று தடுப்பூசி செலுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

    ×