என் மலர்
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 100-ஐ கடந்து உள்ளது. தினமும் 2,700 பேருக்கும் மேல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊரடங்கு தளர்வுகளால் மக்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த கலெக்டர் அறிவுறுத்தல்படி பொதுஇடங்களில் முககவசம் அணியாமல் சுற்றித்திரியும் நபர்களுக்கு நடமாடும் சுகாதார குழுவினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி நேற்று ஊட்டி சேரிங்கிராஸ் சந்திப்பு, கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலை, மத்திய பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாமல் நடமாடுபவர்களை போலீசார் கண்டறிந்து பரிசோதனை செய்ய வைத்தனர். அவர்களிடம் இருந்து சளி மாதிரி சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தினமும் 200 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. சிலர் தாமாகவே முன்வந்து பொது இடங்களில் பரிசோதனை மேற்கொள்கின்றனர். இதன் மூலம் தொற்று பரவுவதை தடுக்க முடியும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
ஊட்டியில் உள்ள எச்.பி.எப். குடியிருப்பு பகுதியில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வனப்பகுதியையொட்டி இருப்பதால் அவ்வப்போது வனவிலங்குகள் நடமாடி வருகின்றன.
இந்த நிலையில் மித வெப்பமான பகுதிகளில் மட்டுமே வாழும் செந்நாய்கள் குளிர்ந்த காலநிலை நிலவும் எச்.பி.எப். பகுதியில் புகுந்து உள்ளன. இவை குடியிருப்பு பகுதிகளில் கூட்டமாக உலா வருகின்றன. இதனால் குழந்தைகளுடன் வசிக்கும் மக்கள் பீதியடைந்து உள்ளனர்.
இதேபோல் ஊட்டி லவ்டேல் சந்திப்பு பகுதியில் செந்நாய்கள் கூட்டம் காணப்படுகிறது. முதுமலை வனப்பகுதியில் வாழும் செந்நாய்கள் காலநிலை மாற்றத்தால் இடம்பெயர்ந்து ஊட்டியில் புகுந்து உள்ளன.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மார்லிமந்து அணையில் தண்ணீர் குடிக்க வரும் கடமான்களை செந்நாய்கள் கூட்டம் கொன்று தின்றன. தற்போது குடியிருப்பு பகுதியில் புகுந்த செந்நாய்களை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் 65 ஆவின் பால் விற்பனை நிலையங்கள் உள்ளது. இதுதவிர ஏஜென்சிகள் மூலம் கடைகளில் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விற்பனையான ஆவின் பால் பாக்கெட்டுகளில் கடந்த மாதம் 2-ந் தேதி உற்பத்தியானது என்று தேதி குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் காலாவதியான பால் விற்பனை செய்யப்படுவதாக புகார் தெரிவித்தனர். தொடர்ந்து மேற்கண்ட தேதி குறிக்கப்பட்ட பால் பாக்கெட்டுகள் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டது. உரிய தேதியில் வந்த பால் பாக்கெட்டுகளை பொதுமக்கள் வாங்கினர்.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆவின் பொது மேலாளர் டாக்டர் ராஜசேகர் கூறியதாவது:-
நீலகிரியில் ஏஜென்சிகள் மூலம் விற்பனை செய்த பால் பாக்கெட்டுகளில் தேதி தவறாக அச்சிடப்பட்டது தெரியவந்தது. காலாவதியான பால் இல்லை. அந்த பால் பாக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன. மாவட்டம் முழுவதும் 93 பால் உற்பத்தியாளர் சங்கங்கள் உள்ளது. இங்கு விவசாயிகளிடம் இருந்து தினமும் 12 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இதுதவிர கோவையில் இருந்து அதிக கொழுப்புள்ள 8 ஆயிரத்து 500 லிட்டர் பால் ஊட்டிக்கு கொண்டு வரப்படுகிறது. நீலகிரியில் கொள்முதல் செய்யப்படும் 2 ஆயிரம் லிட்டர் பாலை பவுடராக மாற்ற ஈரோடு மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டும், ஊரடங்கால் விற்பனை குறைவாக இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் காரணமாக பொதுமக்கள் பலரும் வெளியே வந்து பால் வாங்கி செல்கின்றனர். ஊரடங்கில் தினமும் 13 ஆயிரம் லிட்டர் முதல் 14 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டது. தற்போது தினமும் 18 ஆயிரம் லிட்டர் பால் விற்பனையாகி வருகிறது. விலை குறைப்பால் விற்பனை அதிகரித்து உள்ளது.
கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை கோடை காலம் நிலவுகிறது. அதன்படி இந்த ஆண்டும் கோடை காலத்தையொட்டி நீர்நிலைகள் வறண்டு விட்டன. மேலும் வனப்பகுதியிலும் பசுந்தீவனங்கள் காய்ந்து போனது. இதனால் காட்டுயானைகள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர், பசுந்தீவனங்களை தேடி ஊருக்குள் புகுந்து வந்தன.
