என் மலர்tooltip icon

    நீலகிரி

    ஊட்டியில் சமீப நாட்களாக ஏற்பட்டு வரும் கடும் உறைபனி பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
    ஊட்டி:

    ஊட்டியில் இன்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை காணப்படுகிறது.

    மேலும் கடும் பனி பொழிவின் காரணமாக ஆட்டோக்கள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது உறைபனி சூழ்ந்து காணப்பட்டது, இதனால் வாகனங்களில் டீசல் உறைவதால் காலையில் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

    கடும் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் பகல் நேரத்திலேயே சாலை ஓரங்களில் தீ மூட்டி குளிர்காயும் சூழல் ஏற்பட்டுள்ளது

    ஊட்டியில் சமீப நாட்களாக ஏற்பட்டு வரும் கடும் உறைபனி பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இன்று உதகையில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 2 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது.

    நேற்று மாலை ஊட்டியில் கடுங்குளிர் நிலவியது. இதனையடுத்து இன்று அதிகாலை உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உறைபனி பொழிவு ஏற்பட்டது. உதகை தாவரவியல் பூங்காவில் கொட்டிய உறைபனியால் புல்வெளி வெள்ளை கம்பளம் போர்த்தியது போல காட்சி அளித்தது. அதே போல காந்தல் மைதானம், தலைகுந்தா புல்வெளி என நகரின் அனைத்து பகுதிகளிலும் பனிப்போர்வையை பார்க்க முடிந்தது.

    கை கால்கள் விரைத்து போகும் நிலை உள்ளதால் காலை வேளையில் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். காலை 10 மணிக்கு நல்லவெயில் இருந்த போதும் கடுமையான குளிர் வாட்டுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.



    குன்னூரில் பிபின் ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்த இடத்தை பார்க்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள நஞ்சப்ப சத்திரம் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். 

    விபத்து ஏற்பட்ட பகுதி முழுவதும் மற்றவர்கள் நுழைய தடை விதித்து, ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, ஹெலிகாப்டரின் பாகங்கள் மீட்கும் பணி நடந்தது.

    ஹெலிகாப்டரின் பாகங்கள் அனைத்தும் நேற்றுமுன்தினம் மீட்கப்பட்டு சூலூர் விமானப்படை தளம் கொண்டு வரப்பட்டது. 
    இதையடுத்து கிராமத்திற்குள் மற்றவர்கள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டது. ராணுவ வீரர்களும் அங்கிருந்து வெளியேறியதால் 19 நாட்களுக்கு பிறகு அந்த கிராமம் இயல்பு நிலைக்கு திரும்பியது. மற்றவர்களும் அந்த பகுதிக்கு வேலை விஷயமாக வர தொடங்கினர்.

    தற்போது பண்டிகை மற்றும் அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கிறது.

    கடந்த சில தினங்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு கார்கள், வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனர்.

    விபத்து நடந்த பகுதி

    அவர்கள் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்தனர்.  
    அப்படி ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியான நஞ்சப்ப சத்திரம் பகுதிக்கும் வர தொடங்கியுள்ளனர். குடும்பம், குடும்பமாக கார்களில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    அவர்கள் அங்கு விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு, குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து கொள்கின்றனர். ஒரு சிலர் அந்த இடத்தில் பூங்கொத்து வைத்து அஞ்சலியும் செலுத்தி வருகிறார்கள்.
    பொக்காபுரம், மாவனல்லா, வாழைத்தோட்டம் போன்ற பகுதிகளில் உள்ள தனியார் ரிசார்ட்டுக்களில் புத்தாண்டு தினத்தன்று பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் சுற்றுலா பயணிகள் வந்தாலும், புத்தாண்டு விடுமுறையின் போது அதிகளவில் வருகிறார்கள். புத்தாண்டை கொண்டாட வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வனங்களுக்கு செல்கின்றனர். அங்கு தீ மூட்டுவது, மது அருந்திவிட்டு ஆடி பாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனை தவிர்க்க வனத்துறை வலியுறுத்தி வருகிறது. இருப்பினும், சில சுற்றுலா பயணிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால், விலங்குகளுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

    நீலகிரி வடக்கு வனக்கோட்டத்திற்குட்பட்ட சிங்காரா, மாயார், மசினகுடி, சிறியூர் மற்றும் பொக்காபுரம் பகுதிகளில் ரிசார்ட்டுகள் மற்றும் காட்டேஜ்கள் உள்ளன.

