என் மலர்tooltip icon

    நீலகிரி

    முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கார்குடி அரசு பள்ளியில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் பயன்பெற ஆதிவாசி குழந்தைகளுக்கு, தலைமை ஆசிரியை அழைப்பு விடுத்து வருகிறார்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் பல்வேறு வனச்சரகங்கள் உள்ளது. அவை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்றாலும் கார்குடி, தெப்பக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஆதிவாசி மக்கள் மட்டும் வசித்து வருகின்றனர். அவர்களின் குழந்தைகள் கல்வி கற்பதற்காக கார்குடியில் அரசு உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 8-ம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. உயர் கல்வி பயில கூடலூருக்கு சென்று வர வேண்டிய நிலை இருந்தது. இதனால் பல்வேறு சிரமங்களை குழந்தைகள் சந்தித்தனர்.

    இதைத்தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு கடந்த 2011-ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும் கூடுதல் கட்டிடங்களும் கட்டப்பட்டது. தற்போது அங்கு சுமார் 200 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    அதன்பின்னர் கடந்த மாதம் 1-ந் தேதி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. இதனால் உயர் கல்விக்காக ஆதிவாசி குழந்தைகள் நீண்ட தூரம் பயணம் செய்யும் நிலைக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை கலாவதி கூறியதாவது:-

    உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு மாணவர்கள் நன்கு படித்ததால் தொடர்ந்து 9 ஆண்டுகள் 100 சதவீத தேர்ச்சி கிடைத்தது. தற்போது மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளதால், அதற்கு இதுவரை 28 மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதுதவிர கூடலூர் பகுதியில் உள்ள தொரப்பள்ளி, புத்தூர் வயல், மசினகுடி, செம்ம நத்தம், மாவனல்லா உள்பட பல்வேறு இடங்களில் வசிக்கும் ஆதிவாசி குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நேரில் சென்று அழைத்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. மேலும் பள்ளியில் தங்கி படிக்க விடுதி வசதியும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
    ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால், மது கிடைக்காமல் மதுப்பிரியர்கள் திணறி வந்த நிலையில், பூட்டிய கடைக்குள் சத்தமே இன்றி ஒயினை குடித்து எலிகள் கும்மாளமிட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கூடலூர்: 

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் மதுப்பிரியர்கள் திண்டாடி வந்தனர். 

    இதையடுத்து கொரோனா பரவல் குறைந்து வந்ததால், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதையொட்டி காலையிலேயே கடைகளுக்கு வந்து சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் கூடலூர் அருகே காளம்புழா பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை திறக்க சுமார் 2 மாதங்களுக்கு பிறகு நேற்று காலை 10 மணிக்கு மேற்பார்வையாளர் செந்தில்குமார், விற்பனையாளர் நித்தியானந்தன் மற்றும் ஊழியர்கள் வந்தனர். பின்னர் கடையை திறந்து, அங்குள்ள மதுபாட்டில்களை சரிபார்த்தனர்.

    அப்போது குவாட்டர் அளவு கொண்ட 12 ஒயின் பாட்டில்கள் காலியாக கிடந்தன. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், அந்த பாட்டில்களை எடுத்து ஆய்வு செய்தனர். அப்போது பாட்டில்களின் மேல்பக்கம் இருந்த ஈயத்தால் ஆன மூடியில் துளையிடப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது:-

    இந்த டாஸ்மாக் கடையில் ஏற்கனவே எலிகள் நடமாட்டம் இருந்து வந்தது. எனவே பாட்டில்களின் மூடிகளை எலிகள் கடித்து துளையிட்டு, அதில் இருந்த ஒயினை குடித்து இருக்கலாம். அவை குடித்தது போக மீதமுள்ளவை கீழே கொட்டி வீணாகி இருக்கலாம். அவற்றின் மதிப்பு ரூ.1,680 ஆகும்.