இந்த நிலையில் கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கடந்த மாதத்தில் ஒரு வாரம் மட்டும் பலத்த மழை பெய்தது. அதன்பின்னர் மழையின் தாக்கம் அடியோடு குறைந்தது. இதனால் வறட்சியின் தாக்கம் அதிகரிக்கும் நிலை காணப்பட்டது.
இதையடுத்து கடந்த சில நாட்களாக கூடலூர், முதுமலை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது. தொடர்ந்து காட்டுயானைகள் கூட்டமாக முதுமலையில் தென்படுகிறது. இதேபோல் வனப்பகுதியில் உள்ள நாவல் பழ மரங்கள் நன்கு காய்த்து உள்ளதால் அரிய வகை கருங்குரங்கு, மலை அணில் உள்ளிட்டவைகளையும் கூட்டமாக மரங்களில் காண முடிகிறது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக முதுமலையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளதை அவர்கள் காண முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
இந்த ஆண்டு இதுவரை தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாமல் உள்ளது. எனினும் பரவலாக மழை பெய்வதால் வனப்பகுதியில் உள்ள குட்டைகளில் தண்ணீர் உள்ளது.
மேலும் பசுந்தீவன தட்டுப்பாடும் ஏற்படவில்லை. இதனால் காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கான உணவு பற்றாக்குறைக்கு பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு உள்ளது.
மேலும் வனவிலங்குகளின் நடமாட்டத்தையும் அதிகளவில் காண முடிகிறது.
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து இருந்தால், அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார வளர்ச்சி கழகம் ‘ஸ்மைல்’ என்ற கடன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஈட்டக்கூடிய நபரின் வயது 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் திட்டத்தொகை அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை இருக்கலாம். திட்ட தொகையில் 80 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை கடன் வழங்கப்படும். மீதமுள்ள 20 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். ஆண்டுக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று இறந்ததற்கான ஆவணங்களுடன் ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை வேலை நாட்களில் தொடர்பு கொள்ளலாம்.
கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் உள்ள துப்புகுட்டிபேட்டை பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளது. மேலும் கூடலூர்-கேரளா சாலை என்பதால் வாகன போக்குவரத்து மிக்க பகுதியாக விளங்குகிறது. இந்த நிலையில் அதே பகுதியில் நாடார் திருமண மண்டபம் அருகே மின் கம்பம் ஒன்று வளைந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக அப்பகுதியில் மின் கம்பிகளும் மிகவும் தாழ்வாக செல்கிறது. மேலும் மழை பெய்து வருவதால் மின் கம்பம் நாளுக்கு நாள் சரிந்து மின் கம்பிகளும் தாழ்ந்து வருகிறது.
இதனால் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களில் மின்கம்பிகள் உரசும் ஆபத்து காத்திருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர். சரக்கு லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மின் கம்பிகளில் சில நேரங்களில் உரசி விடுகிறது. இதனால் மின்தடையும் ஏற்பட்டு விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பல்வேறு சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இது சம்பந்தமாக மின்வாரிய அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற புகார் எழுந்து உள்ளது. எனவே இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கூடலூர் ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. அரசு தெரிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பிளஸ்-1 உள்ளிட்ட வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும் கணிசமாக மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
ஊட்டி அருகே சோலூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள் பலர் சேர்ந்து உள்ளனர். தமிழ் மற்றும் ஆங்கில வழியில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. தற்போது மாணவ-மாணவிகள் 145 பேர் உள்ளனர். 14 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த கல்வி ஆண்டுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுவிட்டது. பின்னர் மாணவ-மாணவிகள், பெற்றோர்களிடம் தலைமை ஆசிரியர் அயரின் ரெஜி ஆன்லைன் வகுப்புகள் நடத்த கருத்து கேட்டார்.
அதன்படி நேற்று முதல் சோலூர் அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்கி உள்ளது. 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை தலா அரைமணி நேரம் என 2 பாடவேளைகள், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தலா 40 நிமிடம் என 3 பாடவேளைகள் நடத்தப்படுகிறது. அனைத்து வகுப்புகளிலும் வீட்டில் இருந்தபடியே மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் அவர்களை சந்தித்து பாடங்களை எடுத்து வருகின்றனர். அரசு பள்ளியின் இந்த முயற்சி, பெற்றோரால் பாராட்டப்பட்டு வருகிறது.
ஊட்டி:
பசுமையான காடுகளுடன் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகவும், ஏராளமான சுற்றுலா தலங்களையும் கொண்டதாக இருக்கிறது நீலகிரி மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களையும், பசுமையான காட்சிகளை கண்டு ரசிப்பதற்காக ஆண்டு தோறும் வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
குறிப்பாக ஏப்ரல், மே போன்ற கோடை மாதங்களிலும், புத்தாண்டு உள்ளிட்ட காலங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். இதனால் நீலகிரி மாவட்டம் முழுவதுமே போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதன் காரணமாக காற்றின் மாசுபாடு அளவும் அதிகரிக்கும்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி மட்டுமன்றி குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுமே வாகன போக்குவரத்தும் கணிசமான அளவு குறைந்துள்ளதால் விபத்துக்கள் குறைந்துள்ளதோடு மாசு கட்டுப்படுத்தப்பட்டு தூய்மையான மாவட்டமாக நீலகிரி மாறியுள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு நீலகிரியின் இயற்கை அழகை காண முடிவதாக உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.
இந்த தகவல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஊட்டி ஆவின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காற்றின் தர தொடர் கண்காணிப்பு நிலையம் மூலம் உறுதியாகி உள்ளது.
இந்த நிலையம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரூ.1.5 கோடி செலவில் அமைக்கப்பட்டது. இங்கு காற்றின் தரம், மாசு அளவு தொடர்ந்து கணக்கிடப்படுகிறது. பொதுமக்களும் இதனை அறிந்து கொள்ளும் வகையில் எல்.இ.டி மின்னணு தகவல் பலகையும் அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கூறியதாவது:-
தமிழகத்தில் 35 காற்றின் தர தொடர் கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையத்தில் தூசு, 10 மைக்ரான், 2.5 மைக்ரான், சல்பர் டை ஆக்சைடு, கார்பன் மோனாக் சைடு, அமோனியா, நைட்ரஜன் ஆக்சைடுகள், ஓசோன், சைலின், பென்சின், டொலுவின் ஆகிய 11 அளவுருக்கள் கண்காணிக்கப்படுகிறது.
காற்று உறிஞ்சப்பட்டு மாதிரிகள் ஆய்வு செய்த தகவல்கள் மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகங்களுக்கு அனுப்பப்படும். நீலகிரி மாவட்டத்தில் காற்றின் தரம் சிறப்பாக உள்ளது. காற்றின் தரக்குறியீடு 35 புள்ளிகளாக பதிவாகி உள்ளது. 50 புள்ளிகளுக்கு கீழ் இருந்தால் காற்று தரமானது. ஊரடங்கில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளது.
ஊரடங்கு விலக்கப்பட்டால், மாசு சிறிது கூடும். இந்த கண்காணிப்பு நிலையத்தில் சேகரிக்கப்படும் தரவுகள், காற்றின் தரத்தை ஆய்வு செய்ய பயன்படும். மேலும் எந்தெந்த செயல்பாடுகளை அனுமதிக்கலாம் என திட்டமிட உதவும். ஆராய்ச்சி மாணவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் பெரும்பாலான அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு, ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு, கணினி வகுப்பு, ஆங்கில பிரிவு தொடங்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்களும், காலணிகள், பைகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மாணவர்கள் சேர்க்கையும் அரசு பள்ளிகளில் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் விதமாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என குன்னூர் மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் படித்து வருகிறார்கள். ஆண்டுதோறும் 1,200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பெற்றோர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக அரசு பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
இதையடுத்து பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த கல்வி மாவட்ட அலுவலர் சுவாமி முத்தழகன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அதன் ஒரு முயற்சியாக குன்னூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி பள்ளியில் சேர்ந்த 2 மாணவர்களுக்கு தலா ரூ.1000 வழங்கினார்.
இதுகுறித்து குன்னூர் கல்வி மாவட்ட சுவாமி முத்தழகன் கூறும்போது, குன்னூர் அறிஞர் அரசு மேல்நிலைப் பள்ளி பழமையான வாய்ந்த பள்ளியாகும். இந்த பள்ளியில் முதலில் 2000-த்திற்கும் அதிகமானோர் படித்து வந்தனர். வெகு சில ஆண்டுகளாக குறைவான மாணவர் சேர்க்கை இருந்தது. இதையடுத்து பள்ளியில் மாணவர் சேர்க்கையை மேம்படுத்தும் வகையில் இந்த பள்ளியில் உள்ள 6-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை புதிதாக சேரும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. அத்துடன் 4 செட் இலவச சீருடைகள், நோட்டு புத்தகங்களும் வழங்கப்படுகிறது. இதுதவிர விபத்தில் பெற்றோரை இழந்த மாணவ, மாணவிகளுக்கு ரூ.75 ஆயிரமும் கொடுக்கப்படுகிறது. தொடர்ந்து அப்பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும் என்றார்.