    இங்கு புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதனால், சுற்றுலா பயணிகள் அதிகளவில் வர வாய்ப்புள்ளது. ஆண்டு தோறும், மசினகுடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் புத்தாண்டை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இது போன்ற சமயங்களில் சில ரிசார்ட்டுகள் மற்றும் காட்டேஜ்களில் தங்கியிருக்கும் சுற்றுலா பயணிகள் அத்துமீறுவது வழக்கம். தற்போது, பெரும்பாலான காட்டேஜ் மற்றும் ரிசார்ட்டுகள் மூடப்பட்ட போதிலும், ஒரு சில விடுதிகள் இயங்கி வருகிறது. எனவே, இதுபோன்ற பகுதிகளில் உள்ள ரிசார்ட்டுக்கள் மற்றும் காட்டேஜ்களில் அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசுகள் வெடிக்கவும், வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தவும் வனத்துறை தடை விதித்துள்ளது

    இது குறித்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அருண் கூறியதாவது:-

    பொக்காபுரம், மாவனல்லா, வாழைத்தோட்டம் போன்ற பகுதிகளில் உள்ள தனியார் ரிசார்ட்டுக்களில் புத்தாண்டு தினத்தன்று பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதேபோல், அதிக சத்தத்துடன் எந்த ஒரு நிகழ்ச்சிகளையும் நடத்தக் கூடாது. வனத்திற்குள் வாகனங்களை கொண்டு செல்லக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சாலைகளில் வன விலங்குகளை துன்புறுத்தும் வகையில் வாகனங்களை வேகமாக ஓட்டக்கூடாது. விலங்குகளுக்கு உணவு கொடுக்கவும், வனப்பகுதியில் புகைப்பிடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தற்போது, பனியின் காரணமாக வனங்கள் காய்ந்துள்ள நிலையில், புத்தாண்டை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகள் தீ மூட்டினால் எளிதில் வனங்களுக்கு பரவும் அபாயம் நீடிக்கிறது.

    எனவே, இதனை கண்காணிக்க வன ஊழியர்கள் ரோந்து பணிகளை மேற்கொள்வார்கள். அத்துமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    வனங்களை ஒட்டிய சாலைகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தை தவிர்க்க துண்டு பிரசுரங்களும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 2 நாட்கள் விடுமுறை காரணமாக ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்கள் களைகட்டின.

    ஊட்டி:

    சுற்றுலா நகரமான ஊட்டியில் நிலவும் குளு குளு காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தொடர் அரசு விடுமுறை நாட்கள், பண்டிகை விடுமுறைகள் மற்றும் பள்ளி தேர்வு விடுமுறைகளின் போது சுற்றுலா பயணிகள் வருகை பல மடங்கு அதிகரிக்கும்.

    நீலகிரியில் கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் உள்ள நிலையில், ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 2 நாட்கள் விடுமுறை காரணமாக ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்கள் களைகட்டின. இந்த விடுமுறையை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் கடந்த 24-ந் தேதி முதலே ஊட்டியில் குவிந்தனர். விடுமுறை தினமான நேற்றும் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    வெயில் கொளுத்திய நிலையில் படகு இல்லத்தில் இருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினார். இதனால், நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு கிறிஸ்துமஸ் தினத்தன்று 15 ஆயிரம் பேரும், விடுமுறை தினமான நேற்று சுமார் 10 ஆயிரம் பேர் என 2 நாட்களில் மட்டும் 25 ஆயிரம் பேர் வந்து சென்றுள்ளனர். இதேபோல், நகருக்கு வெளியே உள்ள தொட்டபெட்டா சிகரம், பைக்காரா, கொடநாடு காட்சி முனை உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    வனப்பகுதியில் இருந்து வின்ச் ரோப் அமைத்து ஹெலிகாப்டரின் என்ஜின் மற்றும் வால் பகுதிகளை நேற்று அதிகாலை ராணுவ அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரத்தில் கடந்த 8-ந் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர்.