    மேலும் அந்த எலிகள் மது குடித்து பழகிவிட்டதால், மீண்டும் அட்டகாசம் செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே உயர் அதிகாரிகளின் ஆலோசனையின்பேரில் மதுபாட்டில்களை பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 
    நகர்புறம் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு தொற்று பரவுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது. எனினும் கடந்த 3 நாட்களாக தடுப்பூசி இருப்பு இல்லாததால், யாரும் செலுத்தப்படவில்லை. அதன்பின்னர் கூடுதலாக கோவிஷீல்டு தடுப்பூசி வந்ததை தொடர்ந்து கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி நேற்று ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாயக்கூடங்கள், அங்கன்வாடி மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    முதல் மற்றும் 2-வது டோஸ் செலுத்த பொதுமக்கள் ஆர்வமுடன் மையங்களுக்கு சென்று செலுத்தினர். அவர்களது விவரங்கள் இணையதளத்தில் பதிவு செய்து தடுப்பூசி போடப்பட்டது. நகர்புறம் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு தொற்று பரவுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அங்கு 35 மையங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    நீலகிரியில் கடந்த ஜனவரி மாதம் 105.18 மில்லி மீட்டர், பிப்ரவரி மாதம் 25.33 மில்லி மீட்டர், மார்ச் மாதம் 28.53 மில்லி மீட்டர், ஏப்ரல் மாதம் 37 மில்லி மீட்டர், மே மாதம் 114.46 மில்லி மீட்டர், ஜூன் மாதம் 114.55 மில்லி மீட்டர் மழை சராசரியாக பெய்தது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குளிர்கால மழை, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழை, ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் தென்மேற்கு பருவமழை, அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

    ஆனால் கடந்த சில ஆண்டுகளாக காலநிலை மாற்றத்தால் மழை பெய்யும் நாட்கள் குறைந்து, குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் அதிகமான மழைப்பொழிவு காணப்படுகிறது. இந்த ஆண்டில் கடந்த மாதம் முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகின்றது. இருப்பினும் போதிய அளவு பெய்யவில்லை. இதனால் அணைகளில் தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளது.

    நீலகிரியில் கடந்த ஜனவரி மாதம் 105.18 மில்லி மீட்டர், பிப்ரவரி மாதம் 25.33 மில்லி மீட்டர், மார்ச் மாதம் 28.53 மில்லி மீட்டர், ஏப்ரல் மாதம் 37 மில்லி மீட்டர், மே மாதம் 114.46 மில்லி மீட்டர், ஜூன் மாதம் 114.55 மில்லி மீட்டர் மழை சராசரியாக பெய்தது.

    இதுகுறித்து பேரிடர் மேலாண்மை பிரிவு தாசில்தார் வினோத் கூறியதாவது:-

    மலைமாவட்டமான நீலகிரியில் சராசரி மழை அளவு குறைந்து வருகிறது. இதற்கு காலநிலை மாற்றமே காரணம் ஆகும். கடந்த 2019-ம் ஆண்டு அவலாஞ்சியில் 1000 மில்லி மீட்டர் சராசரி மழை பதிவானது. இது அதிகமாகும். மேக வெடிப்பு காரணமாக ஒரே இடத்தில் அதிகமாக மழை பெய்கிறது.

    கடந்த 2009-ம் ஆண்டுக்கு முன்பு மழை பெய்து பாதிப்பு ஏற்பட்ட பிறகு மீட்பு பணிகள் நடைபெறும். தற்போது 283 அபாயகரமான இடங்கள் முன்கூட்டியே கண்டறியப்பட்டு, 42 குழுவினர் கண்காணித்து வருகின்றோம்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் இறப்பு எண்ணிக்கை குறைந்து உள்ளது. இந்த ஆண்டில் சராசரி கோடை மழை(435.78 மில்லி மீட்டர்) 281.84 மில்லி மீட்டர் மட்டும் பெய்தது. கடந்த 2020-ம் ஆண்டு சராசரியாக 1,920 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் 1,726.67 மழை பெய்தது. சராசரி மழை குறைந்து வருகிறது.


    நீலகிரி மாவட்டம் புத்தூர்வயல் ஆதிவாசி கிராமத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 5 வயது முதல் 14 வயது வரை உள்ள 13 சிறுவர்களுக்கு தொற்று உறுதியானது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் புத்தூர்வயல் ஆதிவாசி கிராமத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 5 வயது முதல் 14 வயது வரை உள்ள 13 சிறுவர்களுக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அங்கு நேற்று காலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தொற்று பாதித்த 13 சிறுவர்களை சிகிச்சைக்காக அழைத்து செல்ல முயன்றனர். 

    இதற்கு அவர்களது உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிகிச்சைக்கு அழைத்து செல்ல வந்த அதிகாரிகளை கத்தி மற்றும் இரும்பு கம்பியால் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் மாலையில் அதிகாரிகள் சமரசம் செய்து 13 சிறுவர்களையும் வாகனத்தில் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
    காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க கூடலூர்-முதுமலை எல்லையில் அகழி வெட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேறும் காட்டுயானைகள், கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்கள் மற்றும் பொதுமக்களின் வீடுகளை சேதப்படுத்தி வருகின்றன. குறிப்பாக தொரப்பள்ளி, குனில்வயல், அள்ளூர்வயல் உள்பட பல்வேறு இடங்களில் காட்டுயானைகள் அதிகளவில் முகாமிட்டு வருகின்றன. அவை சாலைகளில் உலா வருவதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால் அனைத்து தரப்பினரும் பீதி அடைந்து உள்ளனர்.

