என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜேந்திர பாலாஜி
    X
    ராஜேந்திர பாலாஜி

    ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு மோசடி புகார்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ராஜேந்திர பாலாஜி மீது புகார் மனு அளித்துள்ளார்.
    விருதுநகர்:

    ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாகவும், கட்சி பணிகளுக்காக செலவு செய்த தொகையை திருப்பி தராமலும் ரூ. 3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் கொடுக்கப்பட்டது.

    அதன்பேரில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் பலராமன், பாபுராஜ், முத்துப்பாண்டி ஆகியோர் மீது கடந்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவரை கைது செய்ய விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    ஆனால் ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். அவரை கைது செய்ய 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மதுரை, கோவை, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் தேடினர்.

    ஆனால் ராஜேந்திர பாலாஜி எங்கு இருக்கிறார் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த உறவினர்கள் மற்றும் கட்சி பிரமுகர்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிடாமல் இருப்பதற்காக விமான நிலையங்களுக்கு போலீசார் நேற்று “லுக்-அவுட்” நோட்டீசு வழங்கியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ராஜேந்திர பாலாஜியை போலீசார் தேடி வருகின்றனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்த போதிலும் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

    தற்போது ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு மோசடி புகார் கூறப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான செல்வராஜ் என்பவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

    அவர் தனது புகாரில், அரசு பள்ளி ஒன்றில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மூலம் ஊழியர் வேலை வாங்கி தருவதாக கூறியதன் பேரில் தனது நண்பர்களான ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பரமகுரு, முத்துசாமி ஆகியோரின் மூலமாக திருச்சியில் பள்ளி நடத்தி வரும் ஒருவரிடம் ரூ.27 லட்சம் பேசி, ரூ. 11 லட்சம் கொடுத்ததாகவும், ஆனால் வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் மோசடி செய்து விட்டதாக கூறியுள்ளார்.

    அந்த புகாரின் மீது விசாரணை நடத்துமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏற்கனவே பண மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் ராஜேந்திர பாலாஜி மீது தற்போது மேலும் ஒரு பண மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


    Next Story
    ×