    விபத்து நடைபெற்ற பகுதியில் ராணுவம் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். கோவையில் இருந்து வந்த விமானப்படை அதிகாரிகள், ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு ஹெலிகாப்டரின் பாகங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து விபத்தில் சேதமடைந்த ஹெலிகாப்டரின் சில பெரிய பாகங்களை அங்கிருந்து அப்புறப்படுத்த 10-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளார்களை ராணுவத்தினர் தங்களுடன் அழைத்து வந்திருந்தனர்.

    அவர்கள் ராணுவ அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி ஹெலிகாப்டர் பாகங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில், ஹெலிகாப்டரின் இறக்கை, என்ஜின் உள்ளிட்ட பெரிய பாகங்களை வனப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த சுமார் 200 மீட்டருக்கு தற்காலிக சாலை அமைக்க வேண்டி இருந்ததாலும், வனப்பகுதியில் உள்ள சில மரங்களை வெட்ட வேண்டியிருந்ததாலும் மாற்று ஏற்பாடுகள் குறித்து வனத்துறையினர், ராணுவத்தினர் கலந்தாலோசித்து வந்தனர்

    இந் நிலையில் வனப்பகுதியில் இருந்து வின்ச் ரோப் அமைத்து ஹெலிகாப்டரின் என்ஜின் மற்றும் வால் பகுதிகளை நேற்று அதிகாலை அப்புறப்படுத்தினர். இந்தப் பொருள்கள் அனைத்தும் கோவை மாவட்டம், சூலூரில் உள்ள விமானப்படைத் தளத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

    பின்னர் உயரதிகாரிகளின் ஆலோசனைக்குப் பின் ராணுவ அதிகாரிகள் அந்த பகுதியில் இருந்து வெளியேறினர். இதனால் இதுவரை ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த நஞ்சப்பசத்திரம் பகுதி 19 நாள்களுக்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பியது. 
    நீலகிரி மாவட்டத்தில் அனைத்து மந்துகளில் வசிக்கும் தோடர் இன மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மொர்பர்த் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டி தோடர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வசிக்கும் பகுதி மந்து என்று அழைக்கப்படுகிறது. தற்போதும் தங்களது கலாசாரம், பாரம்பரியம் மற்றும் பழக்க வழக்கங்களை கடைப்பிடித்து வருகிறார்கள். நீலகிரியில் தோடர் இன மக்களின் தலைமையிடமாக முத்தநாடுமந்து திகழ்கிறது. அங்கு மாவட்டம் முழுவதும் உள்ள மந்துகளில் வசிக்கும் தோடர் இன மக்கள் ஒன்றுகூடி ஆண்டுதோறும் மொர்பர்த் என அழைக்கப்படும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டு ஊட்டி அருகே முத்தநாடுமந்தில் மொர்பர்த் பண்டிகையை தோடர் இன மக்கள் நேற்று கொண்டாடினர். இதையொட்டி விரதம் இருந்து மூன்போ என்ற கோவிலில் வழிபட்டனர். அவர்கள் சந்தன பொட்டு வைத்தும், தங்களது பாரம்பரிய உடை அணிந்தும் இருந்தனர். தொடர்ந்து மூன்போ கோவிலில் இருந்து தோடர் இன மக்கள் ஊர்வலமாக ஒர்யள்வோ என்ற கோவிலுக்கு சென்றனர். அங்கு தரையை நோக்கி குனிந்து வணங்கினர். பின்னர் மீண்டும் மூன்போ கோவிலுக்கு சென்று வழிபட்டு காணிக்கை மற்றும் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    அந்த கோவிலை சுற்றி நின்றபடி தங்களது பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர். இந்த பண்டிகையில் ஆண்கள் மட்டும் கலந்து கொண்டு கோவிலுக்கு சென்றனர். இதை அடுத்து தோடர் இன மக்கள் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில் இளவட்ட கல்லை தூக்கும் நிகழ்ச்சி நடந்தது. சுமார் 70 கிலோ எடை கொண்ட கல் மீது வெண்ணெய் பூசப்பட்டு இருந்தது. இந்த கல்லை தோடர் இன இளைஞர்கள் தூக்கி தோளில் வைத்து முதுகுக்கு பின்புறமாக கீழே போட்டு அசத்தினார்கள். இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று இளவட்ட கல்லை தூக்கினர்.

