search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை படத்தில் காணலாம்.
    X
    ஊட்டி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை படத்தில் காணலாம்.

    ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி செலுத்த அலைமோதிய கூட்டம் - தொற்று பரவும் அபாயம்

    ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்துக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்க பெறுவதை தொடர்ந்து முன்னுரிமை அடிப்படையில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று கூடுதலாக 6,400 தடுப்பூசி வந்தது. பின்னர் பழங்குடியின மக்கள், தோட்ட தொழிலாளர்களுக்கு செலுத்த அனுப்பி வைக்கப்பட்டது.

    ஊட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று நடைபெற்றது. இதையறிந்த ஊட்டி நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பொதுமக்கள் ஆர்வத்துடன் அரசு ஆஸ்பத்திரிக்கு படையெடுத்தனர். இதனால் நேரம் செல்ல, செல்ல பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து அலைமோதியது.

    அங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் 2 வரிசைகளில் முண்டியடித்தபடி பொதுமக்கள் நின்று கொண்டிருந்தனர். 250 டோஸ்கள் மட்டும் ஒதுக்கப்பட்டு இருந்ததால், முதலில் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தடுப்பூசி செலுத்த வந்து காத்திருந்த 80 பேருக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு இருந்தது. அவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    காலை முதல் மதியம் வரை டோக்கன் கிடைக்கும் என்று 300-க்கும் மேற்பட்டோர் மையம் முன்பு காத்திருந்தனர். பின்னர் டோக்கன் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கொரோனா தடுப்பூசி 2-வது டோஸ் செலுத்த குறிப்பிட்ட நாட்களை கடந்தும் செலுத்த முடியாமல் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக சிலர் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் நாட்களில் தீர்ந்தாலும் வரிசையில் காத்திருப்பவர்களுக்கு டோக்கன் வழங்கி, இனிவரும் நாட்களில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வார்டுகள் உள்ள பகுதியில் பொதுமக்கள் அதிகம் பேர் தடுப்பூசி செலுத்துவதற்காக கூடுவதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் தடுப்பூசி குறித்த தகவல்கள் முறையாக தெரிவிப்பது இல்லை. எனவே, திறந்தவெளியில் உள்ள பள்ளியில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    Next Story
    ×