    எனவே காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வேண்டும் என்று வனத்துறையினரை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து வனக்காப்பாளர் கிருஷ்ணமூர்த்தி மேற்பார்வையில் கூடலூர்-முதுமலை எல்லையில் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு அகழி வெட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மீதமுள்ள இடங்களில் மண் மூடி கிடக்கும் அகழிகளை ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    இது தவிர இனி வரும் மாதங்களில் தொடர்ந்து பருவமழை பெய்யும் என்பதால் மழைநீரை சேமித்து வைப்பதற்கான சில இடங்களில் குளங்களும் வெட்டப்பட்டு வருகிறது.

    இதன் மூலம் வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று வனத்துறையினர் கூறினர்.

    கூடலூரில் விதிகளை மீறி திறந்திருந்த துணிக்கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
    கூடலூர்:

    தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்பட 11 மாவட்டங்களில் டீக்கடைகள், சலூன் உள்ளிட்ட கடைகளைத் திறக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் துணிக்கடைகள் உள்ளிட்ட சில நிறுவனங்கள் திறக்க இன்னும் தளர்வுகள் அளிக்கவில்லை. இந்த நிலையில் கூடலூர் நகரில் விதிமுறைகளை மீறி துணிக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    தொடர்ந்து ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து கூடலூர் நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், கொரோனா தடுப்பு பறக்கும் படை அலுவலர் சிவக்குமார், நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் நகர பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது தடையை மீறி 2 துணிக்கடைகள் செயல்படுவதை கண்டனர். இதைத்தொடர்ந்து அந்த கடை உரிமையாளருக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து பயணிகளை ஏற்றிவந்த 20-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
    கோத்தகிரி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவர் ராஜேஷ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் சுள்ளிக்கூடு கிராமத்திற்கு சென்று கொரோனா பரிசோதனைக்காக அந்த கிராமத்தை சேர்ந்த 400 பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரித்தனர்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் பரிசோதனை எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் நேற்று கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் அட்டவளை கிராம பகுதியில் சுகாதார ஆய்வாளர் சுதாகர் மற்றும் சுகாதாரத்துறையினர் வாகனம் மூலம் சென்று, அந்த வழியாக வந்த தனியார் மற்றும் சரக்கு வாகனங்களை தடுத்து நிறுத்தி வாகன ஓட்டிகளிடம் சளி மாதிரி சேகரிப்பு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

    மேலும் கோத்தகிரி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவர் ராஜேஷ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் சுள்ளிக் கூடு கிராமத்திற்கு சென்று கொரோனா பரிசோதனைக்காக அந்த கிராமத்தை சேர்ந்த 400 பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரித்தனர்.
    முதுமலையில் வளர்ப்பு யானையை தாக்கி கண்ணில் காயம் ஏற்படுத்திய பாகனை பணியிடை நீக்கம் செய்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல் உத்தரவிட்டுள்ளார்.
    கூடலூர்:

    கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் 28 வளர்ப்பு யானைகள் உள்ளன. இதனை பராமரிக்க மருத்துவ குழுவினர் மற்றும் பாகன்கள் பணியாற்றி வருகின்றனர். வளர்ப்பு யானைகளை தினமும் குளிப்பாட்டி ஊட்டச்சத்து உணவுகளை வழங்குதல், வனப்பகுதிக்கு ரோந்து செல்லுதல் உள்ளிட்ட பணிகளில் பாகன்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த மே மாதம் 17-ந் தேதி வளர்ப்பு யானை சேரனை மாயார் ஆற்றில் குளிப்பதற்காக பாகன் முருகன் அழைத்து சென்றார். அப்போது யானை பாகனின் கட்டளைக்கு அடிபணியவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பாகன் முருகன் யானையை கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் வளர்ப்பு யானையின் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் யானையின் கண் பார்வை பறி போனதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல் உத்தரவின்பேரில் வனத்துறையினர் கால்நடை மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், வளர்ப்பு யானையின் கண்ணில் ஏற்பட்ட காயம் குணமடைந்து வருகிறது. மேலும் சிறப்பு நிபுணர் குழு மூலம் தொடர் சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

    இதனிடையே பாகன் முருகன் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. மேலும் விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் வளர்ப்பு யானையை தாக்கி கண்ணில் பலத்த காயம் ஏற்படுத்தியதாக பாகன் முருகனை பணியிடை நீக்கம் செய்து புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த சம்பவம் முதுமலை வனத்துறையினர் மற்றும் பாகன்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    நீலகிரியில் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் தலா 30 ஆயிரம் கிலோ பச்சை தேயிலை கொள்முதல் செய்யப்படும்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த மே மாதம் கோடை மழை மிதமாக பெய்தது. நடப்பு மாதத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பதிவானது.