    இதுகுறித்து தோடர் இன மக்கள் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் அனைத்து மந்துகளில் வசிக்கும் தோடர் இன மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மொர்பர்த் பண்டிகையை கொண்டாடினோம். பண்டிகையையொட்டி எங்களது கோவில்களில் வழிபாடு நடத்தி உலக மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும். நல்ல மழை பெய்து விளைச்சல் அதிகமாக வேண்டும். எங்களது வளர்ப்பு எருமைகள் நன்றாக இருக்க வேண்டும் என வழிபட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ஊட்டி அருகே மின்தடையை சரிசெய்வதாக கூறி டிரான்ஸ்பார்மரில் ஏறிய விவசாயி மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
    ஊட்டி:

    ஊட்டி அருகே உள்ள தும்மனட்டி, கெந்தொரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 55). விவசாயி. இவருக்கு மின்சாரம் பழுதுபார்க்கும் பணிகளும் தெரியும் என கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று மாலை கிராமத்தில் மின் தடை ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பழுதுபார்க்க, மின்வாரிய ஊழியர்கள் வர தாமதமாகும் எனவும் பண்டிகை நேரம் என்பதால் நானே மின்தடையை சரி செய்கிறேன் என கூறி விட்டு அங்குள்ள டிரான்ஸ்பார்மர் மீது அவர் ஏறியதாக தெரிகிறது. ஆனால் அவர் அங்கு அமர்ந்திருக்கும் போதே திடீரென மின்சார வினியோகம் சீராகியுள்ளது.

    இதன் காரணமாக அவரை மின்சாரம் தாக்கியதால் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஊட்டி போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இறந்த ராமகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு குழாம், பைக்காரா, சூட்டிங் மட்டம், நேரு பூங்கா, சிம்ஸ் பார்க் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து கண்டு ரசித்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் சூழ்ந்த மலை பிரதேசமாக உள்ளதால் குளுகுளு சீசனை அனுபவிக்க ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜனவரி 2-ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை உள்ளிட்ட தொடர் விடுமுறையை கழிக்க சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

    நேற்று முன்தினம் மாலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வர தொடங்கினர். நேற்று ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தொடர்ந்து இன்றும், நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாகவே இருந்தது.

    ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு குழாம், பைக்காரா, சூட்டிங் மட்டம், நேரு பூங்கா, சிம்ஸ் பார்க் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து கண்டு ரசித்தனர்.

    இதேபோல் வெளிமாநிலங்களல் இருந்தும் ஏராளமானவர்கள் நீலகிரிக்கு வந்த வண்ணம் உள்ளனர். மேலும் பனிப்பொழிவு காலநிலை அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் கம்பளி ஆடைகளை அதிகளவு வாங்குகிறார்கள். இதனால் பொருட்களின் விற்பனையும் சூடுபிடித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கோவை மாவட்டம் வால்பாறைக்கும் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது. நல்ல முடி காட்சி முனை, கூழாங்கல் ஆறு, நீராறு அணை, சோலையாறு அணை, உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

    டாப்சிலிப் பகுதிக்கும் சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் வனத்துறையினர் அனுமதியுடன் காரில் வனத்திற்குள் டிரக்கிங் சென்று வனத்தின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.
    நீலகிரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள், சிறப்பு ஆராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
    ஊட்டி:

    கொரோனா தொற்று அச்சம் காரணமாக நீலகிரி மாவட்ட த்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நேற்று நள்ளிரவு கிறிஸ்துமஸ் திருப்பலிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடத்தப்படவில்லை. பெரும்பாலான தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிகள் மாலையே நடத்தப்பட்டது.

    அதேபோல, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள், சிறப்பு ஆராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இன்று காலை மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் வழக்கம்போல் நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    ஐரோப்பாவில் டெல்டா வகை வைரஸ் பாதிப்பின்போது 65 ஆயிரம் நோயாளிகளில் ஆயிரம் பேர் இறந்தனர். ஆனால் ஒமைக்ரான் பாதிப்பில் 95 ஆயிரம் நோயாளிகளில் 100 பேர் மட்டுமே இறந்துள்ளனர்.
    ஊட்டி:

    கொரோனா 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு 95 சதவீதம் இருக்க வாய்ப்பில்லை. 5 சதவீதத்தினருக்கு மிக லேசான பாதிப்பே இருக்க வாய்ப்புள்ளது.

    டெல்டா வைரசிற்கும், ஒமைக்ரான் வைரசிற்கும் இடையே உள்ள மிக முக்கிய வேறுபாடுகள், டெல்டா வைரஸ் பரவும் வேகத்தை காட்டிலும் 40 மடங்கு அதிவேகமாக பரவக்கூடியது தான் ஒமைக்ரான் வைரஸ். ஆனால் டெல்டா வைரசின் வீரியத்தில் பத்தில் ஒரு பங்கு வீரியத்தை மட்டுமே ஒமைக்ரான் வைரஸ் கொண்டுள்ளது.

    எனவே ஒமைக்ரான் வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. ஒமைக்ரான் பாதிப்பால் உயிரிழப்பு என்பது மிகமிக குறைந்தே காணப்படுகிறது.

    கொரோனா தடுப்பூசி

    குறிப்பாக ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள ஐரோப்பிய நாடுகளில் கூட முந்தைய வைரசின் பாதிப்புகளை காட்டிலும் குறைவான உயிரிழப்பே காணப்படுகிறது.

    மத்திய அரசின் நிரஞ் ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் இந்தியாவில் 2022 பிப்ரவரி மாத மத்தியில் 3-வது அலை உருவாகக் கூடும் என்று கணித்துள்ளார். ஆனால் 2-வது அலையில் இருந்த உயிரிழப்புகள் அளவிற்கு இந்த முறை இருக்காது.

    ஐரோப்பாவில் டெல்டா வகை வைரஸ் பாதிப்பின்போது 65 ஆயிரம் நோயாளிகளில் ஆயிரம் பேர் இறந்தனர். ஆனால் ஒமைக்ரான் பாதிப்பில் 95 ஆயிரம் நோயாளிகளில் 100 பேர் மட்டுமே இறந்துள்ளனர்.

    எனவே ஒமைக்ரான் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் கவலை கொள்ள தேவையில்லை. இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பு குறித்த வல்லுநர் குழுக்களில் பெரும்பாலும் மருத்துவர்களையே சேர்த்துள்ளனர்.

    ஆனால் இந்த வகையான வல்லுநர் குழுக்களில் மைக்ரோ பயாலஜிஸ்ட்களை சேர்த்திருக்க வேண்டும். காரணம் நுண்ணுயிரியல் குறித்த விரிவான, தெளிவான ஆழங்கால் பட்டபுரிதல் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்களுக்கு தான் இருக்கும்.

    எனவே தமிழக அரசு உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளும் டாஸ்க் போர்ஸ் எனப்படும் கொரோனா தடுப்பு வல்லுநர் குழுக்களில் மைக்ரோ பயாலாஜிஸ்டுகளை இடம் பெற வைக்க வேண்டும் என்று கோரிக்கையாக வைக்கிறேன்.

    தமிழகத்தில் உள்ள நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்கள் சிறப்பான முறையில் ஒமைக்ரான் குறித்த அடிப்படை புரிதல்களை எடுத்துக்கூறி பொதுமக்களிடம் ஏற்படும் அச்சத்தை போக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டார். என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை என்று அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பாரதி நகரை சேர்ந்தவர் ஜெயா (வயது 18). கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்தார். இந்த நிலையில் டாக்டராக வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்த அவர் ‘நீட்’ தேர்வும் எழுதினார்.

    கடந்த மாதம் தேர்வு முடிவு வெளியாகியது. இதில் மாணவி ஜெயா 69 மதிப்பெண் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இதனால் மன வருத்தத்துடன் அவர் இருந்தார். இதையறிந்த பெற்றோர் அவரை திருப்பூரில் உள்ள அக்கா வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சில வாரங்கள் இருந்த ஜெயா, தனது பெற்றோரை பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு பாரதி நகருக்கு வந்தார். இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் விஷம் குடித்தார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை மாவட்டம் காரமடையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தபோதிலும் அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    அத்துடன் மாணவி ஜெயா எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது. அதை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த கடிதத்தில், ‘நீட் தேர்வில் வெற்றி பெற முடியாததால் என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை. தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்தேன். அம்மா... என்னை மீண்டும் மன்னித்துவிடு’ என்று கூறியுள்ளார்.
    கோத்தகிரியில் காபி பழங்கள் அறுவடை மும்முரமாக நடந்து வருகிறது. ஆனால் அதன் விலை வீழ்ச்சியடைந்து உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி அருகே உள்ள தட்டப்பள்ளம் மற்றும் குஞ்சப்பனை சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் காபி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. இதுதவிர சில பகுதிகளில் தேயிலை தோட்டங்களில் ஊடுபயிராகவும் காபி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

    இந்த பயிரில் அராபிகா மற்றும் ரோபஸ்டா என 2 வகை பயிர்கள் உள்ளன. காபி செடிகளில் காய்த்து பழுத்து குலுங்கும் காபி பழங்களை டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் அறுவடை செய்யலாம். தற்போது காபி பழங்கள் பழுத்து உள்ளதால் அவற்றை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    பின்னர் அறுவடை செய்த காபி பழங்களை நன்கு உலர வைத்து, தோல் நீக்கிய காபி கொட்டைகளை காபி வாரியத்திலும், தனியார் வியாபாரி களிடமும் விற்பனை செய்து வருவது வழக்கம். இந்த காபி கொட்டைகளை நன்கு உலர வைக்க சூரியஒளி தேவை.

    தற்போது கோத்தகிரி பகுதியில் பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் காபி கொட்டைகளை உலர்த்த முடியவில்லை. இதனால் பழங்களாகவே அவற்றை விவசாயிகள் விற்பனை செய்து வருகிறார்கள். இதன் காரணமாக அவற்றின் விலையும் மிகவும் குறைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    காபி அறுவடையின்போது உலர வைக்கப்பட்ட காபி கொட்டைகள் கிலோவுக்கு ரூ.200 முதல் ரூ.250 வரை கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு ரூ.160 வரை மட்டுமே கிடைக்கிறது. அத்துடன் போதிய வெளிச்சம் இல்லாததால் காபி பழங்களை உலர வைக்கவும் முடியவில்லை.

    இதனால் காபி பழங்களை கிலோ ரூ.20 முதல் ரு.25 வரை விற்று வருகி றோம். இந்த பகுதியில் பல இடங்களில் காபி பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருவதால், விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்கும் வகையில் கோத்தகிரியில் காபி வாரிய கிளை அமைத்து கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். அதை மாவட்ட நிர்வாகம் செய்ய முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    ×