    இதை தொடர்ந்து ஊட்டி, மஞ்சூர், குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது.

    இதனால் கடந்த சில நாட்களாக தேயிலை தொழிற்சாலைகளில் பச்சை தேயிலை கொள்முதல் அதிகரித்து வருகிறது. நீலகிரியில் இன்கோசர்வ் கட்டுப்பாட்டின் கீழ் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் உள்ளது. இங்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

    16 தொழிற்சாலைகளிலும் தினமும் 4 லட்சம் கிலோ பச்சை தேயிலை கொள்முதல் செய்வது வழக்கம். தற்போது மகசூல் அதிகரித்து உள்ளதால், விவசாயிகள் அதிகமாக தேயிலையை கொள்முதல் மையங்களுக்கு கொண்டு வருகின்றனர். தேயிலை தொழிற்சாலைகள், கொள்முதல் மையங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த பச்சை தேயிலையை சேமித்து வைக்க போதிய இடவசதி இல்லை. இதனால் தேயிலை ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டு உள்ளது. பச்சை தேயிலை வரத்து அதிகரிப்பால் தேயிலைத்தூள் உற்பத்தி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    நீலகிரியில் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் தலா 30 ஆயிரம் கிலோ பச்சை தேயிலை கொள்முதல் செய்யப்படும். தற்போது 45 ஆயிரம் கிலோ வரை கொள்முதல் அதிகரித்து இருக்கிறது. ஒரே நாளில் 6 லட்சம் கிலோ கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இது வழக்கத்தை விட அதிகமாகும்.

    இதனால் மறு அறிவிப்பு வரும் வரை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் நிறுத்தப்பட்டது. தற்போது கொள்முதல் செய்து வைத்த தேயிலையை கொண்டு, தொழிலாளர்கள் சுழற்சி முறையில் தேயிலைத்தூள் உற்பத்தி செய்து வருகின்றனர். வருகிற நாட்களில் தேயிலை தரமாக இருந்தால் மட்டுமே கொள்முதல் செய்யப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    கேரளாவில் இருந்து மதுகடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    பந்தலூர்:

    பந்தலூர் அருகே உள்ள கக்குண்டி சோதனைச்சாவடியில் மதுகடத்தலை தடுக்கும் விதமாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கேரள மாநிலம் சுல்தான்பத்தேரியில் இருந்து கொளப்பள்ளி நோக்கி வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். இதில் காரில் மறைத்து வைத்து மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் கொளப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஜான்பாஸ்கோ (வயது 35) என்பதும், கேரளாவில் இருந்து மதுகடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    நீலகிரி குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் என்பதால் 18 வயதுக்கு மேல் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முதன்மை மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் உள்ள 12 பள்ளிகள் தடுப்பூசி போடும் மையங்களாக மாற்றப்பட்டு இருக்கிறது. நேற்று முன்தினம் நீலகிரிக்கு 5,500 கோவிஷூல்டு தடுப்பூசி வந்தது. பின்னர் மையங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டது.

    நேற்று அனைத்து மையங்களிலும் பொதுமக்களுக்கு 2-வது டோஸ் போடப்பட்டது. முன்னுரிமை அடிப்படையில் தோட்ட தொழிலாளர்கள், பழங்குடியின மக்களுக்கு நடமாடும் வாகனங்கள் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பணி 90 சதவீதம் முடிந்து உள்ளது.

    ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய 4 வட்டாரங்களில் மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மாவட்டத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 349 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இதில், இதுவரை ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    அதேபோல் வியாபாரிகள், டிரைவர்கள், ஓட்டல் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நீலகிரி குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் என்பதால் 18 வயதுக்கு மேல் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முதன்மை மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து தடுப்பூசி ஒதுக்கப்படும் அளவை பொறுத்து முன்னுரிமை படி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நீலகிரியில் இதுவரை 2 லட்சத்து 80 ஆயிரத்து 293 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. முதல் டோஸ் 2 லட்சத்து 24 ஆயிரத்து 927 பேருக்கும், 2-வது டோஸ் 55 ஆயிரத்து 366 பேருக்கும் போடப்பட்டுள்ளது.

    மொத்தம் 18 வயதுக்கு மேல் 5.80 லட்சம் பேர் உள்ளனர். தற்போது வரை 2.80 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இன்னும் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டி இருக்கிறது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ×